பறவைக் கோணம்

உயிர்மை இதழில் பறவைக்கோணம் என்ற புதிய பத்தி ஒன்றினைத் துவங்கியிருக்கிறேன், அதில் வெளியான முதற்கட்டுரையிது

••

பகலின் உன்னதப்பாடல்

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பாமா விஜயம் படத்திலுள்ள ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது, பி சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள்,  திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது, அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது,

சௌகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா ஆகிய மூவரும் கதையின் மூன்று முக்கிய பாத்திரங்கள், மூவருமே இல்லதரசிகள், அவர்களது அன்றாட வேலைகளையே பாடல் காட்சிப்படுத்தியிருக்கிறது, அது தான் இப்பாடலின் தனித்துவம்

சினிமாவில் பாடல்கள் எப்போதும் பெரிதும் மிகைப்படுத்த ஒன்றாகவே இருக்கிறது, கனவுகாட்சி என்று அயல்நாட்டின் வணிக வீதிகளிலோ. பனிமலையிலோ ஒடியாடிப் பாடுவார்கள்  அல்லது ஊட்டி கொடைக்கானலின் புல்வெளிகளில் உருண்டு திரிந்து மரங்களை சுற்றி பாடுவார்கள், அதுவுமில்லை என்றால் ஒரு பிரம்மாண்டமான செட்டில் கைகால்களை இழுத்து வெட்டிவெட்டி ஆடிப்பாடுவார்கள், அது போன்ற எந்த மிகையுமற்று அன்றாட காரியங்களின் அழகியலைக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதற்காகவே இப் பாடல் முக்கியமானது எனக் கருதுகிறேன்,

கிணற்றடியில் தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவது. துணிதுவைப்பது, குளிப்பது, அம்மி அரைப்பது, உரலில் இடிப்பது, விளக்கேற்றுவது, ஒருவரையொருவர் கேலி செய்து தண்ணீரை வாறி அடித்து குளிப்பது, தலைவாறிவிடுவது , காய்கறிகளை நறுக்குவது, சமைப்பது, சாப்பாடு பறிமாறுவது,  பல்லாங்குழி ஆடுவது, தயிர் கடைவது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது, குழந்தைகளைத் தூங்க வைத்துத் தானும் அருகில் படுத்துக் கொள்வது என்று வீட்டுக்குள்ளாகவே நாளைக் கழிக்கும் பெண்களின் அன்றாட உலகை முழுமையாக்க் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்பாடல்,

அந்த மூன்று பெண்களுக்குள் உள்ள அந்நியோன்யமும். பரஸ்பர கேலி கிண்டல்களும்,. கொஞ்சல்களும். ஒருவர் மற்றவர் மீது காட்டும் அக்கறையும்  அபாரமான அழகாகயிருக்கிறது,

இதைப் பகலின் உன்னதப்பாடல் என்றே சொல்வேன், கிணற்றடியில் பாடல் துவங்குகிறது, கிணற்றடி கொண்ட வீடுகள் இப்போது இல்லை, ஆகவே கிணறு என்பது நம் நினைவில் வாழும் ஒன்று, அந்த வீட்டின் பின்புறம் வாழைமரங்களும் துணிதுவைக்கும் கல்லும் காணப்படுகிறது, காரை உதிர்ந்த சுவரும் தென்படுகிறது, கிணற்றில் வாளியை விட்டு தண்ணீர் இறைக்கிறாள் மூத்த மருமகள், அடுத்தவள் கையில் பெரிய டிபன் கேரியரையும் ஒரு தூக்குவாளியையும் எடுத்துக் கொண்டு ஒயிலாக நடந்துவருகிறாள், காஞ்சனா இந்தக் காட்சியில் நடந்து வரும் துள்ளல்நடை தனித்த வசீகரமானது, ஒருத்தி மற்றவள் மீது தண்ணீர் ஊற்றி குளிக்கச் செய்கிறாள், அவர்கள் பரஸ்பரம் வேடிக்கை செய்து கொள்கிறார்கள், அதைப் படமாக்கியுள்ள விதத்தில் அவர்களின் வயது கரைந்து போய் மூன்று குறும்புக்காரச் சிறுமிகள் ஒன்றாக விளையாடுவது போல அத்தனை ஆனந்தமாக உள்ளது,

