.பல்கேரிய திரைப்படம் Glory 2016ல் வெளியானது. நேர்மையான ஒரு மனிதன் சமூகத்தால் எப்படி நடத்தப்படுகிறான். புரிந்து கொள்ளப்படுகிறான் என்பதையே படம் பேசுகிறது.

ரயில்வே லைன்மேனாக வேலை செய்யும் சாங்கோ பெட்ரோவ் நடுத்தரவயதுடையவன். தனித்து வாழுகிறான். அவனது வீடு குப்பையும் தூசியும் அடைந்திருக்கிறது. அவனது தோற்றமும் சீராகயில்லை. தானே சமைத்துச் சாப்பிடுகிறான். ரயில்வே துறை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சம்பளம் கிடைப்பதே போராட்டமாக இருக்கிறது.
ரயில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்களைச் சரிசெய்வதே அவனது அன்றாடப் பணி
ஒரு நாள் அவன் வேலைக்குச் செல்லும் வழியில் சில தொழிலாளர் ஒன்று கூடி ரயில்வேயின் எரிபொருளைத் திருடுவதைக் காணுகிறான். அவர்கள் பெட்ரோவை மிரட்டி அனுப்பி வைக்கிறார்கள்.
தண்டவாளத்தை ஆய்வு செய்யும் போது, 50 லேவா நோட்டைக் காணுகிறான்.. அதை ஆசையோடு எடுத்து வைத்துக் கொள்கிறான். சற்று தள்ளி, 100- லேவா நோட்டைக் காணுகிறான். வியப்பில் ஆராயும் போது மூட்டை மூட்டையாகப் பணம் கிடப்பதைக் காணுகிறான். இதைப்பற்றி உடனே உயரதிகாரிகளிடம் தெரிவிக்கிறான். உடனடியாகக் காவல்துறையினர் பணத்தைக் கைப்பற்றுகிறார்கள். பெட்ரோவிடம் விசாரணை நடைபெறுகிறது..இந்த செய்தி தொலைக்காட்சி. செய்தித்தாளில் வெளியாகிறது. சாங்கோ பலராலும் பாராட்டப்படுகிறான்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த நிகழ்வை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. அமைச்சர் தன் மீதான முறைகேடு புகார்களைக் கடந்து செல்ல நல்ல வாய்ப்பாக நினைக்கிறார். ஆகவே சாங்கோவை பாராட்டுவதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி நல்லெண்ணம் பெற முடியும் எனக் கருதுகிறார்
அதன்படி பெட்ரோவிற்கு ரயில்வே அமைச்சகம் ஒரு பாராட்டுவிழா நடத்துகிறது. அதற்கான பொறுப்பை அமைச்சகத்தில் மக்கள் தொடர்பு பணி செய்யும் ஜூலியா ஏற்றுக் கொள்கிறாள்

விடுமுறை எடுத்துக் கொண்டு சாங்கோ நகரிற்குச் செல்கிறான். அவனது உடை சரியாகயில்லை. சாங்கோ எப்போதும் அவனது தந்தை பரிசாக அளித்த கடிகாரம் ஒன்றைக் கையில் கட்டிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்குப் புதிய உடை அணிவித்து விழா மேடைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்கிறார்கள். வேறு ஒருவனின் ஆடையைத் தற்காலிகமாகக் கழட்டி வாங்கி அவனுக்கு அணிவிக்கிறார்கள். புதிய கடிகாரம் ஒன்றை அமைச்சர் பரிசு தரப்போகிறார் என்பதால் பழைய கடிகாரத்தைக் கழட்டி வாங்கிக் கொள்கிறாள் ஜூலியா. அந்தக் கடிகாரம் பத்திரம் என்று எச்சரிக்கிறான் சாங்கோ. ஜூலியா அதைத் தனது பொறுப்பிலே வைத்துக் கொள்கிறாள்.
