சிறந்த சிறார் எழுத்தாளரான ஷெல் சில்வர்ஸ்டைன்(Shel Silverstein) எழுதிய சிறார் பாடல்களையும் கதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன். இவரைப் போலவே ரோல்ட் டாலின் (Roald Dahl) கதைகளையும் தேடிப் படித்திருக்கிறேன். இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த சிறார் எழுத்தாளர், பாடலாசிரியர். ஆலன் ஆல்பெர்க் (Allan Ahlberg),

இவர் எழுதிய கதைகளுக்கு அவரது மனைவி ஜேனட் ஆல்பெர்க் அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஆலன். பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற இந்த கதைவரிசைகள் இன்றும் சிறார்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சிறார் இலக்கியம் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தமிழில் தனிக்கவனம் உருவாகியுள்ளது. வயதுக்கு ஏற்ப ஆங்கிலத்தில் படிக்கக் கிடைப்பது போலப் பல்வகையான சிறார் கதைகள் தமிழில் இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட சிறார் நூல்களில் பெரும்பான்மை ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவற்றை சிறுவர்களால் படிக்க முடியவில்லை. குட்டி இளவரசன் போல ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யாவிலிருந்து நிறையச் சிறார்கள் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. அழகான வண்ண ஓவியங்களுடன் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன. புத்தக வடிவாக்கமே அற்புதமாக இருக்கும். இது போல மிஷா என்ற சிறார் இதழும் வெளியானது. ஆனால் இன்று அது போல முழுமையாக வண்ணத்தில் சிறார் நூல் வெளியிடப்பட வேண்டும் என்றால் அதன் விலை மிக அதிகமாகிவிடுகிறது. ஆகவே கறுப்பு வெள்ளை படங்களுடனே வெளியிடப்படுகின்றன.
நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட காமிக்ஸ் என்பதே கிடையாது. ஒன்றிரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றியடையவில்லை. மாங்கா. கிராபிக் நாவல்கள் இன்னும் அறிமுகமாவேயில்லை.
இந்த சூழலில் தமிழில் கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டிய சிறார் எழுத்தாளராக, கவிஞராக உள்ளார் ஆலன் ஆல்பெர்க்.

இவரது சிறார் பாடல்கள் அசலான கற்பனையும் கவித்துவமும் கொண்டவை. இவற்றைப் பெரியவர்களும் வாசிக்கலாம். எளிய சொற்களின் வழியே சிறார்களின் மனதை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் பாடல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் சிறப்பானவை
சிறார்களின் மனதை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இப்படியான பாடல்களை எழுத முடியும்.
அவரது பாடல்களில் பெரும்பான்மை பள்ளி அனுபவத்தையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பு மற்றும் பிள்ளைகளின் விளையாட்டுத்தனம். அவர்களுக்குள் உள்ள நட்பு. பள்ளிப் பேருந்து பயண அனுபவம். மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டை, பெற்றோர்களின் கண்டிப்பு, புரியாத வகுப்பறையின் சிக்கல் போன்றவற்றையே பாடலாக்கியிருக்கிறார்.