மூவரும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மூவருக்கும் பகல்முழுவதும் வேலைகள் இருந்து கொண்டேயிருக்கிறது, அத்தனை வேலைகளையும் அலுக்காமல் செய்தபடியே அதைத் தாண்டி அன்றாட வாழ்வின் சங்கீத்தை கேட்டு தன்னை மறந்து ஆடுபவர்களை போல வீட்டிற்குள்ளாக ஆடிப்பாடுகிறார்கள், அதில் ஒரு மருமகள்  வீட்டின் ஹாலில் காலைச் சுழற்றி சர்வ சுதந்திரமாக ஆடிப்பாடுகிறாள், இந்த உலகில் அவர்கள் மூவர் மட்டுமே  இருக்கிறார்கள் என்பது போன்ற களிப்பு அவர்களிடமிருக்கிறது

பாடலைத் தனியே கேட்டுபாருங்கள், உங்களால் ஒரு போதும் இது பின்கட்டு உலகத்தின் காட்சிகளால் நிரப்பபட்டிருக்கும் என்று கற்பனை செய்யவே  முடியாது, அது தான் இயக்குனரின் தனித்துவம், அவ்வகையில் கேபி பாடல்களை படமாக்குவதில் விற்பன்னர்

பாடலின் வரிகள் எளிமையாக அதே நேரம் ஒரு செவ்வியல் தன்மையில் இருக்கிறது,

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி

என்ற வரிகளில் ஒரு கற்பனை விளையாட்டுத் துவங்குகிறது, பொய்குற்றம் சொல்கிறாள் ஒருத்தி, மற்றவளோ நான் அதை பார்க்கவேயில்லை என்று மறுக்கிறாள், அடுத்தவள் நான் அதைச் சூடிக் கொள்ளவில்லை என்று பொய் கோபம் கொள்கிறாள், இந்த வேடிக்கை நாடகம் பாடலின் ஊடாக அந்த பெண்களின் உள்ளார்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது,

ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால்முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

என்று வரிகளில் அந்தப் பெண்கள் தங்களின் அந்தரங்க இன்பங்களை நினைவு கொண்டவர்களை போல ஒருங்கிணைந்து சந்தோஷத்துடன் வெட்கப்படுகிறார்கள், தனிமையும் அகசந்தோஷமும் ஒன்று சேர்வது தான் இந்த பாடலின் ஆதார மையம்,  வீட்டுப் பணிகளுக்குள் உள்ள எளிய அழகியல் எவ்வளவு தனித்துவமானது என்பதையே பாடல் சுட்டிக்காட்டுகிறது,

ஆண்கள் இருக்கின்ற நேரங்களில் வீட்டு பெண்கள் இப்படியான சுதந்திரத்தை வெளிப்படுத்துவதில்லை,ஒருவேளை தனக்குப் பிடித்தமான பாடலை முணுமுணுத்தால்கூட கோப்படும் ஆண்களே அதிகமிருக்கிறார்கள், உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது, விஜயன் வீட்டை விட்டு வெளியேறி செல்லும் வரை அவரது மைத்துனி வெளியே காத்துக் கொண்டேயிருப்பாள், அவர் வெளியேறி போனதும் அக்காவீட்டிற்குள் புகுந்து ஆசை தீரச் சாப்பிட்டு வேடிக்கை செய்வாள், அக் காட்சியில் அஸ்வினியின் முகத்தில் ஒரு தனியான சந்தோஷம் பீறிடும்,

பொதுவாக ஆண்கள் வீட்டிலிருந்து வெளியேறிப்போன பிறகே பெண்களின் அக சந்தோஷம் துவங்குகிறது, அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது, எல்லா காலத்திலும் யாவர் வீட்டிலும் இது தான் உண்மை போலும்,

பாமா விஜயம் பாடலின் முடிவில் மூன்று கணவர்களும் வீடு திரும்புகிறார்கள், அவர்கள் மனைவியின் பாடலைக் கேட்கிறார்கள், வியப்போடு பார்க்கவும் செய்கிறார்கள், கதையின் படி மூவருமே மனைவிக்கு அடங்கியவர்கள் என்பதைச் சொல்வதை போல அவர்கள் ஒதுங்கி நிற்கும் செய்கைகள் இருக்கிறது

