இது அமெரிக்க சினிமா இல்லை

இன்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாதமி மற்றும் செவன்த்சேனல் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து நடத்தும் சென்னை உலகத்திரைப்படவிழா நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன், நான் முன்னிலை வகிக்க, இயக்குனர் வசந்தபாலன் படவிழாவைத் துவங்கி வைத்தார்.

தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்,   அவர் தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் சென்னையில் உலகத் திரைப்படவிழாவினை நடத்துகிறார், மாணவர்களும், உதவி இயக்குனர்களும், சினிமா ரசிகர்களும் பயன்பெற வேண்டும் என்பதே தனது முக்கியமான நோக்கம் என்கிறார் நாராயணன்,

இந்தத் திரைப்பட விழா தி.நகரின் விஜய ராகவா சாலையில் அமைந்துள்ள தேவிஸ்ரீதேவி திரைஅரங்கில் நடைபெறுகிறது.

20 முதல் 23 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்தத் திரைப்படவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம், இதற்கான கட்டணம் எதுவுமில்லை,

இன்று திரைப்படவிழாவின் முதல் திரைப்படமாக This Is Not an American Movie என்ற மாசிடோனியா நாட்டுத் திரைப்படத்தைப் பார்த்தேன் Saso Pavlovski இயக்கியுள்ள இப்படம் ஹாலிவுட் சினிமாவைக் கடுமையாகக் கேலி செய்கிறது,

சமீபத்தில் வெளியான தமிழ்ப்படம் எப்படி தமிழ்சினிமா உலகை பகடி செய்ததோ அது போல ஹாலிவுட் சினிமாவின் போலியான பிம்பங்களை இந்தப் படம் சரியாகக் கிண்டல் அடிக்கிறது.

குறிப்பாக அமெரிக்க சினிமாவின் பிரபல நடிகர்களான ராபர்ட் டி நீரோ, மார்லன் பிராண்டோ, பிராட் பிட். டாம் ஹான்ஸ். புரூஸ்வில்ஸ், ஆன்டனி ஹாப்கின்ஸ், போகார்ட் போன்றவர்களின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும், அவர்களது பஞ்ச் டயலாக்குகளையும் பகடி செய்து கிழிக்கிறது, இன்னொரு பக்கம் ஹாலிவுட் சினிமாவின் பார்மூலா திரைக்கதை எப்படிபட்டது என்பதைக் காட்சிக்குக் காட்சி குத்திக்காட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக டைஹார்ட் சீரியஸின் புரூஸ்வில்சை அநியாயத்துக்கு கிண்டலடித்திருக்கிறார்கள்,

ஹாலிவுட் சினிமாவை நக்கல் அடிப்பது தான் திரைக்கதையின் முக்கியத்துவம் என்பதால் காட்பாதர் போலவே கதை அமைப்பு ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள், மாசிடோனியாவில் உள்ள் ஒரு நிழல்உலகப் பாஸ், அவரது அடியாட்கள், அவர்களது  மாபியா உலகம் எனத் துவங்குகிறது படம்

பாஸ் ஒரு ஆயுதக்கடத்தலில் ஈடுபடுகிறார், சினிமாவில் எதையாவது கடத்த வேண்டும் என்றால் நிறைய பேரை அடித்துப் போட்டுக் கடத்த வேண்டும், நிஜவாழ்வில் அப்படி எதுவும் நடக்காது, காரணம் அதற்கெல்லாம் எவருக்கும் நேரமும் விருப்பமும் இல்லை என்று பாஸ் தன்னிலை விளக்கம் கொடுப்பதுடன் படம் துவங்குகிறது, அப்போதே இது எந்தவகையான படம் என்று துல்லியமாகத் தெரிந்துவிடுகிறது,

ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பாஸ் Fadeout என்று சொல்கிறார், காட்சி திரையில் இருந்த மறைந்து போகிறது, மறுபடியும் Fade in சொன்னதும் காட்சி தோன்றுகிறது, இது சினிமாவின் பழைய உத்தி என்று ஒருவன் சொல்லும் போது தான் கிளாசிகல் டச் உள்ள ஆள், அப்படி தான் பயன்படுத்துவேன் என்கிறார் பாஸ்

அவரது கைத்தடிகளாக ராபர்டி நீரோ, டாம் குரூஸ், அல்பசினோ போன்ற முகபாவங்களும் சேஷ்டைகளும் கொண்ட நடிகர்கள் துணையாட்களாக வருகிறார்கள், அவர்கள் சினிமாவின் பிரபலமான வசனங்களைப் பேசி நக்கலடிக்கிறார்கள்.