பாராட்டுவிழா நடக்கிறது, அமைச்சர் வருகிறார். தொழிலாளர் வர்க்க நாயகனாகப் பெட்ரோவ் கொண்டாடப்படுகிறான். அவனது நேர்மையைப் பாராட்டி புதிய டிஜிட்டல் கைக்கடிகாரம் பரிசாகத் தரப்படுகிறது. விழா மேடையிலே அமைச்சரிடம் எரிபொருள் திருட்டு நடப்பதைப்பற்றிச் சாங்கோ சொல்கிறான். அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
விழா முடிந்து விருந்து நடக்கிறது. அதில் பதற்றத்தோடு கலந்து கொள்கிறான் சாங்கோ

பழைய கடிகாரத்தை வைத்திருந்த ஜூலியா நிகழ்ச்சி முடிவதற்குக் கிளம்பிவிடுகிறாள். தனது பழைய கடிகாரத்தைப் பெறுவதற்காக இரவில் அவளுக்குப் போன் செய்கிறான். அவள் தொலைப்பேசியை எடுக்கவில்லை. ஆகவே அன்றிரவு அங்கேயே ஒரு விடுதியில் தங்குகிறான். ஒரே நாளில் அமைச்சர் கொடுத்த டிஜிட்டல் கடிகாரம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
மறுநாள் தனது பழைய கடிகாரத்தை மீட்க ஜூலியாவை தேடி அவளது அலுவலகம் செல்கிறான். அப்படி ஒரு கடிகாரம் தன்னிடம் தரப்படவேயில்லை என்று அவள் சாதிக்கிறாள். ஆனால் அவன் உறுதியாகச் சொல்லவே தேடி கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாகச் சொல்லி வேறு கடிகாரம் ஒன்றைத் தயார் செய்து அனுப்பி வைக்கிறாள். அது தன்னுடைய கடிகாரமில்லை என்று திருப்பி அனுப்பியதோடு ஜூலியாவை சந்தித்துத் தனது கடிகாரத்தைப் பெறப் பல்வேறுவிதங்களிலும் முயலுகிறான்.

இதனால் எரிச்சல் அடைந்த ஜூலியா அவனைச் சந்திக்க மறுக்கிறாள். ஜூலியாவின் கணவனைத் தொடர்பு கொள்ளும் சாங்கோ அவனது உதவியை நாடுகிறான். கணவன் ஜூலியாவை கண்டிக்கவே அவளது கோபம் மேலும் அதிகமாகிறது.
சாங்கோவை சந்திக்கும் தொலைக்காட்சி செய்தியாளர் இந்த உண்மையை அறிந்து கொண்டு அவனைத் தனது தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துப் போய்ப் பேச வைக்கிறான். அதுவும் அமைச்சருக்கு எதிராகப் பேசவைக்கிறான்.
சாங்கோ ரயில்வே அமைச்சகத்தில் நிலவும் ஊழலையும் திருட்டையும், குற்றத்திற்கு அமைச்சரின் உடந்தையாக இருப்பதையும் அம்பலப்படுத்துகிறான்.. இதனால் அமைச்சரின் பெயர் கெடுகிறது. அவர் ஜூலியாவை அழைத்துக் கடுமையாகத் திட்டுகிறார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஜூலியா கடுமையான வழிகளைக் கையாள ஆரம்பிக்கிறாள். செய்யாத குற்றத்திற்காகச் சாங்கோவை கைது செய்ய ஏற்பாடு செய்கிறாள் பின்னர்ச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு ஈடாக, அவன் தனது முந்தைய குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படுகிறான்
சாங்கோவின் வீடு புகுந்து ஆட்கள் தாக்குகிறார்கள். அடித்து உதைத்து அவனை அமைச்சருக்கு ஆதரவாகப் பேச வைத்து வீடியோ எடுக்கிறார்கள். தனக்குச் சொந்தமான பழைய கடிகாரத்தை மீட்க முயன்ற சாங்கோ முடிவில் குற்றவாளியாக மாற்றப்படுகிறான்.