இந்த மூன்று பெண்களும் மூன்று விதமான கடந்தகாலத்தையும் மனவிருப்பத்தையும் கொண்டவர்கள், ஆனால் ஒரே கூரையின் கிழே வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் உடைகள், முகபாவம் மற்றும் நடை வேறுபடுத்திக் காட்டுகிறது, குறிப்பாக காஞ்சனாவின் உடல்மொழியும் சௌகார் ஜானகியின் உடல்மொழியும் ஒன்றுக்கு ஒன்று நேர் எதிராக இருக்கின்றன, ஆனால் ஒருவருக்கொருவர் வாஞ்சையோடு இருக்கிறார்கள், ஆசையோடு சௌகார் அவளை குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்சுகிறாள்,

இப்படி ஒரு பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்ற யோசனை எப்படி உருவானது,  அன்றாடப் பணிகளை ஒரு பாடலாக மாற்றிய இந்த முறையை ஏன் இன்றைய சினிமா கைவிட்டது,

பாலச்சந்தர் தனது படங்களில் பாடல்களை படமாக்கியுள்ள விதம் ஒவ்வொன்றும் தனித்து பேசப்பட வேண்டியது அவசியமானது

அலுவலகத்திற்குச் செல்லும் பெண்ணின் பயணத்தின் ஊடாக ஒரு பாடல், வீட்டில் செய்வதைப் பற்றி ஒரு பாடல். சினிமா படமாக்கபடுவதைப் பற்றி ஒரு பாடல், திருமண வரவேற்புவிழாவில் நடைபெறும் மிமிக்ரி போன்று ஒரு பாடல்,  என்றுவிதவிதமாக பாடல் காட்சிகளை உருவாக்கி பார்த்து வெற்றிகண்ட இயக்குனர் அவரே.

இந்தப் பாடல் மூன்று வேறுபட்ட பெண்களின் வழியே அவர்களின் ஒருநாளைய வாழ்வை விவரிக்கிறது, கதையில் அந்த மூன்று குடும்பங்களின் இயல்புவாழ்க்கை ஒரு நடிகையின் வரவால் சிதறடிக்கப்ட போகிறது, ஆகவே அதற்கு முன்பான அவர்களின் அன்றாட வாழ்வின் ஆனந்த்தை  உணர்த்துவது போலவே பாடல் ஒலிக்கிறது,

பாடலை பாடும் மூன்று பெண்பாடகர்களும் கூட மூன்று விதமான பாணியை, குரலினிமையைக் கொண்டவர்கள், சுசிலா செவ்வியல்தன்மை கொண்டவர் என்றால், எல்ஆர் ஈஸ்வரி துள்ளல்பாடல்களுக்கு பிரசித்தி பெற்றவர், சூலமங்கலம் ராஜலட்சுமி பக்தி பாடல்களில் பிரபலமானவர், ஆக இந்த மூன்று குரல்களின் ஒன்று சேர்ந்த தன்மை என்பது கதையின் மையத்தை அப்படியே பிரதிபலிப்பது போல அமைந்திருக்கிறது,

இன்னொரு பக்கம் அன்றாட வாழ்க்கை அர்த்தமற்று சலிப்பாக இருக்கிறது, அதை சுவாரஸ்யப்படுத்திக் கொள்ள இது போன்ற பாடலும் உள்ளார்ந்த நடனமும் தேவைப்படுகிறது என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது என்றும் நினைக்கிறேன், படத்திலிருந்து தனித்து பாடலை பார்க்கையில் இது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நடுத்தரவர்க்க  கூட்டுகுடும்ப வாழ்வின் நிலையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது,

இன்று கிணற்றடியில்லை, கிணற்றடி குளியல் இல்லை, மனநெருக்கம் கொண்ட கூட்டு குடும்பங்கள் இல்லை, யாவும் கடந்து அன்றாடப்பணிகளை கூட உடல்உழைப்பால் செய்யவேண்டியது மாறி இயந்திரங்கள் வந்துவிட்டது, வெறுப்பும் கசப்புமே பிரதான உணர்ச்சிகளாகி, அன்பும் அக்கறையும் தேவையற்ற ஒன்றாகிவிட்டிருக்கிறது, அந்த அளவிலும் இப்பாடல் முக்கியமான ஒன்றே.

