ஐந்து வருசங்களுக்கு முன்பாக திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Wheel of Time என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன். பௌத்த மட சடங்குகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் காலச்சக்கர மண்டலா பற்றியது இந்த ஆவணப்படம்.
திபெத்திய பௌத்த மரபில் காலத்தை விழிக்க வைப்பது மிக ரகசியமான சடங்கு. இதற்காக காலச்சக்கரம் என்ற வட்டவடிவிலான மணல் சித்திரம் ஒன்றினை பிக்குகள் உருவாக்குகிறார்கள். அந்த கால சக்கரத்தின் மையத்தை விழிக்க வைப்பது ஒரு தாந்திரீக செயல்பாடு. அதனை தலாய்லாமா நேரடியாக நிகழ்த்துவார்.
காலச்சக்கரம் விழிப்புணர்வின் ஒரு குறியீடு. 722 தெய்வங்கள். அதன் மையமான காலதேவன் என்று வரையப்படும் காலச்சக்கரம் மனிதன் விலங்குகள் தாவரங்கள் யாவும் உள்ளடக்கியது. உள் அடுக்கு மையம் வெளி அடுக்கு என்று மூன்று அடுக்குகளாக உள்ளது இந்த காலவட்டம். பௌத்த பிரபஞ்சம் விசித்திரமானது. விஞ்ஞானத்தின் வழியே நாம் அறிந்துள்ள பிரபஞ்ச தோற்றத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. இந்த கால தரிசனத்தை காண்பதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பிக்குகள் கால்நடையாக இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்க்கிறார்கள்.
கடும் குளிர். பனிக்காற்று அதன் நடுவே துறவிகளின் பயணம் தொடர்கிறது. கால சக்கரத்தை உருவாக்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிக்குகள் மூன்று வாரங்கள் ஒரு அறையில் இரவும் பகலும் முயன்று வண்ணமணல்களின் வழியே காலசித்திரத்தை வரைகிறார்கள். ஒவ்வொரு மணலின் நிறமும் ஒரு குறீயீடு. ஒரு சங்கேதம். இந்த பிரம்மாண்டமான மணல் ஒவியம் காலமாக உருவகிக்கபடுகிறது. அதை விழிக்க செய்தவுடன் ஒவியம் கலைத்துவிடப்படுகிறது. பின்பு அந்த மணல் வழிபாட்டிற்கு உரியதாகி சமாதானத்தின் அடையாளமாக உலகெங்கும் கொண்டு சென்று ஆற்றில் கரைக்கபடுகிறது. மனிதவாழ்க்கை அநித்யமானது என்பதன் ரகசிய வடிவமாகவே காலச்சக்கரம் உருவாக்கபடுகிறது.
காலம் குறித்து ஒவ்வொரு மதமும் ஒரு கோட்பாட்டை புராண கதையை கொண்டிருக்கிறது. இந்து சமயத்தில் காலம் காலா என்ற கடவுளின் நாக்கு. அது போலவே இந்திய புராணம் பிரம்மாவின் நாள் மனிதர்களின் நாளிலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்ற கணக்கை துல்லியமாக விவரிக்கிறது. இது போன்ற காலக்கதைகள் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன. காலம் மதங்களில் பெரும்பாலும் உருவகப்படுத்தபட்டு தனிவடிவமாக அறியப்படுகிறது.
ஹெர்சாக் பிக்குகளுடன் ஒன்று கலந்து காலச்சக்கர சடங்கை முழுமையாக படமாக்கியிருந்தார்.படத்தில் தலாய் லாமாவோடு நேர்காணலும், தலாய் லாமாவின் ஆதரவாளர் என்று கைது செய்யப்பட்டு முப்பத்தியேழு வருசம் சீனாவில் சிறையில் அடைக்கபட்ட ஜாங்போ என்ற பௌத்த பற்றாளர் ஒருவரின் நேர்காணலும் இடம் பெற்றிருந்தது. அவர் தலாய் லாமாவை நேரில் கண்டதேயில்லை என்பது தான் அதன் பெரிய முரண்.
