ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன

தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் முறையில் பெரும்பாய்ச்சலை ஏற்படுத்தியவை, அராபிய இரவுகளில் வரும் ஷெகர்ஜாத்தைப் போல சொல்லித் தீராத கதை சொல்லியாகவே யூரிஸ்னாரைக் கருதுகிறேன்

இவரது உயிர்தப்பிய வாங்ஃபோ என்ற சிறுகதை அபாரமான ஒன்று, கதைசொல்வதன் உச்ச சாதனையாகவே இதைக் குறிப்பிடுவேன்,  வாங்ஃபோ என்ற முதிய ஒவியரைப்பற்றியது இக்கதை, அந்த ஒவியர் எதை வரைந்தாலும் அதில் உயிர்துடிப்பு இருக்கும், அவரால் தனது ஒவியங்களின் வழியே எந்தப் பொருளுக்கும் உயிர்  கொடுத்துவிட முடியும் என்று மக்கள் நம்பினார்கள்,

ஒவியர் வாங்ஃபோ நாடோடி போல சுற்றியலைந்து இயற்கைக் காட்சிகளை ஒவியம் வரையவும், தும்பிகளை வேடிக்கை பார்க்கவும் செய்து கொண்டிருந்தார், உலகில் உள்ள எல்லா பொருள்களும் சித்திரமாவதன் வழியே மட்டுமே அதிக ஈர்ப்பையும், ஜீவத்தன்மையும் கொண்டிருப்பதாக வாங்ஃபோ நம்பினார், அதனால் அவரது ஒவியத்தை ரசித்தவர்கள், நிஜமான இயற்கையைக் காணும் போது அதில் ஏதோ குறைபாடு இருப்பது போலவே உணர்ந்தார்கள்,

கலையின் வெற்றி என்பதே படைப்பை இயற்கைக்கு நிகரான மாயத்தன்மை மிக்கதாக மாற்றுவதே என்று வாங்ஃபோ நிரூபித்துக் கொண்டிருந்தார், அவருக்குப் பொருளியல் வாழ்க்கையில் நாட்டமேயில்லை, தூரிகைகள், சைனா மை, மற்றும் ஒவியம் தீட்டும் பட்டுத்துணிகள் இவை தவிர அவரிடம்  வேறு பொருள்கள் கிடையாது, பணத்தை பெரியதாக நினைத்ததே கிடையாது,

அவரது முடிக்கப்படாத ஒவியங்களைத் தூக்கிக் கொண்டு அவரது உதவியாளராக லிங் என்ற சிஷ்யன் கூடவே அலைந்து கொண்டிருந்தான், தன்னைச் சுற்றிலும் காணப்படும் மலைகள், ஆறுகள், வசந்தகால பூக்கள் போல தனது மூட்டைக்குள்ளும் இயற்கையின் இன்னொரு உலகம் இருக்கிறது, அது காணுலகை விட அற்புதமானது என்று லிங் முழுமையாக நம்பினான்,

வாங்ஃபோவிற்கு சூரிய உதயத்தை வரைவது பிடிக்கும், இதற்காகவே அவர்கள் வேறுவேறு இடங்களில்  சுற்றியலைந்து கொண்டிருந்தார்கள். வழியில் உள்ள கிராமங்களிலிருந்த விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் விரும்பிய ஒவியத்தை வரைந்து கொடுத்து அவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டபடியே கடந்து போய்க் கொண்டிருந்தார் வாங்ஃபோ.

