மீன்களோடு பேசத்தெரிந்தவன்

கனவுகளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அதை ஒரு கதையாக்கிவிடுகிறேன், என்று அரிசோனா ட்ரீம்ஸ் படத்தில் எனக்குப் பிடித்தமான ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.

1993ல் வந்த இந்த ஹாலிவுட் படத்தை இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், முக்கியமான காரணம், இதன் கதை சொல்லும் முறை மற்றும் வசனங்கள், பெரும்பான்மையான உரையாடல்கள் மிகுந்த கவித்துவமானவை, எமிர் கஸ்தூரிகாவின் படமது ( Emir Kusturica) முக்கிய வேஷத்தில் ஜானி டீப் மற்றும் ஜெரி லூயிஸ் நடித்திருக்கிறார்கள்,

அமெரிக்க இளைஞர் சமூகத்தை அதிகம் பாதித்த படம் என்று ஒரு நண்பர் சிபாரிசு செய்து பார்க்க சொல்லியிருந்தார்,

முதல்முறை பார்த்தபோது ஐயனெஸ்கோவின் ரைனோசரஸ் போலவோ. எட்வர்ட் ஆல்பியின் ஜு ஸ்டோரி போலவோ அபத்தநாடக வகையை சேர்ந்த படம் போலிருக்கிறதே என்று தோன்றியது, குறிப்பாக கனவுத்தன்மையும் விசித்திரமும் நடப்புலகின் காட்சிகளுடன் கூடிச் செல்லும் கதையமைப்பும் அதன் ஊடாக வெளிப்படும் முடிவில்லாத பகடியும் இது வேறு வகையான படம் என்பதை புரிய வைத்தது

இந்தப் படம் பார்த்த பாரீஸ் நகரத்து இளைஞர்கள் பலர் வீட்டை விட்டு வெளியேறி  கனவுவெளியைத் தேடி போய்விட்டார்கள் என்று ஒரு விமர்சனத்தில் படித்தேன், அது உண்மையாக இருக்ககூடும் என்று படம் பார்த்த போது தோன்றியது

படத்தில் மையக்கதை என்று எதுவும் இல்லை,  கனவுகள் தான் படத்தின் குவிமையம், கனவிற்கும் நடப்புலகிற்குமான ஊசலாட்டம் ஒரு இளைஞனை எப்படி உருமாற்றுகிறது, அவன் எந்தவிதங்களில் ஒட்டியும் விலகியும் தட்டழிகிறான் என்பதையே படம் விவரிக்கிறது, இப்படிச் சொல்வது கூட அதன் கதையைப் பற்றி அரைகுறை விளக்கமே, உண்மையில் இது கனவை நனவாக்க விரும்பும் , அதேநேரம் வாழ்வின் புதிர்தன்மையைக் கண்டு திகைத்துப் போன வேறுவேறு கதாபாத்திரங்களின் ஒன்றுகூடுதலையே விளக்குகிறது,

ஒருவர் கனவை மற்றவர் நனவாக்க முயற்சிக்கிறார், அதில் தோல்வியடைகிறார்கள், ஆனால் கனவை விடவும் அதை நனவாக்க முயற்சிக்கும் செயலில் அதீத கொண்டாட்ட மனநிலையும் உறவின் நெருக்கமும் உருவாகிவிடுவதைப் புரிந்து கொள்கிறார்கள், இந்தக் கதாபாத்திரங்களின் முக்கியப்பிரச்சனை, தங்களது சுய அடையாளம் எது என்பதே, அத்துடன் தங்களின் இயல்பான அலுப்பூட்டும் வாழ்க்கையை  வாழ அவர்கள் விரும்பவில்லை,  அதனால் அவர்களின்உ தனிமையும் குழப்பமும் நிறைய கனவுகளை உருவாக்குகிறது

படத்தின் துவக்கத்தில் ஆக்ஸிலுக்கு ஒரு கனவு வருகிறது, துருவப்பிரதேசம் ஒன்றில் வாழும் எஸ்கிமோ ஒருவன் அரிய மீன் ஒன்றினை பிடித்து தனது குடும்பத்திற்கு கொண்டு வருகிறான், அதற்குள் பனிப்புயல் துவங்கிவிடுகிறது, அதற்குள் சிக்கி கொள்கிறான், அந்தக் கனவு ஆக்ஸிலுக்கு தொடர்ந்து வரும் ஒரு குறியீடு, அவன் இயற்கையின் எல்லையில்லாத வெளியில் அரிய ஒன்றினைத் தேடிச்செல்லும் ஒருவனாக இருக்கிறான், அது நிறைவேறும் முன்பு எதிர்பாராத பிரச்சனையில் சிக்கி கொண்டு விடுகிறான், இது தான் ஆக்ஸிலின் மனநிலை,

நீயூயார்க்கில் வசிக்கும் ஆக்ஸிலின் குரல்வழியாக படம் ஆரம்பமாகிறது,

ஒரு மனிதனின் ஆன்மாவை அறிந்து கொள்ள விரும்பினால் அவன் கனவுகளை பற்றி அறிந்து கொள் என்று தனது தந்தை சொல்வார் என்று ஆக்ஸில் குறிப்பிடுகிறான்

