ராஜஸ்தானுக்குப் போகும் போதெல்லாம் சிவப்பு நிறத்தின் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு விருப்பமாக இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன், பாலை சார்ந்த நிலவெளி என்பதாலோ, அல்லது வீர உணர்வின் அடையாளமாகவோ அதை தேர்வு செய்திருக்கிறார்களோ எனத்தோன்றும், அவர்களின் கலை வெளிப்பாட்டில், உடைகளில், வீடுகளில், சிவப்பு நிறமே பிரதான இடம் பிடித்திருக்கிறது, மரபாகவே ராஜஸ்தானியர்கள் சிவப்பைக் கொண்டாடுகிறார்கள், தமிழர்களுக்கு வெள்ளை தான் அதிகம் பிடித்திருக்கிறது, செருப்பில் இருந்து துண்டுவரை அத்தனையும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்பவர் நிச்சயம் தமிழனாகத்தான் இருப்பார்,
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மாநிலமும் இப்படித் தனக்கென ஒரு நிறத்தைக் கொண்டிருக்கிறது, ராஜஸ்தானின் கலைகளை நுண்மையாக அறியும் போது நாம் அதில் மரபும் நவீனமும் ஒன்று கலந்திருப்பதை உணர முடிகிறது,
குறிப்பாக ராஜஸ்தானிய நுண்ணோவியங்களைப் பாருங்கள், அவை மரபான ஒவியங்களாகத் தோற்றம் அளித்த போதும் அதில் பெர்சிய மற்றும் அரபு பாணிகளின் கலப்பு காணப்படுகிறது,
ராஜஸ்தானிய கிருஷ்ணனும் ராதையும் பிற மாநிலங்களில் காணப்படும் கிருஷ்ணன் ராதையைப்போலவே இல்லை, அவர்களின் உருவ அமைப்பு மற்றும் உடைகள், முகபாவங்கள் யாவும் தனியாக இருக்கின்றன, உணர்ச்சிகளைப் பிரதானமாக வெளிப்படுத்துவதில் ராஜஸ்தானிய நுண்ணோவியங்கள் தனித்திறன் கொண்டிருக்கின்றன
காத்துக்கிடக்கும் ராதை என்ற ராஜஸ்தானிய ஒவியத்தை ஒரு முறை கண்காட்சியொன்றில் பார்த்தேன், ராதை ஆற்றங்கரையில் காத்துகிடக்கிறாள், அந்த ஆற்றில் ஒடும் மீன்கள் கூட சோர்ந்து போய் வால் வளைந்து சோம்பியே காணப்படுகின்றன, கரையோர மரம் வளைந்து சரிந்து நிற்கிறது, தண்ணீரின் அலைகள் கூட சீற்றமில்லாமல் இருக்கின்றன, அவளது உடைகளில் கூட தளர்ச்சி காணப்படுகிறது, முகத்தில் ஏக்கம் ததும்ப ராதை காத்திருக்கிறாள்,
ஒவியத்தின் மூலையில் ஒரு சிறிய நாகம் தலையை லேசாகத் தூக்கிப் பார்த்து தானும் சோகமடைந்தது போலிருக்கிறது, மரத்தில் உறைந்து போன காற்று, வெறுமையான மேகம், அதன் நீல வண்ணம், அவளது உடையின் பிரகாசமான நிறத்தேர்வு, மரத்தின் வெளிறிய பச்சை நிறம், அவள் எவ்வளவு ஏக்க்கத்துடனிருக்கிறாள் என சூழலின் வழியே பார்வையாளனுக்கு ஒவியம் அவளது தனிமையின் வலியை துல்லியமாக சொல்லிவிடுகிறது
