சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ என்ற பாடலை நேற்றிரவு கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்றது.

எழுதியவர் கவிஞர் மாயவநாதன். எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று வியந்து மறுபடியும் கேட்டேன்.
தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாயவநாதன். சிறந்த திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். 35 வயதில் அமரராகிப் போனவர் மாயவநாதன். 10 ஆண்டுகளில் 24 படங்களில் மொத்தம் 54 பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலைக் கேட்கும் பலரும் இது கண்ணதாசன் எழுதியது என்றே நினைக்கிறார்கள். மாயவநாதனுக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது என்கிறார்கள். பசியால் சாலையில் விழுந்து உயிர் துறந்தார் என்கிறார்கள். உண்மையா எனத்தெரியவில்லை. ஆனால் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் பணத்தினைப் பெரிதாக நினைக்காமல் விரும்பிய படங்களில் மட்டுமே பாடல்கள் எழுதியிருக்கிறார்.
படித்தால் மட்டும் போதுமா, திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தண்ணிலவு தேனிறைக்கத் தாழை மரம் நீர் தெளிக்கக் கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இவரது முதற்பாடல்.
பந்தபாசம் படத்தில் இடம் பெற்ற நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு போன்ற பாடல்கள் காலத்தை வென்றவை.
சித்திரப் பூ விழி வாசலிலே பாடலில் தோழியின் கேலியும் தேவிகாவின் பதிலும் மிக அழகாகச் சந்தச்சுவையும், கற்பனைத் திறனும் கொண்டு வெளிப்படுகின்றன. சொற்களால் இருவரும் பந்தாடுகிறார்கள். இரண்டு குரல்களும் குழைந்தும் முதிர்ந்தும் நம்மை கட்டிப் போடுகின்றன.
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப் பெயர்
சொல்லி துதிப்பதுவோ (2)
ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே
இன்று வழக்கொழிந்து போய்விட்ட பூவிழி வாசல் என்ற சொல் இந்த பாடலில் கேட்க எத்தனை புதியதாக இருக்கிறது. சங்க கவிதையின் சாயலில் எழுதப்பட்ட இந்த பாடல் பழந்தமிழ் பாடல்களின் நினைவு இழைகளோடு எழுதப்பட்டிருக்கிறது. அந்த இனிமை தான் காலத்தைக் கடந்து இதை ரசித்துக் கேட்க வைக்கிறது
‘