தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை

எந்தச் சாவி கதவைத் திறக்கப் பயன்படுகிறதோ அதுவே கதவைப் பூட்டவும் பயன்படுகிறது என்று ஒரு யூதநீதிமொழியிருக்கிறது, நாவல்களுக்குள்ளும் அப்படித்தான்  நடைபெறுகிறது

எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன, நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகன் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான்,  அதனால் நாவலின் முழுமையான தரிசனத்தை அவனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது

ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை, எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள். சந்தேகங்கள் அனுமானங்கள். கேள்விகள். நம்பிக்கைகள். கண்டுபிடிப்புகள் ஆதங்கங்கள் என பல்வேறு தளங்களை வெளிப்படுத்துகிறான், நாவல் ஒரு கூட்டுவடிவம், ஒரு சிம்பொனி இசை போல அதற்குள் பல எழுச்சிகளும் தாழ்நிலைகளும் இருக்கின்றன,

நாவலின் வழியாக எது சார்ந்த கேள்விகள், எது சார்ந்த விவாதம் பேசப்படுகிறது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் மாறுபடுகிறது,

நல்ல நாவல்கள் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்து காட்டுவதோடு ஒதுங்கிக் கொள்வதில்லை, மாறாக வாழ்க்கையின் சுகமோ சந்தோஷமோ எதனால் ஏற்படுகிறது, அதன் விளைவுகள்  அகபுற உலகை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் குறித்து நுட்பமாக விவரிக்கின்றன, அதற்கான சில காரணிகளையும் அடையாளம் காட்டுவதோடு, கதாபாத்திரங்கள் இயங்கும் சமூக நிகழ்வுகளின் மீதான தனது  விமர்சனத்தை விவாத்தையும் முன்வைக்கின்றன,

எழுத்தாளன் நாவலின் ஊடாக சில கனவுகளை உருவாக்குகிறான், அது வாழ்க்கை குறித்து நமக்குள் உள்ள பிம்பங்களை விலக்கிய உன்னதமான கனவு, அந்தக் கனவில் வாழ்வதற்காகவே நாவலை விரும்பி வாசிக்கிறோம் என்று கூட சொல்லலாம்

டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் இதை தான் செய்திருக்கிறார்கள், சாக்லெட்டை நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய விட்டு ருசிப்பதை போல இவர்களின் நாவலைச் சுவைத்து வாசிக்க வேண்டும், அதற்காகவே ஒரு நாவலை ஐந்தாறு முறை வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் துவக்கத்தில் ஒரு கனவு விவரிக்கப்படுகிறது, நாவலின் நாயகன் ரஸ்லோவ்நிகோவ் காணும் கனவு அது, அந்தக்கனவில் அவன் ஏழுவயதிற்கு உருமாறியிருக்கிறான், அவனது அப்பா அவனை விடுமுறைநாளொன்றின் மதிய நேரம் புறநகரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு அழைத்துப் போகிறார்,

அந்தக் காட்சி மிகத் துல்லியமாக அவனுக்குத் தெரிகிறது,  தொலைவில் நகரம் வீழ்ந்துகிடக்கிறது, இடையில் மரங்கள் எதுவுமில்லை, பட்டுபோய்நிற்கின்ற ஒரேயொரு மரம் தொலைவில் தென்படுகிறது? அதைக் காணும்போது அச்சம் தருவதாக இருந்த்து

அந்த இடத்தை கடந்து அவனும் அப்பாவும் போகிறார்கள், அங்கே ஒரு இடத்தில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது, குடிகார முகங்களைக் காண்பது பயமுறுத்துவதாக இருக்கிறது, அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பதுங்கிக் கொள்கிறான்

அங்கே ஏதோவொரு சிறப்புவிழா கொண்டாட்டம் நடப்பது போலிருக்கிறது ஊரே கூடி அலங்காரமான உடை அணிந்து கொண்டு ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள், அந்த இடத்தில் ஒரு குதிரைவண்டி நின்றிருந்த்து, அது வெறும் சரக்கு வண்டியில்லை, பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரியவண்டி, ஆனால்  காலியாக இருந்த்து, அந்த வண்டியில் ஒரு கிழட்டுகுதிரை பூட்டப்பட்டிருந்த்து,

குதிரை வண்டிக்காரன் குடிவெறியில் உற்சாகம் மிகுதியாகி வண்டியில் எல்லோரும் ஏறிக் கொள்ளுங்கள் என்று கத்திக் கொண்டேயிருக்கிறான், போதுமான அளவிற்கும் மேலாக ஆட்கள் வண்டியில் ஏறி நிரம்பிவிட்டார்கள், குதிரையால் வண்டியை இழுக்க முடியவில்லை,