2002ல் நடைபெற்ற இந்த சடங்கில் கலந்து கொள்ள உலகெங்குமிருந்து பிக்குகள் வந்து சேர்ந்திருந்தார்கள். இவ்வளவு முக்கியமான இந்த நிகழ்வு குறித்து டெல்லி தொலைக்காட்சி தவிர்த்து வேறு எந்த காண்பதிவுகளும் மேற்கொள்ளபடவேயில்லை. ஹெர்சாக் இந்த நிகழ்வை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் தலாய் லாமாவிடம் சமகால அரசியல் பிரச்சனைகளையும் பற்றி பேசுகிறார். படத்தின் இறுதி பகுதி காலத்தை அகாலத்துடன் சேர்க்கும் சடங்கு ஆஸ்திரியாவில் நடக்கிறது. அங்கே இதே சடங்கினை தலாய் லாமா நிகழ்த்துகிறார்.
தனது நேர்காணலில் ஜாங்போ சிறைச்சாலையில் தான் எப்படி பௌத்தனாக நடந்து கொண்டேன் என்பதை விவரிக்கிறார். அது சிலிர்க்க வைக்கும் அனுபவம். கவித்துவமான வர்ணைகள், பௌத்தம் குறித்த ஆழ்ந்த அக்கறை, நேர்த்தியான ஒளிப்பதிவு என்ற ஹெர்சாக் சிறந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தார். பௌத்தம் பற்றி இந்த ஆவணப்படம் உருவாக்கியதன் வழியே தன்னால் நெருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லும் ஹெர்சாக் இமயமலையும் அதன் பனிபடர்ந்த சூழலில் பயணிக்கும் பிக்குகளும் மறக்கமுடியாத படிமங்களாக மனதில் தங்கிவிட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.
இந்த படம் எனக்குள் பௌத்தம் பற்றி ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக ஆசிய நாடுகளில் உருவாக்கபட்ட பௌத்த திரைப்படங்களை தேடி பார்க்க துவங்கினேன். கடந்த சில வருசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பௌத்த திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். இதில் 1) Samsara 2) Uppalavanna 3) The cup 4) Spring, Summer, Fall, Winter…and Spring 5) Why Has Bodhi-Dharma Come From The East? ஆகிய ஐந்து படங்கள் மிக முக்கியமானவை.
ஆசிய சினிமாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று பௌத்த சினிமா. இது வெறும் தத்துவ விசாரணையோ, மதப்பிரச்சார படங்களோ இல்லை. மாறாக பௌத்த அறத்தை தங்கள் வாழ்வியலாக கொண்டவர்களின் அன்றாட உலகையும், பிக்குகளின் துறவற வாழ்க்கையையும் மடாலயங்களின் சமகால நிலைகளையும் விளக்கும் அற்புதமான திரைப்படங்கள் வெளியாகின்றன.
பௌத்த சினிமாவின் முக்கிய அம்சங்களாக சிலவற்றை குறிப்பிடலாம். அவை துறவியின் மனதடுமாற்றங்கள், காமத்தை துறவி எதிர்கொள்ளும் தத்தளிப்பு, மரணம் மற்றும் மறுபிறவி பற்றிய விசாரணைகள், மடாலயவாழ்க்கையின் இயல்பு மற்றும் அதிகார முயற்சிகள். குற்றம் குறித்த பௌத்த சிந்தனைகள், மன்னிப்பு மற்றும் தண்டனை குறித்த புதிய பார்வைகள். பெண்கள் பிக்குணியாக மாறுவது. அதில் ஏற்படும் பிரச்சனைகள், அதை தாண்டி சாதனை செய்தவர்கள். உலக இச்சைகளை எப்படி எதிர்கொள்வது என பெரிதும் அகபிரச்சனைகளையே கையாளுகின்றன. அரிதாக பௌத்தம் அதிகார நிலைகளில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சமூகமாற்றத்தில் அதன் பங்கு பற்றி குறிப்பிடப்படுகிறது.
