‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையின் முன்னால் நின்று கொண்டு தனது தியரத்தை விளக்கி சொல்வது போலச் சாவின் அறியப்படாத புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறான். ஒரு எழுத்தாளனாக நோபல் பரிசு பெறுவதை விடவும் ஒரு காளைச்சண்டை வீரனாக, காளையைக் கொன்ற வெற்றிக்குப் பரிசளிக்கப்படும் காளையின் காதைப் பரிசாகப் பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்’’
ஹெமிங்வேயின் இந்த வாசகங்கள் இன்றும் ஸ்பானிய காளைச்சண்டை மைதானங்களில் மேற்கோளாகச் சொல்லபட்டு வருகின்றன. மிகப்பெரிய காளைச்சண்டை மைதானமுள்ள பாம்பிலோனாவின் முகப்பில் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உருவச்சிலையிருக்கிறது. உலகிலே காளைச்சண்டை மைதானத்தின் முன்பாக வைக்கபட்டிருக்கும் ஒரு எழுத்தாளனின் சிலை ஹெமிங்வேயுடையது மட்டும்தான்
காளைச்சண்டையில் காளையும், அதனை எதிர்கொள்ள வரும் வீரனும் மட்டும் கலந்து கொள்ளவில்லை. மூன்றாவதாக ஒருவரும் அதில் பங்கு பெறுகிறார். அது தான் சாவு. தன் நிழலை மைதானமெங்கும் பரப்பியபடி சாவு கண்ணுக்குப்புலப்படாமல் ஆட்டத்தை வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருக்கிறது. காளைச்சண்டை வீரன் அரங்கிற்குள் நுழைந்ததும் அங்கிருப்பவர்கைள நோக்கி தன் தொப்பியை எடுத்து வணங்கும் போது அவன் கண்கள் ஒரு நிமிஷம் சாவைச் சந்தித்துத் தான் கவிழ்கிறது.
காளைச்சண்டையை ஸ்பெயினில் எவரும் வெறும் விளையாட்டாகக் கருதுவதில்லை. மாறாக அது ஒரு கலைநிகழ்ச்சியாகவே கருதப்படுகிறது. அங்குள்ள பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் கூடக் காளைச்சண்டை விளையாட்டுப் பகுதியில் இடம்பெறுவதில்லை மாறாக இசை, நடனப்பகுதியில் தான் வெளியாகிறது. இவ்விளையாட்டு இரு காதாபத்திரங்களின் நாடகம் போன்றது. ஒன்று காளை மற்றது வீரன். இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதும் எதிர்கொள்வதுமே இந்நாடகம். நாடகத்தின் முடிவில் ஒருவர் மட்டுமே அரங்கிலிருந்து வெளியேறுவார். ஒரு சாவுச்சடங்கை போலத் தான் காளைச்சண்டை விளையாட்டு இன்று வரை நடந்துவருகிறது.
இந்த விளையாட்டினை ஹெமிங்வே 1923ல் தனது மனைவி ஹட்லியுடன் முதன்முறையாகப் பாம்பிலோனாவில் பார்த்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பஸ்திரியாக இருந்தார். பிறக்க போகும் மகன் கர்ப்பத்திலே காளைசண்டையைப் பார்க்கிறான் என்று கேலிசெய்தபடி குதுôகலம் கொண்டார் ஹெமிங்வே அன்று அடைந்த சந்தோஷமும் ஆர்வமும் அவரை வாழ்நாள் முழுவதும் ஸ்பெயினுக்கு அழைத்தபடியிருந்தது.
காளைச்சண்டை வீரர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அதைக் கற்றுக்கொள்ளவும் அவர் ஸ்பெயினிலே தங்கிக் கொண்டார். அதுவும்ó பென்சன் அக்லியார் என்ற காளைச்சண்டை வீரர்களின் குடியிருப்பிலே தங்கினார். தினமும் காளைச்சண்டை வீரர்களின் பயிற்சியைப் பார்வையிட்டபடியும் வீரர்களது சாகசக்கதைகளைச் சேகரித்துக் கொண்டுமிருந்தார் பின்பு ஹெமிங்வே அமெச்சூர் போட்டிகளில் காளைச்சண்டையில் ஈடுபடத்துவங்கினார்.
