சிலபடங்கள் அதன் தலைப்பிலே நம்மை வசீகரித்துவிடும். அப்படியொரு படம் தான். The Loneliness of the Long Distance Runner. 1962ல் வெளியான பிரிட்டிஷ் திரைப்படம்.

வடக்கு இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் வறுமையான குடும்பத்தில் வசிக்கும் காலின் ஸ்மித் என்ற இளைஞன் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை முன்பின்னாகப் படம் விவரிக்கிறது
துவக்கக் காட்சியில் கிராமப்புற சாலையில் தனியாகக் காலின் ஸ்மித் ஒடிக் கொண்டிருக்கிறான். ஒட்டம் என்பது அவனது ரத்தத்தில் கலந்துவிட்ட பழக்கம், அதுவும் காவல்துறையிடமிருந்து தப்பியோடுவது என்பது விருப்பமானது என்கிறான்.
பேக்கரி ஒன்றில் புகுந்து பணம் திருடியதாக அவன் கைது செய்யப்பட்டுச் சீர்திருத்தச் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். கையில் விலங்கிடப்பட்டுக் காவலர்களுடன் ஒரு வேனில் பயணம் செய்கிறான்.
படம் முழுவதும் சீர்திருத்தச் சிறையில் தான் நடக்கிறது.

சிறைச்சாலைக்கு வந்த முதல்நாளே அவன் கவர்னரின் கவனத்தில் படுகிறான். அவனது அலட்சியமான பேச்சு, நடத்தையை ஆழ்ந்து கவனிக்கிறார்
ஆரம்பத்தில் மற்றவர்களைப் போலவே அவனுக்குக் கடினமான பணிகள் தரப்படுகின்றன. ஆனால் கவர்னரின் ஆதரவு காரணமாக அவனுக்கு வெளிப்புற தோட்ட வேலை வழங்கப்படுகிறது
ஒரு நாள் கால்பந்து விளையாடும் போது அவன் அடித்த கோலைப் பாராட்டுகிறார் கவர்னர். நீண்ட தூர ஒட்டத்திலும் அவன் திறமைசாலி என்பதை அறிந்து கொண்டு அச் சிறைச்சாலையில் நடைபெறவுள்ள போட்டிக்காக அவனைத் தயார் படுத்த முயலுகிறார்
நீண்ட தூரம் ஒடி பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக அவன் சிறையிலிருந்து வெளியே ஓட அனுமதிக்கப்படுகிறான்.
அந்த ஒட்டத்தின் இடையே கடந்தகால நினைவுகள் பீறிடுகின்றன. மிக அழகாகக் கடந்தகால நினைவுகள் இடைவெட்டிப் போகின்றன
மரணப்படுக்கையிலுள்ள அவனது தந்தை. வறுமையான குடும்பச் சூழ்நிலை. நண்பனுடன் சேர்ந்து திருடச் சென்ற அனுபவம். காவல்துறை விசாரணை. அவனது காதலியுடன் மேற்கொண்ட பயணம் என ஸ்மித்தின் கடந்தகாலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறோம்
ஐந்து மைல் தூரத்தை அவன் ஒடிக்கடக்க வேண்டும். காட்டுப்பகுதிக்குள் அவன் ஓடும் போது மனம் தொலைவிலுள்ள அவனது ஊரை. வீட்டை, நண்பனைச் சுற்றியே வருகிறது.

பொதுவாக இது போன்ற விளையாட்டினை முன்வைத்த திரைப்படங்களில் அந்த விளையாட்டு கதாநாயகனின் லட்சியமாகவோ, தனித்திறமையாகவே இருக்கும். சிறையில் நடைபெறும் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்ட படங்களைப் பாருங்கள். இது புரியும். ஆனால் இப்படத்தில் ஸ்மித் ஒடுவது அவனது திறமையால் அல்ல. புறஉலகின் நெருக்கடியால்.
அவனைப் பொருத்தவரை ஒட்டம் என்பது தப்பித்தல். ஓடுவதன் வழியே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகிறான்.
கவர்னர் தானே ஒரு காலத்தில் ஓட்டப்பந்தய வீரராக இருந்தவர் என்பதால் ஸ்மித்தின் திறமையை ஊக்கபடுத்துகிறார்.

