கனவு தடவப்பட்ட ரொட்டி

விட்டோரியா டிசிகா சிறந்த நடிகர். சர்வதேச அளவில் அவர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கிடைத்த கவனம் அவரது நடிப்பிற்குக் கிடைக்கவில்லை. இத்தாலிய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கினார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நாடகவுலகில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பதாலே அவர் இயக்கிய படங்களில் பிற நடிகர்களிடம் சிறப்பான வெளிப்பாட்டினைப் பெற முடிந்திருக்கிறது

விட்டோரியோ டி சிகா சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதில் பெரிய தொகையை இழந்திருக்கிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் வசூல் மழையைக் கொட்டின. இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறார்.

விட்டோரியா டிசிகா நடித்த Bread, Love and Dreams திரைப்படம் 1953ல் வெளியானது. மலைபிரதேச சிறுநகருக்கு வருகை தரும் நாற்பது வயதைக் கடந்த காவல்துறை அதிகாரி மார்ஷல் அன்டோனியோவாக டிசிகா நடித்திருக்கிறார்.

ஊரில் அவரை வரவேற்கும் ஆரம்பக் காட்சிகள் அபாரமானவை. அந்த ஊரில் மூன்று பேர் அடுத்தவர்களைக் கண்காணிப்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறார்கள். அதில் ஒருவர் கையில் பைனாக்குலர் உள்ளது. தூரத்தில் என்ன நடக்கிறது எனப் பைனாக்குலர் வழியாகப் பார்த்து உடனுக்குடன் வம்பு பரப்புகிறார். மூவரில் ஒரு பெண்ணும் இருக்கிறார். படம் முழுவதும் அவர்கள் தொடர்ந்து வம்பு பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

அவர்கள் அன்டோனியா ஊருக்குள் நுழைந்தவுடன் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. பெண்பித்தர் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். முதல்காட்சியிலே உள்ளூர் அழகியான பெர்சாக்லீராவைக் கண்டு மார்ஷல் மயங்கி விடுகிறார். அவள் துடுக்கானவள். அழகியான அவளை அடைவதற்கு பலரும் துடிக்கிறார்கள்.

இளம்காவலரான காராபினியர் ஸ்டெல்லூட்டி அவளைக் காதலிக்கிறான். ஆனால் வெளிப்படுத்தத் தயங்குகிறான். மார்ஷல் அவளை ஒரு தலைப்பட்சமாகக் காதலிக்க ஆரம்பிப்பதுடன் வலிந்து உதவிகளும் செய்ய ஆரம்பிக்கிறார்.

இன்னொரு பக்கம் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மகப்பேறு மருத்துவர் அன்னரெல்லாவை காதலிக்கவும் முயற்சிக்கிறார். அவளது கணவன் ரோமில் இருப்பதாகவும் அவனைச் சந்திக்க மாதம் ஒருமுறை பயணம் மேற்கொள்கிறாள் என்பதையும் அறிந்தவுடன் மார்ஷலின் மனம் மாறிவிடுகிறது.

படத்தின் சிறப்பான கதாபாத்திரம் மார்ஷலின் பணிப்பெண் கேரமல்லா. அவருக்குத் தெரியாத ரகசியம் எதுவுமில்லை. அவள் மார்ஷலின் பெண்பித்தை அறிந்து கொண்டு நன்றாகத் தூண்டிவிடுகிறாள்.

உள்ளூர் திருச்சபையின் பாதிரியார் பெர்சாக்லீராவின் பாதுகாவலராக இருக்கிறார். தந்தையைப் போல அவளிடம் அன்பு காட்டுகிறார். தேவாலயத்தில் அவளைக் கண்டிக்கும் விதம். செய்யும் உதவி அவரது கதாபாத்திரத்தை அழகாக விளக்குகிறது.

அவரும் மார்ஷலின் பெண்பித்தை புரிந்து கொண்டு எச்சரிக்கை செய்கிறார்.  நடமாடும் துணி வணிகரிடம் புத்தாடை வாங்கும் போது பெர்சாக்லீரா ஒரு பெண்ணுடன் சண்டை போடவே இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துப் போய் விசாரிக்கிறார்கள். பெர்சாக்லீராவை சிறையில் அடைக்கிறார் மார்ஷல். நள்ளிரவில் அவரைத் தனியே வரவழைத்து தனது கழுதையைக் கவனித்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாள் பெர்சாக்லீரா. அதனையும் மார்ஷல் மேற்கொள்கிறார்

அன்றிரவு அவளது ஏழ்மையைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவி செய்வதற்காக ஐந்தாயிரம் லியர் நோட்டினை அவளது அங்கியில் விட்டுப் போகிறார்

மறுநாள் அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கும் பெர்சாக்லீராவின் அம்மா அது புனித அந்தோனியாரின் கிருபை என ஊரைக் கூட்டிவிடுகிறாள். கடவுளின் அதிசயத்தைக் காண மக்கள் அவர்கள் வீட்டு வாசலில் திரளுகிறார்கள். அந்தப் பணத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். காணிக்கை செலுத்துகிறார்கள். முடிவில் உண்மை அறிந்து பெர்சாக்லீரா கோபம் கொள்கிறாள்.

அதன்பிறகு ஸ்டெல்லூட்டியும் பெர்சாக்லீராவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது, அதே நேரத்தில் நகரில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளும் மார்ஷல் தனது மனதிலுள்ள காதலை அன்னரெல்லாவிடம் வெளிப்படுத்தி அவளைக் கரம் பிடிக்கிறார். இனிமையான, சிறிய காதல்கதை.

இத்தாலிய சிறுநகர வாழ்வின் இயல்பையும் தேவாலய நடைமுறைகளையும் படத்தில் அழகாகச் சித்தரித்துள்ளார்கள். டிசிகா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். பெர்சாக்லீரா நடித்துள்ள ஜினா லோலோபிரிகிடா இத்தாலியின் புகழ்பெற்ற நடிகை. தனித்துவமான அழகு கொண்டவர். இப்படத்தில் துடுக்குதனமான அவர் செய்யும் செயல்கள். கோபத்தில் நடந்து கொள்ளும் முறை. ஸ்டெல்லூட்டியை காதலிக்கும் போது வெளிப்படுத்தும் காதல் உணர்வுகளும் அற்புதமாக உள்ளன. இத்தாலிய திரைப்படங்களின் இசை எப்போதும் இனிமையானது. இதிலும் திருவிழா காட்சிகளில் அபாரமான இசைக்கோர்வைகள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் ஒரு காட்சியில் வெறும் ரொட்டியை சாப்பிடும் ஒருவரிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று மார்ஷல் கேட்கிறார்

ரொட்டியில் கனவைத் தடவி சாப்பிடுகிறேன் என அவர் பதில் தருகிறார். இந்தப் படமும் அப்படியான கனவு தடவப்பட்ட ரொட்டி என்றே சொல்வேன்.

••

0Shares
0