ஹாலிவுட்டின் வெகுஜன சினிமா மதத்தை தனது முக்கிய வணிக பொருளாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கிறிஸ்துவம் சார்ந்த சச்சரவு அல்லது அற்புதம் குறித்து ஒரு படம் உருவாக்கபட்டு அது உலகெங்கும் வியாபாரம் செய்யப்படுகிறது. சமீபத்தை ய இரண்டு உதாரணங்கள் மெல்கிப்சனின் இயக்கத்தில் வெளியான பட்ங் The Passion of the Christ, மற்றும் டாம் ஹான்ஸ் நடித்த The Da Vinci Code
ஹாலிவுட்டின் நிரந்தர கதாநாயகன் இயேசு என்று இதை வேடிக்கையாக குறிப்பிடுகிறார் திரைவிமர்சகர் டொனால்டு. பைபிள் கதைகள் பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், போன்று நேரடியாகவும், கிறிஸ்துவின் சீடர்கள், கிறிஸ்துவின் கடைசி ஆசைகள் போன்ற சச்சரவிற்கு உள்ளான படங்களும் இந்த வகையை சேர்ந்தவையே.
லூயி புனுவலின் Nazarín, Viridiana மற்றும் The Milky Way, பசோலினியின் Gospel According to Saint Matthew , பெர்கமனின் The Seventh Seal கார்ல் டிரையரின் The Passion of Joan of Arc போன்றவை தான் அசலான மெய்தேடல் கொண்ட படங்கள். இவை மதம் மனிதனுக்குள் உருவாக்கும் நம்பிக்கைகளை தீவிரமாக ஆராய்கின்றன.
பௌத்தம் இந்தியாவில் தோன்றிய போதும் அது குறித்த ஆழ்ந்த விவாதங்களும் கலைவெளிப்பாடுகளும் சமகால இந்திய கலைப்பரப்பில் அதிகம் காணப்படவேயில்லை. ஒவியம், இசை, திரைப்படம், நாடகம் நாவல் கவிதைகள் என்று பௌத்த சாரத்திலிருந்து உருவான அசல் கலைப்படைப்புகள் மிக அரிதாகவே உள்ளன. புத்தரின் போதனைகள், சூத்திரங்கள், திரிபீடக தர்மநெறிகாட்டல்கள். ராகுல்ஜி மற்றும் கோசாம்பியின் பௌத்த தத்துவ எழுத்துகள், அம்பரபாலி நாடகம் ,குர்அதுல்துன் ஹைதரின் அக்னிநதியின் முதல்பகுதி, தேரிகதை எனும் பிக்குணிகளின் பாடல்களும் தமிழில் மணிமேகலை, அம்பேத்கரின் பௌத்த உரைகள், ஜென் கதைகள், கவிதைகளின் மொழியாக்கங்கள் போன்றவற்றை பௌத்தம் குறித்த முக்கிய பிரதிகளாக சுட்டிக்காட்டலாம்.
இந்திய சினிமாவில் புத்தர் வெறும்படிமம் மட்டுமே. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஒரு காட்சியிருக்கிறது. கடந்த காலம் மறந்து போன விஞ்ஞானி முருகனான எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்றினை பார்த்தவுடன் கடந்த கால நினைவு திரும்பிவந்துவிடும். திரைப்படங்களில் புத்தர் ஒரு புனித பிம்பம் மட்டுமே. புத்தரின் சுயசரிதை கார்டுன் படமாக உருவாக்கபட்டிருக்கிறது. அது சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போல புத்தரையும் வீட்டை விட்டு வெளியேறி அலைந்த சாகசகாரனாகவே சித்தரிக்கிறது.