அவனுக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகையைக் கண்டு சக கைதிகள் பொறாமைப் படுகிறார்கள். அவனுடன் சண்டையிடுகிறார்கள். ஒரு நாள் உணவு சரியில்லை என உணவுக்கூடத்தில் கைதிகள் கலவரம் செய்கிறார்கள். இதில் ஸ்மித் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவன் தண்டிக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து அவன் ஒடத்துவங்குகிறான். சிறை வாழ்க்கையிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்திருப்பது போலவே அந்த அனுபவம் ஏற்படுகிறது
ஒட்டம் அவனுக்குள் புதைந்திருந்த பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது.
தந்தையின் இறப்பை ஒட்டி அவனுக்குத் தொழிற்சாலையில் கிடைக்கும் வேலையை ஏற்கவிரும்பவில்லை. அத்தோடு அம்மாவின் காதலனை அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆத்திரத்தில் அவள் தரும் பணத்தைத் தீவைத்து எரிக்கிறான். அம்மாவோடு சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். அப்போது தான் பேக்கரி ஒன்றினுள் புகுந்து பணப்பெட்டியை திருடுகிறான்.
காலின் பணம் திருடியதாகக் குற்றம் சாட்டி, காவலர் ஒருவர் விசாரணை மேற்கொள்கிறார். இன்னொரு நாள் காவலர்கள் ஒன்றுகூடி அவனது வீடு முழுவதும் பணத்தைத் தேடுகிறார்கள். அவர்களால் கண்டறியமுடியவில்லை. எங்கே பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை வெளிப்படும் மழைக்காட்சி அழகானது.
இறுதியில் பந்தய நாள் வருகிறது, ஸ்மித் நீண்ட தூர ஒட்டப்பந்தயத்தில் ஓடத் துவங்குகிறான். வேகமான முன்னேறி ஓடுகிறான். அவனது மனதில் கடந்தகால நினைவுகளும் கசப்பான அனுபவங்களும் தோன்றி மறைகின்றன. போட்டியின் முடிவு என்னவானது என அறியும் போது திகைத்துப் போகிறோம்.
ஒரு புறம் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி இருக்க வேண்டிய சூழல் மறுபக்கம் சுதந்திரமாக ஓடுவது என இருபுள்ளிகளுக்குள் அதிகாரத்தின் செயல்பாட்டினை படம் சித்தரிக்கிறது
ஸ்டேசியோடு சண்டையிடும் போதும், குற்றவுணர்வில் கவர்னருடன் பேசும் போதும், சிறைக்கதவு திறந்து வெளியே ஓட அனுமதிக்கப்படும் போதும், ஒட்டப்பந்தய முடிவிலும் ஸ்மித் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிகச்சிறப்பானவை.
ஸ்மித் தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவே ஓடுகிறான். எதையும் அடைய வேண்டும் என்றோ, சாதிக்க வேண்டும் என்றோ அவனுக்கு ஆசையில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஏதோ ஒரு வழியைக் கண்டறிவார்கள். அப்படித் தான் ஸ்மித் தனது வழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் சிறைச்சாலை நிர்வாகம் அவனது திறமையைத் தங்களின் சொந்த விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறது
ஒட்டப்பந்தயம் முடியும் போது ஸ்மித் நின்று நிதானமாகக் கவர்னரை ஏறிட்டுப் பார்த்துச் சிரிக்கிறான். அந்த ஏளனச்சிரிப்பு அதிகாரத்திற்கு எதிராக அடங்க மறுப்பவனின் சிரிப்பு. மறக்கமுடியாத காட்சியது
ஒரு காட்சியில் சிறைச்சாலையைப் பார்வையிட வந்த பெண்ணுடன் தொழிற்பிரிவிற்குள் வரும் கவர்னரின் கை அழுக்கானதும் ஸ்மித் துடைத்துக் கொள்ள ஒரு துணி தருகிறான். அப்போது நன்றி சொல்லியபடியே கவர்னர் சிரிக்கிறார். அதைச் சககைதிகள் பொறாமையுடன் பேசுகிறார்கள். அந்தச் சிரிப்பிற்கு நேர் எதிரானது கடைசியில் ஸ்மித்திடம் வெளிப்படும் சிரிப்பு.

உணவகத்தில் கைதிகள் கலவரம் செய்கிறார்கள். அவர்களைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று பிற அதிகாரிகள் சொல்லும் போது கவர்னர் கூடாது. இரவு அவர்களுக்காகச் சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் அடங்கிப் போய்விடுவார்கள் என்கிறார். இது தான் அதிகாரத்தின் வெளிப்பாடு. அந்த இசைநிகழ்ச்சியில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள். அவர்களுக்குள் இருந்த எதிர்ப்புணர்வு அடக்கபட்டுவிடுகிறது.
ஸ்மித் வீட்டிலிருந்து தப்பிக்கிறான். காவலர்களிடமிருந்து தப்பிக்கிறான். உறவுகளிடமிருந்து தப்பிக்கிறான். எதிலும் அவனால் பொருந்திப் போக முடியவில்லை. அப்பாவின் இறப்பிற்குப் பிறகு அம்மாவின் புதிய காதலரின் உதவியால் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்தச் சந்தோஷத்தை அவன் ஏற்பதில்லை.
பிரெஞ்சு நியூவேவ் திரைப்படங்களின் பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக François Truffaut படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது
இறுதி ஒட்டப்பந்தயத்தின் போது சர்க்கஸ் காட்சி போலப் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதும். இசைக்குழு துடிப்பான இசையை ஒலிப்பதும். ஸ்மித் வெற்றி முனையை நெருங்குவதும் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகின்றன. ஸ்மித்தை சிறை அதிகாரிகள் கடைசிவரை புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவனது செயலின் மூலம் பார்வையாளர்கள் ஸ்மித்தை நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். அந்தக் கோபம் அவனுடையது மட்டுமில்லை என்பதை உணருகிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியதே படத்தின் வெற்றி.