சிரிப்பை இழந்தவர்

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஆங்கில எழுத்தாளர் பி.ஜி. வுட்ஹவுஸ் மற்றும் அவரது மனைவி எத்தேல் ஆகியோர் பிரான்சில் வசித்து வந்தார்கள். நகைச்சுவையான கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பி.ஜி. வுட்ஹவுஸ் பெரும்புகழ் பெற்றிருந்தார். அமெரிக்காவில் அவரது கதைகளுக்கு இருந்த புகழின் காரணமாக ஹாலிவுட் மற்றும் அமெரிக்க மேடைநாடகங்களுக்கு எழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இதனால் அவரது வருமானம் கொட்டியது.

இங்கிலாந்தின் நார்மண்டியில் வசித்த போது அங்கு ஏற்பட்ட வரிப்பிரச்சனை காரணமாகத் தனது தேசத்தை விட்டு வெளியேறி வுட்ஹவுஸ் பிரான்சில் குடியேறினார்.

ஜெர்மன் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் துவங்கியது பிரான்சிலிருந்து வெளியேறி பெல்ஜியம் வழியாக அமெரிக்கா செல்ல முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டை முற்றுகையிடும் ஜெர்மானிய ராணுவம் அவரைக் கைது செய்து பெல்ஜியத்திலுள்ள தடுப்புமுகாம் ஒன்றுக்கு அழைத்துப் போகிறார்கள்

இங்கேயிருந்து தான் Wodehouse In Exile படம் துவங்குகிறது.

ஒரு நாள் காலை நாவல் எழுதும் பணியிலிருந்த வுட்ஹவுஸைத் தேடி வந்த ஒரு ராணுவ வீரன் அவர் உடனடியாக வீட்டைக் காலி செய்து கிளம்ப வேண்டும் என்கிறான். எதற்காகத் தன்னைக் கைது செய்திருக்கிறார்கள். எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று தெரியாத வுட்ஹவுஸ் தன்னுடைய மனைவி மற்றும் செல்லநாயிடம் விடைபெறுகிறார். அந்த ஊரிலிருந்த ஆண்கள் அனைவரும் கைதிகளாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

பெல்ஜியத்திலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களை வரவேற்கும் காட்சியில் ஜெர்மன் ராணுவ அதிகாரி ஆங்கிலத்தில் அவர்களுடன் உரையாடுகிறான். அவனது பேச்சு அம்மாவை நினைவுபடுத்துவதாகச் சொல்கிறார் வுட்ஹவஸ்.

முகாமில் யாரும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை என்பதால் எழுதவும் படிக்கவும் நிறைய நேரம் செலவழிக்கிறார். அவரது கடிதம் ஒன்றின் வழியே ராணுவத்தால் கைது செய்யப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அமெரிக்காவிலுள்ள அவரது இலக்கிய முகவர் அறிந்து கொள்கிறார். வுட்ஹவுஸின் விடுதலைக்காக அமெரிக்க மக்களைக் குரல் கொடுக்கச் செய்கிறார். இந்தப் பணியில் வுட்ஹவுஸின் வளர்ப்பு மகள் லியோனோரா முக்கியப் பங்கு வகிக்கிறாள்

ஒரு அமெரிக்கச் செய்தியாளர் வுட்ஹவுஸை தேடிவந்து முகாமிற்கு வந்து நேர்காணல் செய்கிறார். புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த நேர்காணல் அமெரிக்க இதழில் வெளியாகிறது. இதை வாசித்த நாஜி ராணுவ அதிகாரிகள் புகழ்பெற்ற எழுத்தாளரான வுட்ஹவுஸ் தங்கள் தடுப்பு முகாமில் இருப்பதை உணர்ந்து அவரைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறார்கள்

இதற்காக அவர் எழுதுவதற்குச் சிறப்பு வசதிகள் செய்து தருவதுடன் அவருடன் இணக்கமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு நாள் அவரை விடுதலை செய்து பெர்லின் அழைத்துப் போகிறார்கள். அங்கே நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்.

