ரில்கேயின் ரோஜா

The Notebook of Malte Laurids Briggs என்ற நாவலை கவிஞர் ரெய்னர் மரியா ரில்கே எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஒரே நாவல். கவிஞர்கள் எழுதும் நாவல்கள் வாசிக்க இனிமையானவை. இந்த நாவல் அவரது டயரிக்குறிப்பு போலவே எழுதப்பட்டிருக்கிறது.  .

இருபத்தியெட்டு வயதான கவிஞனின் வெற்று நாட்களை நாவல் விவரிக்கிறது.

எதுவும் நடக்கவில்லை என்று அந்தக் கவிஞன் புலம்புகிறான். வீதியின் முடைநாற்றத்தை, தெருநாயின் குரலை, குப்பைகள் குவிந்து கிடக்கும் மூலைகளை, அவசரமான மனிதர்களை அவதானித்தபடியே தனது வீட்டு ஜன்னலில் நின்று கொண்டிருக்கிறான். படியேறி வரும் ஆளின் உரத்த சப்தம் அவனைத் தொந்தரவு செய்கிறது.

வீதியின் பரபரப்பான இயக்கம், டிராமின் வேகம். பழைய பொருட்கள் விற்கும் கடை. புத்தகக் கடைகள். வீதியில் செல்லும் இளம்பெண்கள் என அவன் தன்னைக் கடந்து செல்லும் வாழ்க்கையை விட்டேத்தியாக அவதானிக்கிறான்.

இடையில் அவனுக்குப் பிடித்தமான கவிதைகளை நினைவு கொள்கிறான். அவனது கவிதைகளைப் பற்றிப் பேசுகிறான். நாடகம் எழுதியதற்காக வருத்தம் கொள்கிறான். புஷ்கினின் நீண்ட கவிதையை மேற்கோள் காட்டுகிறான்.

ம்யூசியம் காண வரும் இளம்பெண்களின் ஆர்வம் மற்றும் பொய்யான நடிப்பினை பற்றி எழுதுகிறான். கடந்தகாலத்தில் அவன் தந்தையோடு தாத்தா வீட்டிற்கு மேற்கொண்ட பயணம் பற்றிய நினைவுகளும் தனது பாரம்பரியம் குறித்தும் அவன் பதிவு செய்கிறான்.

இந்தக் குறிப்புகளிலும் ரோஜா மலர் இடம்பெறுகிறது. மலர்களைப் பற்றி அவன் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறான்.. அன்றைய பாரீஸ் நகர வாழ்க்கையின் சித்திரங்களை ரில்கே துல்லியமாக எழுதியிருக்கிறார். பெருநகர வாழ்வின் நெருக்கடிகள், அலைக்கழிப்புகள் மற்றும் பாதுகாப்பின்மையைத் தான் நாவல் முதன்மையாகப் பேசுகிறது.

“there are people who wear the same face for years; naturally it wears out, gets dirty, splits at the seams, stretches like gloves worn during a long journey.”

என்று ஒரு இடத்தில் ரில்கே குறிப்பிடுகிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் இப்படி முகமூடி அணிந்தவர்களே. அதை அவர்கள் உணரவேயில்லை.

கனவுகளுடன் வாழும் கவிஞனுக்கு தினசரி வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தோன்றும். மனிதர்கள் பணம் தேடுவதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ளது அவனுக்கு அபத்தமானதாகவே படும்.

இந்த சலிப்பின் காரணமாகவே மலைப்பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் சென்று தங்கி வாழ்ந்திருக்கிறார் ரில்கே.

கவிஞர் ரெய்னர் மரியா ரில்கேவின் மரணத்திற்கு விசித்திரமான காரணம் சொல்கிறார்கள்.

பேரழகியும் ரயில்வே அதிகாரியின் மனைவியுமான நிமெட் எலோயி ஒரு நாள் அவரைக் காண வந்திருந்தார். அவரை மகிழ்ச்சிப்படுத்தத் தனது தோட்டத்திலிருந்த ரோஜா பூக்களை ரில்கே பறித்துக் கொண்டு வந்தார். அப்போது ரோஜாவின் முள் அவரது கையில் குத்திவிட்டது. இந்தக் காயம் புரையோடி கை வீங்கிவிட்டது. சிகிச்சை எதையும் செய்யாமல் விட்ட காரணத்தால் அவரது மற்றொரு கையிலும் ரத்தவோட்டம் சீர்கெட்டுப் போனது.. உடலில் ஏற்பட்ட இந்த ஒவ்வாமையின் காரணமாக அடுத்த நாள் ரில்கே இறந்து போனார்.

ரோஜாவின் முள் குத்தி ஒரு கவிஞன் இறந்து போனான் என்பதை உலகெங்கும் வியப்போடு பேசினார்கள்.

ரோஜாவை ஒரு குறியீடாக, உருவகமாக, படிமமாக ரில்கே பல்வேறு விதங்களில் பயன்படுத்தியிருக்கிறார்

ஜப்பானிய கவிதை மரபில் மலர்கள் முழுமையான அழகின் வெளிப்பாடு மற்றும் நிறைவின் அடையாளம். அதே நேரம் மலர்கள் உதிர்வதன் வழியே தன் காலவரம்பை வெளிப்படுத்துகின்றன. அழகு காலவரம்பிற்கு உட்படுத்தது என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால் கவிதையில்,ஒவியத்தில் மலர்கள் இடம்பெற்றவுடன் அவை நித்யத்துவத்தின் அடையாளமாக மாறிவிடுகின்றன.

