கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்

கு.அழகிரிசாமியின் கதைகள் குறித்துச் சிறந்த விமர்சன நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்.ஆர்.தாசன். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் 1987ல் வெளியானது. இன்றும் ரூ 12க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. இது போல மௌனி, பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை தொகுப்புகளும் மலிவு விலையில் வானதி பதிப்பகத்தில் கிடைக்கின்றன.

ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த கதைகளையும் வாசித்து இப்படி விரிவாக விமர்சனம் எழுதப்படுவதே அவருக்கான உண்மையான அங்கீகாரம். அதை என்.ஆர் தாசன் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

என். ஆர். தாசன் அழகிரிசாமியை ஆழ்ந்து படித்திருக்கிறார். அழகிரிசாமியின் கதைகளின் சிறப்புகளைச் சிறு அத்தியாயங்கள் மூலம் விரிவாக எடுத்துச் சொல்கிறார். குறிப்பாக கு.அழகிரிசாமி கதைகளில் வரும் குழந்தைகளைப் பற்றியும் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் பற்றி யாரெல்லாம் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பதையும் தனித்துவமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த ஆய்வுரையில் தேவையற்ற எந்த ஜோடனையும் கிடையாது. தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு வரியைக் கூட என்.ஆர் தாசன் எழுதவில்லை. அதே நேரம் கு.அழகிரிசாமியை ஆன்டன் செகாவ் மற்றும் கார்க்கியோடு ஒப்பிட்டு அழகாக வரையறை செய்திருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் பாதிப்பு அழகிரிசாமியிடம் எப்படி வெளிப்பட்டது என்பதையும் தெளிவாகக் கூறுகிறார். பலராலும் கையாளப்படாத கதைக்களன்களை எப்படி அழகிரிசாமி தேர்வு செய்து எழுதினார் என்பதையும். அவரது மொழிநடை மற்றும் கதாபாத்திரங்களின் உருவாக்கம் பற்றியும் நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.

“குழந்தையின் அழகிலும் அதன் விளையாட்டுகளிலும் பேதைமையிலும் ஈடுபட்டு மெய்மறக்காத கலைஞர்கள் கிடையாது“ என்று கு.அழகிரிசாமி கூறுகிறார். அது உண்மை என்பதற்கு அவர் படைத்த கதைகளே சாட்சி என்கிறார் என். ஆர் தாசன்.

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் கதையில் அழகிரிசாமி கரிசல் மண்ணின் வறட்சியையும் வெப்பத்தையும் மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதன் சௌந்தர்யத்தை, இனிமையை வெளிப்படுத்துகிறார் என அக்கதையின் நிஜத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என் ஆர் தாசன்.

ராஜா வந்திருக்கிறார். அன்பளிப்பு, சுயரூபம் இரண்டு பெண்கள். இருவர் கண்ட கனவு, பேதமை. காலகண்டி ஒரு மாதலீவ், அழகம்மாள் எனச் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து விமர்சனம் செய்திருப்பது பாராட்டிற்குரியது

பேதைமை என்ற கதையில் பிச்சைக்காரக் குருட்டுக்கிழவனின் சோற்றில் இரண்டு சிறுவர்கள் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டுச் சிரிக்கிறார்கள். கடைக்காரன் அவர்களைத் துரத்திப் போய் உதைக்கிறான். சிறுவர்கள் செய்தது தவறு என்றாலும் இப்படிக் கண்மூடித்தனமாக அவர்களை அடிப்பதைக் கதைசொல்லியால் தாங்க முடியவில்லை. அவர்களை விடுவித்துக் குடிசைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அந்தக் குருட்டு பிச்சைக்காரன் சிறுவர்களின் தகப்பன் என்று தெரிய வரும் போது அதிர்ச்சி அடைகிறான். அபூர்வமான இந்தக் கதையைப் பற்றி என். ஆர் தாசன் குறிப்பிட்டு எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

எனக்கு மிகவும் பிடித்த கு.அழகிரிசாமி கதைகளில் ஒன்று அக்னிக்கவசம்.

இக்கதை தெய்வத்தைக் கேள்வி கேட்கிறது. பஞ்சகாலத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் மறக்கமுடியாத கதை

இந்தக் கதை தலைவன் குறிச்சி ரணவீரமுதது மாரியம்மன் கோவில் பூசாரியின் மனைவியைப் பற்றியது.

அந்த மாரியம்மன் தெய்வம் மட்டுமில்லை. வழக்குத் தீர்த்து வைக்கும் நீதிபதியும் நோய் தீர்க்கும் வைத்தியரும், திருடனைப் பிடித்துத் தரும் உளவதிகாரியும் கூட என்று கதையின் துவக்கத்திலே அழகிரிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த மூன்றும் கதையின் மூன்று சரடுகளாக வெளிப்படுகின்றன.