1932ம் ஆண்டுக் காளைச்சண்டையைப் பற்றி விரிவாக Death in the afternoon என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் முழுவதும் காளைச்சண்டையின் வரலாறும் சாகசமும் பற்றியது. இதனைக் காளைச்சண்டை விளையாட்டின் வேதப்புத்தகம் என்கிறார்கள். பலமுறை காளைச்சண்டை போட்டிகள் பற்றிப் பத்திரிக்கைகளில் நேர்முக வர்ணனையாக எழுதியிருக்கிறார். லைப் பத்திரிக்கை பத்தாயிரம் சொற்களில் ஒரு காளைச்சண்டைப் போட்டி பற்றி எழுதித்தர முடியுமா என்று கேட்டதை ஒத்துக் கொண்டு, ஹெமிங்வே சரியாகப் பத்தாயிரம் வார்த்தைகளில் எழுதிய உஹய்ஞ்ங்ழ்ர்ன்ள் ள்ன்ம்ம்ங்ழ் என்ற கட்டுரை இன்றுவரை காளைச்சண்டையைப் பற்றிய சிறந்த கட்டுரையாக வாசிக்கபட்டு வருகின்றது.
ஹெமிங்வேயின் வாழ்வு ஒரு சாகசம். கடலும் கிழவனும் என்று அவரது நோபல்பரிசு பெற்ற நாவலில் வரும் சாண்டியாகோ தான் அவர். சாவு என்பது எழுதுவதற்காக நல்லதொரு கருப்பொருள் என்று ஹெமிங்வே எப்போது கூறிவந்தார். அவர் ஒரு எழுத்தாளராக அறியப்படுமளவை விட ஒரு காளைச்சண்டை வீரராக, ஒரு குத்துசண்டைக்காரனாக, ஒரு மீன்பிடிப்பவனாக, சிங்கவேட்டைக்காரனாக, யுத்தகாலச் செய்தி சேகரிப்பாளராக, மதுக்கூடங்களில் விதவிதமான மதுக்கலவைகளைத் தானே உருவாக்கி ருசிக்கும் குடியராக, வெவ்வேறு குழுக்களால் இன்றளவும் வழிபாட்டிற்குரிய கதாநாயகனை போன்ற பிம்பத்தினை அடைந்திருக்கிறார்
1954 வருடத்தின் ஜனவரி மாதம் சிங்க வேட்டைக்காக ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தார் ஹெமிங்வே. அவரோடு நான்காவது முறையாக அவர் திருமணம் செய்துகொண்டிருந்த மேரியும் உடனிருந்தார். காங்கோ, ருவாண்டோ, கென்யா நாடுகளில் சாகசப்பயணத்தை முடித்துக்கொண்டுக்கொண்டு, மார்சலெஸிலிருந்து கிளிமஞ்சரோ மலையைச் சார்ந்துள்ள ஏரிகளைப் பார்ப்பதற்காக ஒற்றை என்ஜின் உள்ள நான்கு பேர் அமரக்கூடிய விமானத்தில் பயணம் மேற்க்கொண்டார்,
விமானம் பகல் இரவாக ஏரியின் மீது சுற்றியது. நைல்நதியின் பெருக்கத்தினை விமானத்திலிருந்து பார்த்து வியந்தபடி வந்த ஹெமிங்வே ஏரியின் விளிம்பு வரை விமானத்தைச் செலுத்தும் படி சொன்னார். ஏரியைச் சுற்றும் போது தவறுதலாக ஒரு தந்திக்கம்பம் ஒன்றில் விமானம் மோதி விபத்திற்குள்ளானது. தரையிறக்க முடியாத விமானத்திலிருந்து ஹெமிங்வே துôக்கியெறியப்பட்டார். விபத்திற்குள்ளான விமானத்தைத் தேடும் பணி துவங்கியது.
பாரிசிலும் க்யூபாவிலும் இலியானஸிலும் ஸ்பெயினிலும் பத்திரிக்கைகள் ஹெமிங்வே இறந்துவிட்டார் என்று அவரது சாவைப்பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. ஏராளமான வாசகர்கள் கண்ணீர் மல்கியபடி ஹெமிங்வேக்காக இறுதிஊர்வலம் நடத்தினார்கள். இலக்கியஉலகமே ஹெமிங்வேயின் மறைவிற்காக ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தது. ஆனால் அவரே அடிக்கடி சொல்வது போன்று வாழ்வு சாவை உள்ளிடக்கியது தான், ஆனால் எளிதில் துண்டிக்கபட முடியாதது என்பது நிருபணமாவது போல நைல்நதியின் கரையோரத்தில் விபத்திலிருந்து உயிர்பிழைத்த ஹெமிங்வே தீக்காயங்களுடன் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தார்.