கதை ஒவியர் வாங்ஃபோவைப் பற்றியதாக இருந்தாலும் அதன் முக்கியக் கதாபாத்திரம் அவரது சிஷ்யன் லிங்குவே, அவன் வசதியான வீட்டைச் சேர்ந்தவன், அழகான ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டவன், அவன் மனைவியைப் பற்றி யூரிஸனார் குறிப்பிடும் விதம் கவிதையின் தெறிப்புகள் கொண்டவை

லிங்கின் மனைவி நாணலைப்போல மெல்லியவளாகவும், பாலைப்போல குழந்தைத்தனமாகவும், உமிழ்நீரைப்போல மிருதுவாகவும், கண்ணீரைப்போல உப்பாகவும் இருந்தாள்,

ஒரு நாள் தற்செயலாக மதுவிடுதியில் வாங்ஃபோவை சந்திக்கிறான் லிங், அவர் நிறங்கள் என்பது மௌனமான ஒரு மொழி என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறார், அவரது ஒவியத்திறமை கண்டு வியந்து அவருக்கு ஒத்தாசை செய்தபடியே கூடவே பயணம் செய்ய ஆரம்பிக்கிறான்,

தனது ஒவியம் வரைவதற்கு மாடல் வேண்டும் என்று லிங்கின் மனைவியை வாங்ஃபோ அழகான சித்திரமாக வரைகிறார், ஒவியத்தில் பார்த்த பெண், நிஜமான தனது மனைவியை விட அழகாக இருப்பதாக உணர்ந்த லிங் அவளை அதிகம் காதலிக்கத் துவங்குகிறான், இதனால் ஆத்திரமான லிங்கின் மனைவி மனம் உடைந்து தூக்குப் போட்டு இறந்து போய்விடுகிறாள், இந்தத் துக்கம் அவனை அலைக்கழிக்கிறது, வாங்ஃபோவும் அவனுமாக  காடு மலை ஆறு என்று சுற்றியலைகிறார்கள்

ஒரு கோப்பை கூழுக்குக் கூட ஒவியம் வரைந்து தந்த வாங்ஃபோ, பணக்காரர்கள், உயரதிகாரிகள் கொட்டும் வெள்ளிக்காசுகளுக்கு ஒவியம் வரைய மறுத்தே வந்தார்.

ஒரு நாள்  நாட்டின் புதிய பேரரசர் வாங்ஃபோவைக் கைது செய்து இழுத்துவரும்படி ஆணையிட்டார், அதனால்   காவல்வீரர்கள் அவரைத்தேடி அலைந்து முடிவில் பலவந்தமாக இழுத்துக் கொண்டு போனார்கள், மன்னரின் கோபத்திற்கு உள்ளாகும்படி தான் என்ன தவறு செய்தோம் என்று வாங்ஃபோவிற்கு புரியவேயில்லை,

புதிய மன்னரின் முன்னால் வாங்ஃபோவை கொண்டு போய் நிறுத்தினார்கள். அந்த அரண்மனை விசித்திரமானதாகயிருந்தது, அங்கே பறவைகள் பறக்க கூட அனுமதியில்லை, பூக்களின் வாசம் மன்னரின் சிந்தனைக்கு இடையூறாக இருக்கும் என்று வாசமில்லாத பூக்களைக் கொண்ட செடிகளே வளர்க்கப்பட்டிருந்தன,

அரியாசனத்திலிருந்த மாமன்னர் கோபத்துடன் நீ என்ன தவறு செய்திருக்கிறாய் என்று தெரியுமா வாங்ஃபோவிடம் கேட்டார்

வாங்ஃபோவிற்கு தனது தவறு எதுவென புரியவேயில்லை, புதிய மன்னரே சொல்லத்துவங்கினார்,

வாங்போ என் வாழ்க்கை உன்னோடு முடிச்சு போடப்பட்ட ஒன்று, எனது தந்தை உனது அரிய ஒவியங்களை வாங்கிச் சேகரித்து ஒரு அறையில் வைத்திருந்தார், அந்த அறையில் தான் சிறுவயது முழுவதும் நான் வளர்க்கப்பட்டேன், நீ வரைந்த மலைகள், ஆறுகள், மரங்கள், சூரிய உதயங்கள் தான் எனக்குத் தெரிந்த உலகம், வேறு வெளியுலகமே தெரியாது, உன் ஒவியத்தில் இருந்த ஜீவத்தன்மை என்னை மயக்கியது, அதிலேயே கிறங்கிப் போய் கிடந்தேன். அதை வியந்து வியந்து ரசித்தேன்