பாஸ் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் வசூல் செய்ய போகிறார், கடைக்காரன் ஒரு கவரில் ஒரேயொரு ரூபாய்நோட்டை போட்டுக் கண்ணியமாகத் தருகிறான், பாஸ் எடுத்து பார்த்துவிட்டு அந்தப் பணத்தை அவனிடம் தந்து ஒரு சிகரெட் பாக்கெட் வேண்டும் என்கிறார், அவன் புகைபிடிப்பது ரத்த அழுத்ததை உருவாக்கும் என்ற வாசகம் அச்சிடப்பட்ட சிகரெட்டைத் தருகிறான், உடனே பாஸ் அது வேண்டாம் கேன்சரை உருவாக்கும் சிகரெட் தான் தனக்கு வேணும் என்கிறார், காரணம் சினிமாவில் கதாநாயகர்கள் குண்டடி பட்டுக் கூடப் பிழைத்துக் கொள்வார்கள், ஆனால் கேன்சர் வந்து தான் செத்துப் போவார்கள், சினிமாவில் கேன்சரில் செத்த ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் பாஸ், இப்படி ஹாலிவுட் சினிமாவை புரட்டி எடுத்துவிட்டார்கள்

இதன் உச்சபட்ச நகைச்சுவை இரண்டு, ஒன்று ஒரு ஆளுக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தலைசுற்றி வாந்தி வருவதற்குப் பதிலாக பிளாஷ்பேக் முட்டிக் கொண்டு வருகிறது, அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை, படம் முழுவதும் திண்டாடுகிறார்.

மற்றொரு காட்சியில் பாஸ் நுரையீரல் பாதிக்கப்பால் நோயுற்றுவிட்டார் என்று டாக்டர் சொன்னதும் பாஸ் நேரடியாக அந்தப்படத்தின் கதாசிரியர் வீட்டிற்குப் போய் நீ எழுதிய திரைக்கதையில் உடனே மாற்றம் செய், நான் தான் படத்தின் ஹீரோ, நான் சாகக்கூடாது, என்னைக் காப்பாற்றி படத்தைச் சந்தோஷமாக முடியும் படி எழுது என்று வற்புறுத்துகிறார், அதற்கு எழுத்தாளர் கதாபாத்திரங்கள் எழுத்தாளனை கட்டுபடுத்த முடியாது என்று மறுக்கிறார்.

அதற்குப் பாஸ்  படத்திற்கு நான் தான் ஹீரோ, நீயில்லை, என்று அவனைச் சுட்டுக்கொல்ல முயற்சிக்கையில் எழுத்தாளர் சிலரால் கடத்தப்பட்டுவிடவே அதன்பிறகான படம் திரைக்கதையில்லாமல் தடுமாறுகிறது, ஒன்றுமேயில்லாமல் கதாபாத்திரங்கள் உட்கார்ந்து கொண்டு பார்வையாளர்களை பார்த்து திரைக்கதை நகரவில்லை நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள்,

குழப்பமான பாஸ் எப்படியாவது படத்தைச் சுவாரஸ்யமாகக் கதையை முன்னாடி கொண்டு போக வேண்டும் என்றால் ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று ஒருவரைத் தேடுகிறார், அப்படியொரு ஆள் கிடைக்கிறார், அது ஒரு கிராபிக் ஆர்டிஸ்ட், இப்போது நான் தான் சினிமாவின் கதை சொல்வள் என்று அறிமுகமாகினார், அவரை வைத்துக் கொண்டு ஹாலிவுட் சினிமா எப்படியெல்லாம் தொழில்நுட்ப உத்திகளுக்குள் சிக்கிக் கொண்டு அவதிப்படுகிறது என்பதைக் கேலி செய்து தள்ளுகிறார்கள்.

படத்தின் டைட்டில் துவங்கி முடியும் வரை சிரித்துக் கொண்டே படம் பார்த்தேன், அதிலும் ஹாலிவுட் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருபவனாக இருந்ததால் எந்தெந்த வசனங்களை, காட்சிகளைக் கேலி செய்கிறார்கள் என்று நினைத்து நினைத்துச் சிரிக்க முடிந்தது

ஹாலிவுட் சினிமாவை எவ்வளவு நக்கல் அடிக்க முடியுமோ அவ்வளவு கலாய்த்திருக்கிறார்கள் ,  அதன் ஊடாகவே வணிக சினிமா எப்படி பிம்பங்களை உருவாக்கி  வைக்கிறது, அதன் உள்ளே எவ்வளவு போலிமைகள். அசட்டுதனங்கள், அபத்தங்கள் சேர்ந்து போயிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள், இப்படம் இந்த ஆண்டு தான் வெளியாகியிருக்கிறது.

இது போன்ற படங்களைக் காண்பதற்கு தான் உலகத்திரைப்பட விழா முக்கியமாக இருக்கிறது, இவை ஒருபோதும் உள்ளுர் திரையரங்குகளுக்கு வராது, ஆகவே இந்த உலகத்திரைப்பட விழா சென்னையில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது, அவசியம் போய் பாருங்கள்,

••

0Shares
0