அதிர்ஷடவசமாக விமானத்தில் பயணம் செய்த எவரும் சாகவில்லை விமானம் மட்டுமே நொறுங்கிச் சிதறியிருந்தது. பசியும் வேதனையுடன் நைல்நதியின் கரைகளில் முதலைகளை வேடிக்கை பார்த்தடியே காட்டுகொடியைச் சவைத்துத்தின்றும், விமானத்திலிருந்து சிதிறியதில் கைப்பற்றியிருந்த ஒன்றிரண்டு உணவுப் பொருட்களைப் பகிர்ந்துகொண்டும், வெளிறிய ஆகாசத்தைப் பார்த்தபடி இரண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார். உலகம் தொலைவில் அவரது துக்கத்தில் முழ்கிகிடந்தது.
மூன்றாம் நாளின் காலை ஒரு பயணிகள் படகு ஒன்றினைக் கண்டு சப்தமிட்டு அழைத்து அதில் ஏறிக்கொண்டார்கள். படகு புதோலியா வரை வந்தது. அங்கிருந்து இரண்டு பேர் அமரக்கூடிய விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு புறப்படுவதற்காக எத்தனித்தார். ஆனால் துரதிருஷ்டம் அவரது காலை சுற்றிக்கொண்டிருந்தது. இந்த இரண்டுபேர் அமரும் விமானம் ஒடுபாதையிலே தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷடம் தன் அகன்ற இருகைகளால் அவரை வாறித் துôக்கிக்கொண்டது. இங்கும் தீக்காயம் எலும்பு முறிவு இத்தோடு தப்பினார்.
சில நாட்களுக்குப் பிறகு நாடு திரும்பும் போது வழியில் ஹெமிங்வே தனக்கு விருப்பமான வெள்ளை ரம்மை குடித்தபடியே தனது இறுதி அஞ்சலிச் செய்திகள் வந்த இதழ்கள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படித்தபடி வேடிக்கையாகக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு, நான் மிகுந்த அதிர்ஷடக்காரன் எனது இறுதியஞ்சலி செய்திகளை நானே வாசிக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்..
ஹெமிங்வே அமெரிக்கரா? ஸ்பானியரா? க்யூபா தேசத்தவரா? இல்லை பாரீசை சேர்ந்தவரா என்று முடிவு செய்ய முடியாதபடி ஒவ்வொரு தேசமும் அவரைத் தனது தேசத்தின் குரல் என்று கொண்டாடியது. இன்று வரை எந்த ஒரு அமெரிக்க எழுத்தாளனும் இந்த அளவு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெயர் பெற்றதேயில்லை. வாழ்நாளில் பாதியளவு அவர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தான் சுற்றியலைந்து கொண்டிருந்தார்.
1899ல் அமெரிக்காவின் இலியானஸில் மருத்துவரின் மகனாகப் பிறந்த ஹெமிங்வே பத்து வயதிலே அப்பாவிடமிருந்து துப்பாக்கியொன்றை பரிசாகப் பெற்றார். ஹெமிங்வேயின் அம்மா ஒரு ஒபராபாடகி. அவர் தன் குழந்தைகள் இசையில் ஆர்வம் மிக்கவர்களாக வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது அப்பாவோ வேட்டையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அப்பாவிடமிருந்து தான் வேட்டைருசி துவங்கியது.
ஒரு குத்துச்சண்டைக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டுப் பயிற்சி எடுத்து ஒரு குத்துச்சண்டையின் போது இடது கண்ணில் அடிபட்டு தற்காலிகப் பார்வை இழப்பு ஏற்பட்டது தான் அவரது வாழ்வின் முதல் விபத்து. அதன் பிறகு ராணுவப்பணிகளில், கானகவேட்டையில், சுற்றுப்பயணங்களில் என 127 முறை சிறியதும் பெரியதுமாக அவருக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கபட்ட போது கூடச் சிங்கவேட்டைக்காகப் போனபோது சிங்கம் ஒன்று அவரது முதுகெலும்பை கவ்வித் துôக்கி வீசியெறிந்து காயம்பட்டு கிடந்ததால் நேரில் பரிசை வாங்க போகவில்லை.