பிறகு உரிய வயது வந்தவுடன் என்னை அரண்மனைக்கு வெளியே உள்ள உலகை அறிந்து வர அனுமதித்தார்கள், உன் ஒவியத்தில் இருப்பது போல வசீகரமான மலையோ, கடலோ, சூரிய உதயமோ எதையும் வெளியுலகில் நான் காணமுடியவில்லை, வெளியுலகம் உயிர்ப்பேயில்லாமல் இருக்கிறது, நீ ஏதோவொரு மாயம் செய்து உன் ஒவியத்தை உருவாக்குகிறாய்,

நான் மன்னராகப் பதவி ஏற்றுக் கொண்ட போது, நான் ஆள விரும்புவது இந்த பூமியை அல்ல. நீ ஒவியத்தில் வரைந்துள்ள அந்த உன்னத உலகைத் தான் என்று தோன்றியது, ஆனால் அந்த உலகம் எங்கேயிருக்கிறது, அதற்குள் எப்படி போவது எனத்தெரியவில்லை,முடிவாக ஒன்றை கண்டுபிடித்தேன்

உன் கண்கள் தான் அந்த உலகிற்குச் செல்லும் சாலைகள், அந்த உலகினை உன் கைகள் தான் படைத்தன, எனக்கு கிடைக்காத அந்த பொய்யுலகத்தை உருவாக்கிய உன் கண்களை குருடாக்கி, உன் கைகளைத் துண்டிக்கப்போகிறேன், அதற்கு முன்பாக நீ பாதியில் விட்டு சென்ற ஒவியம் ஒன்று என் அறையிலிருக்கிறது, இளமை வேகத்தில் அதை பாதியில் விட்டு போயிருக்கிறாய் அதன் மிச்சத்தை வரைந்து முடித்துவிடு, அது வரை உன்னை உயிரோடு அனுமதிக்கிறேன் ,என்றார்,

அதைக்கேட்டு கோபமான சிஷ்யன் லிங் வாளோடு பாய்ந்தான், ஆத்திரமான பேரரசன், உன் ஒவியத்தின் மீது கிறங்கிக் கிடக்கும் லிங் தான், இந்த தண்டனைக்கான முதல்பலி என்று அவனது தலையைத் துண்டிக்க ஆணையிட்டான்,

வாங்ஃபோவின் கண்முன்னால் லிங்கின் தலை துண்டிக்கபட்டது, அப்போது கூட தனது ரத்தம் குருவின் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக லிங் குருவை விட்டு ஒரு அடி முன்னால் நகர்ந்து நின்று கொண்டான் என்று யூரிஸ்னார் எழுதும் போது லிங்கின் கதாபாத்திரம் அபூர்வமான ஒன்றாக மனதில் பதிந்துவிடுகிறது

ஒவியன் வாங்ஃபோ தனது தூரிகைகள், வண்ணங்களுடன் பாதியில் வரைந்த ஒவியத்தைக் காணச் சென்றான், ஒவியம் வரையும் போது வண்ணங்களை கலந்து தர இரண்டு அரவாணிகள் உடனிருந்தார்கள், வாங்ஃபோ தன்னை மறந்து ஒவியத்தை வரையத் துவங்கினான்,

அவனது தூரிகையில் இருந்து ஒவியம் உயிர்பெறத் துவங்கியது, அவன் வரைந்த ஒவியத்திலிருந்த கடல் வழிந்து தண்ணீர் பொங்கியோடியது, அதன் சீற்றம் பொருள்களை வாறிக் கொண்டு போனது, அப்போது கடலின் தொலைவில் இருந்து ஒரு படகில் வாங்ஃபோவின் சீடன் லிங் வந்து  கொண்டிருந்தான், அவனையும் தனது தூரிகையால் வாங்ஃபோ உயிர்பித்திருந்தார்,