முப்பது வருசங்களுக்கு முன்பாக ரிஷிகபூர் நடித்த சித்தார்த்தா படம் வெளியான போது சிமி கார்வெலின் நிர்வாண காட்சி தான் பெரிதாக பேசப்பட்டதேயன்றி மெய்த்தேடலோ, சித்தார்த்தனின் அக உளைச்சல்களே கண்டு கொள்ளப்படவேயில்லை. இவ்வளவிற்கும் சித்தார்த்தா நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்úஸயின் நாவல் . ஹெஸ்úஸயின் அப்பா சில காலம் இந்தியாவில் மதபிரசங்கியாக வேலை செய்தவர். ஆகவே ஹெஸ்úஸ இந்தியாவிற்கு வந்திருக்கிறார். அவரது கீழை தேய மெய்யியல் மீதான விருப்பமே சித்தார்த்தா நாவலை எழுத செய்தது.
தமிழ்நாட்டிலிருந்து போகர் சீனாவிற்கு சென்றார். அவர் ஒரு பௌத்தர் என்கிறார்கள். ஆனால் போகரின் வாழ்வு பற்றி கற்பனையாக கூட இன்னமும் விரிவாக பதிவு செய்யப்படவில்லை. ஒரு நவீன சினிமாவிற்கு தேவையான அத்தனை கதையம்சங்களும் கொண்டது போகரின் வாழ்வு ஆனால் எந்த திரைப்பட இயக்குனரும் அதை கவனம் கொள்ளவேயில்லை. இப்படி கடல்கடந்து போன பௌத்த துறவிகள், மற்றும் துறவிகளின் வீரக்கலைகள், அவர்களின் வாத பிரதிவாதங்கள், அதிகாரம் அவர்களை நடத்திய விதம், பௌத்தம் அழிந்த கதை என்று இந்தியாவில் பௌத்தம் சார்ந்த நினைவுகள் கணக்கில் அடங்காதவை. அவை இன்னமும் முழுமையாக எழுத்திலும் வேறு காட்சி ஊடகங்களிலும் பதிவாகவில்லை.
நேஷனல் ஜியாகிரபிக் , போன்ற தொலைக்காட்சிகள் பௌத்தம் குறித்து சில தொடர்களை ஒளிபரப்பியிருக்கின்றன. அது தான் நமக்கிருக்கும் முக்கிய காட்சிபதிவுகள். பௌத்தம் ஒரு கவர்ச்சிகரமான விளம்பர பொருள் போலவே பயன்படுத்தபடுகிறது. பிளாஸ்டிக்கிலும், மண்பொம்மையாகவும் புத்த உருவங்கள் எல்லா உல்லாசபயண இடங்களிலும் விற்கபடுகின்றன. அதை வாங்கும் மனிதர்களில் ஒன்றிரண்டு பேர்கள் கூட பௌத்த சாரத்தை நோக்கி தன் கவனத்தை திருப்புவதேயில்லை. இது தான் சமகால சூழல்.
தமிழகத்தில் பௌத்த மடாலயங்கள் இருந்திருக்கின்றன. புத்தகோசம் போன்ற முக்கிய பிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. அரசின் மதமாக பௌத்தம் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அவை காலமாற்றத்தில் அழிந்து போய் விட்டன. இன்று நேரடியான பௌத்த சான்றுகள் தமிழகத்தில் ஒன்றிரண்டை தவிர வேறில்லை. சமணம் அளவிற்கு கூட பௌத்த மிச்சங்கள் நம்மிடையே இல்லை.
பௌத்த சினிமா இந்தியாவிலிருந்து தான் துவங்கபட்டிருக்க வேண்டும் ஆனால் இங்கே அதற்கான முனைப்பே காணப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இன்று பௌத்த திரைப்பட விழாக்கள் என்று தனியாக திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. ஆவணப்படங்கள் குறும்படங்கள் மற்றும் முழுநீள திரைப்படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன. சீனா, ஐப்பானிலும் கொரியாவிலும் திபெத்திலும் வருடம் தோறும் குறிப்பிடத்தக்க பௌத்த சார்பு படங்கள் வெளியாகின்றன.
