வீடும் உலகமும்

புதிதாக ஒரு வீட்டிற்குக் குடியேறும் போது ஏற்படும் அனுபவங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருக்கின்றன.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு குடும்பம் புறநகர் லண்டனிலுள்ள ஒரு வீட்டிற்குப் புதிதாகக் குடியேறுகிறார்கள். அண்டை வீட்டாருடன் ஏற்படும் அறிமுகம். தெரிந்த நண்பனின் வருகை. குடும்பம் அங்கே மெதுவாக நிலை கொள்ள ஆரம்பிப்பது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் எனக் காட்சிகளைக் காணும் போது இது போன்ற அனுபவத்தைத் தானே நான் சென்னைக்கு வந்த போதும் அடைந்தேன் என்று தோன்றியது.

ஊரும் காலமும் வேறு வேறானது. ஆனால் ஒரே அனுபவம் தான் திரும்பத் திரும்ப நடைபெறுகிறது

சினிமாவின் வழியே நம்முடைய வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்கிறோம்.

பலநேரம் நாம் அடையமுடியாமல் போனவற்றை. சில நேரம் நாம் அடைந்த விஷயங்களின் மாற்று வடிவத்தை.

இரண்டிலும் நாம் மாறத்துவங்குகிறோம். நமது அனுபவங்கள் பொதுவெளியில் கதையாக மாறிவிடுகின்றன. அதே நேரம் எவருடைய கதையோ நமது சொந்த அனுபவமாக உட்சென்று சேகரமாகி விடுகிறது

ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லும் This Happy Breed படம் 1944ல் வெளியானது.. இது ஒரு நாடகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது. வெற்றிகரமான இந்த மேடைநாடகத்தை எழுதியவர் Noël Coward. இவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இவரது  Private Lives , Brief Encounter, Blithe Spirit போன்ற நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நாடகம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் கதையைச் சொல்வதுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற அரசியல் சமூக மாற்றங்கள் அந்தக் குடும்பத்தை எப்படிப் பாதித்தன என்பதையும் விவரிக்கிறது

டேவிட் லீன் இயக்கியுள்ள இப்படம் இரண்டு யுத்தங்களுக்கு நடுவே ஒரு வாழ்க்கையை விவரிக்கிறது.

– ஃபிராங்க், அவரது மனைவி எத்தேல், அவர்களின் மூன்று குழந்தைகள் ரெக், வி மற்றும் குயினி, அவரது சகோதரி சில்வியா மற்றும் எத்தேலின் தாய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். –

தெற்கு லண்டனின் கிளாபாமில் ஒரு வாடகைக்கு வீட்டுக்கு. ஃபிராங் குடியேறுகிறார். அது தொழிலாளர்கள் குடியிருப்பு. அவரது பக்கத்து வீட்டுக்காரர் பாப் மிட்செல்.

– ஃபிராங்க்கின் பழைய நண்பர். ஆகவே குடிவந்த முதல்நாளே அவர்களுக்குள் நல்ல நெருக்கம் உருவாகிறது.

பிராங்க ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். வீட்டினை நிர்வாகம் செய்யும் எத்தேல் பிள்ளைகளை வளர்க்கிறார்

வீட்டில் அதிகாலை தயாரிக்கப்படும் தேநீரில் துவங்கி இரவு உணவு வரை அத்தனையும் காட்சிகளாக விரிகின்றன. வீடு தான் எத்தேலுக்கு உலகம். ஒரு செடி வளர்ந்து பூப்பது போல அந்த குடும்பம் மெல்ல வளர்ச்சி அடைகிறது.

பிள்ளைகள் வளர ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கெனத் தனி விருப்பங்களும் எண்ணங்களும் உருவாகின்றன. அது எப்படிக் குடும்பத்தில் எதிரொலிக்கிறது. விசுவாசமான பிரிட்டிஷ் குடிமக்களாக ஃபிராங்க்கின் குடும்பம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள் என்று பல்வேறு நிகழ்வுகளாக படம் விரிகின்றன.

