கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.
நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் என்ற நீட்ஷேயின் சிந்தனை பரவலாக தமிழ் இலக்கிய சூழலில் மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேலாக நீட்ஷேயை நாம் வாசித்து அறிந்து கொள்ளவேயில்லை.
சிந்தனையாளர் வரிசை என்ற தொகுதியில் நீட்ஷே பற்றிய அறிமுக நூல் ஒன்று நாற்பது வருசங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. அது மிக எளிமையானது. ஆனால் நீட்ஷேயின் மூலப்பிரதி ஒன்று மிக நுட்பமாகவும் கவித்துவமாகவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
அந்த வகையில் ரவியின் இந்த மொழிபெயர்ப்பு தனித்துவமான சிறப்புடையது. தத்துவ நூலை மொழியாக்கம் செய்யும் போது எவ்வளவு கவனமாகவும் அக்கறையோடும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் இந்த நூலை வாசித்திருக்கிறேன். அதில் காணப்படும் தெளிவும், தேர்ந்த வார்த்தைகளும் அது தரும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களும் தமிழிலும் முழுமையாக சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு ரவி ஒரு கவிஞராக இருப்பது கூடுதலாக உதவியிருக்ககூடும்.
மொழிபெயர்ப்பில் முக்கிய பிரச்சனை அதை ஒரு வேலையாக செய்ய கூடாது. மூலப்பிரதியோடு மொழிபெயர்ப்பாளர் கொள்ளும் புரிதலும் நெருக்கமுமே மொழியாக்கத்தை வலிமையாக்கும். நீட்ஷே வாசிப்பதற்கு எளிமையானவரில்லை. அவரது சிந்தனைகளை புரிந்து கொள்வதற்கு பலமுறை வாசிப்பதோடு ஆழ்ந்த தத்துவ பரிச்சயமும் அவசியமானது. ஹோமரின் இலியட்டை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவற்கு முன்பு அதை இரண்டு ஆண்டுகாலம் நாற்பதுமுறை மறுபடி மறுபடி வாசித்ததாக எடித் கிராஸ்மென் என்ற மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். ஸ்பானிய மொழியில் நிலவை குறிக்க கூடிய லூனா என்ற சொல்லுக்கு நிகராக மூன் என்ற ஆங்கில சொல் இல்லை. மூன் என்று சொல்லும் போது அதற்குள் நகர்வு இல்லை என்று போர்ஹே தன் மொழிபெயர்ப்பாளரிடம் கூறுகிறார். அந்த அளவு சொற்கள் கவனமாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியமிருக்கிறது.
நம் காலத்தின் முக்கிய சிந்தனையாளர் நீட்ஷே. அவர் மதத்தின் பிடியிலிருந்து மனித மனதை வெளியேற்றுவதையே தனது பிரதான சிந்தனையாக கொண்டிருந்தார். தத்துவவாதியான நீட்ஷேயின் பாதிப்பு இலக்கியம், இசை, விஞ்ஞானம் . அரசியல் என்று சகல துறைகளிலும் இன்றும் தொடர்ந்து வருகிறது.
ரவி நீட்ஷேயை ஆழ்ந்து கற்றிருக்கிறார். நீட்ஷே பயன்படுத்தும் சொற்கள் வெகு கவித்துவமானவை. அவை ஒரே நேரத்தில் கேலியான தொனியும் பல்வேறு அர்த்த தளங்களும் கொண்டவை. அந்த தீவிரமான தத்துவ செறிவு மிக்க வாக்கிய அமைப்பு தமிழில் அசலாக சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு ரவி எடுத்துக் கொண்ட அயராத உழைப்பே காரணமாக இருக்ககூடும். அவ்வகையில் இது ஒரு முன்னோடி மொழிபெயர்ப்பு என்றே சொல்வேன்.
1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே எழுதியிருக்கிறார்.
நீதிமொழிகள் போன்று பாடல்களாகவும் அதற்கான விளக்கமாகவும் எழதப்பட்ட இந்த நூல் ஜராதுஷ்ட்ராவின் சொல்லாடல்களாக விரிகின்றன. நல்லது மற்றும் தீயதிற்கு அப்பால் நிற்கும் நற்குணம் கொண்ட அதிமனிதனாக ஜராதுஷட்ரா சித்தரிக்கபடுகிறான். பலநேரங்களில் ஜராதுஷ்ட்ரா புத்தரை போலவே இருக்கிறான். புத்த அறகருத்துக்கள் போன்ற தொனியே அவனிடமும் ஒலிக்கிறது.