The Monk and the Fish என்ற அனிமேஷன் குறும்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. மைக்கேல் டுடாக் பிரெஞ்சில் இயக்கியுள்ள இந்த அனிமேஷன் திரைப்படம் ஆறு நிமிசங்களே ஒடக்கூடியது. ஒரு புத்த பிக்கு மீன் பிடிக்க செல்கிறார். மீன தப்பிவிடுகிறது. அதை துரத்துகிறார். மீன் தாவி தாவி வேறு வேறு இடங்களுக்கு செல்கிறது. அவர் மீனை பிடிக்க பரிதவிக்கிறார். மீன் கைவசம் ஆவதேயில்லை. ஆனால் அந்த மீனின் காரணமாக தான் தொடர்ந்து ஒடிக் கொண்டிருப்பதை அவர் உணர்கிறார்.
மீனுக்கும் அவருக்குமான ஒத்திசைவு புள்ளி உருவாகிறது. அவர் மீனின் வழியே பௌத்த சாரம் ஒன்றை புரிந்து கொள்கிறார். உண்மை தான் மீனாக உருவகிக்படுகிறது. பிக்குகள் உண்மையை தேடி அதன் பின்னால் ஒடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. ஆனால் படம் விளையாட்டாகவும் அபத்தமான ஒரு செயலாகவும் ஆழ்ந்த தேட்டமாகவும் பல்வேறு தளங்களில் புரிந்து கொள்ள சாத்தியம் தருகிறது.
Khyentse Norbu என்ற பௌத்த பிக்கு இன்று நம்பிக்கையூட்டும் இளம் திரைப்பட இயக்குனராக அறியப்படுகிறார். இவரது The Cup திரைப்படம் டெல்லியில் நடைபெற்ற உலகதிரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றது. உலகின் பல முக்கிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் பௌத்த மடாலயம் ஒன்றில் உலக கால்பந்து போட்டியினை காண விருப்பம் கொண்ட சிறுவனான ஒரு இளம்பிக்குவின் ஆசையை பற்றியது.
நோர்பு லிட்டில் புத்தா திரைப்படம் தயாரிக்க வந்த பெட்ரோலூசி திரைப்பட குழுவினர்க்கு உதவி செய்திருக்கிறார். அந்த நட்பும்ஈடுபாடும் அவருக்கு சினிமா மீது மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கியது. நோர்பு இதற்காக பிரான்ஸ் சென்று சிலகாலம் திரைப்பட நுணுக்கங்களை பயின்று வந்திருக்கிறார். அவரது முதல்படம் தி கப். இப்படத்தில் அதே பிரெஞ்சு தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் பங்கேற்றிருக்கிறார்கள்
திபெத்திய மொழியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள பௌத்த மடாலயம் ஒன்றில் வசிக்கும் Orgyen என்ற பதினாலு வயது சிறுவனை பற்றியது. இளம்பிக்குவாக பயிற்சி பெறும் அந்த சிறுவன் கால்பந்தாட்டத்தில் தீவிர விருப்பம் உள்ளவன்.
இந்த மடாலயத்திற்கு இந்தியாவிலிருந்து இரண்டு சிறுவர்கள் புதிதாக சேர்க்கபடுகிறார்கள். அவர்கள் ஒர்ஜின் உடன் சேர்ந்து தங்க வைக்கபடுகிறார்கள். அப்போது உலக கால்பந்து போட்டிகள் துவங்குகின்றன. அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒர்ஜின் ஆசைப்படுகிறான். ஆனால் மடாலயத்தில் டிவி கிடையாது. வெளியே சென்று பார்க்க வேண்டும் என்றால் மூத்த பிக்குகள் தண்டிப்பார்கள்.
என்ன செய்வது என்று புரியாமல் ரகசியமாக இரவில் மடாலயத்தை விட்டு தாவி குதித்து நண்பர்களை அழைத்து கொண்டு அருகாமை கிராமத்திற்கு போய் அங்கே ஒரு இடத்தில் உள்ள டிவியில் கால்பந்தாட்டம் பார்க்கிறார்கள்.