நுண்ணோவியங்களைக் காண்பது ஒரு தனிக்கலை, அதைப் பெரிய ஒவியங்களைப் போல தள்ளி நின்று பார்ப்பதால் மட்டுமே கணித்து அறிய முடியாது, நான் நிறைய நுண்ணோவியங்களைப் பார்த்திருக்கிறேன், சில ஒவியங்களை நாம் திரும்பத்திரும்ப நுட்பமாகப் பார்ப்பதன் வழியே மட்டும் தான் அதன் மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
டெல்லியில் நடைபெற்ற நுண்ணோவியக் கண்காட்சி ஒன்றில் ஒரு பார்வையாளர் ஏழுநாளும் ஒரேயொரு ஒவியத்தை மட்டுமே பார்த்துப் போனதை அறிவேன், இசை கேட்பதைப் போல லயத்துப்போய் அறியும் போது மட்டுமே நுண்ணோவியங்களின் விந்தைகளை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது
மொகலாய ஒவியங்களில் சிறப்பானது அதன் நுண்ணோவியங்கள் ( மினியேச்சர் பெயிண்டிங்,) இந்த வகை ஒவியங்கள் பெர்சியாவில் இருந்து இந்தியாவிற்கு அறிமுகமானவை, பாபர் காலம் துவங்கி முந்நூறு ஆண்டுகாலம் மொகலாய நுண்ணோவியங்கள் மிகவும் பிரபலமாக விளங்கியிருக்கின்றன , பிரதானமான ஒவியமுறையாகவே இதை மொகலாயர்கள் வளர்த்து எடுத்தார்கள்,
பதினேழாம் நூற்றாண்டில் துவங்கி இன்று வரை மினியேச்சர் ஒவியங்கள் அதன் வெளிப்பாடு உள்ளடக்கம் மற்றும் நிறத்தேர்வு ஆகியவற்றில் பல்வேறு விதமான உருமாற்றங்களைக் கொண்டிருக்கின்றன,
நுண்ணோவியங்கள் ஒவியங்களை வரைவது மிகவும் கடினமானது, அதில் உள்ள நுணக்கம் மிகுந்த கவனமும் அக்கறையும் தீவிரமான உழைப்பும் கொண்டது, தேர்ந்த ஒவியரால் மட்டுமே அது சாத்தியம்,
பெர்ஷியாவில் புத்தகங்கள் கலைப்பொருளாக கருதப்பட்டன, ஆகவே அதன் ஒரங்களை அலங்காரம் செய்வது முக்கியமானதொரு கலையாகக் கருதப்பட்டது, அதற்காக நுண்ணோவியக் கலைஞர்களிருந்தார்கள், இவர்களைப் பற்றியே நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக் மை நேம் இஸ் ரெட் என்ற நாவலை எழுதியிருக்கிறார், இந்த நாவல் தமிழில் என் பெயர் சிவப்பு என்று ஜி,குப்புசாமி மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது, அந்த நாவல் பெர்சிய நுண்ணோவிய மரபை விரிவாக விவரிக்கிறது,
புத்தகங்களின் பக்கங்களில் குதிரைகள். பூக்கள். அடையாளச்சின்னங்கள் போன்றவற்றை நுண்ணோவியமாகத் தீட்டுபவர்கள் முழுமையாக உருவங்களை வரைவது கிடையாது, குதிரையை அவர்கள் அரூபமான கோட்டுரு வடிவிலே வரைகிறார்கள், அதாவது தாவி செல்லும் ஒரு கோடு குதிரையைக் குறிப்பதாக இருக்கிறது, அந்தக் கோட்டின் பாய்ச்சலில் குதிரையின் வலிமையை நாம் உணரமுடிவதே அதன் சிறப்பு
இது தான் குதிரையை வரைவதன் உன்னதமான நிலை, அதை அடைய ஒரு கலைஞன் தன் வாழ்வில் பல வருசங்கள் அயராமல் குதிரைகளை மாறிமாறி வரைந்து கொண்டேயிருக்க வேண்டும், அப்போது தான் ஒற்றைக்கோடு குதிரையாகும் விந்தை சாத்தியமாகிறது.