முகாமிலிருந்த போது அவர் எழுதிய டயரிக்குறிப்புகளையும் அவரது முகாம் அனுபவத்தையும் ரேடியோவில் உரையாற்றும்படி கேட்டுக் கொள்கிறார்கள். அமெரிக்க வாசகர்களுக்காக வுட்ஹவுஸ் ரேடியோவில் உரையாற்றுகிறார். நகைச்சுவையான அந்த உரையைக் கேட்டு ஜெர்மானிய அதிகாரிகளும் சிரிக்கிறார்கள்

ஆனால் இந்த உரையைக் கேட்ட இங்கிலாந்து மக்கள் அவரைத் தேசத்துரோகி. ஜெர்மன் ராணுவத்திற்குத் துதிபாடுகிறவர் என்று கோபமாக விமர்சிக்கத் துவங்கினார்கள். அவருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசே பொய்களைப் பரப்பியது. நாடெங்கும் பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. இதை அறிந்த வுட்ஹவுஸ் தனது தரப்பு விளக்கத்தைச் சொல்ல மறுபடியும் ரேடியோவில் உரையாற்றினார். இந்த உரைகளின் வழியே ஜெர்மன் முகாம்களில் எவ்விதமான தண்டனையோ, குரூரமான வன்முறை நிகழ்வுகளோ நடப்பதில்லை என்ற பிம்பத்தை ஜெர்மன் உருவாக்குகிறது. இதை அறியாமல் வுட்ஹவுஸ் ரேடியோவில் ஐந்து உரைகளை நிகழ்த்தினார்.

இதற்குள் ஜெர்மன் ராணுவத்தால் அழைத்துவரப்படும் வுட்ஹவுஸின் மனைவி எத்தேல் வுட்ஹவுஸை சந்திக்கிறார்.

அவர் தந்திரமாக ஏமாற்றப்பட்டதை எடுத்துச் சொல்லி இங்கிலாந்தில் அவர் மீது மக்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைப் பகிர்ந்து கொள்கிறாள்.

வுட்ஹவுஸால் அதை நம்ப முடியவில்லை. மெல்ல உண்மையை உணர்ந்து கொள்கிறார். தான் ஒரு போதும் பிரிட்டனுக்குத் துரோகம் இழைக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார். பெர்லினில் ராணுவ தாக்குதல் தொடரவே அவர் அங்கிருந்து பாரீஸ் செல்ல அனுமதிக்கப்படுகிறார். அங்கு ஒரு நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாள் முழுவதும் நாவல் எழுதுகிறார். போரில் பிரான்ஸ் வெற்றியடைகிறது.

இங்கிலாந்தின் புலனாய்வுத்துறை அதிகாரி மால்கம் பாரீஸிற்கு வருகை தந்து வுட்ஹவுஸை விசாரணை செய்கிறார். உண்மையைப் புரிந்து கொண்ட அவர் வுட்ஹவுஸிற்கு உதவி செய்ய முன்வருகிறார். பிரிட்டன் அரசின் சார்பில் கல்லன் என்பவரால் விசாரணை நடத்தப்படுகிறது. அதில் வுட்ஹவுஸ் தனது தரப்பை முழுமையாக விவரிக்கிறார். முடிவில் கல்லனின் அறிக்கை அரசிடம் சமர்பிக்கபடுகிறது. அதில் அவர் செய்த செயல் குற்றம் என்றே கருதப்படுகிறது. மேலும் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படக்கூடும் என்றும் வுட்ஹவுஸ் அறிந்து கொள்கிறார்.

இதனால் மனவருத்தமடைந்த வுட்ஹவுஸ் தன் மனைவியோடு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து சென்றுவிடுகிறார். பின்பு தன் வாழ்நாளில் அவர் இங்கிலாந்து திரும்பவேயில்லை.

நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு 1974ல் இங்கிலாந்து அரசு அவரை அங்கீகரிக்கும் படியாக Knightwood பட்டம் அளித்தது. வுட்ஹவுஸ் அமெரிக்கப் பிரஜையாக இருந்து அங்கேயே மரணமடைந்தார்.

இந்தப்படத்தில் வுட்ஹவுஸின் செயல்களும் பேச்சும் பல இடங்களில் எழுத்தாளர் அசோகமித்திரனை நினைவுபடுத்தியது. வுட்ஹவுஸின் பாணியில் தான் அசோகமித்திரனின் நகைச்சுவையும் எழுத்தில் வெளிப்படுகிறது. அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர் வுட்ஹவுஸ் என்று அசோகமித்திரனே கூறியிருக்கிறார்.