திரையிசைப் பாடல்களே எளிய மனிதர்களை ஆற்றுபடுத்துகின்றன, அந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளாக ஏதோவொரு சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறான், விருப்பமான சினிமா பாடல்கள் நம் நினைவின் பகுதியாகி விடுகின்றன, நினைவு தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்ககூடியது என்பதால் பாடல்களும் புத்துருவாக்கம் கொண்டபடியே இருக்கின்றன

•••

தமிழ்சினிமாவில் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரின் படத்தை வியந்துபோற்றி அதைப் பற்றி எழுவது என்பது நான் அறிந்தவரை இல்லவேயில்லை, அதிலும் முன்னோடி இயக்குனர்களைக் குறித்து இளம் இயக்குனர் பலரும் ஒரு போதும் பேசுவதேயில்லை,   இன்றும் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலச்சந்தர் என நீளும் முன்னோடி இயக்குனர்கள் பற்றி விரிவான புத்தகம் எதுவும் எழுதப்படவில்லை,

ஆனால் உலகசினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புத்தகம் திரும்பத் திரும்பப் படிக்கப்பட்டு, வகுப்பறைகளில் பாடமாக கற்பிக்கபட்டும். பனிரெண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதுடன் ஆடியோ புத்தகம். வீடியோ பதிவு என்று பல்வேறு வடிவங்களில்  கொண்டாடப்பட்டு வருகிறது, அது பிரெஞ்சு இயக்குனர் த்ரூபா ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் குறித்து எழுதிய Hitchcock – by Francois Truffaut, என்ற விரிவான நேர்காணலின் தொகுப்பு,

1962ம் ஆண்டு த்ரூபா அமெரிக்கா சென்று ஹிட்ச்காக்கை யுனிவர்சல் ஸ்டுடியோவில் சந்தித்தார், இவரும் நீண்ட உரையாடலை நிகழ்த்தினார்கள், ஹிட்ச்காக்கின் முக்கியப் படங்களின் தனித்துவம் குறித்த இந்த உரையாடல் பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேற்பட்டது, பிரெஞ்சு வானொலி இதை அரைமணி நேரம் வீதம் 25 பகுதிகளாக ஒலிபரப்பியது, அந்த விரிவான நேர்காணலில் இருந்து தொகுக்கபட்டதே இப்புத்தகம்

த்ரூபா பிரெஞ்சு நவசினிமாவின் முக்கிய இயக்குனர், தீவிரமான சினிமா விமர்சகர், பிரெஞ்சு புதிய அலைசார்ந்த சினிமா அழகியலை உருவாக்கியவர், அவர் ஹிட்சகாக்கின் படங்களை குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறார், ஒரு இயக்குனரின் மொத்தப் பங்களிப்பையும் இவ்வளவு நுணுக்கமாக மற்றொரு இயக்குனர் ஆராய்ந்து எடுத்துப் பேசியது இதுவே முதல்முறை,

த்ரூபாவின் இந்த வழிமுறையை இன்று முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர் அமெரிக்க இயக்குனர் மார்டின் ஸ்கார்ச்சி, இவரே அமெரிக்க சினிமாவின் முன்னோடிகளைக் கொண்டாடியபடியிருக்கும் முதல் இயக்குனர், செவ்வியல் திரைப்படங்களை பற்றித் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

