அஞ்சலி

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த மனிதர். புன்னகை மாறாத முகத்துடன் எதையும் நிதானமாக, ஆழ்ந்து அறிந்து அணுகக்கூடியவர்.

கம்பத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரைக்குப் பேருந்தில் வந்து இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது வேதனையளிக்கிறது.

என் வளர்ச்சியிலும் எழுத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர். அவரது மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எஸ்.ஏ.பி அவர்களைக் காணுவதற்காக விருதுநகர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற போது தோழர் எம்.என்.எஸ் அறிமுகமானார். அப்போது விவசாய  சங்கச் செயலாளராக களப்பணிகள் ஆற்றிக் கொண்டிருந்தார்.

எம். ரெட்டியபட்டியில் பிறந்த வெங்கட்ராமன் தூத்துக்குடியில் பிஎஸ்சி படித்த நாட்களில் மாணவர் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் விவசாய சங்க பணிகள் ஆற்றத்துவங்கி விருதுநகர் மாவட்ட விவசாய சங்க செயலாளராக செயல்பட்டார். இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

விடிகாலையில் அவர் தோளில் ஒரு ஜோல்னா பையுடன் டவுன் பஸ்ஸைப் பிடிக்க செல்லும் காட்சி மனதில் அப்படியே பசுமையாக உறைந்திருக்கிறது. ஒய்வில்லாத களப்பணி. இரவு பத்தரை மணிக்கு கட்சிஅலுவலகம் வந்து சேர்ந்த பிறகும் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். பல நாட்கள் இரவில் நாங்கள் எஸ்.ஏ.பி உடன் இலக்கியவிவாதம் செய்து கொண்டிருப்போம். அவரும் பங்கெடுத்துக் கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.

சொந்தவாழ்க்கையை மறந்து மக்கள் பணியே தனது வாழ்க்கையாக கொண்டிருந்தார். அவருடன் பழகிய இனிமையான நாட்கள் மனதில் நிழலாடுகின்றன. சமகால அரசியல், இலக்கியம், பண்பாடு, சர்வதேச விஷயங்கள் என அவருடன் நிறைய உரையாடியிருக்கிறேன். எனது திருமணம் துவங்கி சாகித்ய அகாதமி விருதுக்கான பாராட்டுவிழா வரை அத்தனை நிகழ்விலும் பங்கெடுத்திருக்கிறார். வாழ்த்தியிருக்கிறார்.

தனது கடைசிமூச்சு வரை மக்கள் பணிக்காக உழைத்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமனை கண்ணீருடன் வணங்குகிறேன்.

0Shares
0