படத்தில் வுட்ஹவுஸை விடவும் அவரது மனைவி எத்தலே சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். வானொலியில் பேசும் கணவரைத் தடுத்து நிறுத்த அவர் கார் பயணத்தில் காட்டும் வேகம். நேரடியாக வுட்ஹவுஸிடம் குற்றம் சாட்டும் எத்தல், அவர் தன்னை மறைத்துக் கொண்டு நகைச்சுவையாளர் போலத் தோன்றக்கூடியவர். அவரது நகைச்சுவை ஒரு தந்திரம் என்கிறார்.  எத்தலின் அவதானிப்பும் புரிதலும் முக்கியமானது.

ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அழைத்துப்போகும் போது தன் பெட்டியில் ஷேக்ஸ்பியரின் முழுமையான தொகுதியை மட்டுமே வுட்ஹவுஸ் எடுத்துப் போகிறார். அந்த ஒரு நூல் போதும் என்கிறார். படத்தின் கடைசியிலும் ஷேக்ஸ்பியரைத் தான் மேற்கோள் காட்டுகிறார்.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போலவே விதி தான்  தன்னை இந்த நிலைக்கு உள்ளாக்கியது என்று வுட்ஹவுஸ் படத்தின் கடைசியில் சொல்கிறார். செவ்வியல் இலக்கியங்கள் யாவும் விதியின் விநோத விளையாட்டினைத் தான் பேசுகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.

முகாமில் தனது டயரியில் இருந்த குறிப்புகளை அவர் வாசிக்கும் போது மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் ஒரு ஜெர்மானிய அதிகாரிக்குச் சிரிப்பே வரவில்லை. அவரால் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை. இதற்கு மற்றொரு அதிகாரி அது British humour என்கிறார்‘. அது உண்மையே நகைச்சுவை எப்போதும் பண்பாட்டோடு ஒன்றுகலந்தது. ஆகவே British humourயை ரசிக்க அந்தப் பண்பாடு நெருக்கமாக இருக்க வேண்டும். அல்லது நாம் அந்தத் தேசப்பிரஜையாக இருக்க வேண்டும்.

பி. ஜி. வுட்ஹவுஸ் நாவல்கள் இந்தியாவிலும் மிகவும் புகழ்பெற்றிருந்தன. ஒரு தலைமுறையே அவரை விரும்பிப் படித்தது. கொண்டாடியது. கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அவரைப் பாடமாக படித்தார்கள். இன்று அந்த வரவேற்பு குறைந்துவிட்டது. என் தாத்தா அவரை விரும்பி வாசித்தார். அவரது நூலகத்தில் பி. ஜி. வுட்ஹவுஸ் நாவல்கள் செம்பதிப்பாக இருந்தன.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பி. ஜி. வுட்ஹவுஸ் ஒரு அப்பாவி, நிரபராதி. எதுவும் அறியாமல் இப்படி நடந்து கொண்டார் என்ற பிம்பத்தைப் பிபிசி ஏன் உருவாக்க நினைக்கிறது என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழவே செய்கிறது.

உண்மையில் பி.ஜி.வுட்ஹவுஸ் அத்தனை அப்பாவி ஒன்றுமில்லை. அவரை ஜெர்மன் ராணுவம் பயன்படுத்திக் கொண்டது போலவே அவரும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அது இவ்வளவு பெரிய விளைவை உண்டுபண்ணும் என அவர் நினைக்கவில்லை.

நகைச்சுவையின் அளவு கூடும் போது அது கசப்பாகி விடுகிறது. வருத்தமடையச் செய்கிறது. அது தான் பி. ஜி. வுட்ஹவுஸிற்கும் நடந்தது.

ஐந்து ரேடியா உரைகள் ஒருவரைத் தனது சொந்த தேசத்திலிருந்து துண்டித்துவிட்டது என்பது தான் இதில் முக்கியமானது. அந்த உரைகளின் எழுத்துவடிவம் இன்று வாசிக்கக் கிடைக்கிறது அதில் வெளிப்படுவது அசட்டுத்தனம். ஜெர்மானிய ராணுவத்தினைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவர் எழுதியது போலவே இருக்கிறது.