ஒரு பெண் விஷயத்தில் பிரச்சனை துவங்கி அது ஊர் சண்டையாக மாறியதால் ஊரே இரண்டு பட்டுப் போகிறது. இதனால் கோவில் திருவிழா நடைபெறவில்லை. ஊரில். மழையும் இல்லை. விவசாயமும் நடைபெறவில்லை. கொள்ளை நோய் பரவுகிறது. இதனால் ஊர் ஒன்றுகூடி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறது. அப்போது தான் அம்மனுக்குச் சாத்தியிருந்த சிவப்புச் சிற்றாடை களவு போயிருப்பது தெரிய வருகிறது.

பூசாரி ஆறுமுகப்பண்டாரத்தின் மனைவி உடுத்திக் கொள்ள மாற்றுத்துணி இல்லாமல் அதை எடுத்துத் துவைத்துச் சாயம் போக வைத்துக் கட்டிக் கொள்கிறாள். வறுமை அவளை அணுஅணுவாகத் தின்றதே இதற்கு முக்கியக் காரணம்.

வீட்டில் கடுமையான வறுமை. கணவனும் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ போய்விட்டான். பிழைக்க வழியே இல்லை. இந்த நிலையில் மாற்று உடையில்லாமல் தன் மகனிடம் சொல்லி அம்மனின் சிற்றாடையைத் திருட வரச் செய்கிறாள் பூசாரியின் மனைவி. எண்ணெய்ப் பிசுக்கு போக வீட்டிலே துவைக்கிறாள். இதில் சாயம் போய்விடுகிறது. அதையே உடுத்திக் கொள்கிறாள்.

தன் கைபடாத புடவை ஒன்றை எப்படிப் பூசாரியின் மனைவி கட்டியிருக்கிறாள் என்று சலவைக்காரி காளிக்குச் சந்தேகம் வருகிறது. அவள் உண்மையை அறிந்து கொண்டுவிடுகிறாள். ஆனால் அதை எப்படி வெளியே சொல்வது எனத் தெரியாமல் திண்டாடுகிறாள்.

இந்நிலையில் பொங்கலன்று சாமி வந்து ஆவேசமாக ஆடும் காளி பூசாரி மனைவியிடம் அவள் செய்த தவறுக்காகக் கண்ணைக் குத்தப் போவதாக மிரட்டுகிறாள்.

இதைக் கேட்ட பூசாரி மனைவி ஆத்திரத்துடன் “குத்து. அதுக்கெல்லாம் பயந்தவுக ஒருத்தரும் இல்ல. காலமெல்லாம் பூசை பண்ணின என் புருஷனைக் காப்பாத்திக் குடுக்க ஒனக்கு சக்தியில்லை இப்போ என்னடான்னா கண்ணைக் குத்துவேன். மூக்கை குத்துறேனு உறுமுறே“ என்று சண்டை போடுகிறாள். அவள் மனதில் இருந்த கோபம் நெருப்பாக மாறுகிறது. அதுவே கவசமாக மாறுகிறது

இன்று படிக்கும் போது மாற்றுடை கூட இல்லாமல் இருப்பார்களா என்று தோன்றக்கூடும். ஆனால் ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பு இப்படியான நிலையே இருந்தது. அதுவும் பஞ்சகாலத்தில் கேட்கவே வேண்டாம். பஞ்ச காலத்தில் பிழைப்பு தேடி போகும் தாயும் மகளைப் பற்றிய திரிபுரம் கதையைப் படித்துப் பாருங்கள். மிக அற்புதமான கதை.

சாமி வந்து ஆடிய காளி சாந்தமடைகிறாள். பூசாரியின் மனைவியோ ஊரை விட்டே போய்விடுகிறாள். வெளியூரில் போய்ப் புருஷனைச் சந்திக்கும் அவள் இந்தத் தெய்வகுற்றத்தை நினைத்துப் பயந்து மருகி ஒரு வருஷத்தின் பின்பு ஊர் திரும்பி சாமிக்கு செம்பட்டு சாத்துவதுடன் கதை முடிகிறது.

மிகவும் நல்ல கதை. ஆனால் பூசாரியின் மனைவி காளியோடு சண்டையிடும் இடத்திலே கதை முடிந்து போகிறது. ஏன் அதை நீடித்து ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஊர் திரும்பி செம்பட்டு செலுத்தும் இடம்வரை அழகிரிசாமி கொண்டு போகிறார் என்று வெளிப்படையாகத் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார் என். ஆர். தாசன்.

இந்தக் கதையைச் சாமியாடி முன்பாகவே முடித்திருந்தால் அது மலையாளப்படமான நிர்மால்யத்திற்கு இணையாக அமைந்திருக்கும் என்று என்.ஆர்.தாசன் குறிப்பிடுவது முக்கியமானது.

தெய்வங்கள் மனிதர்களாக வேண்டும். மனிதப்பிறவிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு என்று திரிவேணி கதையில் அழகிரிசாமி கூறுகிறார். மனிதனின் மேன்மையை மட்டுமின்றிச் சிறுமைகளையும் தனது கதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அழகிரிசாமி.