மதப்பிரதிகள் மற்றும் மன்னர் பயன்படுத்தும் புத்தகங்களை அழகுபடுத்துவதற்காக நிறைய ஒவியர்கள் அரசசபையோடு சேர்ந்து இருந்தார்கள், அவர்கள் வரைந்த புத்தகங்கள் ஒவியரின் பெயராலே தொகுப்பு ஒவியநூலாக வெளியாகி உள்ளது , உலகின் பல முக்கிய ம்யூசியங்களில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன
இன்றைக்கும் கலைக்கூடங்களில் இது போன்ற தொகைஒவிய நூல்களைக் காணலாம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஒவியத்தொகுப்புகள் காணப்படுகின்றன,
மினியேச்சர் ஒவியங்கள் பெரிதும் புராணம் மற்றும் தொன்மக்கதைகளின் விளக்கப்படமாகவே இருந்தன. மொகலாய ஒவிய மரபில் கூட இந்திய புராணீகம் மற்றும் தொன்மம், இதிகாசம் சார்ந்த காட்சிகள் நிறைய வரையப்பட்டிருக்கின்றன, கிறிஸ்துவ பாதிப்பும் மினியேச்சர்களில் உண்டு,
இன்னொரு பக்கம் மன்னர்களின் வேட்டை மற்றும் முடிசூட்டுவிழாக்கள், வனவிருந்து, நீதிபரிபாலனம், படை நடத்தி போவது, யுத்தம் மற்றும் ஞானிகளை எதிர்கொண்டு ஆசி பெறுவது போன்றவை முக்கியமான கருப்பொருளாக இருந்திருக்கின்றன
கையளவு உள்ள ஒரு சிறிய ஒவியத்தை வரைய ஏழு ஆண்டுகள் ஆனது கூட நடந்திருக்கிறது, ஒரு மொகலாய நுண்ணோவியத்தில் ஒணாணின் கண் உள்ளே தெரியும் மங்கலான பிம்பம் கூட துல்லியமாக வரையப்பட்டிருக்கிறது என்றால் அதன் நுட்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
நுண்ணோவியங்களில் பிரதானமானது, அதற்குத் தேர்வு செய்யப்படும் நிறமும். பொருளின் துல்லியமுமான சித்தரிப்பும், அரூபமான குறியீடுகளுமேயாகும் ,
ஆரம்பகால நுண்ணோவியங்களில் வெள்ளிபூச்சு அல்லது தங்கபூச்சு சேர்ந்தே ஒவியம் வரையப்பட்டது, இதில் பாக்தாத் வகை ஒவியங்கள் மற்றவற்றிலிருந்து பெரிதும் மாறுபட்டவை, உடைகளை வரைவதிலும் பாத்திரங்களின் உடல்வாகை சித்தரிப்பதிலும் அதற்குத் தனித்துவமிருந்தது, அலங்காரமான உடைகளைக் கொண்ட பெர்சிய நுண்ணோவியங்களைப் பாருங்கள், அந்த உடைகளில் உள்ள சிறிய பூக்கள் கூட மிகத் துல்லியமாக வரையப்பட்டிருப்பதை நன்றாக உணர முடியும்
பெர்சியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒவியர்கள் தங்களுக்கான பாணியை உருவாக்கிய போது இந்தியாவில் புத்தகலைமரபில் இது போன்ற நுண்ணோவியங்கள் உருவாக்குவது இன்னொரு பாணியாக நடைமுறையில் இருந்திருக்கிறது,
இந்த இரண்டுபாணிகளும் ஒன்று கலந்து ஒரு புதிய கலை உருவாக்கம் மொகலாய காலத்தில் நடந்திருக்கிறது, அதை அக்பரும் அவரது வாரிசுகளும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள், அது தான் மொகலாய நுண்ணோவியங்களின் தனிச்சிறப்பு
மன்னரின் சுயஉருவ ஒவியங்களும். சபைக்காட்சிகளும் வேட்டையும் விழாக்களும் குறுஒவியங்களில் முதன்மையாக இடம் பெற்றுள்ளன, தாராவின் திருமணம். ஔரங்கஷிப்பின் யுத்த வெற்றி. அக்பரின் சபை. அக்பரின் கானகவேட்டை. மொகலாய இளவரசிகளின் அழகான சித்திரங்கள். சபைக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளின் உருவம். பிரார்த்தனை நிகழ்வுகள். ஊர்வலங்கள் என மொகல் மினியேச்சர் தனக்கென தனியான அகஉலகைக் கொண்டிருக்கிறது,
பனித்துளிக்குள் ஆகாசம் அடங்கியிருப்பதைப் போல ஒவ்வொரு ஒவியமும் ஒரு கதையைச் சொல்கிறது, மொகாலாயர் கால வாழ்க்கையின் அரிய தருணங்களின் சாட்சி போல இருக்கிறது,
மொகலாய நுண்ணோவியங்களை அவதானிக்கையில் அதில் இடம் பெற்றுள்ள யானைகளும் காண்டாமிருகமும் கழுகும். அணிலும். நாய்களும். சிறுத்தைகளும் அற்புதமாக வரையப்பட்டிருப்பதை உணரலாம், இன்று நேஷனல் ஜியாகிரபி மூலம் மிக அண்மையில் நெருங்கி காணும் மிருகங்கள் தரும் வியப்பை, பரவசத்தை இந்த ஒவியங்களே ஏற்படுத்துகின்றன, ஒவ்வொரு மிருகத்தின் இயல்பும் தனித்துவமும் ஒவியரால் சரியாக உள்வாங்கப்பட்டிருக்கிறது, அதன் வெளிப்பாடே ஒவியத்தில் மிருகங்களின் உடல்தோற்றம் மற்றும் பாவங்களாக வெளிப்படுகின்றன
குறிப்பாக யானைகளை அவ்வளவு பரவசத்துடன் திமிருடன். வியப்புடன். மதர்ப்புடன் வேறு ஒவியங்களில் நான் கண்டதில்லை,
Three Men Hunting Lions with Indian Elephant என்ற ஒவியத்தில் யானை சிங்கம் ஒன்றைத் தனது துதிக்கையால் வளைத்து வீசுகிறது, அப்போது அதன் கண்களில் பயமேயில்லை, யானைமீது இருப்பவனின் முகத்தில் பயம் தெறிக்கிறது, அந்த யானையின் உடல்வாகும். திமிறலும் வெகு அழகாக வரையப்பட்டிருக்கின்றன ,யானையின் மீதுள்ள அலங்காரங்களும், அதன் நகங்கள் ஒளிர்வதும் கழுத்து மணிகள் அசைவும் கிறக்கமூட்டுவதாக இருக்கின்றன,
Attendants Rescuing Fallen Man from Enraged Elephant என்ற ஒவியத்தில் காணப்படும் யானையின் நிறமும் அதன் கோபமும். உடல்வாகும் வால்வீச்சும் காதுகளும் தனியான வசீகரம்.