சில வாரங்களின் பின்பு ஒரு ரயில்வே ஊழியர் தற்கொலை செய்துவிட்டதாகப் பேப்பரில் செய்தி படித்த ஜூலியா அது சாங்கோ என நினைத்து வருந்தி அவனது கடிகாரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அதை ஒப்படைப்பதற்காகப் சாங்கோவின் வீடு தேடி வருகிறாள். முடிவு என்னவாகிறது என்பதே படம்
படத்தில் கடிகாரம் ஒரு குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது. எதற்கும் ஆசைப்படாத சாங்கோ தந்தை தனக்கு அளித்த கடிகாரத்தை மட்டுமே சொத்தாக நினைக்கிறான். அதை இழந்து விட அவன் விரும்பவில்லை. அவனது போராட்டம் உண்மையானது. ஆனால் அரசாங்கம் இது போன்ற சின்ன விஷயங்களைக் கண்டுகொள்ளாது என்பதுடன் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் ஒரு போதும் பொறுப்பு ஏற்பதேயில்லை என்பதை படம் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது
ஒரு பக்கம் தனது கடிகாரத்தை மீட்கச் சாங்கோ செய்யும் வேடிக்கையான முயற்சிகள். மறுபக்கம் ஜூலியா செயற்கை கருத்தரித்தல் நிலையத்தில் பரிசோதனைக்காகக் காத்திருப்பது. மருத்துவ ஆலோசனை. சிகிட்சை, கணவனுடன் சண்டை என வேடிக்கையான காட்சிகள். அந்த சிரிப்பின் பின்னால் மறையாத வேதனை வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படம் ஆவணப்பட பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சாங்கோ ஒன்றும் அரிச்சந்திரனில்லை. அவன் ஐம்பது லேவா கிடைக்கும் போது அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்கிறான். வேறுஒரு காட்சியில் மதுவிடுதியில் சென்று குடிக்கிறான். விலைமாதுடன் உறவு கொள்கிறான். ஆனால் மூட்டை மூட்டையாக பணம் கிடைக்கும் போது அது ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்திருக்கிறான். ஆகவே அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுகிறான். சாமானியர்களில் ஒருவனாகவே அவன் சித்தரிக்கப்படுகிறான்.
சாங்கோவின் வாழ்க்கை எளிமையானது. அவன் முயல் வளர்க்கிறான். பறவைகளை நேசிக்கிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பெண் உறவிற்கு ஏங்குகிறான். திக்கித்திக்கி பேசும் அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கிறான். இயல்பான அவனது உலகம் ஒரே நாளில் தலைகீழாகிவிடுகிறது. முடிவில் அவனுடைய வாழ்க்கை ரயில் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட பொம்மை போலாகிவிடுகிறது.
Stefan Denolyubov சாங்கோவாக சிறப்பாக நடித்திருக்கிறார். பரிசு பெறச் செல்லும் போது ஏற்படும் குழப்பங்களை சந்திக்கும் விதமும், தனது கைக்கடிகாரத்தை மீட்க முயலும் போது உணர்ச்சிகளை காட்டும் விதமும் அபாரம். இது போலவே ஜுலியாவாக Margita Gosheva அருமையாக நடித்துள்ளார். Kristina Grozeva Petar Valchanov இணைந்து இயக்கியுள்ளார்கள்.
பழைய உலகம் எளிமையானது. அங்கே பகட்டிற்கு இடமில்லை. அதன் நீட்சியாகவே சாங்கோ இருக்கிறான். புதிய உலகில் கடிகாரம் மட்டுமில்லை அவர்களின் வாழ்க்கையும் போலியானதே. உலகெங்கும் சிறிய மனிதன் அதிகாரத்தால் இப்படிதான் நடத்தப்படுகிறான். வேட்டையாடப்படுகிறான். அதுதான் நம்மைப் படத்தோடு அதிகம் ஒன்றச் செய்கிறது
••