புலி புல்லுகட்டு ஆடு என்ற புதிரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. படகில் இந்த மூன்றையும் எப்படி ஏற்றிக் கொண்டு மறுகரை சேர்ப்பது என்ற புதிர் ஆங்கிலத்திலும் உள்ளது. அதை மையமாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
பர்க்லர் பில் மற்றும் தி ஜாலி போஸ்ட்மேன் போன்ற இவரது கதைகள் தலைமுறைகளைத் தாண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அபாரமான அழகுடன் வரையப்பட்ட முழுப்பக்க ஓவியங்களுடன் நாலைந்து வரிகளாக கதை இடம்பெறுகிறது. ஜேனட் தேர்வு செய்யும் நிறங்களும் காட்சி சித்தரிப்பும் துல்லியமும் நேர்த்தியும் கொண்டவை
Heard it in the Playground என்ற ஆலனின் பாடல் தொகுப்பு ஆரம்ப பள்ளி வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. ஆலன் ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆகவே அவரால் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் குறும்புத்தனங்களைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதை சிறந்த பாடலாக்கியிருக்கிறார்.
நாங்கள் பதிலைத் தேடுகிறோம் என்றொரு பாடல் வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாமல் மேலும் கீழுமாக மாணவர்கள் பதிலைத் தேடுகிறார்கள். மேஜையின் இழுப்பறைக்குள் தரையில், குப்பைக்கூடைக்குள் என தேடிப்பார்க்கிறார்கள். முடிவில் அந்த பதில் ஆசிரியரின் தலைக்குள் இருக்கிறது என்பதை கண்டறிகிறார்கள். ஒரு. பதிலை மறைத்துக் கொள்ள என்ன ஒரு வசதியான இடம் என்று பாடல் நிறைவு பெறுகிறது. உண்மையில் வகுப்பில் விடை தெரியாமல் திகைக்கும் பையன் இப்படித்தான் யோசிப்பான். ஆசிரியரின் மண்டைக்குள் இருக்கும் பதிலை தன்னிடம் ஏன் தேடுகிறார் என்று சலித்துக் கொள்வான். புரியாத வகுப்பறையினைப் பற்றிய இந்தக் கவிதை எல்லா தேசங்களுக்கும் பொருந்தக்கூடியது.

இன்னொரு பாடலில் சிறுவர்கள் மீன் போல,பறவை போல, புழுக்கள் போலப் பிறந்திருந்தால் என்ன கற்றுக் கொள்வார்கள் என்பதைப் பற்றிப் பாடுகிறார்கள். அழகான கற்பனை.
Parents’ Evening என்ற கவிதையில் பள்ளியில் காத்திருக்கும் பெற்றோரின் மனநிலையும் பையனின் மனநிலையும் ஆசிரியரின் மனநிலையும் நான்கு கோணங்களில் அழகாக விளக்கப்படுகிறது
எதையுமே முழுசாக செய்து முடிக்காத பையனை வகுப்பில் ஆசிரியர்.கண்டிக்கிறாள் அவருக்கான பதிலையும் பாதியாகச் சொல்லி நிறுத்திவிடுகிறான் பையன். அவனால் அதையும் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.
நண்பன் இல்லாத அமைதியான ஒரு பையனைப் பற்றி நினைவு கொள்ளும் ஆலன் அவனது பெயர் நினைவில்லை. இவ்வளவு தனிமையிலிருந்த அவனுக்குப் பெயரேயில்லை என்கிறார்.

