ஹாலிவுட்டில் வங்கிக் கொள்ளை பற்றி நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. அதே கதைக்கருவைக் கொண்டு மாறுபட்ட படத்தை உருவாக்கியுள்ளார் பிரிட்டீஷ் இயக்குர் பாசில் டியர்டன். பிரிட்டிஷ் சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக இன்று கொண்டாடப்படுகிறது.

The League of Gentlemen 1960ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம். ராணுவ அதிகாரியான நார்மன் ஹைட் The Golden Fleece, என்ற புத்தகத்தை ஏழு பேருக்கு ஏழு உறைகளில் போட்டு அனுப்பி வைக்கிறார், கூடவே பாதிக் கிழிக்கபட்ட ஐந்து பவுண்ட் நோட் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு குறிப்பிட்ட முகவரிக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியாகக் குறிப்பும் இணைத்திருக்கிறார்

மாறுபட்ட ஏழு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் நார்மன் அனுப்பி வைத்திருந்த புத்தகத்தைக் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் பண நெருக்கடி மற்றும் கஷ்டமான சூழ்நிலை அவர்களைத் தூண்டுகிறது. புத்தகத்தைப் படிக்கிறார்கள். குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று அவர்கள் நார்மனைச் சந்திக்கிறார்கள். பாதிக் கிழிந்த நோட்டின் மறுபாதி அவரிடம் உள்ளது. அதனை வைத்து சரியான நபர் தான் வந்துள்ளாரா என நார்மன் அறிந்து கொள்கிறார்
அவர்களிடம் The Golden Fleece புத்தகம் எப்படி உள்ளது என நார்மன் விசாரிக்கிறார். பெரிதாக ஒன்றுமில்லை என வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார்கள்.
உங்களை அழைத்த நோக்கம் இந்தப் புத்தகத்தில் உள்ளது போல ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் உதவிட வேண்டும் என்கிறார் நார்மன்.

அவர் எதற்காகத் தங்களைத் தேர்வு செய்தார் என ஏழு பேரும் கேட்கிறார்கள். நீங்கள் ஏழு பேரும் ராணுவத்தில் வேறுவேறு துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். தற்போது கடனாளியாக இருப்பவர்கள்.. ராணுவ பணியில் குறிப்பிட்ட இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்று உங்களுக்குத் தெரியும். ஆயுதப்பயிற்சி அளிக்கபட்டவர்கள் என்பதால் துப்பாக்கிகளை எளிதாகப் பயன்படுத்த முடியும். கூடவே ராணுவ வீரர்கள் என்பதால் சுயஒழுக்கமும், தைரியமும் இருக்கும் என்கிறார்.
உங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டால் என்ன கிடைக்கும் எனக் கேட்கிறார்கள்.
ஒரு லட்சம் பவுண்ட் கிடைக்கும் என்று நார்மன் ஆசைகாட்டுகிறார். அவர்கள் கொள்ளையில் கூட்டுச் சேர்வதாக ஒத்துக் கொள்கிறார்கள்
தினமும் லண்டன் நகர வங்கிக்கு பத்து லட்சம் பவுண்டுகள் பழைய ரூபாய் நோட்டுகளாக ஒரு வேனில் வந்து சேருகின்றன. வங்கியினுள் எடுத்துச் செல்லப்படும் அந்தப் பணத்தைக் கொள்ளையடிப்பதே அவர்களின் திட்டம்
நாடக ஒத்திகை பார்ப்பது போல ஒரு இடத்தில் அவர்கள் சந்திக்கிறார்கள். திட்டமிடுகிறார்கள். பின்பு நார்மன் வீட்டிலே தங்கிக் கொண்டு திட்டத்தினை மேற்கொள்ளத் தயாராகிறார்கள்.
ராணுவத்தினர் என்பதால் அவர்கள் திட்டமிடும் முறை, அதன் துல்லியம். செயல்படுத்தும் விதம் அற்புதமாக உள்ளது.

அவர்கள் ராணுவ சீருடையிலே ராணுவ முகாமிற்குச் சென்று அங்குள்ள ஆயுதங்களைத் திருடி வருகிறார்கள். எந்த நாளில் எப்படிக் கொள்ளையடிப்பது என்பதற்குத் தீவிரமான ஒத்திகை பார்க்கிறார்கள். நார்மன் அவர்களைக் கண்டிப்பாக நடத்துகிறார்.
ஏழு ராணுவத்தினர் ஒன்றிணைந்து ஒரு வங்கிக் கொள்ளையை நிகழ்த்தப்போவது சுவாரஸ்யமளிக்கிறது. கொள்ளையை நிகழ்த்திவிட்டு அதனை எப்படித் திசைதிருப்பப் போகிறார்கள் என்பது புதிதான விஷயம்.
குறித்த நாளில் அவர்கள் கொள்ளையை அரங்கேற்றுகிறார்கள். படத்தின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று. வங்கிக் கொள்ளை படம் எதிலும் இது போன்ற ஒரு முடிவினை நான் கண்டதில்லை.
ஏழு கதாபாத்திரங்களுக்கும் தனியான கடந்தகாலக்கதையும் திறமைகளும் இருக்கின்றன. போருக்குப் பிந்தைய சூழ்நிலையில், ஏழு பேரும் தங்கள் பலவீனங்களுக்குப் பலியானவர்கள் அதனை நார்மன் அறிந்து கொண்டு அவர்களைப் பயன்படுத்துகிறார்
நார்மன் வீட்டில் அவர்கள் படைப்பிரிவு போலவே பிரிக்கபடுகிறார்கள். அதிகாரம் அளிக்கபடுகிறது. பயிற்சி தரப்படுகிறது. அவர்கள் திட்டத்தை நிறைவேற்றும் விதம் சிறப்பானது. நார்மன் எதிர்பாராமல் சந்திக்கும் பழைய நண்பரின் வருகையும் அதனைத் தொடர்ந்த காட்சிகளும் சிறப்பானவை.
அவர்கள் ராணுவ முகாமினை பார்வையிடச் சென்ற போது நடந்து கொள்ளும் முறை வேடிக்கையானது. ராணுவத்திலிருந்து கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டதுடன் அவமானகரமான ஓய்வூதியம் நார்மனுக்கு வழங்கப்பட்டதே கொள்ளைக்கான முக்கியக் காரணம்
படம் முழுவதும் நார்மன் பதற்றமின்றி இயல்பாக, அமைதியாக நடந்து கொள்கிறார். கதையின் முடிவிலும் அவரது இயல்பு மாறுவதில்லை. அவரது திட்டம் துல்லியமானது. நிறைவேற்றும் விதமும் சிறப்பானது. ஆனால் எதிர்பாராத ஒன்று எல்லா குற்றத்திற்கு பின்பும் மறைந்திருப்பதை என்னவென்று சொல்வது.
••
.