விநோத ஒப்பந்தம்.

புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர் ஈசக் டினேசன் (கரேன் ப்ளிக்சன்) வாழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட திரைப்படம் The Pact. Bille August இதனை இயக்கியுள்ளார். இவரது Out of Africa புகழ்பெற்ற நாவலாகும்.

கரேன் ப்ளிக்சன்

இப்படம் இரண்டு எழுத்தாளர்களுக்குள் ஏற்படும் நட்பு மற்றும் விநோத ஒப்பந்தம் பற்றியது. 1948ல் கதை நடக்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்து திரும்பிய கரேன் தற்போது டென்மார்க்கில் வாழ்கிறார். வசதியான வாழ்க்கை. பெரிய மாளிகை. பணியாளர்கள். அவரது வீடு இலக்கியச் சந்திப்புகள் நடக்கும் மையம் போலச் செயல்படுகிறது. முதுமையான கரேன் தேசத்தின் இலக்கியக் குரலாக ஒலிக்கிறார்.

இளம் டேனிஷ் கவிஞரான தோர்கில்ட் ஜோர்ன்விக் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு எழுத்தாளர் கரேன் ப்ளிக்சனின் வீட்டைத் தேடிப் போவதில் படம் துவங்குகிறது.

தனது மாளிகையில் கரேன் ப்ளிக்சன் தனது நாவல் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதை முன்னிட்டு ரேடியோவிற்கான நிகழ்ச்சி ஒன்றை வழங்கிக் கொண்டிருக்கிறார். தனது முதல்நாவலை கரேன் படித்திருக்கிறார் என்ற தகவலை கேள்விபட்டு அவரை நேரில் சந்திக்கக் காத்திருக்கிறான் தோர்கில்ட்.

அந்தச் சந்திப்பில் தான் அவரது புத்தகத்தைப் படிக்கவில்லை என்றும், தோழி ஒருவர் படித்துப் பாராட்டியதாகவும் தெரிவிக்கிறார். ( அதுவும் பொய் என்று பின்பு தோர்கில்ட் தெரிந்து கொள்கிறான்). அது தோர்கில்ட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

தனது வாழ்க்கை வரலாற்றை அவன் ஒரு புத்தகமாக எழுத விருப்பமா எனக் கரேன் கேட்கிறார். வீடு திரும்பி மனைவியிடம் இது குறித்து உரையாடும் தோர்கில்ட் அது தனது இலக்கியப் பாதையை மாற்றிவிடும் எனப் பயப்படுகிறான். பிடிக்காத வேலையைச் செய்யாதே என அவனது மனைவி ஆலோசனை சொல்கிறாள்.

அதன்படி மறுநாள் கரேனின் வீடு சென்ற தோர்கில்ட் தன்னால் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத இயலாது என மறுத்துவிடுகிறான். அந்த மறுப்பு, தைரியம் கரேனுக்குப் பிடித்திருக்கிறது.

எழுத்தாளன் வெற்றி பெற இது போன்ற துணிச்சல் அவசியம். மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். என்று தோர்கில்டைப் பாராட்டுகிறாள்.

மறுநாள் அவனையும் அவனது மனைவியினையும் வீட்டில் நடக்கும் விருந்திற்கு அழைக்கிறார். அந்த விருந்தை அவர் திட்டமிடுவது ஒரு நாவலில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களை நகர்த்துவது போலவே நிகழ்கிறது.

விருந்தில் தோர்கில்ட் பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களைச் சந்திக்கிறான். பழகுகிறான். அன்றிரவு கரேன் வீட்டிலே தங்குகிறான். விருந்திற்குத் தோர்கில்ட்டின் மனைவி தயாராகி வருவது. விருந்தில் நடனமாடுவது. விருந்து முடிந்தபின்பு அந்நியர் வீட்டில் தங்க விரும்பவில்லை என உடனே புறப்படுவது, அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவுள்ளது.