தனது வேலை கடலில் உள்ள மீன்களை எண்ணுவதில்லை, அவற்றின் ஆன்மாவை பார்வையிடுவதன் வழியே அந்த மீன்களை என் கனவிற்குள் கொண்டுவருவதே எனது பணி , பலரும் மீன்களை முட்டாள்கள் என எண்ணுகிறார்கள், அது தவறு, மீன்கள் யாவும் அறிந்தவை, அவை சிறிய நதியில் பிறந்து பெரிய கடலை அடைகின்றன, அதற்கு உலகின் இயக்கம் நன்றாகவே தெரியும்,

மீன்களின் கண்களை சில நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன், அதில் எனது முழுவாழ்க்கையை என்னால் காண இயலும், அதற்காகவே அவற்றை நேசிக்கிறேன், ஒருவேளை மீன்கள் என்னோடு பேச விரும்பினால் ஆர்வத்துடன் அதை கேட்டுக் கொண்டிருப்பேன், என்கிறான் ஆக்ஸில் இந்த விவரிப்பின் வழியாகவே அவன் மனது நனவிற்கும் கனவிற்கும் இடையில் ஊசலாடிக்  கொண்டிருப்பது தெளிவாக விவரிக்கபடுகிறது,

ஆக்ஸில் தனது மாமாவான லியோவின் திருமணத்திற்கான பால் என்ற நண்பனோடு அரிசோனா போகிறான், மாமா வயதானவர், ஆனால் அவரை விட பலவயதுஇளமையான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகிறார், மாப்பிள்ளை தோழனாகும் ஆக்ஸிலின் வழியே அந்தத் திருமண நிகழ்வில் அபத்தமும் பகடியுமான பல வேடிக்கைகள் நடைபெறுகின்றன,

மாமா தனது கடிலாக் கார் விற்பனையகத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஆக்ஸிலை அங்கேயே தங்கும்படியாகச் செய்கிறார்

ஒருநாள் கார்விற்பனையகத்திற்கு எலினா என்ற முதியவளும் அவளது வளர்ப்பு மகள் கிரேசும் வருகிறார்கள், எலினாவிற்குத் தான் வானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்ற கனவு நெடுநாட்களாக இருந்துவருகிறது, அதற்கு உதவி செய்வதாகச் சொல்கிறான் ஆக்ஸில், இதற்காக பறக்கும் ரெக்கை ஒன்றை வடிவமைக்க முயற்சிக்கிறான், ஒரு நாள் அதைக் கட்டிக் கொண்டு பறக்க நினைத்து அவர்கள் தோல்வியடைகிறார்கள், பின்பு ஒருநாள் அவர்களால் வானில் பறந்து செல்ல முடிகிறது

கிரேசிற்கு எப்படியாவது தற்கொலை செய்து கொண்டுவிட்டு மறுபிறவியில் ஒரு ஆமையாகப் பிறக்க வேண்டும் என்ற எண்ணம், இதற்காக அவள் பலமுறை தற்கொலை செய்து கொள்ளப் பார்த்து முடியாமல் போகவே, ஏமாற்றம் அடைகிறாள், அவளுக்குத் தனது வளர்ப்புதாயின் மீது பொறாமை, ஆகவே அவளோடு ஆக்ஸில் பழகுவதைக் கெடுப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கிறாள், இதுவும் மிகுந்த நகைச்சுவையோடு படமாக்கப்பட்டிருக்கிறது

படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரம் போலவே ஹிட்ச்காக்கின் NORTH BY NORTH WEST  படமும் அதில் வரும் கேரி கிராண்டின் கதாபாத்திரமும் பேசப்படுகிறது, காரணம் ஆக்ஸிலின் கனவுகளில் ஒன்று அவன் கதாபாத்திரமாகிவிட வேண்டும் என்பது, அதுவும்  டீ நீரோ மற்றும் கேரி கிராண்டின் கதாபாத்திரம் தானே என்று நம்புகிறான், சினிமா வழியே தான் அவனுக்குள் கனவுகள் உருவாகின்றன, ஆகவே அவன் திரையில் ஒடும் பிம்பத்தோடு தானும் ஒன்று கலந்துவிட முயற்சிக்கிறான், கதாபாத்திரம் பேசும்வசனங்களைத் தானே பேசிக்காட்டுகிறான்,

இதனிடையில் மாமா லியோவிற்கு திருமணவாழ்க்கை பற்றிய உன்னதக் கனவுகள் கலைந்து போய்விடுகின்றன, பாலின்பம் அவர் நினைத்தது போல இனிப்பாக இல்லை அந்தக் கசப்புணர்வில் மாமா மாரடைப்பிற்கு உள்ளாகிறார் இதற்கிடையில் எலினாவின் பிறந்த நாள் வருகிறது, அன்று தாங்கள் எப்படி இறந்து போவதுஎன்பதைப் பற்றி அவர்கள் உற்சாகமாகப் பேசிக் கொள்கிறார்கள், புதுப்புது யோசனைகள் கனவுகள் உருவாகின்றன, திடீரென கிரேஸ் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள், மோசமான வானிலையில் சிக்கி எலினாவின் விமானம் தடைபடுகிறது, முடிவில் ஒரு பழைய கார் ஒன்றில்  பூனை ஒன்றோடு சேர்த்து படுத்துகிடக்கிறான் ஆக்ஸில்,

