ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யூலிசிஸ் நாவலின் கடைசிவரி yes I said yes I will Yes.
மோலியின் கூற்றாக வரும் இந்த வரியில் வரும் யெஸ் என்பது ஒரு இடைவெட்டு. ஒரு ஆமோதிப்பு. தளர்வு, எதிர்ப்பின் முடிவு, நிதர்சனமான உண்மை. கடந்தகாலத்தின் குரல் எனப் பல்வேறுவிதங்களில் சொல்லலாம். இந்த வரியை மிகவும் சோகமாக வரி எனக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் இதை “the female word” என்கிறார்.

நாவலின் கடைசிப் பத்தி
“I was a Flower of the mountain yes when I put the rose in my hair like the Andalusian girls used or shall I wear a red yes and how he kissed me under the Moorish wall and I thought well as well him as another… then he asked me would I yes to say yes my mountain flower and first I put my arms around him yes and drew him down to me so he could feel my breasts all perfume yes and his heart was going like mad and yes I said yes I will Yes.”
சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையின் ஊடாகப் பயணம் செய்யும் இந்த நாவலின் கடைசிச் சொல்லாக யெஸ் இடம்பெற்றிருப்பது முக்கியமானது.. நாவலில் மோலியின் பங்கு சிறியதே. ஆனால் அவளது பார்வையில் தான் நாவல் நிறைவு பெறுகிறது. மோலி ப்ளூம் தனது கணவருக்கு அருகில் படுக்கையில் படுத்தபடியே இவற்றை யோசிக்கிறாள். முற்றுப்புள்ளியில்லாத இந்த நினைவோட்டத்தில் அவர்களின் கடந்தகாலம் விவரிக்கப்படுகிறது. இன்றைய கசப்புணர்வு, விலகலைத் தாண்டிய அவர்களின் இனிய உறவினை உணர்வது போல இந்த யெஸ் இடம்பெறுகிறது. மோலியின் தனிமொழியாகவே இதனைக் கருதுகிறார்கள்.

ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிசிஸ் வெளியாகி நூறு ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான விளம்பரங்களில் ஜாய்ஸ் உருவத்துடன் Yes என அச்சிட்டுப் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்கள்
இன்னொரு வகையில் இந்த யெஸ் அவரை அயர்லாந்து அங்கீகரித்துக் கொண்டாடுவதன் அடையாளம். இந்தப் பெருமைகளும் அங்கீகாரமும் அவர் வாழும்போது கிடைக்கவில்லை. சூரிச்சில் தனது 59வது வயதில் அல்சருக்கான அறுவைசிகிச்சையில் நினைவிழந்து ஜாய்ஸ் இறந்த போது அயர்லாந்து அரசு சார்பில் எவரும் மரியாதை செலுத்தவில்லை. ஆனால் பிரிட்டன் அரசு மரியாதை செலுத்தியது. ஜாய்ஸின் நூற்றாண்டிற்குப் பின்பே அவர் அயர்லாந்தின் கல்சரல் ஐகானாக மாறினார். அவரது உருவம் அச்சிட்ட பணத்தாள் துவங்கி அவரது சிலைகள் நினைவகம் என அயர்லாந்து அவரைக் கொண்டாடியது

தனது நாற்பதாவது பிறந்த நாள் அன்று யூலிசிஸ் நாவல் வெளியாக வேண்டும் என்று ஜாய்ஸ் விரும்பினார். 2 பிப்ரவரி 1922 அன்று இந்நாவலின் முதற்பிரதி ஜாய்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
எதற்காகத் தனது பிறந்தநாளின் போது நாவல் வெளியாக வேண்டும் என ஜாய்ஸ் ஆசைப்பட்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு ஆருடத்தில் நம்பிக்கையிருந்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

