மண்ணாசை எனும் மண்ணின் குரல்

சங்கர ராமின் மண்ணாசை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்.

அதிகம் பேசப்பபடாத ஆனால் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான நாவல். நீண்டகாலம் இந்த நாவல் அச்சில் இல்லாமல் இருந்தது. நண்பர் கால. சுப்ரமணியம் அதைத் தமிழினி மூலம் மறுபதிப்புச் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

சங்கர ராமின் சொந்த ஊரை மையப்படுத்திய நாவல். முசிறியைச் சுற்றிய கிராமங்களின் இயல்பை. விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கை நெருக்கடிகளை மிக உண்மையாகச் சங்கரராம் எழுதியிருக்கிறார். தான் நேரில் கண்ட உண்மை நிகழ்விலிருந்து இந்த நாவலை உருவாக்கியதாகச் சங்கரராம் முன்னுரையில் சொல்கிறார். இந்த நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பின்பு தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவு தான் சற்றே செயற்கையாக உள்ளது

மண்ணாசை நாவல் மிக அழகாகத் துவங்குகிறது. ஆலங்கட்டி மழையின் ஊடே சிறுவர்கள் சுற்றியலையும் காட்சி மறக்க முடியாதது..

வீரமங்கலம் என்ற, காவேரிக்கரையோரமுள்ள சிறு கிராமத்தின் கதையைத் தான் மண்ணாசை விவரிக்கிறது.

வீரமங்கலத்துக் குழந்தைகளுக்குக் காற்று, மழை என்றாலே, ஒரே கொண்டாட்டம். பயமற்று ஓடித் திரிவார்கள் அதிலும் வெயிற்காலத்தில் ஒரு புயற்காற்று அடிக்க ஆரம்பித்தாலோ, அவர்களுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. வேலனும் வள்ளியும் அவர்களின் நண்பர்களும் திடீரென வீசும் பெருங்காற்றில் மாமரங்களிடம் ஓட்டம் பிடிக்கிறார்கள். மரத்திலிருந்து பழங்கள் மாரியாய்ப் பொழிகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் தான் தூக்கமாட்டாத அளவு பழங்கள் இருந்தபோதிலும், ஒன்றுக்காவது மரங்களை விட்டுவர இஷ்டமில்லை. ஆலங்கட்டி மழையின் ஊடே அந்தச் சிறுவர்கள் மாம்பழங்களுடன் செல்வது அபூர்வமான காட்சி

வேலனும் வள்ளியும் பால்ய வயது முதல் நெருக்கமாகப் பழகுகிறார்கள். கால மாற்றத்தில் வேலனின் குடும்பம் நொடித்துப் போகிறது. அவனது வளர்ப்புத் தந்தை கடனாளி ஆகிறார். இதனால் அவர்களின் திருமணம் தடைப்படுகிறது. வேலனின் அம்மா அவன் மீது காட்டும் பாசம், கஷ்டத்தின் நடுவிலும் ஒரு சுடரைப் போல ஒளிரும் அன்பு. கடனாளியான வெங்கடாசலம் அந்த மனவருத்தத்தில் நடக்க முடியாத நோயாளி ஆவது வேலன் தலையெடுத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவது என நாவல் ஒரு எளிய குடும்பத்தின் வீழ்ச்சியை நுணுக்கமாகச் சித்தரிக்கிறது.

நாவலின் தனிச்சிறப்பு அதன் எழுத்துமுறை. வட்டார மணத்துடன். நுணுக்கமான சித்தரிப்புகளுடன் உணர்ச்சிப்பூர்வமான விவரணைகளுடன் நாவலை எழுதியிருக்கிறார். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக உருக் கொண்டிருக்கிறார்கள்.

முசிரியின் தைப்பூசத்திற்கு வெங்கடாசலம் செல்லும் போது தெய்வத்தின் முன்னே நீண்ட நேரம் நின்று வணங்க வேண்டும் என்று நினைக்கிறார். மனதின் குறைகளைக் கடவுளிடம் சொல்லித் தீர்க்க அவ்வளவு நேரம் சன்னதியில் நிற்க வேண்டியிருக்கிறது. கிராமத்து விவசாயிகள் கோவிலுக்குப் போவது குறைவு. ஆனால் சாமி முன்பாக நீண்டநேரம் கைகூப்பி வணங்கி பிரார்த்தனை செய்வார்கள். இதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒரு காட்சியைத் தான் சங்கரராம் எழுதியிருக்கிறார்.