இது போலவே காம்போசிட் எனப்படும் ஒரே உருவத்தினுள் பல உருவங்கள் அடங்கியிருப்பது போன்ற நுண்ணோவிய வகையில் வரையப்பட்ட மொகலாய யானைக்குள் தான் எத்தனை விதமான மிருகங்கள்.
இந்த மிருகங்கள் ஒன்றுக்குள் ஒன்று புதையுண்டு இருந்தாலும் அதைப் பெரியதாக மாற்றிப் பார்க்கையில் அவை எவ்வளவு கவனமாக, நுட்பமாக வரையப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது,
சர்ரியலிசப் பாணி ஒவியங்கள் உருவாக்கிய திகைப்பை,விசித்திரத்தை இந்த ஒவியங்களும் வழங்கவே செய்கிறது, ஆனால் இவை சர்ரியலிச ஒவியம் போல கொண்டாடப்படுவதில்லை என்பது தான் இதன் குறைபாடு
இத்தகைய ஒவியத்தின் முக்கியமான சவால் எந்த மிருகத்தை எதற்கு அடுத்து இடம்பெறச்செய்வது என்பதும் அதன் உடலியலை ஒருமித்துச் சித்தரிப்பதுமேயாகும்,
யானையை அடக்கும் அக்பர் ஒவியத்தில் இருப்பது நீலநிற யானை, அதன் தந்தங்கள் அழகுபடுத்தபட்டிருக்கின்றன, மேலே போர்த்தப்பட்டிருக்கும் சிவப்பு துணியும் கழுத்துமணியும் அதன் அந்தஸ்தைக் காட்டுகின்றன, அதே வேளையில் யானைமீது ஏறி அதன் கோபத்தை அடக்க அங்குசம் வைத்து குத்தும் அக்பரின் கால்கள் அதன் கழுத்தில் போடப்பட்டுள்ள பிரியினுள் நுழைந்திருக்கிறது, அக்பரின் உடையலங்காரம் குறுவாள் கிரீடம் யாவும் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன, இந்த ஒவியத்தில் யானையின் ஆவேசத்திற்கு நேர்மாறாக அருகாமையில் உள்ள மரமும் அதில் சாவகாசமாக இருக்கும் பறவைகளும் சித்தரிக்கபடுகின்றன,
மரத்தின் தனித்துவமாக இதயவடிவில் இலைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன, யானையின் காலடியில் உள்ள சிறுசெடி, அதன் பொலிவு. பறவைகளின் தன்னியல்பு அதிலும் ஒரு வால் நீண்ட பறவையின் ஒயில், பறவைகளின் கண்களில் காணப்படும் சாந்தம் மன்னரின் வஸ்திரமடிப்புகள் என்று எவ்வளவு நுட்பங்கள்
இத்தனையும் தாண்டி மதமேறிய யானையின் கால்களுக்கு இடையில் ஒரு சிறிய செடியில் சிவப்பு நிற பூ பூத்திருக்கிறது, அதை ஒவியர் கவனமாக வரைந்திருக்கிறார், அதில் தான் கலையின் வெற்றி அடங்கியிருக்கிறது,
இது போலவே நோவாவின் கப்பலில் மிருகங்கள் ஏற்றப்பட்டது என்பதை விவரிக்கும் மொகலாய ஒவியம் ஒன்றிருக்கிறது, ஜெசுவிட்டுகளின் வருகையால் கிறிஸ்துவ கருத்தாக்கங்கள் சில நுண்ணோவியமாகியிருக்கின்றன, அதில் இந்த ஒவியம் முக்கியமானது, அக்பர்நாமா ஒவியத் தொகுப்பில் உள்ள மிஸ்கின் வரைந்த இந்த ஒவியத்தில் முதலைகள் வாய் திறந்து நிற்கின்றன, யானை ஒட்டகம் மான் என பல்வேறு கப்பலில் ஏற்றப்பட்ட மிருகங்களின் சாந்த