ரோஜா மலரை சூபி மரபு ஞானவழிகாட்டியாக கருதுகிறது. கிறிஸ்தவ கண்ணோட்டத்தில், ரோஜா என்பது சொர்க்கம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்

ரில்கேயின் காதல்கதைகள் பிரசித்திபெற்றவை. நித்யகாதலராகவே அவர் இருந்தார். இளம்பெண்களின் ஆசைக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார். ஆகவே அவரது இந்த மரணம் காதலின் அடையாளம் போலவே கருதப்பட்டது.

ஆனால் பின்னாளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் அவருக்கு நீண்டகாலமாகவே ரத்தப்புற்றுநோய் இருந்திருக்கிறது அதை அவர் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ளவில்லை அது தான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் ரரோன் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் ரில்கேவின் கல்லறை உள்ளது. அந்த இடத்தையும் கல்லறை வாசகத்தையும் அவரே தேர்வு செய்து வைத்திருந்தார். அந்த இடம் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வாழும் கிராமமாகும்

அவரது கல்லறை வாசகத்திலும் ரோஜா இடம் பெற்றுள்ளது. அதில் உறக்கம் வேண்டாத கண் இமைகளாக எழுதியிருக்கிறார். ரோஜா இதழ்களைக் கண் இமையாக உருவகப்படுத்தியது சிறப்பு..

ரெனே கார்ல் வில்ஹெல்ம் ஜோஹன் ஜோசப் மரியா ரில்கே ப்ராக் நகரில் பிறந்தார், அவரது தந்தை இராணுவ அதிகாரியின் மகன். பத்து வயதில் ரில்கே இராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். மகிழ்ச்சியற்ற ஐந்து வருடங்களை அங்கே கழித்தார், 1891 இல் உடல் நலிவுற்று அங்கிருந்து வெளியேறினார்.. பின்பு 1895 இல் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயிலச் சேர்ந்தார். அதற்கு முன்பாகவே அவரது முதற்கவிதை தொகுதி வெளியாகியிருந்து.

1897 இல் மியூனிச்சில் படிக்கும் போது லூ ஆண்ட்ரியாஸ்-சலோமோ என்ற முப்பத்தாறு வயது பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தார். அப்போது அவருக்கு வயது 22

1900 இல் ஆண்ட்ரியாஸ்-சலோமேயுடன் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்த நாட்களில் லியோ டால்ஸ்டாயையும் ஓவியர் லியோனிட் பாஸ்டர்நாக்கையும் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். சுவிட்சர்லாந்தில் இருந்து ரில்கே எழுதிய கடிதங்கள் பாரிஸில் வசித்த ரஷ்யகவியான மரினா ஸ்வெதேவா வழியாக மாஸ்கோவில் உள்ள பாரிஸ் பாஸ்டர்நாக்கிற்கு அனுப்பி வைக்கபட்டன. இந்த மூன்று கவிஞர்களுக்கும் நெருக்கமான கடிதத் தொடர்பு  இருந்தது. ரில்கேயை ரகசியமாக மரினா காதலித்தார் என்கிறார்கள்.  மூவரும் கவிதை குறித்து கடிதம் வழியாக தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள்.  

1900 இல் கலைஞர்களுக்கான காலனியில் தங்கியிருந்த போது சிற்பி ஆகஸ்டே ரோடினின் மாணவி கிளாரா வெஸ்டாப்பை சந்தித்தார். அவர்கள் அடுத்த ஆண்டுத் திருமணம் செய்து கொண்டனர் . அந்தத் திருமணம் தோல்வியடைந்தது

.1902ம் ஆண்டில் சிற்பி ரோடினை சந்தித்து அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ரோடின் பற்றி சிறு நூலையும் ரில்கே எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது பாரீஸ் செல்ல முடியாமல் பெரும்பகுதியை ம்யூனிச்சில் கழித்தார்.

இருப்பிடம் இன்றிச் சுற்றியலைந்த ரில்கே இத்தாலியிலிருந்து வியன்னாவிற்கும் பின்பு அங்கிருந்து ஸ்பெயினுக்கும், துனிசியா முதல் கெய்ரோ வரையும் பயணம் செய்தார்.

புரவலர்களின் ஆதரவில் வாழ்ந்து வந்த ரில்கே ஸ்விட்சர்லாந்தில் வசித்த புரவலர் ஒருவரின் உதவியோடு அங்குள்ள சிறிய கிராமத்தில் தங்கியிருந்தார். அந்த நாட்களில் தான் அழகி நிமெட் எலோயுடன் பழக்கம் ஏற்பட்டது. அவளது அழகும் புத்திசாலித்தனமும் ரில்கேயை வெகுவாக வசீகரித்தது

தன்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்ற பட்டியலில் புஷ்கின், லெர்மன்தேவ். துர்கனேவ் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ரில்கே டால்ஸ்டாயை விட்டுவிட்டார். இதைப்பற்றிக் கேட்டபோது டால்ஸ்டாயின் எழுத்துத் தன்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவரது சமூகப் பண்பாட்டுச் செயல்கள் தன்னைக் கவர்ந்துள்ளன என்றார். ரஷ்ய பயணம் அவரது ஆளுமையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது.

காதலும் மரணமும் பற்றி ரில்கே நிறைய எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் அதுவே பிரதானமாக வெளிப்பட்டுள்ளது

••

0Shares
0