திருட்டுதனமாக வெளியே போய்வருவது கண்டுபிடிக்கபடவே சிறுவர்கள் தண்டிக்கபடுகிறார்கள். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒர்ஜின் மூத்த பிக்கு ஒருவரிடம் தன் ஆசையை தெரிவிக்கிறான். அவரும் கால்பந்தில் விருப்பம் உள்ளவர். அவர்கள் மடாலயத்தின் தலைமை பிக்குவை சந்தித்து அனுமதி கேட்கிறார்கள்.
அவர் கால்பந்து போட்டியை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா அது யுத்தமா என்று கேட்கிறார். அப்படி எதுவும் இல்லை என்றதும் அனுமதி தந்துவிடுகிறார்.
சிறுவன் இதற்காக அருகாமை ஊருக்கு சென்று அங்கிருந்து ஒரு டிவியை வாடகைக்கு எடுத்து வர முயற்சிக்கிறான். இதற்காக காசு கடன் வாங்குகிறான். முடிவில் மடாலயத்திற்கு டிவி கொண்டுவரப்படுகிறது. ஆன்டனா சரியாக இல்லாத காரணத்தால் காட்சி தெளிவாக தெரியவில்லை. ஒர்ஜின் மாடிக்கு ஒடி ஆன்டனாவை சரி செய்கிறான். போட்டி துவங்குகிறது. பிக்குகள் ஆர்வமாக ரசிக்கிறார்கள்.
மறுநாள் கடன்காரனுக்கு என்ன பதில் சொல்லபோகிறோம் என்ற கவலை ஒர்ஜினை கால்பந்தாட்டம் பார்க்க விடாமல் செய்கிறது. அவன் மற்றவர்களை விட்டு இருட்டில் தனியே ஒதுங்கி கவலைபடுகிறான்.
அவனை தேடி வரும் பிக்கு எதற்காக அவன் ஆசைப்பட்டானோ அது கிடைக்கும் போது அதை ரசிக்கவிடாமல் இன்னொரு பிரச்சனை வந்து தடுத்துவிடுகிறதல்லவா அது தான் வாழ்க்கை. நீ மற்றவர்கள் சந்தோஷப்படுவதற்காக உன்னை வருத்திக் கொள்கிறாய். நீ ஒரு நல்ல பிக்குவாக எதிர்காலத்தில் மாறுவாய் என்று ஆறுதல் சொல்கிறார். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது
நவீன உலகிலிருந்து தங்களை துண்டித்துக் கொண்ட பௌத்த மடாலயத்தின் உள்ளே தொலைக்காட்சியும் உலக கால்பந்து போட்டியும் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை மிக யதார்த்தமாக படமாக்கியிருந்தார் நோர்பு. முதன்முறையாக பௌத்த மடாலயத்தின் அன்றாட வாழ்க்கையும் அதன் ஊடாக வெளிப்படும் பிக்குகளின் அடக்கி வைக்கபட்ட ஆசைகளும் நிஜமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நோர்பு இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து Travellers and Magicians என்ற இரண்டாவது படத்தை உருவாக்கினார். இது அமெரிக்க போக ஆசைப்படும் ஒரு பிக்குவின் கதையையும் சரித்திர காலத்தில் நடைபெற்ற ஒரு விறகுவெட்டியின் காதல்கதையையும் இடைவெட்டாக விவரிக்கிறது. அகிரா குரசோவாவின் படங்களை போன்று திரைக்கதை அமைப்பும் காட்சிபடுத்துதலும் கொண்ட இந்த படமும் உலக அரங்கில் மிகுந்த கவனமும் பாராட்டும் பெற்றது.
1989 ம் ஆண்டு தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட Why Has Bodhi-Dharma Come From The East பௌத்த துறவிகளை பற்றியது. Bae Yong-kyun இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஏழுவருசங்கள் உருவாக்கபட்டது. தானே எடிட் செய்திருக்கிறார். ஒரு ஜென் மாஸ்டர், ஒரு அநாதை சிறுவன், ஒரு இளம் துறவி இந்த மூன்று பேர்களுக்குள் ஏற்படும் உறவே படத்தின் மையம். படம் தனியாக மலையில் வாழும் துறவிகளும், அறிந்ததிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர்கள் முயற்சிக்கும் மெய்தேடலும், இயற்கையின் முன்பாக அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களுமே படத்தின் காட்சிகளாக விரிகின்றன.