நிலையும் முகபாவங்களும் ஆகச்சிறப்பாக உள்ளது, கப்பலின் வடிவமும் அதன் அடுக்கு நிலைகளும் அதில் படகோட்டுகின்றவன். திரைப்பானை இறக்கிவிடுபவர்கள். கிழே வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் என்று எத்தனை நிலைகள். அத்துடன் படகில் முன்னும் பின்னும் வரும் முதலைகள். மீன்கள். தூரத்து பறவைகள் , அலைபாயும் கடல் என்று ஒவியம் முழுமையாக இருக்கிறது, இதிலும் உருவங்களின் சமநிலையும் வண்ணங்களும் உள்ளார்ந்த இயக்கமும் சமநிலையில் உள்ளது,
பொதுவாக நுண்ணோவியங்களில் சிவப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களே அதிகம் பயன்படுத்தபடுகிறது, ஒவியர் காகிதம் அல்லது துணியில் சித்திரத்தை தீட்டிக் கொண்டு அதன்மீது வண்ணங்களைப் பயன்படுத்துகிறார், இதில் எது பிரதானப்படுத்தபட வேண்டும். எங்கே ஒளிர வேண்டும். எது மறைக்கபட வேண்டும் என்று தனிக்கவனம் செலுத்தப்படுகிறது, அத்தோடு நிறக்கலவையை உருவாக்குவதும் பயன்படுத்துவம் முக்கியமாகக் கவனிக்கபடுகிறது, பிரதான உருவங்களைச் சுற்றிலும் ஒளிர்வு போல அமைக்கபடுவது அதன் முக்கியத்துவம் கருதியே,
நுண்ணோவியத்தில் நிறையக் குறியீடுகள், உருவகங்கள் பயன்படுத்தபடுகின்றன, நித்யத்துவத்தைக் குறிக்க கையில் ரோஜா மலர் கொடுக்கபடுகிறது, ஆசைகளை குறிக்க மான் பயன்படுத்தபடுகிறது, தர்மத்தை குறிக்க நாயும். ரகசியத்தை, இச்சையை குறிக்க பூனையும் அடையாளமாகின்றன
மொகலாய நுண்ணோவிய மரபில் மன்சூர் மிகமுக்கியமானவர், இவர் பெர்சியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆதரிக்கபட்ட ஒவியக்கலைஞர் ஜஹாங்கீரின் ஆட்சிகாலத்தில் அரசசபை ஒவியராக இருந்திருக்கிறார், மன்சூர் விலங்குகளையும் பறவைகளையும் வரைவதில் காட்டிய நுட்பம் வியக்கத்தக்கது, அவற்றை இயற்கையியல் பற்றிய விஞ்ஞான ஆய்வு என்றே சொல்ல வேண்டும்
மன்சூர் ஜஹாங்கீருக்கு நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அத்துடன் மன்னரின் வனவேட்டைகளில் அவரோடு சேர்ந்து சென்று ஒவியம் வரைந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன, குறிப்பாக மன்னர் காஷ்மீருக்கு வேட்டைக்குச் சென்ற போது மன்சூரும் உடன் சென்றிருக்கிறார், அந்த ஒவியங்களைத் தனித்த ஒவியத்தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள,
மினியேச்சர்ஸ் எனப்படும் நுண்ணோவியங்கள் ஹைக்கூ கவிதைகளைப் போன்றவை, அதற்குள் வெளிப்படையான எளிமையைத் தாண்டி உள்ளார்ந்த தத்துவப் பொருள் இருக்கிறது, ஆகவே அதை ரசிப்பதற்கு தொடர்ந்த ஈடுபாடும் நுட்பமான அக்கறையும் அதிகம் தேவைப்படுகிறது.
•••