ஓவியர் கே.விக்னேஷ்வரன்.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உடலின் அலைகள் என்னும் சிறுகதையை வாசித்தேன். மிகவும் அருமை. இக்கதையின் கரு சிறியதுதான், ஆனால் அவர் இந்தக் கதையைக் கையாண்ட விதம் மிகவும் லாபகமானது. இக்கதையில் ஒரு மனிதன் தொழிற்சாலையில் பணி புரிகிறான். திருமணமாகாதவன். மதுரையைச் சார்ந்தவன் பணி நிமித்தம் காரணமாக வெளிமாநிலத்தில் பணிபுரிகிறான். எப்போது தனது சொந்த ஊருக்குப் பணியிடைமாற்றம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயத்தில் ரயில் பயணம் செய்யும்போது தனக்கு எதிரே உள்ள இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
உடனே அந்தப் பெண் (பெயர் சௌமி) புன்னகைக்கிறாள். அவளின் எந்த விதமான செய்கைக்கும் பதில் சொல்லாமல் மனிதனாக ரயில் பயணத்தை நிறைவு செய்கிறான்.
ரயிலில் இருந்து இறங்கி தனது இல்லத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தான். சௌமி அவனைப் பின் தொடர்ந்து சென்று இருவரும் வீட்டின் வந்தடைந்தார்கள். நீ யார்? என்று கேட்க, என் பெயர் சௌமி என்றாள். நீ எதற்காக என் வீட்டுக்கு வந்தாய்? இங்கிருந்து கிளம்பு என்று கோபமாகக் கூறியும் சௌமி அங்கிருந்து நகரவில்லை. என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? என்கிறாள். இவள் வேசி என்று நினைத்து விட்டான். இந்தா பணம் இங்கிருந்து கிளம்பு என்று வாதிட,
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொள்கிறார்கள். இரவு நேரமானதால் வேறுவழியில்லாமல் சௌமி இவனுடைய வீட்டில் தங்க நேர்ந்தது. மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டான். சௌமி தான் கொண்டுவந்த மலாய் சந்தேஷ் இனிப்பை கொடுக்கிறாள். வேண்டாம் என்று சொல்கிறான். நீ இந்த ஸ்வீட்டை சாப்பிட்டால் தான் நான் இங்க இருந்து கிளம்புவேன் என்கிறாள்.
கோபத்தோடு சாப்பிடுகிறான். பிறகு நான் ஒரு கதை சொல்கிறேன், அதைக் கேட்டால்தான் நான் இங்க இருந்து கிளம்புவேன் என்கிறாள்,சௌமி. அதுவும் அவள் மடியில் தலைவைத்து கதை கேட்க வேண்டுமாம், வேறு வழியில்லாமல் அவனும் சௌமியின் மடியில் தலை வைத்துக் கொண்டு கதை கேட்க தயாராகிறான். சௌமி கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். அது ஒரு நிருபமா என்ற பெண்ணைப் பற்றிய கதை. கதையில் வரும் பெண் அழகான தோற்றம் உடையவள். ஏற்கனவே மூன்று திருமணங்களைக் கடந்தவள். நிரூபாமாவின் கணவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு ஏமாற்றி ஓடியவர்கள். எதாவது ஒருகாரணம் சொல்லி ஒவ்வொருவரும் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு ஏமாற்றி ஓடினார்கள்.
ஓர் அமைதியான இல்லற வாழ்க்கையை அனுபவிக்காதவள். ஏனோ தெரியவில்லை அவளுக்கு மட்டுமே இப்படியொரு அவலம். வாழ்க்கையை வெறுத்து உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு இறக்க முடியாமல் போனவள் என்று சௌமி கதை சொல்லிக் கொண்டிருக்க, உடனே மடியிலிருந்து எழுந்து சௌமியை சந்தேகத்தோடு பார்த்து இக்கதையில் வரும் பெண் நீங்கதானா? என்று கேட்டான். சௌமி மெல்லிய புன்னகையுடன் சிரித்துவிட்டு, இல்லை என்று சொன்னால். ஆனால் அவன் மனம் அதை ஏற்க மறுத்துவிட்டது. தயக்கத்தோடு சௌமியை பார்த்தபடி நின்றான். தான் வாங்கி வந்த மலாய் சந்தேஷ் ஸ்வீட்டை ஊட்டும் படி கேட்டாள். அவனும் அதனை ஊட்ட. ஊட்டிய விரல்களை ஸ்வீட்டோடு சேர்த்து லேசாகக் கடித்தாள் சௌமி. நள்ளிரவு நேரம் ஆயிற்று நான் கிளம்புகிறேன் என்றாள் சௌமி. உன்னை வண்டியில் கொண்டுபோய் விடட்டுமா என்றான். இல்லை பரவாயில்லை என்றாள். நடக்க ஆரம்பித்தாள் சௌமி. அவள் ரோட்டில் நடந்து சென்றதையே குற்ற உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். இதுதான் கதை.
சௌமி, அவனைத் தன் மடியில் வைத்து கதை சொல்லியது அவளுடைய கதையைதான் சொல்லியிருக்கிறாள். சௌமிதான் மூன்று முறை திருமணமான நிருபமா. தன்னுடைய வருத்தத்தைத் தான் அவள் கதையாகச் சொல்லிருக்கிறாள். சௌமியின் கதாப்பாத்திரம் ஒரு ஆசிரியரை போன்று உள்ளது. சௌமி என்பவள் தன்னுடைய நிலையை அல்ல, சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை முன்னிறுத்தி தன்னுணர்வை வெளிப்படுத்துகிறாள். எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணி நன்றாக வாழ்கிறார்கள் எனக்கு மட்டும் ஏன்? இந்த அவலம் என்று கவலைப்படுகிறாள், சௌமி.
மலாய் சந்தேஷ்- ன் இனிப்பும், சௌமியின் கசப்பும் இந்தக் கதைக்கு மாபெரும் சுவையூட்டியுள்ளது. இக்கதையைப் படித்து முடித்த போது சௌமி நேரடியாக என்னிடம் இக்கதையைச் சொன்னது போல உள்ளது. –