பிக்குகளின் அன்றாட வாழ்வும் நெருக்கமும் திரையில் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. நவீன வாழ்வின் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இந்த படம் ஒரு ஜென் அனுபவ மாற்றுவழி போலிருக்கிறது. மூன்று வேற வேறு வயதில் உள்ள பிக்குகள். அவர்களின் கடந்த கால நினைவுகள். குற்றவுணர்ச்சி. நவீன உலகிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்ளும் எத்தனம் என்று இந்த படம் பௌத்தம் ஏன் முக்கிய மார்க்கமாக இருக்கிறது என்பதை விவரிக்கிறது. குறிப்பாக மரணத்தை எதிர்கொள்ளும் சிறுவயது பிக்குவின் மனநிலையும் அவன் வழியாக வெளிப்படும் பௌத்த கருத்துகளும் மிக முக்கியமானவை.
இரவில் ஆடும் நடனமும் இயற்கை காட்சிகளும் தியானவெளி போன்ற நிலவெளியும் தேர்ந்த இசையும் படத்தின் கூடுதல் பலமாக அமைந்திருந்தன. லோகர்னோ திரைப்பட விழாவில் இப்படம் பரிசு பெற்றிருக்கிறது.
இந்த படங்களின் வரிசையில் மிக புகழ்பெற்ற இரண்டு படங்கள் Samsara மற்றும் Spring, Summer, Fall, Winter…and Spring.
சம்ஸ்சாராவை இயக்கியவர் பான் நலின். லடாக் பள்ளதாக்கில் நடைபெறும் இப்படம் மூன்று ஆண்டுகள் கடுமையான தவத்திலிருந்து விழிப்புணர்வு பெற்று மடாலயம் திரும்பும் தஷி என்ற துறவியின் வாழ்வை பற்றியது. தனிமையில் தன்மனதை ஒருமுகப்படுத்தி மூன்று ஆண்டுகள் கழித்த தஷி மடாலயம் திரும்பியதிலிருந்து தனக்குள் பாலியல் கிளர்ச்சிகள் பொங்கி வழிவதை உணர துவங்குகிறாள். ஏன் இந்த முரண்பாடு என்று அவனுக்கு புரியவில்லை.
இச்சையை கட்டுபடுத்த முடியாமல் விருப்பமான பெண்ணை தேடி போகிறான். துறவி வெறுமையை மட்டுமே தருகிறது என்று உணர்ந்து வாழ்க்கைக்கு வந்து சேர்கிறான். திருமணம் குழந்தைகள், வாழ்க்கை பாடுகள், கோபம் சண்டை சந்தோஷம், கள்ளகாதல் என்று வாழ்க்கை அவனை புரட்டிபோடுகிறது.
துறவை விட அதிக சிக்கல்கள், சிடுக்கு கொண்டது இல்லறம் என்பதை உணர்கிறான். இப்போது அவன் மனம் குழப்பமடைகிறது. ஆயிரம் ஆசைகளை ஒரு ஆசைக்காக விட்டு கொடுப்பதா? இல்லை ஆசையின் கயிற்றில் அலைந்து திரிய வேண்டியது தானா என தடுமாறுகிறான். முடிவில் குடும்பத்திலிருந்து வெளியேறுகிறான். புத்தனின் வாழ்க்கை கதை போன்ற சாயல் கொண்ட இப்படம் காமம் துறவியின் மனதினை எவ்வளவு கொந்தளிப்பை உருவாக்குகிறது. துறவால் காமத்தை கடந்து செல்ல முடியுமா? பொறுப்பு என்பது என்ன? என்று ஆதாரமான கேள்விகளை ஆராய்கிறது.