மதத்திற்கு எதிரான நீட்ஷேயின் மறுதலிப்பு எளிய மறுப்பு அல்ல . மாறாக இறுகிப்போன சிந்தனை தளத்தை அவர் தனது சொற்களின் வழியே வன்முறையான பெயர்த்தெடுத்தலை மேற்கொள்கிறார் என்கிறார் விமர்சகர் ப்ளும்.
மனித இருப்பின் ஆதார கேள்விகளுக்கான விடைகளும் புதிய கேள்விகளுமே ஜராதுஷ்ட்ராவால் முன்வைக்கபடுகின்றன. மக்களை விட்டு ஒதுங்கி இயற்கையோடு தனித்து வாழ்ந்த ஜராதுஷ்ட்ரா மக்களை தேடி வந்து அவர்களிடம் தனது ஞானத்தை பகிர்ந்து கொள்கிறான். தனது கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் சீடர்களை அடையாளம் காண்கிறான். உயர்வகை மனிதர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்று வெளிப்படுத்துகிறான். அவ்வகையில் ஜராதுஷ்ட்ரா இயேசுவின் எதிர்பிம்பம் போலவே செயல்படுகிறான்.
ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஏகாந்தமான அனுபவம். அது நம்மை அலைகள் உள்ளே இழுப்பது போல தானே இழுத்து செல்கின்றன. அலை வெளியே தள்ளுவது போல தானே வெளியே தள்ளவும் செய்கின்றன. ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஒருவன் தன்னை தானே உற்று நோக்கி கொள்வது போன்றதே. உடலை அவதானிப்பது போல நாம் சிந்தனைகளை உற்று நோக்கி ஆராய்வதோ, அவதானிப்பதோ இல்லை. இந்ததளத்தில் தான் ஜரதுஷட்ரா செயல்படுகிறான்.
ஜராதுஷட்ராவின் துவக்கம் அவன் சூரியனோடு பேசுவதில் ஆரம்பிக்கிறது. மகத்தான விண்மீனே நீ யாருக்காக ஒளிர்கிறாயோ அவர்கள் இல்லாவிட்டால் உனது மகிழ்ச்சி என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு அவனது சொல்லாடல் துவங்குகிறது.
நீட்ஷே இயற்கையை ஆராதிப்பதில்லை. மாறாக இயற்கையின் இயங்குசக்தியை ஆராய்கிறார். அதன் விந்தையை, ஒழுங்கை கண்டு வியக்கிறார். அதே நேரம் இயற்கையை புரிந்து கொள்வதில் மனிதர்கள் காட்டும் அக்கறை மற்றும் சிக்கல்களை விரிவாக பேசுகிறார். ஞானத்திலிருந்து கீழ் இறங்கி வருவதல். அதை பகிர்ந்து கொள்ளுதல் என்பதே ஜராதுஷ்ட்ராவின் பிரதான விருப்பம்.
மனித குரங்கை காணும் போது மனிதன் அதை ஏளனமாக பார்ப்பது போல தான் அதிமனிதன் உருவான பிறகு மனிதர்கள் கேலிப்பொருள் போல ஆகிவிடுவார்கள் என்று தனது பிரசங்கத்தை துவங்குகிறான் ஜரா. கண்களால் கேட்க கற்றுதருவதற்கு முதலில் மனிதர்களின் காதுகளை சிதறடிக்க வேண்டும் என்று கூறுகிறான். அதாவது உபயோகமற்ற உபதேசங்களில் நிரம்பிய செவியை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே பொருள்.
மனித இருப்பின் செயல்பாடுகள் மற்றும் அதற்கான மதவிளக்கங்கள் ஒவ்வொன்றையும் குறித்து ஜராதுஷ்ட்ரா மறுபரிசீலனை செய்கிறான். தன்னை அறிந்து கொள்வதை நோக்கி மனிதர்கள் முனைப்பு கொள்ள வேண்டும் என்பதே விருப்பம். ஜொராஷ்ட்ரிய மதத்தை நிறுவியர் ஜராதுஷ்ட்ரா. அந்த பெயரை தனது அதிமனிதனுக்கு சூட்டிய நீட்ஷே தான் அதை நீதிநெறியற்றவனள் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துவதாக குறிப்பிடுகிறார்.
ஜராதுஷ்ட்ராவின் சில வாக்கியங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குபவை. மலைகள் எதிரொலிப்பதை போல இவை நமக்குள்ளாகவே எதிரொலிப்பு கொள்கின்றன.