த்ரூபாவின் புத்தகம் ஹிட்ச்காக்கை அறிந்து கொள்வதற்கான திறவுகோல் ,சினிமாவில் பணியாற்றுகின்றவர்களோ, பார்வையாளர்களோ யாராக இருப்பினும் சினிமாவின் அழகியலையும் அதன் உருவாக்கத்தின் பின்னுள்ள வியப்பான நுட்பங்களையும் அறிந்து கொள்ள இதுவே தலைசிறந்த புத்தகம், பிரபலமான பல இயக்குனர்கள் இந்தப் புத்தகத்தை தனது கூடவே வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன், இது ஒரு வழிகாட்டுதல் நூல், புத்தகத்தை வாசிக்கையில் நாம் ஒருபக்கம் த்ரூபா என்ற இளம் இயக்குனர் எந்த அளவு ஹிட்ச்காக்கின் படங்களை  அவதானித்து இருக்கிறார் என்று வியக்கமுடிகிறது, மறுபக்கம் திரில்லர் படங்கள் என்று எளிதாக வகைப்படுத்திவிடுகின்ற ஹிட்ச்காக் சினிமாவின் உள்ளே எவ்வளவு முக்கியமான அகப்பார்வைகள், நுட்பங்கள் இருக்கின்றது என்பதை பற்றி ஹிட்ச்காக்கே சொல்வது கூடுதல் வியப்பளிக்கிறது,

ஒரு நேர்காணல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இப்புத்தகம் ஒரு உதாரணம், த்ரூபாவிற்கு ஆங்கிலம் தெரியாது, அவர் பிரெஞ்சில் பேசியதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் ஹெலன் ஸ்காட், இந்த நேர்காணலின் முழுமையான ஒலிப்பதிவு இன்று இணையத்தில் எளிதாகத் தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது,

எது ஹிட்ச்காக் சினிமாவைச் சாதாரண வணிகத் திரைப்படங்களில் இருந்து வேறுபடுத்துகிறது என்பதை த்ரூபா விளக்கமாக எடுத்துக்காட்டுகிறார், காதல்காட்சிகளை படமாக்குவது போல அத்தனை ஈர்ப்புடன் அவர் கொலைக்காட்சிகளை படமாக்கியிருக்கிறார், அது வெறும் கொலையில்லை, ஒரு மனநிலை, அதன் வெளிப்பாடு, மற்றும்  அகநெருக்கடி எங்கிருந்து உருவாகிறது என்பதை ஹிட்ச்காக் தெளிவாகக் காட்டுகிறார் என்கிறார் த்ரூபா

திரில்லர் படங்களில் நகைக்சுவையின் பங்கு முக்கியமானது, அது தான் டென்ஷனை அதிகப்படுத்துவத்ற்கான எளிய வழி என்று சொல்லும் ஹிட்ச்காக்,  இயல்பான சூழலில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவதும். முரண்பட்ட கதாபாத்திரங்களின் இயல்பும், பதைபதைக்க வைக்கும் கையறு நிலை கொண்ட புறச்சூழலும், பார்வையாளர்களை நம்பவைத்து சட்டென திருப்பம் கெர்ள்ள வைக்கும் காட்சிகளுமே படத்தின் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்கிறார்,

சைக்கோ படத்தில் வரும் கொலை நடைபெறும் காட்சியை பற்றிய உரையாடலில் கத்தி அவள் உடலில் நேரடியாக பாயாமல் மாண்டேஜ் காட்சிகளின் வழியே கொல்லுதல் காட்சிப்படுத்தபட்ட விதம் பற்றி பேசும் ஹிட்ச்காக், கொலைக்காட்சியின் பின்புலமாக ஒலிக்கும் வயலின் இசையே அந்த காட்சியை மேம்படுத்திய ஒன்று என்று விரிவாக எடுத்துச் சொல்கிறார்,

சினிமாவின் அகஉலகம் எப்படி உருவாக்கபடுகிறது, காட்சிகளுக்குள்ள உழைப்பும் தத்துவமும் அகநோக்கமும், அழகியலையும் அறிந்து கொள்ள  விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகமிது

••

சாவித்தியை நாம் நடிகையர் திலகம் என்றே சொல்கிறோம், சினிமாவில் இவர் ஒருவரே இப் பட்டத்தை பெற்றவர், சாவித்திரியினை மஹாநடிகை என்கிறது தெலுங்கு சினிமா, சொந்த வாழ்வில் அதிகமும் துன்பத்தையும் வேதனைகளையும் அனுபவித்து குடியால் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டார் சாவித்திரி,  ஆனால் அவரைப்போல சினிமாவை நேசித்த. சினிமாவிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகை இன்று வரை எவருமில்லை,

