கதைருசி

நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலை காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத்  தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது,

அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் அது போன்ற ஒரு தருணம் வருகிறது, அத்தருணம் கதையின் அன்றாடத்தன்மையில் இருந்து மேலெழும்பி ஜிவ்வெனப் பறக்க ஆரம்பிக்கிறது, வாசகன் அதன் வழியே  வாழ்க்கை குறித்த ஒரு தரிசனத்தை அடைகிறான், அதனால் அக்கதை வாசக மனதில் என்றென்றும்  நல்ல சிறுகதையாக ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது,

••

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்?எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ?

(அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் இருந்து )

காந்தி சிறுகதையைப் படிக்க வேண்டும் என்றால் அழியாச்சுடர்கள் இணையதளத்திற்குச் செல்லுங்கள்

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது.

அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

https://azhiyasudargal.blogspot.com/

**

0Shares
0