**
குழந்தை என்பது களங்கமின்மை. மறந்துவிடுதல், ஒரு புதிய ஆரம்பம், ஒரு விளையாட்டு, தானே சுழலும் ஒரு சக்கரம். ஒரு முதல் நகர்வு ஒரு புனித ஆம்
**
உறக்கத்தை எதிர்கொள்ளும் போது திருடன் கூட வெட்கப்படுகிறான். உறக்கம் சாதாரணக்கலை அல்ல. அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டும். உறக்கம் ஒரு கனத்த சுவரின் ஊடாகவும் தொற்றக்கூடியது
**
எங்கே தனிமை முடிவடைகிறதோ அங்கே சந்தை ஆரம்பிக்கிறது. எங்கே சந்தை ஆரம்பிக்கிறதோ அங்கே மகத்தான நடிகர்களின் பேரோசையும் விஷப்பூச்சிகளின் ரீங்காரமும் ஆரம்பிக்கிறது.
**
ஒரு பெண்ணின் காதலில் அவள் காதலிக்காத அனைத்தையும் பற்றி ஒரு நியாயமின்மையும் குருட்டுதனமும் இருக்கிறது. ஆணை விட பெண் சிறப்பாக குழந்தைகளை புரிந்து கொள்கிறாள். ஆனால் ஆண் பெண்ணை விட அதிகம் குழந்தைத்தன்மை கொண்டவன். நிஜமான ஆணிடம் ஒரு குழந்தை மறைக்கபட்டிருக்கிறது. அது விளையாட விரும்புகிறது. பெண்களே ஆண்களில் மறைந்துள்ள குழந்தையை கண்டுபிடியுங்கள்.
**
மனிதர்களுடன் வாழ்வது சிரமமானது. ஏனென்றால் மௌனமாக இருப்பது மிகவும் கடினமானது.
**
கடவுளுக்கும் அதன் நரகம் என்று ஒன்று உள்ளது. அது மனிதன் மீது மேல் கடவுளுக்கு உள்ள அன்பு.
**
ஜராதுஷ்ட்ரா சின்னஞ்சிறு கதைகளை சொல்லி விளக்குகிறான். அவை உருவக்கதைகள். அவதூதர்கள் சொல்லும் கதைகளை போல அவை நீதிமரபில் உருவானவை அல்ல. மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே கதைசொல்கிறான். மனிதனை தனக்குள் பறப்பதற்கு கற்று தருவதே தனது பிரதான பணி என்கிறான்.
ஜராதுஷ்ட்ரா வழியாக நீட்ஷே மனிதர்கள் தங்களுக்கு தானே விழிப்புணர்வு கொள்ளவும் மதநிறுவனங்களின் ஆளுமையில் இருந்து விடுபட்டு வாழ்வை நேர் கொள்ளவும் அந்தந்த கணங்களில் வாழவும் வழிகாட்டுகிறார் . நீட்ஷேயின் சிந்தனைகள் குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் உலகெங்கும் தொடர்ந்து இன்றும் நடக்கின்றன.
நீட்ஷேயை கொண்டாடுகின்றவர்களும் அவரை தூஷனை செய்பவர்களும் சம அளவில் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்கள். என்னை வசீகரிப்பது நீட்ஷேயின் கவித்துவம். தாந்தே போல் நம் காலத்தின் ஆகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராகவே நீட்ஷேயை வாசிக்கிறேன். இயற்கை குறித்து முன் சொல்லப்பட்ட அத்தனை எண்ணங்களையும் தாண்டிய புதிய தரிசனம் ஒன்றை நீட்ஷே மட்டுமே அறிமுகப்படுத்துகிறார். அது இயற்கையை புரிந்து கொள்வதற்கான அகநெருக்கத்தை உருவாக்குகிறது.
ஜராதுஷட்ரா இவ்வாறு கூறினான் ஒவ்வொருவரும் ஆழ்ந்து வாசிக்கவும் விழிப்புணர்வு கொள்ளவும் வேண்டிய புத்தகம். நீட்ஷேயின் உயர்கவித்துவம் அசலாக தமிழில் சாத்தியமாக்கியிருப்பதற்கு மீண்டும் மொழிபெயர்ப்பாளர் ரவியை பாராட்டி வாழ்த்த வேண்டியிருக்கிறது.
ஜராதுஷட்ரா இவ்வாறு கூறினான் – நீட்ஷே, தமிழில். ரவி. காலச்சுவடு பதிப்பகம். விலை. 225.