சாவித்திரி தனிப்பெரும் ஆளுமை, எந்தக் கதாநாயனுடன் நடித்தாலும் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் ,துடுக்குதனமிக்க பேச்சுமாக சாவித்திரி தனது தனித்ன்மையை வெளிப்படுத்த தவறியதேயில்லை, தேவதாஸ் படத்தில் வரும் சாவித்திரிக்கும் மிஸ்ஸியம்மாவில் வரும் சாவித்திரிக்கும் இடையில் நடிப்பில் எவ்வளவு பெரிய மாறுபாடு, அந்த வேறுபாட்டை அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கவனமாக வெளிப்படுத்தியவர்,

மிகக் குறைவான நடிகைகளே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள், பானுமதி. அதில் ஒரு முன்னோடி, சாவித்திரி தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

மணம் போல் மாங்கல்யம் படத்தில் நடித்த போது ஜெமினி கணேசனைக் காதலிக்க ஆரம்பித்து 1956-ல் அவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜியை வைத்து அவர் இயக்கிய பிராப்தம் படத்தை சமீபத்தில் மறுமுறை பார்த்தேன், பாசமலர் படத்தின் வழியே சிவாஜியின் தங்கை என்ற அழியாத பிம்பத்தை உருவாக்கி கொண்ட சாவித்திரி, சிவாஜியை வைத்தே பிராப்தம் படத்தை உருவாக்கினார், அப்படத்தால் உருவான பிரச்சனைகள் தான் சாவித்திரியின் வீழ்ச்சிக்கான முக்கியகாரணமாக அமைந்தது

அடூர்த்தி சுப்பாராவ் இயக்கி நாகேஸ்வர ராவ் சாவித்திரி ஜமுனா நடித்த மூக  மனசுலு என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இப்படத்தில் கே,விஸ்வநாத் உதவிஇயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்

முந்நூறு நாட்களை கடந்து ஒடிச் சாதனை செய்த அப் படத்தை சாவித்திரி தமிழில் இயக்க விரும்பினார், அதே படம் மிலன் என்ற பெயரில் இந்தியில் வெளியாகி அங்கேயும் வெற்றி பெற்றது, ஆகவே இப்படம் தமிழில் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினார்,

மூக  மனசுலு கோதாவரி ஆற்றின் கரையில் வாழும் ஒரு ஜமீன்தார் குடும்பத்தினைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் கோபி என்ற படகோட்டி ஒருவனுக்குமான உறவைப் பற்றியது, பிறவி தோறும் தொடரும் பந்தம் என்பது போல மறுபிறவியில் இவர்கள் வேறு ஊரில் வேறு ஒரு கல்லூரியில் படித்து திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக அதே கோதாவரி ஆற்றங்கரை பகுதிக்கு வருகிறார்கள், முந்தைய பிறவியின் நினைவுகளுடன் அவருக்காக காத்திருக்கும் கௌரி என்ற பெண்ணைச் சந்திக்கிறான் கோபி,

கோபிக்காகவே காத்திருந்த கௌரி அவரது மடியில் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் இறந்து போய்விடுகிறாள்,  முந்தைய பிறவியின் நினைவுகள் வழியாக படம் துவங்குகிறது, தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் காட்சிபடுத்தபட்ட விதமும் சிறப்பாக இருக்கின்றன, கோதாவிரியைப் பிஎல் ராய் ஒளிப்பதிவு செய்துள்ள விதம் அபாரமானது, இன்றும் அது முன்மாதிரி படமாகவே இருக்கிறது,

அதைத் தமிழில் சிவாஜி நடித்தால் வெற்றிபெறும் என்ற கணிப்பில் படம் துவங்கப்பட்டது, ஆரூர்தாஸ் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார், சிவாஜியின் தங்கை என்று அறியப்பட்ட சாவித்திரியை சிவாஜி காதலிப்பதையோ. மனைவியாக்கி கொள்வதையோ மக்கள் விரும்பமாட்டார்கள் என்று படம் துவங்கப்படும் நாட்களில் கூறப்பட்டது, ஆனால் சாவித்திரி சின்னம்மா என்ற தனது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது என்று உறுதியாக நம்பினார்,