ஒருவன் இருக்கிறான் என்ற கதையில் ஒண்டுக்குடுத்தனம் ஒன்றில் குடியிருப்பவன் வீட்டிற்கு ஒரு நோயாளி வந்துவிடுகிறான். இதனால் அந்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்துவீட்டுக்காரனுக்கும் எவ்வளவு வெறுப்பு உருவாகிறது என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார் அழகிரிசாமி.

அழகிரிசாமி நிறையக் காதல்கதைகள் எழுதியிருக்கிறார். அந்தக் காதல் கதைகளில் சாதியும் அந்தஸ்தும் எப்படி முக்கியப்பிரச்சனையாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

கதையின் வடிவத்தைப் பற்றியோ, அதில் செய்யவேண்டிய புதுமைகள் பற்றியே அழகிரிசாமி கவலைப்பட்டதில்லை. உண்மையான நிகழ்வுகளை மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாற்றக் கொஞ்சம் கற்பனை கலக்கிறார். அவ்வளவு தான் அவரது சிறுகதை பாணி. நுட்பமான விவரிப்பு. தனித்துவமான கதாபாத்திரங்கள். பெண்களின் உளவியலை ஆழ்ந்து ஆராயும் பண்பு இவையே அவரது கதைகளைத் தனித்துவமிக்க தாக்குகின்றன.

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளைப் பற்றி மட்டுமின்றி அவர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகள், கம்பரைப் பற்றிய நாடகம், இலக்கியக் கட்டுரைகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதில் அழகிரிசாமியின் மொழிபெயர்ப்புகள் பற்றிய ஆய்வு மிகச்சிறப்பு.

“என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது. நுணுக்கம், அமைப்பு இவற்றைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள் உட்பட்டு நான் எண்ணிப் பார்ப்பதும் கிடையாது. நேரடியாக அன்றாட வாழ்வில் பெறும் அனுபவங்களை,அவற்றின் உணர்வுகளின் தூண்டுதலின் பேரில் மனத்தில் ஏற்படும் கற்பனை வளத்துடன் சேர்த்து எழுதுகிறேன் “என்றே தனது எழுத்து பற்றி அழகிரிசாமி குறிப்பிடுகிறார்

“கு.அழகிரிசாமி ஒரு வித்தியாசமான நடையில் எழுதினார். அவரது நடையின் குண அம்சங்கள் என்ன? அது எளிமையானது. நேரடித்தன்மை கொண்டது. சுற்றி வளைத்து மூக்கைத் தொடாதது. மற்றவர்களைப்போல வார்த்தைகள் மூலம் மிரட்டவும், மயக்கவும், பிரமிப்பூட்டவும் முயலாமல், வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்து, அதன் மூலம் கதையின் உள்ளடக்கங்களைத் தூக்கலாகத் தெரிய வைத்தவர். பொதுவாகவே கு.அ வின் கதைகளில் ஆசிரியரே வெளியில் தெரியமாட்டார். பிரச்சினைகளும், அவற்றின் முகங்களுமே தெரியும்

மன இயல்புகளையும், இயக்கங்களையும் நினைவு வழியே ‘அப்ஸ்ராக்ட்’டாக கு.அழகிரிசாமி சொல்வதில்லை. தத்ததுவ வாசகங்களாகவோ, சித்தாந்த வாய்ப்பாடுகளாகவோ அவர் மாற்றித் தருவதில்லை. சிறுசிறு சம்பவங்களின் மூலமே இதைச் செய்கிறார்

கு.அ வின் கதைகள், வாசிப்பில் மேலான உணர்ச்சிரூபங்களை (visual feelings)த்தோற்றுவிக்கும். அவை சொல்லப்படுவதற்கு வசதியாகச் சுருக்கப்படும் போது சாதரணமாகத் தோன்றும். காரணம் அவரது கதைகள் ஸ்தூல நிகழ்ச்சிகளில் காலூன்றி நிற்கவில்லை“ என்கிறார் என். ஆர். தாசன்.

நூலின் பின் இணைப்பாக அழகிரிசாமியின் புத்தகங்கள் மற்றும் இந்த ஆய்விற்குத் துணைநின்ற புத்தகங்களின் பட்டியலை முழுமையாகக் கொடுத்திருக்கிறார் என். ஆர். தாசன். அரிய எழுத்தாளர்களை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நூலை எழுதியதாகச் சொல்கிறார். இது போன்ற புத்தகங்களே ஆரம்ப வாசகனுக்கான வழிகாட்டிகள். இது போலவே வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ந.பிச்சமூர்த்தி பற்றிச் சுந்தர ராமசாமி எழுதிய நூலும் மௌனி பற்றித் திலீப்குமார் எழுதிய நூலும் முக்கியமானது.

தமிழ் சிறுகதையின் சாதனை நாயகர்களை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள இவற்றைத் தேடி வாசிக்க வேண்டும்.

••

0Shares
0