வீரமங்கலத்திலும் சந்தை கூடுவதும் அதற்காக வெளியூர்களிலிருந்து ஒரு பார வண்டிகள் வந்து சேருவதும் அன்றைய உலகின் அழியாச்சித்திரம். மாட்டுவண்டிகள் திரும்பிப் போகும் போது அதில் ஏறிச் செல்லும் வெங்கடாசலத்தின் பயணம். உடன் வரும் அண்ணாமலைத்தாத்தா, வீரப்பன், மதுரை எனக் கறுப்பு வெள்ளை படங்களின் நேர்த்தியான சித்தரிப்பு போல அந்தக் காட்சி மனதில் படிகிறது

நாவலில் மூன்று தளங்களைச் சங்கரராம் மையப்படுத்துகிறார். ஒன்று விவசாயக்குடும்பம் ஒன்றின் உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்கள். இரண்டாவது கங்காணிகள் ஆள்பிடித்து விற்று பணக்காரன் ஆவது. மூன்றாவது உறவினர்களால் ஏமாற்றப்பட்டு நிலத்தை இழப்பது. அதில் ஏற்படும் சண்டை. கைது, நீதிமன்ற விசாரணை என நீளும் போராட்டங்கள்.

தன்வாழ்நாளில் கோர்ட் படிக்கட்டினை மிதிக்காத விவசாயியைக் காணுவது அபூர்வம். கிராமத்து வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாகப் பொறாமை, சண்டை. கோபம். அடிதடி. வழக்குகள். இணைந்திருக்கின்றன. உறவினர்களாலும் நண்பர்களாலும் தான் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பொருட்களை இழக்கிறார்கள். சிறிய விஷயங்கள் கூடப் பெரிய பிரச்சனையாக மாறிவிடுகின்றன.

வெங்கடாசலம் போன்ற சிறுவிவசாயி நிலத்தின் மீது கொண்டுள்ள பற்று ஆழமானது. நிலத்தை இழப்பது உயிரை இழப்பது போன்றதே.

கங்காணி வேலை செய்து புதுப்பணக்காரனாக மாறிய கோவிந்தனை முசிரியில் காணுவது. கடுக்கன் தங்க சங்கிலி என அவனது மினுமினுப்பு. ஏழை எளி ஆட்களைக் கூலிகளாக விற்று அடிமையாக்குகிறான் என எரிச்சல் கொள்ளும் வெங்கடாசலத்தின் மனப்போக்கு. கங்காணி வேலனின் தந்தையைப் பற்றிச் சொல்லும் நிகழ்வு அந்த முசிறி தைப்பூசக் காட்சிகள் நுட்பமாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியாவைவிட்டு போர்னியோ தீவுக்குச் செல்லும் வேலனின் தந்தை ஒரு டச்சுப் பிரபுவின் கரும்புத்தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருக்கிறான் அவனது முதலாளி ஒரு ஐரோப்பியன் ஒருநாள், கோபவெறியில் ஒரு மேஸ்திரியை வெகு அசிங்கமாக முதலாளி திட்டிவிடுகிறான். இதனால் ஆத்திரமான மேஸ்திரி உடனே தன், இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ஐரோப்பியனைக் குத்தப் போகிறான். வேலனின் தந்தை. அப்பாவு குறுக்கே விழுந்து தடுத்துக் காப்பாற்றுகிறான்

இதனால் முதலாளி உயிர்பிழைக்கிறார். இந்த நன்றியை மறக்காமல் தான் . போர்னியோ தீவிற்குப் போகும் போது அப்பாவுயையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.. முதலாளி இறக்கும் போது அவனது சொத்து முழுவதையும் அப்பாவுவிற்கு எழுதி வைக்கிறான். பெரும் பணக்காரனாக ஊர் திரும்ப முற்படும் அப்பாவு வழியில் இறந்துவிடவே அந்தப் பணம் கஷ்டப்படும் வேலன் குடும்பத்திற்குக் கிடைக்கிறது

நாவலின் குறுக்காக வந்து செல்லும் இந்தச் சிறு நிகழ்வு வாழ்க்கை உங்களை எங்கெல்லாம் இழுத்துச் செல்லும் என்பதை அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. நாவலின் திருப்புமுனையாக அமைவது இந்த நிகழ்வே

மீனாட்சியிடம் வெளிப்படும் பொறாமை. அவள் வெங்கடாசலத்தின் சொத்துகளை அடைய மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் அதற்காகத் தந்திரமாக நடந்து கொள்ளும் விதம்.. வேலன் அப்பாவின் நெருக்கடியைப் புரிந்து கொண்டு மீளுவதற்கான முயற்சி செய்வது என விவசாயக் குடும்பங்களுக்குள் ஏற்படும் கொந்தளிப்புகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.

தமிழின் சிறந்த நாவல் வரிசையில் மண்ணாசைக்கு என்றைக்கும் இடம் உண்டு.