படத்தின் துவக்கக் காட்சியிலே எத்தல் கேட்கிறார். “பிரான்சின் வீழ்ச்சி கண்ணுக்குத் தெரிகிறது. டன்கிரிக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகள் சிறிய படகுகளில் வெளியேறிப் போகத் துவங்கிவிட்டன. இனி என்னவாகும் என நினைக்கிறீர்கள்.“

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல்தனது நாவலின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசுகிறார் வுட்ஹவுஸ். எத்தலுக்கு எதிர்காலம் அப்போதே தெரியத்துவங்கியிருக்கிறது. அதை உணர்ந்த போதும் வுட்ஹவுஸ் அரசியல் செய்திகளில் ஈடுபாடு அற்றவரைப் போலவே நடந்து கொள்கிறார்.  

அந்த நாட்களில் ஜெர்மனியில் வுட்ஹவுஸின் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு விரும்பி வாசிக்கப்பட்டன. அதில் கிடைத்த ராயல்டி தொகையைக் கொண்டு தான் அவர் பெர்லினில் நட்சத்திர விடுதியில் தங்கினார். நாஜி உயரதிகாரிகள் பலரும் அவரை வாசித்திருக்கிறார்கள்.

பிரான்சிலிருந்து கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அவர் ஜெர்மன் ராணுவத்தைப் பண்பாளர்கள் என்றே நம்புகிறார். முகாம் வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றிக் கேலி செய்கிறார். உண்மையில் அவருக்கு நாஜி ராணுவத்தின் கோரமுகம் தெரியவில்லையா அல்லது தெரிந்து கொண்டு மறைக்கிறாரா எனப் புரியவில்லை.

ஜெர்மன் ராணுவத்திடம் மாட்டிக் கொள்வதற்கு முன்பு ரகசியமாக அமெரிக்கத் தப்பிப் போகத் திட்டமிட்டவர் பி. ஜி. வுட்ஹவுஸ் . என்றால் அவருக்குச் சூழலின் தீவிரம் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நாஜி அதிகாரிகள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களுக்கு எதிராகப் பிரிட்டன் அமெரிக்காவைத் துணை சேர்க்க முயல்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் பிரிட்டனின் புகழ்பெற்ற எழுத்தாளரைக் கொண்டே அந்த முயற்சியைத் தோற்கடிக்கிறார்கள்.

அமெரிக்க மக்கள் இந்த உரைகளைக் கேட்டால் ஜெர்மன் ராணுவம் என்பது ஏதோ அமைதியின் காவலர்கள் என உணருவார்கள். அது தான் அவர்கள் உருவாக்க நினைத்த பிம்பம். அதைப் பி.ஜி.வுட்ஹவுஸ் சரியாகவே உருவாக்கியிருக்கிறார்.

அன்றைய சூழலில் அவர் மீது எழுந்த கண்டன விமர்சனங்கள் பிரிட்டன் அரசின் சார்பிலே வலிந்து உருவாக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்பாவியாக அவர் புனைந்து கொண்ட பிம்பம் கேள்விக்குரியதாகவே உள்ளது.

இன்று அவர் மீதான விமர்சனத்தைத் துடைக்க வேண்டிய அவசியம் பிரிட்டனுக்கு உண்டாகியுள்ளது. ஆகவே தான் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் பி. ஜி. வுட்ஹவுஸ் சதா எழுதிக் கொண்டேயிருக்கிறார். உண்மையில் அவர் எழுதுவதற்கு முன்பு விரிவாகக் குறிப்புகள் எழுதக்கூடியவர். அந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டே நாவல் எழுதியிருக்கிறார். ஒரு நாவல் எழுத நானூறு குறிப்புகள் வரை வைத்திருப்பார் என்கிறார்கள். எந்தக் காட்சியில் நகைச்சுவையான நிகழ்வு வர வேண்டும். எப்படி வர வேண்டும் என நாடக நடிகர்கள் போலத் திட்டமிட்டே அவர் தனது நகைச்சுவையை உருவாக்கினார்.

பி. ஜி. வுட்ஹவுஸ் ஒரு தேசத்துரோகி என்பது போன்ற குற்றச்சாட்டு மிகையானது. ஆனால் சூழலின் தீவிரத்தன்மையை உணராமல் நடந்து கொண்டிருக்கிறார் என்பது நிஜமே.

உண்மையை வெளிப்படுத்த நகைச்சுவை பயன்படுவது போலவே உண்மையை மறைக்கவும் நகைச்சுவை பயன்படுத்தப்படும். அது பி. ஜி. வுட்ஹவுஸிற்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜெர்மனியில் இருந்த நாட்களில் அவர் நகைச்சுவையை விளையாட்டாக எடுத்துக் கொண்டாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது

••

0Shares
0