ஆளுக்கு ஒரு ஆசையுடன் வளரும் பிள்ளைகளின் கனவுகளைப் பெற்றோர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதே மையக்கதை

சில்வியாவிற்கும் எத்தேலுக்கும் இடையில் ஏற்படும் சண்டை. குயினிக்கு நடனத்தில் ஏற்படும் விருப்பம். அவள் அந்தக் கனவினை துரத்திப் போவது. அவளைக் காதலிக்கும் இளைஞன். வீட்டை விட்டு மகள் வெளியேறிப் போய்விட்டதைத் தாங்க முடியாத பெற்றோரின் வேதனை என உணர்ச்சிப்பூர்வமாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது

முதற்காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரை . ஃபிராங்க் மாறுவதேயில்லை சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார். குடும்பத் தலைவராக அவர் பொறுப்புணர்வு மிக்கவராகக் கடைசி வரை நடந்து கொள்கிறார். பிள்ளைகளின் வாழ்க்கை திசைமாறிப் போனது எத்தேலை வேதனை கொள்ளச் செய்கிறது. அவள் கயிறு அறுபட்ட பட்டம் போலாகி விடுகிறாள்.

வீட்டைவிட்டுப் போன மகள் வீடு திரும்பும் காட்சியும். நீண்ட காலத்தின் பின்பு பிராங்கும் எத்தலும் ஒன்றாக நடந்து சென்று பூங்காவில் அமர்ந்து உரையாடுவதும் அபாரமான காட்சிகள்

ரெக் மற்றும் அவரது மனைவி ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டபோது, அந்த மோசமான செய்தியைச் சொல்ல ஃப்ராங்க் மற்றும் எத்தேலை தேடிவரும் காட்சியும் எதிர்பாராத துயரச்செய்தியை கேட்டு அவர்கள் கொள்ளும் வேதனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

. ஃபிராங்க்கின் வாழ்க்கையோடு புற உலகில் நடக்கும் மாற்றங்களையும் நாம் காணுகிறோம். 1929 ஆம் ஆண்டில் சாம் மற்றும் வி ஒரு புதிய பேசும் படத்தைத் திரையரங்கில் காணுகிறார்கள். இது போலவே குயினி சார்லஸ்டன் நடனப் போட்டியில் வெற்றி பெறுகிறாள். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி உண்மை நிகழ்வுகளைப் பொருத்தமாகப் படம் இணைத்துக் கொண்டுள்ளது

குயினி மற்றும் அவளது சோசலிசம் பேசும் நண்பன் சாம் லீட்பிட்டர் இருவரும் உணவு மேஜையில் செய்யும் வாதமும் அதில் முதலாளித்துவம் பற்றிய சாமின் எண்ணங்களும் சிறப்பானவை அந்த விவாதமே சிறந்த வாய்ப்புகளைத் தேடி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் குயினிக்குள் உருவாக்குகிறது

திருமணத்திற்காக அந்தக் குடும்பம் தயாராகும் காட்சியில் அவர்கள் காருக்காகக் காத்திருப்பது. ஒரே வாகனத்தில் அத்தனை பேரும் பயணம் செய்வது. திருமணக் கொண்டாட்டத்தில் உற்சாகமாக ஈடுபடுவது எனப் பிராங்கின் குடும்பம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதம் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராக டேவிட் லீனின் முதல் படம். இதற்கு முன்பு சில படங்களில் அவர் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஆனால் முழுமையான இயக்குநராக இப்படம் மூலமே அறியப்படுகிறார்

வீடும் உலகமும் என்று தாகூர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு வசீகரமானது. வீடும் உலகமும் தனித்தனியாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றையொன்று பாதிக்கக்கூடியது. அதையே இந்தப்படமும் அடையாளப்படுத்துகிறது

•••

0Shares
0