அதன்பிறகு கரேனுக்கும் தோர்கில்டிற்கும் இடையில் விநோதமான நட்பு உருவாகிறது. தோர்கில்ட் தன்னை முழுமையாக நம்பி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் அவனுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து புகழ்பெற்ற எழுத்தாளராக உருவாக்க முடியும் என்கிறார் கரேன். சாத்தானுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் போலவே அந்தச் சொற்கள் ஒலிக்கின்றன

தோர்கில்ட் அதனை ஏற்றுக் கொள்கிறான். கரேன் அவனுக்குப் பண உதவி செய்ய ஆரம்பிக்கிறார். தனது வீட்டிலே வந்து தங்கிக் கொள்ள வைக்கிறார். தனது நாவலில் வரும் கதாபாத்திரத்தை தன் விருப்பம் போலச் செயல்பட வைப்பதை போலவே தோர்கில்ட்டை நடத்துகிறார். புதிய நட்பு தோர்கில்டை குடும்பத்தை விட்டு விலக்குகிறது.

இதனால் தோர்கில்ட் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாக்குகிறது. அமைதியான குடும்ப வாழ்க்கையா அல்லது விசித்திரமான ஒப்பந்தம் மூலம் கிடைக்கப் போகும் இலக்கிய வாழ்க்கையா, இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது எனத் தோர்கில்ட் குழம்பிப் போகிறான். தான் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு படுகுழி என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணருகிறான்.

கரேன் ஏன் இப்படி ஒரு ஒப்பந்தம் போடுகிறார். உலகம் அறியாத அவரது வாழ்வின் மறுபகுதி வேதனையானது. தனது புகழைக் கொண்டு அதனை மறைத்திருக்கிறார். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போது கரேனிற்குக் கதே, நீட்சே மீதுள்ள விருப்பம், கவிதைகளில், இசையில் அவள் காட்டும் ஆர்வம் அழகாக வெளிப்படுகிறது.

சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோயால் உடல்நலிந்து போயுள்ள கரேனின் உண்மை நிலையைத் தோர்கில்ட் அறிந்து கொள்கிறான். அவளிடமிருந்து விலகிப் போகவும் முடியாமல், சொந்த வாழ்க்கையைத் தொடரவும் முடியாமல் தத்தளிக்கிறான். பூனிற்கு அவனை அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள் கரேன். தோர்கில்ட் எடுக்கும் முடிவும் அவனது நினைவுகளுமே பின்னாளில் ஒரு சிறிய நூலாக எழுதப்படுகிறது.

எழுதுவதற்கு உகந்த சூழலும், எழுத்திற்கான அங்கீகாரமும் கிடைக்காத ஒருவனின் ஏக்கத்தை. முனைப்பை தோர்கில்ட் சரியாக வெளிப்படுத்துகிறான். அதே நேரம் தனது இலக்கிய அங்கீகாரத்தை, அதிகாரத்தைக் கரேன் வெளிப்படுத்தும் விதமும், காரணங்களும் ஆழமான உளவியல் காரணிகளைக் கொண்டிருக்கின்றன. கரேன் ப்ளிக்ஸனாகப் பிர்தே நியூமன் சிறப்பாக நடித்துள்ளார்.

மார்லோவின் நாடகத்தில் வரும் Dr.Faust இது போலச் சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார். அவரது முடிவு துயரமாகயிருக்கும். அந்தக் கதாபாத்திரத்தின் மாற்றுவடிவம் போலவே தோர்கில்ட் உருவாக்கபட்டிருக்கிறான். கரேன் ப்ளிக்சனை வாசித்திருந்தால் மட்டுமே இந்தப் படத்தை ஆழ்ந்து ரசிக்க முடியும். இந்தப் படம் எனக்கு மகாபாரதக் கதாபாத்திரமான யயாதியை நினைவுபடுத்தியது. அவரும் இது போலவே ஒரு விநோத வேண்டுகோள் ஒன்றை முன்னெடுக்கிறார்.

•••

0Shares
0