ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் கதைத்தொகுப்பை எழுதியவர் யார் எனத் தெரியாது. அது ஒரு தொகைநூல். அதில் பல்வேறு காலகட்டங்களில் கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் வாசிப்பது பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு பதிப்பு. அதிலிருந்து ஆங்கிலப்பதிப்புகள் வந்திருக்கின்றன. ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மொழியாக்கமும் இது போலச் சொந்த சரக்குகள் கொண்டதே என்கிறார்கள். இன்று அரபு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படுகின்றன

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை மற்றும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையும் ஆரம்பக் காலத்தில் அராபிய இரவுகள் தொகுப்பில் கிடையாது. அதைத் தொகுப்பில் இணைத்தவர் மொழிபெயர்ப்பாளர் கேலண்ட்
அவருக்குப் பின்பு மொழியாக்கம் செய்தவர்கள் எவரும் இக்கதை குறித்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. அப்படியே அதைத் தொடர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்று கேலண்டின் நாட்குறிப்பு வழியாக அராபிய இரவுகளின் மொழியாக்கம் பற்றி புதிய செய்திகள் கிடைக்கின்றன
கேலண்டிற்கு இந்தக் கதைகள் எப்படித் தெரியவந்தது என்பதைப் பற்றி எழுதும் பாலோ லெமோஸ் ஹோர்டா 1709 ஆம் ஆண்டில் கேலண்ட் ஒரு பயணியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறார்.

அந்தப் பயணியின் பெயர் ஹன்னா தியாப். சிரிய தேசத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞரான தியாப் தான் கேட்டறிந்திருந்த வாய்மொழிக்கதைகளைக் கேலண்டிடம் கூறியிருக்கிறார். அப்போது சொல்லப்பட்டது தான் அலிபாபா மற்றும் அலாவுதீன் கதைகள் என்கிறார் லெமோஸ். இதற்கான ஆதாரங்களையும் வரிசையாகப் பட்டியலிடுகிறார்.
தியாப் என்ற ரகசிய கதைசொல்லியின் மூலமே இந்தக் கதைகள் அரேபிய இரவுகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன
தியாப் பதினாறு கதைகளைக் கேலண்டிடம் கூறியிருக்கிறார். அவற்றில் பத்து உருமாற்றம் பெற்று அராபியக்கதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன
கேலண்டின் பிரெஞ்சு மொழியாக்கம் 1704 முதல் 1717 வரை பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இந்தக் கதைகளுக்குத் தேவையான நுட்பமான தகவல்கள் மற்றும் சாகசங்களைத் தனது சொந்த பயணத்திலிருந்து கேலண்ட் உருவாக்கியிருக்கிறார். ஆகவே அது உண்மையான அரபுக்கதைப் போலத் தோற்றம் தருகிறது என்கிறார்கள்.
1679 இல், கேலண்ட் இஸ்தான்புல்லிற்கு மூன்றாவது முறையாகப் பயணம் செய்து தனது புத்தக வேட்டையை நடத்தியிருக்கிறார். அங்கே பல்வேறு கையெழுத்துப்பிரதிகளை விலைக்கு வாங்கியதோடு, துருக்கி வணிகர் ஒருவர் மூலமாகத் தனியார் நூலகம் ஒன்றை முழுவதுமாக வாங்கி அதிலிருந்த கையெழுத்துப்பிரதிகள் மற்றும் வரைபடங்களைச் சேகரித்துச் சென்றிருக்கிறார். ஓராண்டில் இருபது ஆண்டுகளுக்குத் தேவையான விஷயங்களைத் தான் சேகரித்துவிட்டதாக அவரது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.
இஸ்தான்புல் கிராண்ட் பஜாரின் புத்தக விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள கையெழுத்துப் பிரதிகளைக் கதைசொல்லிகளுக்கு கடனாகக் கொடுப்பது வழக்கம். காஃபி ஹவுஸில் மாலை நேரம் ஒன்று கூடும் மக்களிடம் அந்தக் கதைகளைக் கதைசொல்லிகள் சொல்லி மகிழ்வார்கள். அதை நேரில் கேட்டிருந்த கேலண்ட் கதைசொல்லிகளிடமிருந்தும் கையெழுத்துப்பிரதிகளைப் பெற்றிருக்கிறார்.
பிரெஞ்சில் தனது அரேபியக் கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டு கேலண்ட் நிறையக் கதைகளை இப்படிச் சொருகியிருக்கிறார். அதை இப்போது அடையாளம் கண்டு வரிசைப்படுத்துகிறார்கள்

இன்று அலிபாபா கதையை எழுதியவராக தியாப்பை குறிப்பிடுவதோடு அவரது நாட்குறிப்பினையும் மொழிபெயர்த்து தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
போர்ஹெஸ் அரேபிய இரவுகளின் மொழியாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையின் மொழியாக்கத்தை அட்சரம் இதழில் வெளியிட்டிருக்கிறேன்.
அராபிய இரவுக்கதைகளுக்குள் இந்தியக் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. அதன் மாற்றுவடிவங்களை நாம் எளிதான இனம் காண முடியும்.