எளிதாகப் படிக்க இயலாத இந்த ஆயிரம் பக்க நாவல் உலகெங்கும் எழுப்பிய அலை எதிர்பாராதது. நவீன நாவலின் உச்சம் என ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள். இன்னொரு வகை விமர்சகர்களோ கழிப்பறை கிறுக்கல்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந்த நாவலின் முதற்பதிப்பு டப்ளினிலுள்ள நினைவகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் புத்தகங்கள் முதற்பதிப்பாக வெளியாகின. அதில் நிறைய தவறுகள் இடம்பெற்ற காரணத்தால் பின்பு புதிய பதிப்பு உருவானது என்கிறார்கள். இந்த நாவலின் வெவ்வேறு பதிப்புகள் வெளியானதின் பின்பு சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன.
நினைவுகளும் நிகழ்வுகளும் இணைந்து செல்லும் எழுத்தைப் படிப்பது உண்மையிலே மிகக் கடினமானதே. நாவலில் டப்ளின் நகரின் வீதிகளையும் அங்குச் சந்தித்த மனிதர்களையும் ஜாய்ஸ் துல்லியமாக எழுதியிருக்கிறார். அவரது நினைவில் டப்ளின் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்திருக்கிறது என்பதை நாவலின் வரிகளைப் பின்பற்றி இன்று மேற்கொள்ளப்படும் பயணங்கள் உறுதி செய்கின்றன.
என் இருபது வயதுகளில் யூலிசிஸ் நாவலைப் படிக்க ஆரம்பித்த போது ஐம்பது பக்கங்களைக் கூடத் தாண்ட முடியவில்லை. பின்பு வேறுவேறு தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்திருக்கிறேன். இந்த லாக்டவுனின் போது தான் நாவலை முழுமையாக வாசித்தேன். அப்படியும் நிறையப் புரியவில்லை. நிறைய உதவி நூல்களின் வழியே தான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியும் முழுமையாக புரியவில்லை என்பதே நிஜம்.
நாவலில் லியோபோல்ட் ப்ளூம் ஒரு நாள் முழுவதும் டப்ளின் நகரவீதிகளில் சுற்றியலைகிறான். முன்னறியாத நபர்களை சந்திக்கிறான். மதுவிடுதிகளுக்குச் செல்கிறான். தற்செயலாக ஸ்டீபன் டெடலஸ் என்ற இளம் எழுத்தாளனைச் சந்தித்து உரையாடுகிறான். வீடு திரும்ப மனதில்லாத ஒருவனின் அலைக்கழிப்புகளே நாவலின் பிரதானம். 18 அத்தியாயங்களாக நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவை தனித்தனியே பிரிக்கப்படாமலே எழுதப்பட்டது என்கிறார்கள்.
History is a nightmare from which I am trying to awake என்ற ஸ்டீபன் டெடலஸின் வரியே நாவலுக்கான திறவுகோல் எனலாம். இந்த நாவலும் ஒரு வரலாற்றின் விடுபடுதலை தான் பேசுகிறது. அந்த வரலாறு எதனால் உருவாக்கபட்டிருக்கிறது என்பதை கேள்வி கேட்கிறது. நாவலின் ஊடாக கேள்விகளும் விவாதங்களும் முன்வைக்கபடுகின்றன. யார் யாரிடம் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
அயர்லாந்தில் வசிக்கும் விளம்பரங்கள் சேகரிக்கும் வேலை செய்யும் யூதரான ப்ளூமின் வாழ்க்கையை விவரிக்கும் ஜாய்ஸ் தனது தேசம் யூதர்களை எப்படி நடத்தியது என்பதையும் கத்தோலிக்கத் தேவாலயங்களின் செயல்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய விவாதத்தை முன்னெடுக்கிறார்.
மனைவியின் கள்ள உறவைப் பற்றி அறிந்த ப்ளூம் அந்த நினைவுகளால் துரத்தப்படுகிறார். நகரவீதியில் சுற்றியலையும் ப்ளூம் விசித்திரமான நிகழ்வுகளால். மனிதர்களால் சூழப்படுகிறார். ஓரிடத்தில் அறியாத மரண ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். வேறிடத்தில் அழகான, இளம்பெண்களின் மீதான நாட்டம் கொள்கிறார், சாலையில் பார்வையற்ற சிறுவனுக்கு உதவுகிறார். நாவல் முழுவதும் பல்வகையான உணவுக்குறிப்புகள் உணவகங்கள் மதுவிடுதிகள் இடம்பெறுகின்றன.