புதிய ஆசிரியர் வருகை தரும் போது தங்களின் பழைய ஆசிரியர் எவ்வளவு சிறப்பானவர் என்பதைப் பற்றி பிள்ளைகள் சேர்ந்து பாடும் பாடல் ஒன்றிருக்கிறது. அது பழைய ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது
Goodbye, old school,
We’re going away.
Goodbye, old school,
We’re leaving today.
Goodbye to the teachers,
Goodbye to you all;
The classrooms, the cloakrooms,
The playground, the hall.
Goodbye, old school,
We’re going away.
Goodbye, old school,
We’ll miss you a lot –
The din and the dinners,
Believe it or not.
We’ll miss you, Miss,
And remember you, Sir,
When lessons have faded
And homework’s a blur.
Goodbye, old school,
We’ll miss you a lot.
Goodbye, old school,
We’ll never forget
The smell of the cloakrooms
With coats soaking wet.
The balls on the roof
And the songs on the bus
We’ll think of you –
Will you think of us?
Goodbye, old school,
We’ll never forget
இந்த பாடலை யார் படித்தாலும் அவர்கள் பள்ளியை விட்டு வந்த கடைசி நாளின் நினைவு பீறிடவே செய்யும். எத்தனை நினைவுகளை இந்த சிறிய பாட்ல் கிளறிவிடுகிறது
Kicking a Ball பாடலில் பள்ளியில் கிடைத்த வேறு எல்லா இன்பங்களையும் விடப் பந்தை உதைப்பதில் கிடைத்த சந்தோஷம் மிகப்பெரியது என்று பாடுகிறார் ஆலன். அது உண்மையே. பாடலின் முடிவில் உலகம் தான் அந்த பந்து அதை உதைத்து விளையாடுவது தான் நம் வாழ்க்கை என்று முடிக்கிறார்.
வகுப்பில் ஆசிரியரிடம் உங்களுக்குப் பிடித்த மாணவர் யார் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். எல்லோரையும் பிடிக்கும் என்கிறார் டீச்சர். அது உண்மையில்லை. யாரோ ஒருவரை ரொம்பவும் பிடிக்கும். அந்த மாணவர் யார் என்று கேட்கிறார்கள். அதைச் சொல்ல முடியாது என்கிறார் டீச்சர். ஒவ்வொரு மாணவனும் தன்னை ஆசிரியர் மிகவும் நேசிக்கிறார் என்றே நினைக்கிறார்கள். அந்த அன்பை நினைத்துப் பெருமை கொள்கிறார்கள்.
Slow Reader என்ற பாடலில் ஒருவன் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி எழுத்தாகப் பிரித்துப் படிக்கிறான். அவனால் அவ்வளவு மெதுவாகத்தான் படிக்க முடிகிறது
பள்ளியில் ஒரு மீன் தொட்டி இருக்கிறது ஆனால் அதில் மீன்கள் இல்லை. ஒரு மீன் தொட்டி உள்ளது-பன்றி அடைக்கும் பட்டியிருக்கிறது ஆனால் பன்றியில்லை. பூக்குவளை இருக்கிறது ஆனால் மலர்கள் இல்லை. இது போலவே எங்கள் தலைகளும் காலியாக இருப்பதாக டீச்சர் சொல்கிறார் என்றொரு கவிதையில் மாணவன் சொல்கிறான்.
வகுப்பில் எப்போதும் சக மாணவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பையனை எழுப்பி டீச்சர் கோபமாகப் பாடத்தில் கேள்வி கேட்கும் போது மட்டும் ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய். வாயைத் திறந்து பேச வேண்டியது தானே என்கிறார். அவன் அதற்கும் வாயை மூடிக் கொண்டு மௌனமாக நிற்கிறான். அழகான பாடலது
இன்னொரு பாடலில் ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களின் சுமையைத் தாங்க முடியாமல் இதை எழுதி வருவதால் என்ன பயன் எனக் கேலி செய்கிறான் ஒரு சிறுவன்.

எங்கப்பாவும் உங்கப்பாவும் சண்டை போட்டால் எங்க அப்பா தான் ஜெயிப்பார். எங்க அம்மாவும் உங்க அம்மாவும் சண்டை போட்டால் எங்க அம்மா தான் ஜெயிப்பார் எங்க அண்ணனோடு உங்க அண்ணன் சண்டை போட்டா காலி. எங்க தாத்தாவோட உங்க தாத்தா சண்டை போட்டா அவ்வளவு தான். முடிஞ்சா என்னோட சண்டைக்கு வா பாப்போம் என்று ஒரு பாடலில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை அழைக்கிறான். இது போன்ற ஒரு சவால் பாடலை நாங்களும் சிறுவயதில் பாடியிருக்கிறோம். எங்கோ லண்டனிலும் இதே பாடலை ஒரு சிறுவன் பாடுகிறான்.
நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியுள்ள ஆலன் தன் மனைவியின் மரணத்திற்குப் பிறகு தனது உதவியாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு ஒவியரே. அவர்கள் இணைந்து தற்போது புதிய சிறார் நூல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் வாசிக்கும் சிறார்கள் இந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும். மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த நூல்கள் தமிழில் வெளியானால் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதே உண்மை
••••