.
ஃபெடெரிகோ ஃபெலினியின் Il bidone அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம்.

மதகுரு போல வேஷம் போட்டுக் கொண்டு கிராமப்புற விவசாயிகளை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பலைப் பற்றியது.
ஒரு காரில் கிராமப்புறத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கும்பல் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்று அவர்கள் நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக நம்ப வைத்து நாடகம் ஆடுகிறது.
அந்தச் செல்வத்தைப் புதைத்து வைத்தவன் போரில் இறந்து போய்விட்டதாகவும் புதையலை நிலத்தின் உரிமையாளரே தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றும் கதை கட்டுகிறார்கள்.
இதனை நம்பிய விவசாயி அவர்கள் சொல்லும் அடையாளம் கொண்ட இடத்தைத் தோண்டி புதையல் உள்ள பெட்டியை கண்டுபிடிக்கிறான்.
அந்தப் புதையலை அடைவதற்கு விவசாயி ஒரு சிறப்புப் பிரார்த்தனை நடத்தி ஏழை எளியவர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். அதற்கான பணத்தைக் கொடுத்தால் புதையலை அடைந்து கொள்ளலாம் என்கிறார் மதகுரு.

விவசாயி அதனை நம்பி தனது சேமிப்பில் உள்ள பணம் முழுவதையும் தருகிறான். அதனைக் கொள்ளை அடித்துவிட்டு மோசடி கும்பல் தப்பிப் போகிறார்கள். அவர்கள் போன பிறகு புதையல் பெட்டியில் உள்ளது யாவும் போலி நகைகள் என விவசாயி அறிந்து ஏமாந்து போகிறான்
இது போலவே ரோமின் புறநகருக்குச் செல்லும் இந்தக் கும்பல் மக்களுக்கு இலவச வீடு அளிக்கும் அதிகாரிகள் போல நடித்து ஏழை எளியவர்களிடம் முன்பணம் வசூலித்து ஒடிவிடுகிறார்கள்.
ஏமாற்றிக் கிடைத்த பணத்தைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தக் கும்பலின் ஒரு உறுப்பினரான கார்லோ தனது மனைவியிடம் தான் விற்பனை பிரதிநிதி எனப் பொய் சொல்லியிருக்கிறான். அடிக்கடி இதற்காகப் பயணம் போவது போல நடிக்கிறான்.
மதகுருவாக நடிக்கும் அகஸ்டோ குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழுகிறார். நீண்ட காலத்தின் பின்பு தனது மகள் பாட்ரிசியாவை தற்செயலாகச் சந்திக்கிறார்
மகள் மிகுந்த பாசத்த்துடன் நடந்து கொள்கிறாள். அது அவரது மனசாட்சியை உறுத்துகிறது. மகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என அகஸ்டோ விரும்புகிறார். மகள் ஆசைப்பட்ட கல்வியைப் பெற தான் பணம் தருவதாகச் சொல்கிறார்.

இந்நிலையில் அவர்கள் ஒரு கிராமத்து விவசாயியை ஏமாற்றச் செல்கிறார்கள். அந்த வீட்டில் ஊனமுற்ற ஒரு இளம்பெண்ணைக் காணுகிறார் அகஸ்டோ. நோயுற்ற அவள் கடவுளின் பிரதிநிதியாக அகஸ்டோவை நினைக்கிறாள். அவர் முன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்கிறாள். அது அகஸ்டோ மனதை வேதனை கொள்ள வைக்கிறது. அவர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடிக்க தயங்குகிறார்.
முடிவில் தனது கும்பலுக்குத் தெரியாமல் அவர் பணத்தைத் திருடி ஒளித்து வைத்துக் கொள்கிறார். அதனைக் கும்பல் அறிந்து கொள்ளும் போது அவரது வாழ்க்கை மாறிப் போகிறது
படத்தின் இறுதிக்காட்சி துயரமானது. அகஸ்டோவின் தவிப்பும் வீழ்ச்சியும் மறக்க முடியாதது.
அகஸ்டோவிற்கும் அவரது மகளுக்கும் இடையில் உணவகத்தில் நடக்கும் உரையாடல், அவர் அன்பை வெளிப்படுத்தும் விதம். அது போலவே கார்லோவின் மனைவி அவனைச் சந்தேகம் கொண்டு விசாரணை செய்யும் இடம், காவலர்களிடம் அகஸ்டோ நடந்து கொள்ளும் முறை எனப் பல அற்புதமான காட்சிகள் உள்ளன.
ப்ரெடெரிக் க்ராபோர்ட் அகஸ்டோவாக சிறப்பாக நடித்திருக்கிறார். குயிலியேட்டாவும் ரிச்சர்ட் பேஸ்ஹார்ட்டும் லா ஸ்ட்ரடாவிற்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ளார்கள்.
உண்மைச் சம்பவம் ஒன்றிலிருந்து இந்தக் கதையை எழுதியதாக ஃபெலினி குறிப்பிடுகிறார்.. படத்தின் ஒளிப்பதிவு அபாரம். போருக்குப் பிந்தைய இத்தாலியில் இது போன்ற மோசடிகள் அதிகரித்தது உண்மையே.
••