கிழிந்த கல்லீரல், முறிந்த முதுகுத்தண்டு, பார்வை குறைந்த இடது கண், நொய்ந்து போன இடது காது, விலா எலும்புகளில் பாதியில்லை, கால் எலும்புகளில் இரும்புராடுகள் இணைக்கபட்டிருந்தன. பொய்யான கணுக்கால் மூட்டுகள், இத்தனையும் விடவும் தீப்பற்றிய காயம் கொண்ட முகம், உடல்முழுவதும் காயத்தழம்புகள், வெளியே எடுக்கபடாத வெடிகுண்டின் மிச்சங்கள் கொண்ட சதை, இத்தனை குறைபாடுகளுக்கு ஊடாகத்தான், களிப்பும் கொண்டாட்டமுமாக ஹெமிங்வே தன் டைப்ரைட்டரில் தினமும் நான்குமணி நேரம் என ஒயாது எழுதிக் கொண்டிருந்தார். தினம் ஒரு நண்பரோடு குடித்து மகிழ்ந்தார்.
வாழ்வின் கடைசிச் சொட்டையும் அனுபவித்துவிடவேண்டும் என்பது போல நான்கு திருமணங்கள், டான்ஜூவான் போல ஊருக்கு ஒரு காதலி, மதுக்கூடங்களின் பரிசாரர்கள் அவரைக் கண்டதும் அரசனை போல வரவேற்று உபசரிப்பதும். பொதுமக்கள் papa,என்று செல்லமாக அழைத்துக் கௌரவப்படுத்துவம் நடந்தேறியது.
எழுத்தாளனாகக் கதைகள எழுதிக்கொண்டு அதில் கிடைக்கும் பெயரையும் வசதியையும் அனுபவித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல அவனது வேலை. எழுத்தாளனாக இருப்பது ஒரு சவால். அது வாழ்வில் அடைய முடியாத செயல்களின் மீது ஆர்வம் கொள்ளக்கூடியது என்று தீவிரமாக நம்பியவர் ஹெமிங்வே.
பள்ளிவாழ்க்ககை முடிந்தவுடன் கான்சாஸ் நகரில் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். முதல் உலகப்போர் ஆரம்பமானதும் செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலைக்குச் சேர்ந்து யுத்தகளத்திற்குச் சென்றார். அங்கே அடிபட்ட வீரர்களைத் துôக்கிச்செல்லும்ó போது வெடிகுண்டு வெடித்துப் பலத்தகாயமடைந்து ஆறுமாதங்கள் மருத்துவமனையிலிருந்தார். அங்கிருந்த மருத்துவஉதவியாளராக இருந்த பெண்ணைக் காதலித்தார். அதைப் பின்னாளில் பேர் வெல் டு ஆர்ம்ஸ் என்ற பெயரில் நாவலாக எழுதினார். தமிழில் போரே நீ போ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இத்தாலியில் யுத்தபணியாற்றியதற்காக வெள்ளிவிருது பெற்ற முதல் அமெரிக்கர் ஹெமிங்வே தான். பத்திரிக்கை பணியிலிருந்த போதும் ராட் வகை மீன்களைப் பிடிப்பதிலும். கானகவேட்டையிலும் ஹெமிங்வேக்கு மிகுந்த விருப்பமிருந்தது.
எதற்காக இத்தனை மிருகங்களை அவர் வேட்டையாடுகிறார் என்று கேட்டபோது மிருகங்களைக் கொல்லவில்லையென்றால் தன்னைத் தானே கொன்றுவிடக்கூடிய ஆசையை எப்படி ஒத்திப்போடுவது, அதனால் தான் வேட்டையாடுகிறேன் என்றார். ஒருவகையில் அது நிஜம்.
ஹெமிங்வேயின் அப்பா பிரபலமான மருத்துவராகயிருந்தார். ஆனாலும் வாழ்வில் ஏதோவொரு வெறுமையை உணர்ந்தவரைப்போல ஒரு நாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அந்த நிகழ்ச்சி சிறுவனாகயிருந்த ஹெமிங்வேயை ஆழமாகப் பாதித்தது.