வண்டிக்காரன் சவுக்கால் குதிரையை அடிக்கிறான், மக்கள் குதிரையின் மூக்கில் அடி. சவுக்கால் முடிந்தமட்டும் அடி, வயிற்றில் உதை என்று கூச்சலிடுகிறார்கள், அவன் வண்டியை இழுக்க சொல்லி குதிரையை சாட்டையால் மாறி மாறி அடிக்கிறான், தன்னால் இழுக்க முடியாத போது குதிரை திணறுகிறது,

வேடிக்கை பார்க்கின்ற கூட்டம்  குதிரையின் வலியை கண்டுகொள்ளவேயில்லை, குதிரை மாறிமாறி அடித்து இம்சிக்கப்படுகிறது, கூட்ட்ம் அதை ஆரவாரமாக ரசிக்கிறது, வண்டிக்காரன் அது தன்னுடைய குதிரை என்பதால் அதை அடிப்பதற்கும் அழிப்பதற்கும் உரிமையிருக்கிறது என்று கூச்சலிடுகிறான்,

குதிரையின் கண்களில் கண்ணீர் கசிகிறது,  பாரம் தாங்கமுடியாமல் கால் தாங்குகிறது, தனது சொல்லை மதிக்காத குதிரையை கோபத்தில் கொன்றுவிடப்போவதாக கத்துகிறான், அதை கொல்  கொல் என்று மக்களே தூண்டிவிடுகிறார்கள்,  கோடாரியை  பயன்படுத்தி வெட்டி போடு என்கிறது ஒரு குரல்

குதிரை இம்சிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த சிறுவன் பயந்து போய்விடுகிறான், அவன் குதிரையின் அருகாமைக்கு போகிறான், அடிபட்ட குதிரையின் மூச்சுகாற்று சிறுவன் கைகளில்படுகிறது, சிறுவன் குதிரையின் வலி நிரம்பிய கண்களை காண்கிறான், அதன் உடல் தளர்ந்து நடுங்குவதை உணர்கிறான்,

முடிவில் அடிதாங்க முடியாமல் குதிரையின் வாயில் ரத்தம் வழிகிறது மூச்சடங்கி கிழே விழுவது போலா தள்ளாடுகிறது, அக்குதிரை சாக இருப்பதை அந்தசிறுவன் உணர்கிறான்

வண்டிக்காரன் தனது மகிழ்ச்சிக்காக குதிரையை தொடர்ந்து இம்சிப்பதை சிறுவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை

கூட்டத்தில் இருந்த அப்பா அவனை இழுத்துக் கொண்டு புறப்படச்சொல்கிறார்

அப்பா , வயதான குதிரையை ஏன் இப்படி மாறிமாறி அடிக்கிறார்கள்  என்று  பயமும் நடுக்கமுமாக  அந்தச் சிறுவன் கேட்கிறான்

அவர்கள் குடித்திருக்கிறார்கள் அது நமக்கு சம்பந்தமில்லாத வேலை வா போகலாம் என்று இழுத்துக் கொண்டு நடக்கிறார்

அவனுக்கு குதிரை கொல்லப்பட போவது நன்றாகவே தெரிகிறது,

சட்டென விழிப்பு வந்து ரஸ்லோவ்நிகோவ் கண்விழித்து கொள்கிறான், எவ்வளவு கோரமான கனவு, என்று அந்த பதைபதைப்பிலிருந்து விடுபட முடியாமலே இருக்கிறான்

கடவுளே நல்ல வேளை இது வெறும் கனவு தான் என்று மனதை சாந்தம் செய்து கொள்கிறான்,,

பிறகு எனக்கு ஏன் இந்தக் கனவு வந்தது. ஒருவேளை காய்ச்ச்ல் கண்டிருக்கிறதா என்று யோசிக்கிறான்,

இந்த துர்சொப்பனம் தன் வருங்காலத்தின் அடையாளம் என்று அவன் வெளிப்டையாகச் சொல்லிக் கொள்ளவில்லையே தவிர உள்ளுணர்ந்து கொண்டுதானிருக்கிறான்

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் கனவு வெறும் துர்சொப்பனமல்ல, அது தான் நாவலுக்கான திறவுகோல்,  குதிரையின் கொலை, சமூகம் தனது கருணையால் வாழ்கின்ற எதையும் அடித்து கொல்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறது, அதற்கு எந்த சிறப்புக் காரணமும் தேவையில்லை, உரிமையாளன் விரும்பினால் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு அவனுக்குப் பூரண உரிமையிருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகிறது

அது போலவே வாழ்நாள் முழுவதும் உழைத்த குதிரை அதன் எஜமானாலே அடித்துக் கொல்லப்படும் போது அது  தன்னை ஒப்புக் கொடுத்த்தை போல நடந்து கொள்வதையும் சுட்டிக்காட்டுகிறார்

மூன்றாவது சமூகம் வன்முறையை ஆதரிக்கிறது, உருவாக்குகிறது, கொல் கொல் என்று தூண்டுகிறது, வன்முறையை கண்டு ஆரவாரம் செய்கிறது, ஆயுதம் தருகிறது, யாரோ வலியால் துடிப்பதை கண்டு பரிகாசம் செய்கிறது, இந்த சமூகத்தையா நாம் மேலானது என்று கருதுகிறோம் என்றும் கோபம் கொள்கிறார்

நான்காவது குடிவெறியில் மனிதன் தனது இயல்பை இழந்துவிடுவதோடு அவனுக்கு சேவை செய்பவர்களை கூட காரணமில்லாமல் அவமதிக்க தயங்குவதில்லை என்பதையும் எடுத்துச் சொல்கிறது

நாவலின் நாயகன் ரஸ்லோநிகோவ் பல நேரங்களில் அந்தக் குதிரையை போலவே இருக்கிறான், அவனை புறவாழ்க்கையின் நெருக்கடி தொண்டையை இறுக்கும் போது அவன் செய்வதறியாமல் உழலுகிறான், அப்போது அவனுக்கு தீர்வாக மிஞ்சுவது ஒரு கொலை மட்டுமே,

இது போலவே வண்டிக்காரன் போலவே சோபியாவின் அப்பா மர்மலதேவ் இருக்கிறான். அவன் தன்னை பிரியமாக நடத்தும் குடும்பத்தை அடித்து நொறுக்கி சொந்த வீட்டிலே திருடி இம்சை செய்கிறான், அவனுக்கு தன்னை நேசிப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவனுக்குள் குதிரைவண்டிக்காரனின் மனநிலையே இருக்கிறது

நாவலில் இது வெறும்கனவில்லை, கனவின் வழியாக தஸ்தாயெவ்ஸ்கி அழிக்கமுடியாத நினைவு ஒன்றை மீள்உருவாக்க்ம் செய்து காட்டுகிறார்,

நிராகரிப்பும் கைவிடப்படுதலுமே மனிதனின் ஆறாத துயரங்கள் என்று அடையாளப்படுத்துகிறார்,

வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள், இவர்களை வைத்துக் கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸகி ஆதங்கபடுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது

மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டுகொள்வதேயில்லை, அதை உணரும் தருணஙகளில் கூட பெருமிதமே கொள்கிறான், குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸகி சுட்டிக்காட்டுகிறார்

சவுக்கடிபட்டு ரத்தக்காயங்களுடன். நடுங்கும் கால்களுடன். கண்ணீர்கசிந்த அந்த குதிரையின் சித்திரம் அழியாத உருவமாக நாவலில் இருந்து வாசகனின் மனதிற்குள் பதிவாகிறது, அது தான் கலையின் வெற்றி,

இந்தக் குதிரை நாவலின் வரும் சித்திரம் மட்டுமில்லை, இது எல்லா காலத்திலும் இருந்து கொண்டேயிருக்கின்ற ஒன்று,

குதிரையாக  சில நேரத்தில் நாம் இருக்கிறோம், சில நேரம் நாம் குதிரைவண்டிக்காரன் ஆகிவிடுகிறோம்

உலகெங்கும் பெண்களும் அடித்தட்டுமக்களும். வாழ்விடம் இழந்தவர்களும், குழந்தைகளும் இதே குதிரைகளாக அடிவாங்கி கொண்டேயிருக்கிறார்கள்

இன்றும் அதே கேளிக்கை நிரம்பிய கூட்டம் வன்முறையை ரசித்தபடியே இருக்கிறது,

துர்சொப்பனத்தின் நிகழ்களமாகியிருக்கிறது நம்காலம்

நல்லவேளை இது வெறும் துர்கனவு என்று சமாதானம் செய்து கொள்ள முடியாதபடி இன்றைய உலகில் வன்முறைகளும் அவமதிப்புகளும் பெருகிவிட்டன

அதனாலே தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் இன்றும் வாசிக்கவும் விவாதிக்கவும் படவேண்டிய முக்கியமான புத்தகமாக இருக்கிறது

••

0Shares
0