படத்தின் ஆரம்பத்தில் இருந்த சிவாஜிக்கும் அவருக்குமான சிக்கல்களும் கருத்துவேறுபாடுகளும் துவங்கிவிட்டிருந்தன, சிவாஜி தனது கதாபாத்திரத்தை விட சாவித்திரியே  மேலோங்கியிருப்பதாக உணர்ந்திருக்ககூடும், இந்தக் கசப்பு படத்தின் பிரச்சனையாகி இரண்டு ஆண்டுகள் படமாக்குதல் நடைபெற்றிருக்கிறது

மூக  மனசிலு படத்தையும் பிராப்தம் படத்தையும் ஒரு சேரப் பார்க்கும்போது அந்த படத்தின் பத்தின் ஒரு பங்கு கூட தமிழில் இல்லை என்றே தோன்றுகிறது, காரணம் ஈடுபாடு இல்லாத நடிப்பு மற்றும் சிவாஜி சம்மதிக்க மறுத்த காரணத்தால் படத்தில் இருந்து தூக்கபட்ட காட்சிகள், தொடர்பில்லாத கதைப்போக்கு, அது போலவே இப்படத்தில் சந்திரகலாவை இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் சாவித்திரி, ( இவரே உலகம் சுற்றும் வாலிபனில் எம்ஜிஆரோடு இணைந்து நடித்தவர் ), ஐமுனாவின் துடுக்குதனமும் இயல்பும் இப்படத்தில் இவரிடமும் சுத்தமாகயில்லை

மூக  மனசுலு படம் பாடலுக்காகவே ஒடியது, எட்டு பாடல்கள் அதிலும் கே.வி.மகாதேவன் நாட்டுப்புற தவில் மற்றும் நாதஸ்வர இசையை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்.  கண்டசாலா மற்றும் சுசிலாவின் குரலில் உள்ள பாடல்கள் பெரும்வரவேற்பை பெற்றன

தமிழிலும் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தழுவிக் கொண்டோடுது தென்னங்காத்து பாடல் மிகுந்த புகழ்பெற்றது, அதிலும் குறிப்பாக தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும். வெகு நாளாக என் ஆசை சின்னம்மா என்ற பாடலின் ஊடே கண்ணா என்று சாவித்திரி மெய்யுருக அழைக்கும் குரல் சிலிர்ப்பூட்டக்கூடியது,

படத்தின் ஆரம்பக் காட்சியில் தேனிலவிற்காக சிவாஜியும் சாவித்திரியும் ஒரு காரில் பயணம் செய்கிறார்கள், அந்தக் காரை சாவித்திரி ஒட்டிக் கொண்டுவருகிறார், அருகில் சிவாஜி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே வருவார், அநேகமாக  இந்த படத்தில்  தான் மணப்பெண் வெட்கப்பட்டு தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிராமல் சந்தோஷமாக சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவேயில்லாதது என்று பாட்டுப் பாடியபடியே காரை ஒட்டிக் கொண்டு போகிறார், அபூர்வமான சித்தரிப்பு அது, பொதுவாக கதாநாயகர்கள் இது போன்ற காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள், அதை மீறி சாவித்திரி அது தான் கதாபாத்திரத்தின் இயல்பு என்று ஒத்துக் கொள்ள செய்திருக்கிறார்,

படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் சாவித்திரிக்கே ஷாட் முதன்மையாக உள்ளது, பிரேமின் ஒரு ஒரம் தான் சிவாஜி இடம் பெறுகிறார், கேமிரா நகரும் போது கூட அது சாவித்திரியை நோக்கியே நகர்கிறது, சிவாஜியின் உடையலங்காரம் முற்றிலும் தெலுங்குச் சாயல் கொண்டது,  உணர்ச்சிபூர்வமான காட்சிகளை  அப்படியே தெலுங்கில் உள்ளது போலவே சாவித்திரி எடுத்திருக்கிறார், ஆனால் சில காட்சிகளைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றும் போது அதிக அக்கறை கொள்ளவேயில்லை