பின்னாளில் அவரது இந்தியன் கேம்ப் என்ற கதையில் இதுபோன்ற ஒரு சம்பவம் வருகிறது. யுத்தகாலத்தில் ஒரு பெண்ணிற்கு எந்தவிதமான மருத்துவஉபகரணமும் இன்றி ஒரு மருத்துவர் பிரசவம் பார்க்கிறார். அந்தப்பெண் வேதனையால் துடிக்கிறாள். அவளது கணவன் அதே அறையில் ஒரிடத்தில் ஒளிந்து படுத்திருக்கிறான். இந்த நிகழ்ச்சிகளை மருத்துவரின் மகனான சிறுவன் பார்க்கிறான்.
குழந்தை பிறந்துவிடுகிறது. அதே நேரம் தனது கையறு நிலையை உணர்ந்த குழந்தையின் தகப்பன் தனது கழுத்தையறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். அவனது ரத்தம் தரையில் கசிந்து போகிறது. அன்றிரவு அந்த மருத்துவரின் மகன் தந்தையிடம் மூன்று கேள்விகள் கேட்கிறான்.
ஒரு குழந்தை பிறப்பது என்பது எப்போதும் இவ்வளவு வேதனைதரக்கூடியதா? இது போலப் பலரும் தற்கொலை செய்துகொள்வார்களா என்ன ? சாவு என்பது மிகுந்த வலியுண்டாக்க கூடியதா?
இந்த மூன்று கேள்விகளை ஹெமிங்வே வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டுதானிருந்தார். அவரது எல்லாப்படைப்புகளிலும் இந்தக் கேள்வி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எழுந்து கொண்டு தானிருக்கிறது.
ஒருவேளை இந்த மனப்பாங்கு தான் அவரைக் காளைச்சண்டையை நோக்கி ஈர்த்திருக்கக் கூடும். காளைச்சண்டை விளையாட்டு பலநூற்றாண்டுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. 1135ம் ஆண்டு ஆறாவது அல்போன்சாவின் முடிசூட்டுவிழாவில் காளைச்சண்டை நடைபெற்றதாகச் சரித்திர சான்றுகள் இருக்கின்றன. முன்னதாகவே கிரேக்கத்தில் மினோட்டருடன் மோதும் வீரனை பற்றிய புராணீகம் இருக்கிறது.
காளை என்பது மனித ஆசைகளின் குறியீடாகவும் அதை அடக்குவது மனித ஆசைகளை அடக்குதல் எனவுமே கிரேக்கர்கள் நம்பிவந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் காளைச்சண்டை மிகப் பிரபலமாகயிருந்தது.
ஸ்பெயினில் காளைச்சண்டை நடக்குமிடத்தைக் கோரிடா டி டோரஸ் என்கிறார்கள். ஒவ்வொரு காளைச்சண்டையிலும் மூன்று வீரர்கள் கலந்து கொள்வார்கள். மூவரும் ஆளுக்கு இரண்டு காளைகளைச் சந்திப்பார்கள். காளைச்சண்டை வீரன் மடோடர் என்று அழைக்கபடுகிறான்.
ஒரு காளைச்சண்டை வீரனுக்கு உதவி செய்வதற்கு ஐந்து உதவியாளர்களிருப்பார்கள். அவர்கள் சண்டை துவங்கும் போது காளையை ஒட்டம் காட்டுவதற்கும், கத்திகளையும் எறியீட்டிகளையும் தந்து உதவுவதற்குமிருப்பார்கள். காளைக்கு நான்கு வயதிலிருந்து ஐந்து வயதிற்குள் இருக்கவேண்டும். இதற்காக ரத்தகலப்பிலாத ஒருஇனத்துக் காளைகள் வளர்க்கப்படுகின்றன.
மூன்று அங்கங்களாக நடக்கிறது காளைச்சண்டை. முதலாவதுஅங்கம், அரங்கில் நுழையும் காளைச்சண்டை வீரன் அரங்கிலிருந்த நடுவருக்கும் பார்வையாளர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பது. இது இசையோடு கூடியது. அரங்கில் நடுவராக வந்திருப்பர் காளையை அடைத்துவைத்திருக்கும் கதவின் சாவியை ஒரு உதவியாளரிடம் தருவார். காளை அரங்கில் நுழையும். உதவியாளர்கள் காளையைப் போக்கு காட்டுவார்கள்.