தஷியின் மனைவி படத்தின் இறுதியில் சொல்கிறாள். ஆண்கள் கோழைகள். வாழ்க்கைக்கு உள்ளாக இருந்தபடியே அவர்களால் ஒரு போதும் மேன்மையான ஞானநிலைகளை அடைய முடியாது. உண்மையில் அவர்களின் துறவு ஒரு பொறுப்பற்ற செயல். அன்றாட வாழ்விலிருந்து ஞானம் பெற முடியாத அவஸ்தையே அவர்களை வெளியேற்றுகிறது என்கிறாள். இந்தியாவில் பிறந்து பாரீஸில் வசிக்கும்பான் நிலான் இந்த படத்தை ஏழுகோடி செலவில் உருவாக்கியிருந்தார். மிக சிறந்த ஒளிப்பதிவு, பின்ணணி இசை, யதார்த்தமான நடிப்பு என்று இப்படம் சமகால சினிமாவின் முன்னோடி படமாக உருவாக்கபட்டிருந்தது.
இதற்கு இணையாக சொல்லக்கூடிய படம் கிம்கி டிக் இயக்கிய கொரிய படமான சம்மர் பால் வின்டர் அண்ட் ஸ்பிரிங் . நான்குபருவ நிலைகளுக்குள் ஒரு ஏரியின் நடுவில் உள்ள மடாலயத்தில் நடைபெறும் கதை. மிதக்கும் மடாலயத்தில் உள்ள துறவியும் அவரிடம் பயிற்சி பெறும் சிறுவனிடம் துவங்கும் கதை. அந்த சிறுவன் வளர்ந்து அவனுக்கு ஏற்படும் காதல். அதனால் அவன் வெளியேறி போவது. அவன் செய்தாக சொல்லபடும் குற்றம். தோற்றுப்போன மணவாழ்க்கை. அவனது பிள்ளை என்று ஒரு சுழற்சி முடிந்து கதை நிறைவுபெறுகிறது.
இச்சைகள் வாழ்வை எப்படி புரட்டிபோடுகின்றன என்பதே படத்தின் ஆதார புள்ளி. படத்தை கிம்கிடிக் கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பௌத்த துறவியின் நிதானம் மற்றும் அவரது மருத்துவ சேவை. இச்சை கொண்ட இளந்துறவியின் அலைக்கழிப்பு. மாரா எனப்படும் இச்சாதேவனின் தூண்டுதல்கள். அதனால் வெளியேறும் இளந்துறவி என்று படம் மனதின் ஆதார உணர்ச்சிநிலைகளை ஆய்வு செய்கின்றது.
புத்தரின் வாழ்க்கை இன்றும் முறையாக திரைப்படமாக்கபடவில்லை. பௌத்த மன்னர்களின் கதைகளும், துறவிகளின் கதைகளும் எண்ணிக்கையற்று இந்தியாவில் இருக்கின்றன. இந்திய திரை உலகம் அதன் இந்த வளமையான செல்வத்தை கண்டுகொள்ளவேயில்லை.
ஆசிய சினிமாவில் பௌத்தம் பற்றி ஆழமான விவரணப்படங்கள், குறும்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. வணிக ரீதியான படங்களில் கூட பௌத்த கருத்துகள் ஒரு ஊடுபாவு போல சொல்லப்படுகின்றன. ஆனால் இவை எளிய அறிமுகங்கள் மட்டுமே. இந்த படங்களில் இருந்து பௌத்தமரபை ஒருவன் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
மற்ற கலைவடிவங்களை விடவும் சினிமா மிக வலிமையான மக்களுக்கான ஊடகம். அதன் வழியே பௌத்தம் தன்னை விரிவுபடுத்திக் கொள்வதோடு புதிய சாத்தியங்களையும் உருவாக்கி காட்டுகிறது. அவ்வகையில் பௌத்த சினிமா நம் காலத்தின் முக்கிய மாற்று முயற்சியேயாகும்.
***