அந்த படகில் வாங்ஃபோவும் ஏறிக் கொண்டார், அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் சென்று மறைந்த்து, பின்பு அந்த ஒவியம் இயல்பு நிலை பெற்றது,

மறுநாள் மன்னர் பார்க்கும் போது அந்த ஒவியத்தில் தொலைவில் செல்லும் படகு ஒன்றின் மங்கிய சித்திரம் தென்பட்டது, அதில் நிழல்போல வாங்ஃபோவும் லிங்கும் இருப்பதாகத் தோன்றியது, அறையில் வாங்ஃபோ இல்லை, அவர் தான் வரைந்த ஒவியத்தின் வழியே படகில் ஏறி நிரந்தரமாக தப்பி போய்விட்டதாக சொல்லிக் கொண்டார்கள் என்று கதை முடிகிறது

இக்கதை பழங்கதை மரபின் தொடர்ச்சி போலத் தோன்றினாலும் அதை நவீனப்படுத்துவது அதன் மையச்சரடு, அதாவது கலை அறிமுகம் செய்யும் உலகம், கண்முன் விரியும் உலகை விட வசீகரமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் அதற்கான புதிரான பதிலுமே,

ஒருவகையில் நாடோடி மனமே கலையின் மூலஊற்றாக உள்ளது,  நாடோடி மனம் என்பது இலக்கற்ற ஒன்றில்லை, மாறாக அது இயற்கையிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்ட ஒன்று, நாடோடிகள் பொருள் தேடுவதில் ஆர்வம் கொள்வதில்லை, ஆனால் உலகின் அத்தனை விந்தைகளையும், சிறப்புகளையும் தான் அறிந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள், நாடோடியின் லயிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. நாடோடிகள் வாழ்வை கொண்டாடுகிறார்கள், உயிர்துடிப்பில்லாத எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை

இக்கதையில் வரும் அரசன் ஒரு விசித்திரமான கதாபாத்திரம்,  அவன் இயற்கையை ஒவியத்தின் வழியாகவே அறிந்து கொள்ள துவங்குகிறான், ஆகவே தன் கண்முன்னே உள்ள ஒவியத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளின் வழியே தான் அவன் வெளியுலகைப்பற்றிய கற்பனையை மேற்கொண்டிருக்கிறான், ஆகவே அவனது மனம் இயற்கையை ஏதேதோ விநோதமாக கற்பனை செய்திருக்கிறது,

வெளியுலகில் இஷ்டம் போல நடமாட அவன் அனுமதிக்கப்பட்ட பிறகு, ஒவியத்தில் உள்ளது போல இயற்கை இல்லையே என்று அவன் மனம் ஏங்குகிறது, அதன் மர்மத்தை அறிந்து கொள்ள விழைகிறான்

உண்மையில் எந்த ஒவியமும் இயற்கையை அப்படியே பிரதிபலிப்பதில்லை, மாறாக இயற்கையின் நுண்மையை தனித்து அடையாளம் காட்டுகின்றது, இயற்கையின் புதிர்தன்மைக்கு எது காரணம் என்று ஒவியம் பதில் தர முயற்சிக்கிறது, இயற்கையை உள்வாங்கிக் கொள்ள கற்பனை முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, அதனால் தான் அரசனால் இயற்கையை நேரடியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை,

வாங்ஃபோவின் பாதி முடிக்கபடாத சித்திரம் என்பது மனித வாழ்க்கையைத் தான் குறிக்கிறது, எல்லா மனிதர்களது வாழ்க்கையும் பாதி முடிக்கபடாத ஒவியங்கள் தான், அதை உன்னதக்கலைஞர்கள் மட்டுமே தனது படைப்புகளின் வழியே திருத்தி எழுத முற்படுகிறார்கள், அப்போதும் அது முடிக்கப்படாத ஒவியமாகவே எஞ்சுகிறது.