இரண்டாவது அங்கத்தில் காளையை வீரன் குதிரையில் வந்தபடி சுற்றிவருவதும் அதன் மீது குத்தீட்டி எறிவதும். இந்த அங்கத்தில் குதிரையைத் தன் கொம்புகளால் குத்தி துôக்கியெறிய முயற்சிக்கும் காளை. சிலவேளைகளில் காளைச்சண்டை வீரனை தரையிலிருந்து பதினைந்து அடிகள் துôக்கியெறிப்படவும் கூடும்.
மூன்றாவது அங்கம் நேரடியாகக் காளையைச் சந்தித்து அதைக் கொல்வது. காளை அவனோடு பொருந்துவதும் அவன் காளையைத் தன் எறியீட்டி மற்றும் குத்தீட்டியால் குத்தி கொல்வது. இது தான் நாடகத்தின் உச்சகட்டம். சாவு காளையின் பெருமூச்செனச் சீறிக்கொண்டிருக்கும். அதிகமாகக் குத்தீட்டியை பயன்படுத்தாமல் ஒன்றிரண்டு முறைகளில் குத்திக் கொல்பவனே சிறந்த வீரன்.
புகழ்பெற்ற காளைச்சண்டை வீரனான எல் காரோவை பற்றி ஒரு விமர்சகர் எழுதும் போது எல்காரோ தன் எதிரில் இருக்கும் காளைகள் கண்ணாடியால் செய்யபட்டவை, அவை உடைந்துவிடக்கூடாது என்று கவனமாகக் கையாளுவது போலவும் தான் சண்டையிடுவான். அவன் காளையோடு பேசிக்கொண்டிருக்கக் கூடியவன். அது மொழியற்ற தொரு உரையாடல் என்கிறார்.
காளைச்சண்டையின் சரித்திரமும் ரத்தக்காயங்கள் நிரம்பியது. உயிர்க்கொலை எனப் பலமுறை தடை செய்யபட்டிருந்த போதும் ஸ்பெயினில் இது கலாச்சாரச் செயல்பாடாக அங்கீகரிகபட்டிருக்கிறது. போட்டியில் வெற்றி தோல்வி எனக் கணக்கிடப்படுவதோ, பரிசு வழங்கபடுவதோயில்லை. மாறாக வெற்றிபெற்ற வீரனுக்குக் காளையின் காதுகள் பரிசாகத் தரப்படுகின்றன சிறந்த வீரனுக்குக் காளையின் இரண்டு காதுகளும் வாலும் தரப்படுகின்றது. கடைசிவரைப் போராடிய காளை செத்தபிறகு பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து அதற்குத் தனது வெண்ணிற கைக்குட்டைகளை வீசி ஆரவாரம் செய்து பாராட்டைத் தெரிவிக்கிறார்கள். அது காளையை வளர்த்தவனுக்குப் பெருமை சேர்க்கிறது.
காளைச்சண்டை ஹெமிங்வேயின் எழுத்திலும் விரவி கிடக்கிறது. அவரது முதல் நாவல் The sun also rises . காளைச்சண்டையைக் காண சென்ற நான்கு இளைஞர்களைப் பற்றியது தான்.கீ இந்த நாவல் முழுவதும் விதவிதமான மதுவை குடித்தபடி காதலும் சாகசமுமாக இளைஞர்கள் சுற்றியலைகிறார்கள். இது போலவே தோற்காதவன் என்ற பெயரில் எழுதிய ஒரு குறுநாவலும் காளைச்சண்டை வீரன் ஒருவனின் வாழ்வை பற்றியதே.
தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டே காளைச்சண்டை நடந்துவந்திருக்கிறது. கலித்தொகையின் நான்காவது பகுதியான முல்லைக்கலி ஏறுதழுவதலை கொண்டாடுகின்றது. கொல்லேறு தழுவதல் என்று குறிப்பிடப்படும் இந்த வீரவிளையாட்டு அன்றைய வாழ்வின் துணிகரமாக அங்கீகரிக்கபட்டிருந்தது.
தொழுவினுள் புரிபு புரிபு புக்கப் பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு
காளைகளை அடைத்திருக்கும் வட்டாரத்திற்குள்ளே அவைகளைப் பிடிப்பதற்காக விரும்பி விரும்பி உள்ளே புகுந்த இடையர்களைத் தெரிந்து தெரிந்து காளைகள் தங்கள் கொம்பினால் குத்தின என்கிறது இப் பாடல். ஒசையின் வழியாகக் காளைச்சண்டையின் காட்சிகள் புலப்படுத்தபடுகின்றன.
