Tintin and I என்ற பிரெஞ்சு டாகுமெண்டரிப் படத்தை பார்த்தேன், Anders Høgsbro Østergaard இயக்கியது, சமீபமாக டின்டின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும் சூழலில் டின்டினை வரைந்த பெல்ஜிய ஒவியரான ஹெர்ஜி பற்றிய இந்த ஆவணப்படத்தை இணையத்தில் தேடிவாங்கினேன்.
எனது பள்ளிநாட்களில் டின்டின் காமிக்ஸின் ரசிகனாக இருந்தேன், அந்த நாட்களில் டின்டின் வாங்குவதற்காக மதுரைக்குப் போய்வர வேண்டும், அதுவும் எளிதாக கிடைத்துவிடாது, பலநேரம் வாடகை நூலகம் ஒன்றில் இருந்து தேடிஎடுத்து வாசித்திருக்கிறேன்,
டின்டின் என்ற சிறுவனைப் பிடித்ததிற்கு இன்னொரு கூடுதல் காரணமிருந்தது, அது பள்ளியில் நான் ஸ்கவுட்டில் சேர்ந்திருந்தேன், டின்டின் ஒரு ஸ்கவுட் உறுப்பினர் , ஆகவே அவனை இன்னொரு சாரணர் ஆகவே உணர்ந்தேன், சாரணப் பயிற்சிகளும் சவால் விளையாட்டுகளும், பாடல்களும் ஒருபோதும் மறக்கமுடியாதவை
ஹெர்ஜி பற்றிய இந்த ஆவணப்படத்தில் டின்டின் பிறந்த கதையை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார், வழக்கமான ஆவணப்படங்களில் இருந்து மாறுபட்டு அவரது வாழ்வும் சித்திரங்களும் நேர்காணல் செய்பவர்களின் அன்றாட வாழ்வும் ஒன்றுகலந்து செல்கிறது, விளையாட்டாகத் துவங்கிய டின்டின் படக்கதை மெல்ல தேசிய முக்கியத்துவம் பெற்றதையும் இதற்கென உலகெங்கும் வாசகர்கள் உருவானதையும் பற்றி வியப்போடு பகிர்ந்து கொள்கிறார்
சில ஆண்டுகள் மனநோய் காரணமாக தீவிரச்சிகிட்சை பெற்ற ஹெர்ஜி அந்த நாட்களில் தனது கனவுகள் யாவும் வெண்ணிறமாக இருந்தன, அப்போது வரைந்த நேபாளத்தில் டின்டின் என்ற படக்கதையில் அத்தனையும் வெண்ணிறமாகவே வரைந்து தள்ளினேன் என்று கூறுகிறார்,
கத்தோலிக மதத்தின் ஈடுபாடு, அவரது ஞானத்தந்தை, மனைவி, நண்பர்கள் என்று அதுவரை உலகம் அறியாமல் இருந்த தனது கடந்தகாலத்தை முழுமையாக ஹெர்ஜி விவரிக்கிறார், அதில் தனது பால்யகாலம் ஒருபோதும் சொர்க்கமாக இருந்த்தேயில்லை, நடுத்தரவர்க்க சூழ்நிலை காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளே மனதில் நிற்கின்றன என்று விவரிக்கிறார்
அவரது சித்திரஉலகின் திருப்புமுனையாகயிருந்த்து Tchang Chongren என்ற இளம் சீன ஒவியரோடு ஏற்பட்ட நட்பு, ஷாங் புருசல்ஸ் ராயல் அகாதமியில் இளம்சிற்பியாக இருந்தார், அவர் வழியாக சீனக்கலை மரபின் அறிமுகமும் சீனக்கவிதைகளும் தத்துவமும் ஹெர்ஜிக்கு அறிமுகமாயின, அந்தப் பாதிப்பு அவரது முந்தைய சித்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதொரு வெளிப்பாட்டினை உருவாக்கியது, 1936 வருசம் வெளியான The Blue Lotus சித்திரக்கதை சீனவீதிகளையும், நெருக்கடியான சீன அரசியல் சூழலையும் துல்லியமாக வெளிப்படுத்தியது, அதன் காரணமாக டின்டின் படக்கதைகள் சீனாவில் பெரிய அளவு வாசிக்கப்பட்டன
தனது ஒவ்வொரு சித்திரக்கதைக்கும் படம் வரைய அவர் மேற்கொண்ட ஆய்வுகள், குறிப்புகள், மாதிரிப் புகைப்படங்களைக் காணும் போது அவரது முயற்சியின் பின்னுள்ள அயராத உழைப்பு வியக்க கூடியதாக இருக்கிறது
இரண்டாவது உலக யுத்த நாட்களில் அரசியல் காரணங்களுக்காக நான்குமுறை கைது செய்யப்பட்டார் ஹெர்ஜி, சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு பதிப்பாளர் எவரும் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார், பின்பு புதிய பதிப்பகத்தின் வழியே துவங்கிய பயணம் இறுதிவரை அவருக்கான தனிவாசக வட்டத்தை உருவாக்கியது.
இந்த ஆவணப்படத்தின் நெகிழ்வான விஷயம் இருபத்தைந்து ஆண்டுகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்த ஷாங்கும் ஹெர்ஜியும் மறுமுறை சந்தித்துக் கொள்ளும் அற்புதமான தருணம், விமானநிலையத்தில் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு பேசமுடியாமல் தடுமாறுகிறார்கள், மறுநாள் இருவரும் ஒன்றாக தொலைக்காட்சி நேர்காணலில் மாணவர்களுடன் இணைந்து உரையாடுகிறார்கள், இந்தப் பகுதி ஒரு நாவலின் எழுச்சி தரும் அத்தியாயம் போல நெகிழ்வாகயிருக்கிறது
நோய்மையுற்று தனது 75வயதில் ஹெர்ஜி இறந்து போனார், 1929ம் ஆண்டு டின்டின் தொடர்சித்திரங்களாக வெளியாக ஆரம்பித்தது, மொத்தம் 23 புத்தகங்கள் வெளியாகி உள்ளன, இன்று வரை 80 மொழிகளில் 350 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கிறது, டின்டின் சித்திரக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு என்று தனி ம்யூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது, சிறுவர்களின் ஆதர்ச நாயகனாக டின்டினை உருவாக்கிய ஹெர்ஜி அவன் தனது சாயலின் வடிவம் என்று ஒத்துக் கொள்கிறார்,
உலகெங்கும் நன்மையின் குரலை ஒலிக்கச் செய்யவே டின்டின் உருவாக்கபட்டிருக்கிறான், காமிக்ஸ் என்பது வெறும்பொழுதுபோக்கிற்கானது மட்டுமில்லை, அது உன்னதமான ஒரு கலைவடிவம், அதன் வழியே சகமனிதர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் சொல்ல முடிந்திருக்கிறது என்கிறார் ஹெர்ஜி
டின்டின் மீதான இன்றைய இளம்தலைமுறையினரின் விருப்பம் அதையே காட்டுகிறது.
••