பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

நவம்பர் 11 ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
எனது நண்பரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான அபிலாஷ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் சரளா இருவரும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.
இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். விருப்பமான படைப்பாளிகள். கல்விப்புல ஆய்வாளர்கள், வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
••••

பொழில் மன்றம் பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் திறன் மேம்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள மாணவர் மன்றமாகும். இதன் துவக்க விழா நவம்பர் 11, 2022 அன்று தமிழின் மகத்தான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் குறித்த தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்குடன் நடக்கிறது
••

எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புலகம்: ஒருநாள் கருத்தரங்கம் குறு நாடகம் மற்றும் குறும்படப் போட்டிகள்
தமிழின் மிகச்சிறந்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள், ஆளுமைகள் நேரிலும், இணையம் வழியாகவும் பங்கேற்று எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் குறித்து விவாதிக்கிறார்கள், கட்டுரை வாசிக்கிறார்கள், கருத்துகளைப் பகிர்கிறார்கள். கூடவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர்களும், ஆய்வு மாணவர்களும் தமது ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கிறார்கள்.
இந்த உரைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2022இல் ஒரு நூலாக (ISBN எண்ணுடன்) பதிப்பிக்கப்படும்.

கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க ஆய்வு மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், கல்விப்புல ஆய்வாளர்களும் தற்சார்பு ஆய்வாளர்களும் பள்ளி / கல்லூரி ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றை ஒட்டி எழுதப்பட்ட தமது கட்டுரையின் பொழிப்புரு / சுருக்கத்தை 80-100 சொற்களுக்குள் எழுதி abilashchandran.r@christuniversity மற்றும் sarala.v@christuniversity.in எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு நீளக்கட்டுப்பாடு இல்லை. கட்டுரைகள் தமிழில் மட்டுமே எழுதப்படலாம். அவை ஆய்வுக் கட்டுரைகளாகவோ, கோட்பாட்டு வாசிப்புக் கட்டுரைகளாகவோ, ரசனைக் குறிப்புகளாகவோ வாசிப்பனுபவ பகிர்வுகளாகவோ இருக்கலாம். இதுவரை வேறெங்கும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
பொழிப்புருவை அனுப்புவதற்காகக் கடைசி நாள்: அக்டோபர் 20, 2022. கட்டுரை அனுப்புவதற்கான இறுதி நாள் நவம்பர் 5, 2022.
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றிக் கீழ்வரும் தலைப்புகளிலோ அவற்றை ஒட்டியோ உங்கள் கட்டுரையையும் பொழிப்புருவையும் எழுதி அனுப்பவும்:
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகளில் விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்கள்
மாந்திரிக எதார்த்த எழுத்தும் எஸ்.ராமகிருஷ்ணனும்
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகில் பின்காலனிய ஊடுபாவல்கள்
எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிநடையும் அழகியலும்
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளில் காலமும் வெளியும்
எஸ். ராமகிருஷ்ணனின் புனைவில் வெளிப்படும் வரலாற்றுக் கதையாடல்கள்
எஸ். ராமகிருஷ்ணனின் கதைகளில் தோன்றும் பெண்களின் உலகம்
எஸ். ராமகிருஷ்ணனின் புனைவுகளில் ஊனமும் நோய்மையும்
•••
எஸ். ராமகிருஷ்ணனின் கதைகள் / நாவல்களில் ஒன்றைச் சார்ந்து குறுநாடகப் போட்டி மற்றும் குறும்படப் போட்டி கருத்தரங்கு அன்று நடக்கின்றன. குறும்படமோ குறுநாடகமோ 10-15 நிமிட கால அளவுக்குள் இருக்க வேண்டும். அதில் பங்கேற்க விரும்பும் நாடக மற்றும் குறும்படக் குழுக்கள் abilashchandran.r@christuniversity மற்றும் sarala.v@christuniversity.in ஆகிய மின்னஞ்சல்களுக்குத் தகவல் தெரிவிக்கவும். குறுநாடகங்கள் கருத்தரங்கன்று நிகழ்த்தப்படும். குறும்படங்கள் காட்டப்படும். முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குறுநாடகம் மற்றும் குறும்படத்திற்குப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
•••
பதிவுக் கட்டண விபரம்
கருத்தரங்கில் நேரடியாகக் கலந்து கொள்ள விரும்புவோர் அரங்கில் ஆய்வு மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், சான்றோர், ஆய்வாளர்கள் முன்னிலையில் கட்டுரை வாசிக்கலாம், விவாதங்களிலும் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு மதிய உணவும் காலை, மாலையில் தேநீரும் வழங்கப்படும். அவர்கள் 600 ரூபாய் இணையம் வழி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கருத்தரங்கில் இணையம் வழி கலந்து கொள்ள விரும்புவோர் கட்டணமாக ரூ 300ஐ செலுத்தலாம்.
அதே போலக் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க விரும்பும் பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள் இணையம் வழி எனில் ரூ 400உம், நேரில் எனில் ரூ 700உம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு விரைவில் பதிவேற்றப்படும்!