தெலுங்கு படத்தில் கைதட்டு பெற்ற பல வசனங்கள் தமிழில் அப்படியே இருக்கின்றன, ஆனால் ஒன்று கூட தனித்துப் பாராட்டு பெறவேயில்லை, ஒரு இயக்குனராகத் தான் நினைத்த படத்தை உருவாக்க முடியவில்லை என்பதை சாவித்திரி நன்றாக உணர்ந்திருக்கிறார், கடன்சுமைகளோடு படத்தை உருவாக்கிய சாவித்திரி 1971 ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட்டார், படம் பெரும்தோல்வியை தழுவியது, அதனால் கடனாளியான சாவித்திரி மனநிம்மதி இழந்து அவதிப்படத்துவங்கினார், ஒரு இயக்குனராகப் படத்தின் தோல்விக்கு தானே காரணம் என்று ஒப்புக் கொண்டதோடு தன்னோடு முரண்பட்ட எவரையும் பற்றி ஒருவார்த்தை அவர் தவறாகப் பேசவேயில்லை,

மதுமதி மோகமனசிலு இரண்டுமே மறுபிறவி கதையின் வெற்றிகரமான இரண்டுபடங்கள், இதில் மதுமதி நெஞ்சம் மறப்பதில்லை என்ற படமாகி பெரும் வெற்றிபெற்றது, ஆனால் பிராப்தம் தோல்வியை அடைந்தது, இதே வகைப்பாட்டில் ஹிந்தியில் உருவாக்கபட்ட ஒம்சாந்தி ஒம் பெரும்வெற்றியை பெற்றது

சாவித்திரி என்ற ஆளுமையின் பன்முகத்தன்மையில் ஒன்று இயக்குனரானது, அதை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார், பொதுவாக நடிகைகளைக் கவர்ச்சிபொம்மையாகச் சித்தரிக்கும் சினிமா உலகில், கவர்ச்சியின் நிழல் கூட தன்மீது விழாமல் பார்த்துக் கொண்டதோடு சினிமாவில் நடிகர்கள் இயக்குனர் ஆனதைப் போல தன்னால் சாதித்து காட்ட முடியும் என்று நிரூபணம் செய்தவர் சாவித்திரி, படத்தின் எல்லாக் குறைபாடுகளுக்கும் முக்கியக் காரணம் கசப்புணர்வோடு முக்கியநடிகர்கள் பணியாற்றியதே,

மனம் வருந்தி வடிக்கும் கண்ணீர் வாளை விட கூர்மையானது. அது தவறுக்கு  காரணமானவர்களை நிச்சயம் தண்டித்துவிடும் என்று நம்பினார் சாவித்திரி, ஆனால் அது அவரது வாழ்நாளில் நடைபெறவேயில்லை, மனவேதனை தாளமுடியாமல் குடித்துத்குடித்துத் தன்னை உருத்தெறியாமல் சிதைத்துக் கொண்டு மீளமுடியாத துயரச் சின்னமாக இறந்து போன சாவித்திரி என்ற மகாநடிகையின் வீழ்ச்சியை ஒரு காவியத்துயரம் என்றே சொல்வேன்,

மூகமனசிலு இன்றும் விரும்பிப் பார்க்கபடுகிறது, ஆனால் பிராப்தம் கைவிடப்பட்ட படமாகவே இருக்கிறது, இந்த படத்தின் ஊடாக ஒளிர்விடும் சாவித்திரியின் ஆசையும் கனவுகளுக்காக அதை யாவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது

சினிமாவின் பகட்டான வெளிச்சம் எப்போதும் வெற்றியின் பக்கமே சுழன்று கொண்டிருக்கிறது, தோற்றும் கைவிடப்பட்டும் போன திரைக்கலைஞர்கள் படம் முடிந்து போன பிறகு மிஞ்சும் வெற்றுத்திரையைப் போல மௌனமாக, கண்ணீர் கறைபடிந்த நினைவுகளோடு இருக்கிறார்கள், சினிமாவின் இத்தனை கோடி ஜனத்திரளில் அது பலராலும்  உணரப்படுவதேயில்லை என்பதே கூடுதல் துயரம்,

•••

0Shares
0