ஒரு அத்தியாயத்தில் ப்ளூம் தேசிய நூலகத்தினுள் செல்கிறார். வேறு ஒரு அத்தியாயத்தில் ஜெசுவிட் பாதிரியைச் சந்திக்கிறார். மரணம் காதல் மதுவிடுதி இசை, தோல்வி, கடந்தகால நினைவுகள் மற்றும் கிரேக்க சிற்பங்கள் குறித்த சந்தேகங்கள், யூதர்களின் பொருளாதார நிலை, தாயின் மரணம் எனக் கனவுக் காட்சிகள் போலத் தொடர்பில்லாத சம்பவங்கள் நடக்கின்றன
வீடு நகரம் என்பது இரண்டு மாறுபட்ட விஷயங்களில்லை. நகரம் என்பது பெரியதொரு வீடு என்றே ஜாய்ஸ் நினைக்கிறார். நகரத்தின் காட்சிகளைக் கொண்டு தனது வீட்டிற்கு ஒரு பாடலை புனைய முற்படுகிறார். அந்தப் பாடல் புரிந்து கொள்ளப்படாத உறவின், அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
சம்பிரதாயமான நாவலைப் போல இதில் கதை வளர்த்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நிகழ்வுகள் சிதறடிக்கப்படுகின்றன. நினைவுகளாலும் எண்ணங்களாலும் இவை உருவாக்கபடுவதைக் காணமுடிகிறது. இத்தனை கடினமான, நாமே யூகித்துப் பின்தொடர வேண்டிய நாவல் எப்படி இவ்வளவு உச்சத்தில் கொண்டாடப்படுகிறது என்பது வியப்பானதே.
இதைப்பற்றிக் குறிப்பிடும் விமர்சகர் , வில்லார்ட் பாட்ஸ்
Certainly any intelligent reader can read and understand it, if he returns to the text again and again. He is setting out on an adventure with words. என்கிறார்.
இந்த நாவலைக் கொண்டாடும் எஸ்ரா பவுண்ட் நாவல் டப்ளினைப் பற்றியதாக இருந்தாலும் உலகின் எந்த நகரிலும் இதே அனுபவமே ஏற்படும். ஆகவே ஜாய்ஸ் விவரித்திருப்பது நவீன மனிதனின் பிரச்சனை. அதுவும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார் என்கிறார்.
தனது காலத்தில் ஏற்பட்ட ஐரிஷ் அரசியல் மாற்றங்கள் மற்றும் புரட்சி பற்றி ஜாய்ஸ் எதையும் எழுதவில்லை. அவரிடம் தேசப்பற்றில்லை என்ற விமர்சனம் இன்றும் தொடர்ந்து வருகிறது
நாவலின் நூற்றாண்டினைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அயர்லாந்தில் பலரையும் பேட்டி கண்டு வெளியிடுகிறார்கள். அவர்களில் பலர் நாவலைப்பற்றித் தகவலாகக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். சிலர் படிக்கத் துவங்கி பத்து இருபது பக்கங்களில் விட்டிருக்கிறார்கள். ஆனாலும் இளைஞர்களுக்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் ஒரு கவர்ச்சியான படிமம். அதை உயர்த்திப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள்.
தனது இளமையில் நாடகாசிரியர் இப்சனை ஆழ்ந்து படித்து அவரைப்பற்றிய விமர்சனக்கட்டுரையை ஜாய்ஸ் எழுதியிருக்கிறார். இப்சனின் நோராவின் சாயலை மோலியிடம் காணமுடிகிறது என்கிறார்கள்.
ஜாய்ஸ் Dubliners எழுதும் போது, அதற்குத் தேர்வு செய்திருந்த தலைப்பு Ulysses in Dublin. ஆனால் அந்தத் தலைப்பை வைக்கவில்லை. அந்த எண்ணமே பின்பு நாவலாக உருமாறியிருக்கிறது.
கிரேக்க நாடகங்களின் தனிமொழியைப் போலவே நாவலில் கதாபாத்திரங்கள் தனது எண்ணங்களை, குழப்பங்களை, கடந்தகால நினைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சொல் அதன் ஓசைக்காகவே பல இடங்களில் வெளிப்படுகிறது. முற்றுப்பெறாத வாக்கியங்கள். காட்சிகளைத் துண்டித்துத் துண்டித்துச் செல்லும் விவரிப்பு, பலநேரங்களில் நம்மைக் குழப்பமடையச் செய்கிறது
நாவல் ஒரு விளையாட்டுப் பலகை போலவே இருக்கிறது. விளையாட்டின் சாத்தியங்களைப் போலவே புதிய வாசிப்பு அதைப் புதியதாக்கிக் கொண்டேயிருக்கிறது
•••