தென்மாவட்டங்களில் நூற்றாண்டுகளாக நடந்துவரும் இந்த மஞ்சுவிரட்டு எனும் ஜல்லிகட்டு பற்றிய முழுமையான ஆவணப்படுத்தல் இதுவரை நடைபெறவில்லை. ஹெமிங்வேயின் மீதிருந்த ஈடுபாடு சி. சு., செல்லப்பாவை வாடிவாசல் எழுதச் செய்தது. தமிழில் ஏறுதழுவதல் பற்றி எழுதபட்ட ஒரே நாவல் அது தான் ,.
சி. சு. செல்லப்பா எழுதுவதோடு நின்றுவிடாமல் மதுரையைச் சுற்றி நடக்கும் ஜல்லிக்கட்டு முழுவதும் தனது பாக்ஸ் கேமிராவால் கறுப்புவெள்ளையில் புகைப்படமெடுத்திருக்கிறார். நேரடியாக ஒரு தமிழ் எழுத்தாளன் காளைச்சண்டையில் ஈடுபாடு கொண்டிருந்தது அவர் ஒருவர் தான்.
தென்மாவட்டங்களில் வாழ்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் ஒரு வெளிநாட்டுபயணி ஆர்வத்துடன் ஜல்லிகட்டை வேடிக்கை பார்ப்பதற்கு வருமளவு கூட, அருகாமை நகரங்களில் வசித்துக் கொண்டே இந்த விளையாட்டை நேரடியாகக் கண்டோ, உந்துதல் கொண்டோ எதையும் எழுதவேயில்லை.
ஸ்பெயினில் எழுத்தாளனை மட்டுமல்ல புகழ்பெற்ற ஒவியர்களையும் காளைச்சண்டை மிகுந்த ஈடுபாட்டிற்குள்ளாக்கியது. டாலி, கோயா, போன்ற ஒவியர்கள் காளைச்சண்டையைச் சித்திரமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக 1934 ல் ஸ்பெயினில் தங்கியிருந்த பிகாசோவை காளைச்சண்டைகள் கவர்ந்தன. அவர் காளைச்சண்டை பற்றிய ஒவியத்தினை வரைந்திருக்கிறார். அதில் ஒரு பெண் காளையை அடக்குவதாகயிருக்கும். மேலும் குதிரையும் காளையும் ஒன்றின் தலை மற்றொன்றிற்கு மாறியிருப்பது போல வரைந்திருப்பார். காளைச்சண்டை வீரர்களின் சாகசங்கள் பாடல்களாகவும் கவிதைகளாகவும் இன்றும் ஸ்பெயினில் பாடப்பட்டு வருகின்றன.
வாழ்நாள் முழுவதும் சாவுடன் பகடையாடி ஜெயித்தபடியிருந்த ஹெமிங்வே இறுதியில் 1961ம் ஆண்டு அவரது அப்பாவை போலத் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது ஹெமிங்வேயை பற்றி நூலில் விவரிக்கும் போது
‘’இந்த முறை இந்தச்செய்தி நிஜமானது. ஹெமிங்வே இறந்துவிட்டார். உண்மையில் அவர் இறந்துவிட்டார். அவரது நாவலில் வரும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் சாவைப் போலச் சர்வசாதாரணமாக அவரது மரணம் நடந்துமுடிந்துவிட்டது. என்று குறிப்பிடுகிறார். ‘’
பாம்பிலோனாவில் நடக்கவிருக்கும் காளைச்சண்டை போட்டியை பார்ப்பதற்காக இரண்டு அனுமதிசீட்டுகள் மரணத்திற்குப் பிறகு அவரது மேஜையிலிருந்து கண்டெடுக்கபட்டது. உண்மையில் வாழ்நாள் முழுவதும் ஒரு காளையாகவும் அதை வெல்லும் வீரனாகவும் இரண்டு கதாபாத்திரங்களிலும் ஹெமிங்வே ஒருவரே நடித்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. யாருக்காக மணி ஒலிக்கிறது என்பது அவரது நாவலின் தலைப்பு மட்டுமல் அவரைப்பற்றிய மனச்சித்திரமுமாகவே மிஞ்சியிருக்கிறது..
****..