அவன் கனவில் லியோ மாமாவும் அவனும் எஸ்கிமோ போல உடையணிந்து பனியில் அரியதான தட்டைமீன் ஒன்றினைப் பிடிக்கிறார்கள் , அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த மீன் அவர்கள் கையிலிருந்து தப்பிப் பறக்கிறது, தொலைவில் சூரியன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது,

கனவுநிலையின் வேறுவேறுதளங்களை இவ்வளவு உணர்ச்சிவசமாகச் சொன்ன வேறு படம் எதையும் நான் கண்டதேயில்லை, இந்தப் படம் வழக்கமான கதை ரசிகர்களுக்கானதில்லை, இது ஒரு தனித்துவமான ருசி, இதன் ஊடாக ஆழ்ந்த தத்துவமும் மெய்தேடலும் உன்னதமான கவித்துவமும் புதைத்திருக்கின்றன, இன்றைய இளைஞர்களின் உலகை உருவாக்கும் காரணிகளும் மனதின் விசித்திரங்களும் அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது, பெர்லின் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் சிறந்த படமாக விருது பெற்றிருக்கிறது

எமிர் கஸ்தூரிகா செர்பிய இயக்குனர், இரண்டு முறை சிறந்த இயக்குனர் விருதை கான்ஸ் திரைப்படவிழாவில் பெற்றிருக்கிறார் Black Cat, White Cat Life is a Miracle. Time of the Gypsies. Do You Remember Dolly Bell போன்றவை இவரது முக்கியமான படங்கள்,

ஜானி டீப்பின் சிறந்த நடிப்பும் டேவிட் அட்கின்ஸின் திரைக்கதையும் கோரன் பிரிகோவிச்சின் இசையும் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகும்,

படத்தில் ஆக்ஸில் பேசும் சில முக்கிய வசனங்கள்

••

முப்பத்தைந்து வயதிற்குள்  நான் எப்படிச் சாகமுடியும், உண்மையில் நான் எப்படி சாக ஆசைப்படுகிறேன் தெரியுமா, ஒரு பாத்டப் நிறைய குளிர்ச்சியான வோட்காவை நிரப்பி வைத்து அதற்குள் இறங்கிவிட வேண்டும், பக்கத்திலே ஒரு டிவியில் நார்த் பை நார்த் வெஸ்ட் படம் ஒடிக் கொண்டிருக்க வேண்டும், கேரி கிராண்டை விமானம் துரத்தும் காட்சியின் போது அப்படியே டிவியை பிடுங்கி தண்ணீருக்குள் மின்சாரதை பாய்ச்சி அதில் துடிதுடித்துச் சாகவே ஆசைப்படுகிறேன்

••

ஆப்பிளுக்கு சைக்கிளுக்கு என்ன வேறுபாடு

சைக்கிளைக் கடித்து பாருங்கள், ஆப்பிளை ஒட்டிப்பாருங்க்ள் அப்போது தானே தெரிந்துவிடும்

••

காதல் ஒரு யானையைப் போல பலமாக மோதி என்னை கனவின் பெருங்காட்டிற்குள் தூக்கி எறிந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை

• •

வரலாறு என்பது கனவுகளால் உருவானது, அதை உருவாக்க எந்த இலக்கணமும், புத்தகமும் உதவப்போவதில்லை

••

அவனைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, அமெரிக்காவில் இருந்து கொண்டு என்றாவது, ஏதாவது விந்தை நடக்கும் என்று நம்புகிறான் பாவம்

••

அப்பா இறந்து போனால் அத்தோடு பால்யத்தின் இனிமை முடிந்து விடும் என்பது உண்மை தான்

••

எஸ்கிமோக்கள் இறந்த பிறகு தாங்கள் இயற்கையோடு கலந்து வேறு ஒரு பொருளாகிவிடுவதாக நம்புகிறார்கள், அதனால் அவர்களுக்கு இறப்பு என்பது முடிவின்மையில் கலந்துவிடும் ஒரு புள்ளி மட்டுமே

••

வாழ்க்கை மிக அழகானது,

அதை நீ சொல்வது தான் மிக அழகாக இருக்கிறது

••

கனவுகளைத் தேடி திரியாத வரை வாழ்க்கைக்கு அர்த்தமேயிருப்பதில்லை

••

எல்தொபோ (ElTopo) போன்ற சர்ரியலிசப்படங்களில் காணப்படும் அதே கனவுத்தன்மையும் கவித்துவமும் கொண்ட ஆனால் அவற்றை விட கூடுதலாக கேலியும் விமர்சனமும் கொண்ட படம் என்பதே அரிசோனா ட்ரீம்ஸின் தனிச்சிறப்பு

••

0Shares
0