வாங்ஃபோ ஒரு பௌத்த துறவியைப் போலவே இருக்கிறார், கண்ணுக்குத் தெரியாத காலம் எனும் நெருப்பு மனிதர்கள், அவர்கள் விரும்பிச் சேர்ந்த பொருள்கள், செல்வஙகள், வசிப்பிடங்கள் அத்தனை மீது படர்ந்து எரிந்து கொண்டேயிருக்கிறது என்ற பௌத்தசாரத்தை அவர் உணர்ந்திருக்கிறார்,அதனாலே எரியாத, அல்லது எரித்தாலும் புதிதாகவே இருக்கிற சூரிய உதயத்தை அவர் தனது ஆதர்சமாக எடுத்துக் கொள்கிறார், இக்கதையெங்கும் கவித்துவமான வரிகள் பளிச்சிடுகின்றன

வரிக்குதிரையின் கோடுகள் போல பளிச்சிட்டன மின்னல்கீற்றுகள்,

மௌனம் என்பது ஒரு சுவர் போன்றது.

பழைய நினைவுகளின் நீண்ட வராந்தாவில் உன்னை அழைத்துச் சென்று என் வாழ்க்கையை உனக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது

கடலில் விழும் எந்தக் கல்லும் நீலக்கல்லாக மாறிவிடும் என்று நம்ப செய்தாய்

என்பது போல எண்ணிக்கையற்ற கவித்துவவரிகள் கதையை நறுமணமிக்கதாக்குகின்றன, கவித்துமான கதைசொல்லும் முறைக்கு உதாரணமாக கேப்ரியல் கார்சியா மார்க்வெஸையே சொல்வார்கள், யூரிஸனார் அதையும் மிஞ்சிய கவித்துவத்துடன் செயல்படுவதை இச் சிறுகதை மெய்பிக்கிறது,

தமிழில் இக்கதையை வெ.ஸ்ரீராம் மிகவும் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார், சமீபமாக வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதிகளில் இந்த நூல் மிகவும் முக்கியமான ஒன்று.

சிறுகதையில் மட்டுமில்லாது நாவலிலும் யூரிஸ்னார் ஒரு சாதனையளரே, அவரது Memoirs of Hadrian நாவல் தனிமொழி போல எழுதப்பட்டிருக்கிறது, ஒரினப்புணர்ச்சியாளர் என்று கருதப்பட்ட ஹட்ரின் அரசனைப்பற்றிய இந்த நாவல் காமம் குறித்த அகக்கொந்தளிப்புகளை பேசுகிறது

ஹட்ரின் ரோமப் பேரசர்களில் முக்கியமானவர். இவரது காலத்தில் கிரேக்கம் புராதனமாக கடவுள் நம்பிக்கையை இழந்திருந்தது. இயேசுவின் வருகைக்கு முன்பான காலமிது, ஹட்ரின் ரோமை வலிமைப்படுத்திய அரசர், அவருக்கும்  ஆன்டோனியஸ் என்ற இளைஞனுமாக ஒரினச்சேர்கை உறவு பற்றியும் ஆன்டோனியஸ் மீது அவருக்கு ஏற்பட்ட காதல் எப்படி மாறுபட்டது என்பதையும் ஹட்ரீனின் இசை மற்றும் கலை சார்ந்த ரசனைகளையும் மார்க்கஸ் அர்லியேஸிற்கு எழுதிய கடிதம் வழியாக வெளிப்படுவதாக  நாவலின் வடிவம் உள்ளது.