••

சங்கரராம் பற்றி க.நா.சு எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். அவரையும் நாவலையும் புரிந்து கொள்ள முடியும்

••

சங்கரராம்

தமிழ் நாவல் இலக்கியவுலகின் முதல்வராகக் கருதப் பட வேண்டியவர் சங்கரராம் என்கிற புனை பெயரில் எழுதிய T. L. நடேசன் என்பவர். நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது. அவரைத் தொடர்ந்து ஷண்முகசுந்தரம், நான், மற்றவர்கள் எழுதினோம்.

மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார்.

இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ’ இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன், கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தியது. (ஒரு நாவலை மொழி பெயர்த்தவர் கிருஷ்ணகுமார். இரண்டாவது நாவலை மொழி பெயர்த் தவர் ஆசிரியரே.) கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றிச் சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார். இதை மொழி பெயர்த்து அவரே வெளியிட்டபோது கல்கியும் மற்றவர் களும் நாவல்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒரு இலக்கியத் தரம், கலை மேன்மை சங்கரராமிடம் இருந்தது. தன்

இந்த நாவல் இப்போது படிக்கக் கிடைப்பதில்லை; அச்சில் இல்லை என்பது பற்றித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். அது ஒரு Classic status என்று சொல்லக் கூடியதை எட்டிவிட்ட நாவல். அதைப் படிக்காதவன் எவனும் தமிழ் நாவலைப் பற்றிப் பேச லாயக்கில்லாதவன் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன், அதற்குப் பிறகு பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதினார் சங்கர ராம். ஆனால் அவை அந்த முதல் நாவலின் தரத்தை எட்டியதாகச் சொல்ல இயலாது. இன்னொன்றும் கூடவே சொல்லவேண்டும். தமிழில் எழுத ஆரம்பித்தபிறகு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதவில்லை . தமிழில் எழுதுவது அவர் திருப்திக்குப் போதுமான தாக இருந்தது.

– மண்ணாசை மூன்று நாலு பதிப்புகள் கடகடவென்று வந்தன. இருந்தும் பிரசுரகர்த்தாவிடம் சண்டையிட்டுக் கொண்டு (வேறு என்ன? பணத்தைப்பற்றித்தான்) வேறு ஒருவரிடம் – நூலைப் பிரசுரிக்கத் தந்தார். அதோடு, பதிப்புகள் வருவது நின்றுவிட்டது. பிரசுரகர்த்தர்கள், ஆசிரியர்களுக்கிடையே நிலவுகிற இன்றைய நிலைப்பற்றிய வியாக்கியானமாக இதைக் கொள்ளலாம்.

நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கரராம் பல சிறு கதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமரிசன ரீதியாக எனக்குத் தோன்றுவது அவர் சிறுகதையில் சாதித்த அள வுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பது தான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகு தூரம் போக வேண்டிய தில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல் கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவைதான். பத்திரிகைத் தேவையையும் பணத்தேவையையும் காரண மாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே யுள்ள உந்துதலால் எழுதப்பட்டவை.

அவர் முதன் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத்தான். ஆங்கிலத்தில் Children of the Kaveri என்று ஆறணா விலை போட்டிருந்த அந்தப் புஸ் தகத்தை எடுத்துக்கொண்டு தானே பிரசுரித்திருந்த மாதிரி தானே விற்க அவர் ஒரு நவராத்திரி லீவில் அண்ணாமலை யூனி வர்ஸிடி ஹாஸ்டலுக்கு வந்தார். ஹாஸ்டல் பையன்கள் எல்லோரும் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தனர். என்னைப் போல லைப்ரரியில் படிக்கிற அக்கறையுடன் நாலைந்து பேர்வழிகள் மட்டுமே இருந்தோம்.

சங்கரராமை கண்டதும் அவர் புஸ்தகத்தில் – எனக்கும் பின்னால் நேரப்போகிற கதியை நினைத்துக் கொண்டே – மூன்று பிரதிகள் கமிஷன் கழித்து ஒரு ரூபா கொடுத்து வாங்கிக் கொண்டேன். மூன்று பிரதிகள் எதற்கு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் என் னுடைய இலக்கிய அபிலாஷைகளைச் சொன்னேன். ஓரளவுக்கு அகம்பாவத்துடன் “அப்படி ஒன்றும் எழுதுவத் தென்பது சுலபமான விஷயம் அல்ல” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அகம்பாவம் எனக்குப் பிடித்திருந்தது. நன்றாக எழுதுவதென்பது, அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை தான். நன்றாக எழுதுபவர்கள் அகம்பாவம் கொள்ள நிச்சயமாக உரிமை உள்ளவர்கள் தான் என்று இன்றும்கூட 1985-ல் நினைத்துப் பார்க்கும் போதும் தோன்றுகிறது.

