வரலாற்றின் சாட்சியம்

சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன்.

மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட மரம்

காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது

அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் இதற்கு உதவி செய்தார்.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட ஆல மரத்தடியில் நின்றேன். அந்த மரம் வரலாற்றின் சாட்சியமாக மாறியுள்ளது. அதன் இலைகள் அசையும் போது கடந்தகாலத்தின் கதைகள் உயிர்பெறவே செய்கின்றன. பரக்பூரில் மங்கள் பாண்டே நினைவாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உருவச்சிலை உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தியின் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய, காந்தி படித்துறையும் பரக்பூரில் உள்ளது. கங்கை நதியின் அழகினை படித்துறையில் நின்றபடியே ரசித்தேன்.

••

கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்தில் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் வில்லியம் டேனியல் (1769-1837) வரைந்த அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. அந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் அனுபவம் பரவசமூட்டியது. நண்பர் கோபால்சுவாமி எங்களுடன் வந்திருந்தார். வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பார்வையாளர்கள் பலரும் கையிலும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் நுழைவாயிலில் உள்ளே தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது எனப் பறித்துவிடுகிறார்கள். அவரவர் பெயர் எழுதி பாட்டிலை வெளியே வைத்துவிட்டுப் போய் திரும்ப வரும் போது எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எதற்காக தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று ஒரு பெண் ஆத்திரப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று ஒரு காவலர் விளக்கினார். அந்தப் பெண் தனது பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவர் கண்முன்னே குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிந்தார்.

1784ல் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் இருவரும் ஓவியர்களாக இந்தியாவிற்கு வந்தார்கள். பின்பு வில்லியமின் தம்பி சாமுவேல் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து அவர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் பேரழகானவை.  

இந்த ஓவியங்களின் வண்ணம் மற்றும் துல்லியமான சித்தரிப்பு வியப்பூட்டக்கூடியது. தமிழகத்தின் முக்கிய நிலக்காட்சிகள் மதுரை தஞ்சை நகரக்காட்சிகளை இவர்கள் வரைந்திருக்கிறார்கள்.

தாமஸ் தனது தேவைக்களுக்காகக் கொல்கத்தாவில் ஒரு அச்சுக்கூடத்தை உருவாக்கினார். வில்லியம் நீர்வண்ண ஓவியங்களை வரைந்து வந்தார். இவர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து ஓவியங்களை அச்சிட்டு வெளியிட முனைந்தார்கள்.  கொல்கத்தாவின் பழைய நீதிமன்றம், எழுத்தர்களின் மாளிகை, தேவாலயம். கிளைவ் தெரு உள்ளிட்ட முக்கியமான இடங்களை வரைந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்தார்கள்

மதுரை

இந்தியா முழுவதும் சுற்றிவந்த வில்லியம் தனது பயணவிபரங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு நாட்குறிப்பு வைத்திருந்தார், அதில் அவர்கள் சந்தித்த மக்கள், சென்ற இடங்கள் மற்றும் ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி நிறையத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

டேனியல்ஸ் மார்ச் 29, 1792 அன்று மதராஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தங்களின் தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களுடன் பல்லக்குத் தூக்கிகள். பணியாளர்கள். சுமை தூக்குபவர்கள் என ஒரு குழுவே இணைந்து பயணம் செய்தது. அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி மதுரையை அடைந்தார்கள். மதுரையின் பழைய அரண்மனை மற்றும் தெப்பக்குளம் குளம் உள்ளிட்ட அருகிலுள்ள இடங்களை வரைந்தார்கள். பின்பு ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களைக் கண்டார்கள். அங்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டு பாபநாசம் வரை சென்றார்கள். திரும்பி வந்து தஞ்சை பகுதியினைப் பார்வையிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதே திருச்செங்கோடு கோவிலின் ஓவியம்.

அந்த ஓவியம் கொல்கத்தா விக்டோரியா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவியத்தின் கீழே தரப்பட்ட தகவல் சரியானதாகயில்லை. காலனிய ஆட்சியின் அடையாளமாக உள்ள விக்டோரியா நினைவகத்தினுள் ஆள் உயர கிளைவ் சிலை உள்ளது. மைய மண்டபத்தின் நடுவே விக்டோரியா ராணி சிலை காணப்படுகிறது. பிரம்மாண்டமான இந்த வளாகம் பத்து ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடந்த விதம் பற்றிய புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டேன்.

••

பால்தசார் சோல்வின்ஸ் வரைந்த வங்காள ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியைக் கொல்கத்தாவில் கண்டேன். இதில் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவில் அச்சுத் தயாரிப்பின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான பிரான்சுவா பால்தசார் சோல்வின்ஸ் 1760ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் பிறந்தவர்.

கடல் ஓவியராகப் பயிற்சி பெற்ற சோல்வின்ஸ் 1791-1803 வரை கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். இந்த நாட்களில் இந்தியவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் ஜோன்ஸின் நட்பு உருவானது. அவரது உத்வேகத்தால் தான் கண்ட கேட்ட மனிதர்களை வரைந்திருக்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் அந்தமான் மற்றும் நிகோபார் மக்களையும் நிலப்பரப்பினையும் ஒவியமாக வரைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட தனி ஓவியங்களை தொகுத்து தனிநூலாகவும் வெளியிட்டிருக்கிறார்

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வங்களாத்தின் சமூகக் கட்டமைப்பு. சாதிய படிநிலைகள். ஒடுக்குமுறை, திருவிழா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து இவரது ஓவியங்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தின் அன்றாட வாழ்வையைப் பால்தசார் சோல்வின்ஸ் திறம்பட வரைந்திருக்கிறார். குறிப்பாகக் கிராமியக் கலைகள் மற்றும் கலைஞர்களை அவர் வரைந்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

சோல்வின்ஸ் தான் கேட்டு அறிந்த விஷயங்களை வரையும் போது தவறு செய்திருக்கிறார். அதில் ஒன்று தஞ்சாவூர் ராஜா என ஒருவரை வரைந்திருப்பது. அது ஒரு தவறான சித்தரிப்பு. சரபோஜி மன்னர்கள் பற்றிய தகவலை வைத்துக் கொண்டு அவர் வரைந்திருக்கலாம்.

சோல்வின்ஸின் ஓவியங்களில் காணப்படும் பெண் நடனக் கலைஞர்கள், மிளிர்கிறார்கள். அவரது ஓவியத்தின் பின்னே எழுதப்படாத கதைகள் மறைந்திருக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டு வங்காளத்தில் கணவன் இறந்தவுடன் பெண்களைச் சிதையில் இறங்கச் செய்யும் பழக்கம் இருந்தது. இந்த நிகழ்வை சோல்வின்ஸ் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் சிதைபுக இருக்கும் பெண் முகத்தில் தனக்குச் சதியில் விருப்பமில்லை என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. அதை உணர்ந்தவர்கள் போலப் பெண்ணின் உறவினர்கள் அழுகிறார்கள்.

தனது காலகட்டதை ஆவணப்படுத்தும் விதமாகச் சோல்வின்ஸ் வரைந்த ஓவியங்களை  கண்காட்சியில் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

••

0Shares
0