யூரிஸ்னார் Grace Frick  தனது தோழியும் மொழிபெயர்ப்பாளருமான கிரேஸ் பிரிக்கோடு சேர்ந்து வாழ்ந்தவர், அவர்களுக்குள் லெஸ்பியன் உறவு இருந்தது என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள், பாரீஸில் வாழ்ந்த யூரிஸ்னாரை அமெரிக்கா அழைத்து வந்தவர் கிரேஸ், இருவரும் தனியே ஒரு தீவில் வீடு எடுத்து கடைசி வரை ஒன்றாக வாழ்ந்தனர், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்காகவே இந்த நாவலை யூரிஸ்னார் எழுதினார் என்கிறார்கள், பதினைந்து ஆண்டுகள் எழுதப்பட்ட இந்நாவல் பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது,

இந்த நாவலில் மட்டுமில்லாமல் யூரிஸனாரின் முக்கிய படைப்புகள் அத்தனையிலும் அதன் நாயகர்கள் ஒரினப்புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்களே, ஒரு ஆண் இன்னொரு ஆணை விரும்புவது என்பது புதிரானது , பேசித்தீர்க்க வேண்டிய அகச்சிக்கல் கொண்டது என்கிறார் யூரிஸ்னார்,

யூரிஸ்னாருக்கு விருப்பமான எழுத்தாளர் யுகியோ மிஷிமா, இவரும் ஒருபால்புணர்ச்சியாளர் என்ற குற்றசாட்டிற்கு உள்ளானவரே, மிஷிமாவின் ஒன்றிரண்டு கதைகளை வாசித்து அதில் ஆர்வமாகி அவரை முழுமையாக வாசிக்க வேண்டும் என்பதற்காக ஜப்பானிய மொழியை கற்றுக் கொண்டதாக சொல்லும் யூரிஸ்னார், மிஷிமா எழுத்தாளர்களில் ஒரு சாமுராய் என்று பாராட்டுகிறார், மிஷிமாவின் நோ நாடகங்களை யூரிஸ்னார் மொழியாக்கம் செய்திருக்கிறார்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள அலியான்சே பிரான்சிஸில் வாங்ஃபோ பற்றிய இச்சிறுகதையை மையமாக கொண்ட பொம்மலாட்டம் ஒன்றினைப் பார்த்தேன், யூர்ஸ்னாரின் கதையை மிகவும் நேர்த்தியான இசையுடன் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கி காட்டினார்கள். ஒவியன் வாங்ஃபோ போன்ற கதாபாத்திரம் இந்தியக் கதைமரபிலும் இருக்கிறார்கள், இக்கதையை உலகயுத்த காலத்தில் யூரிஸ்னார் எழுதியது தான் அதன் தனிச்சிறப்பு,

அதிகாரத்தின் கெடுபிடிகளைத் தாண்டி கலையுணர்ச்சி மனிதனை உயிர்பிக்கும் என்ற நம்பிக்கை கொண்ட சீனப்பழங்கதையான The Man Who Was Milligan யின் உந்துதலே யூரிஸ்னாரை இக்கதை எழுதச் செய்திருக்கிறது,

ஒருவனின் சிந்தனைகள் பிறக்குமிடமே அவனது உண்மையான பிறந்த இடம், அப்படிப் பார்த்தால் எனது பிறப்பிடம் என்று புத்தகங்களையே சொல்வேன் ஆகவே எனக்குப் பிறகு வாரிசுகளாகப் பிள்ளைகளை விட்டுச் செல்வதற்கு பதிலாக புத்தகங்களையே இந்த பூமியில் விட்டுசெல்வேன் என்று சொல்கிறார் யூரிஸ்னார் A Coin in Nine Hands. Fires போன்றவை யூர்ஸ்னாரின் இதர முக்கியப் படைப்புகள்.

யூர்ஸ்னாரின் உயிர்தப்பிய வாங்ஃபோ கதையின் திரைவடிவத்தை காண்பதற்கு

How Wang-Fo was saved by Rene Laloux

https://youtu.be/OAtOpSEOR3g

••••

0Shares
0