இது என் கல்லூரி நாட்களில் முப்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்தது. பின்னர் அவரைச் சந்தித்தபோது 1944, 1945-ல் இது பற்றி அவருக்கு நினைப்பூட்ட முயன்றேன். சந்திப்பு எனக்கு நினைவிருந்தமாதிரி அவருக்கு நினைவில்லை. ஆனால் அந்தப் புஸ்தகம் விற்கவேயில்லை. இருநூறு முந்நூறு ரூபாய் கைநஷ்டப் பட்டதோடு சரி” என்றார். இந்தத் தொகுப்பிலிருந்து 1957, 58-ல் நான் பம்பாயில் சந்தித்த Joseph Kalmer என்பவரிடம் நாலைந்து கதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்ததும், அதற்குக் கணிசமான அளவில் சங்கரராமுக்குப் பணம் வந்தது என்றும், அது காரணமாக இன்னும் கொஞ்சம் மொழி பெயர்ப்புகள் சாத்தியமா என்று கேட்டுக்கொண்டும் சங்கர ராம் என் வாலாஜா வீட்டு மாடிக்கு வந்ததும் நினைவிருக் – கிறது.

ஒரு சமயம் பேச்சுவாக்கில் அவர் பிள்ளை குட்டிகள் குடும்பம் என்று கேட்டபோது “அதெல்லாம் சாரமில்லாத விஷயங்கள். அது பற்றிப் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஏதோ தனியாக இருப்பதாகவும், ஒரு கோசாலை நடத்துவதாகவும் அதில் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார்.

வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்று எண்ணுகிறேன். அகண்ட காவேரிக் கரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் ஒரு விலாசம் இருந்தாலும் அதிகமாகச் சென்னையில் தங்காதவர் என்று எண்ணு கிறேன். நான் நடத்திய நூற்றுக்கணக்கான இலக்கிய நண்பர்கள் கூட்டங்களில் ஒன்றுக்குக்கூட அவர் வந்ததில்லை என்று நினைவிருக்கிறது. காரணம், விரோதமோ அல்லது அதனிடம் அவநம்பிக்கையோ அல்ல – அவர் அநேகமாகச் சென்னைக்கு வெளியே இருந்தார் என்பதுதான்.

பணத்துக்குக் கஷ்டப்படுவதைப் பற்றியும், தன் புஸ்தகங்களைப் போட்டவர்கள் சரியாகப் பணம் கொடுப்ப தில்லை என்பது பற்றியும் தாராளமாகச் சொல்லுவார். இதில் எவ்வளவு தூரம் கற்பனை, எவ்வளவு தூரம் நிஜம் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவருடன் அவ்வளவாக நெருங்கிய பழக்கம் எனக்கு ஏற்படவில்லை.

தன் பிற்கால நாவல்களைப் பற்றி ஒரு சமயம் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். “மண்ணாசை நல்ல நாவல்” என்று நான் சொன்னதும் மற்றதையெல்லாம் எழுதியிருக்க வேண்டாம் என்கிறீர்களா?” என்று கேட்டார். ‘அதை எப்படி நான் சொல்ல முடியும்?” என்று பதில் சொன்னேன். அவருக்கே தன் சிறுகதைகள் பற்றிக் கேட்க நினைவில்லை.

நான் இல்லாத வேறு ஒரு சமயம் வீட்டுக்கு வந்திரு கிறார். அப்போது யாரோ ஒரு இலக்கியத் தகுதியற்ற வருக்குச் சாஹித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்த சமயம். என் மனைவி அவருக்குக் காபி கொடுத்துவிட்டு “உங்களுக்கு இன்னும் வரவில்லையே இந்தப் பரிசு?” என்று கேட்டிருக்கிறாள். வராதம்மா வராது. எனக்கெல்லாம் வராது!” என்று பதில் சொன்னாராம்..

தனக்குச் சாஹித்திய அக்காதெமி பரிசு வரவில்லையே என்று மறுதடவை என்னைச் சந்திக்கும்போது ஆதங்கப் பட்டார். “அது அவ்வளவு முக்கியமா?” என்று கேட்ட தற்குச் சற்றுத் தயங்கிவிட்டு எனக்கு உடனடியாக இப்போ கோசாலையைத் தொடர ஒரு ஐயாயிரம் வேண்டும். எங்கே போவது?” என்றார். கோசாலையை மூடிவிட்டு அந்தச் சமயம் சென்னைக்கு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்

***

0Shares
0