நாளை மற்றுமொரு நாளே

கடந்த நான்கு நாட்களாக ஊட்டியிலிருந்தேன், எங்குத் திரும்பினாலும் ஒரே கூட்டம், நெரிசல், வாகன ஒசை. சென்னை ரங்கநாதன் தெருவிற்குள் இருப்பது போலவே உணர்ந்தேன்.

ஊட்டியின் பரபரப்பிலிருந்து தப்பி அவலாஞ்சிக்குள் போய்விட்டேன், இருபுறமும் சைப்ரஸ் மரங்கள். கண்படும் இடமெல்லாம் பசுமை, நீரோடைகள்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. அப்பர் பவானி வரை சென்று வந்தேன்.

வழியெங்கும் மிக அரிய, விதவிதமான மரங்கள். மஞ்சளும் நீலமுமாகப் பூத்துச் சொரியும் செடிகள், பவானி ஆலயத்தின் அருகே விழுந்து கொண்டிருக்கும் சிறிய அருவி, தாழ்வாக மிதக்கும் மேகங்கள், புதியதொரு உலகத்துக்குள் நடந்து திரிவது போலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் கோத்தகிரிக்குச் சென்று தோழர் எஸ்விஆரைச் சந்தித்தேன், அவரோடு எனக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலான நட்புள்ளது, அற்புதமான மனிதர், எஸ்விஆருடன் ஒரு நாள் பேசினால் போதும் ஒரு ஆண்டு எழுதுவதற்கான உத்வேகம் கூடிவிடும்.

அரசியல், சமகாலப்பிரச்சனைகள், மனித உரிமை மீறல்கள், உலக இலக்கியம், சினிமா, மேற்கத்திய இசை என அவர் பேசியதில் நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது.சிறப்பான உணவு தந்த்தோடு நிறையப் புத்தகங்களையும் பரிசாகத் தந்தார் எஸ்.வி.ஆர்.

மாலையில் அவருடன் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் ம்யூசியம் காண்பதற்காகச் சென்றிருந்தேன், ஜான்சல்லிவன் தனது முதல் பங்களாவை கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைத்தார். இடிந்த நிலையிலிருந்த அந்த வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு மறுஉருவாக்கம் செய்யப்பட்டு சல்லிவன் நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது

அங்கே சல்லிவன் எழுதிய கடிதங்கள், நினைவுப்பொருட்கள் மற்றும் அந்தக் கால ஊட்டியின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  ஊட்டி ரயில்பாதை அமைக்கபட்ட புகைப்படங்களை கண்டது சிலிர்ப்பூட்டியது.

சல்லிவன் நினைவகத்தைக் காணும் போது எனக்குக் கவிஞர் சுகுமாரன் எழுதிய வெலிங்டன் நாவல் நினைவில் வந்தபடி இருந்தது. சமீபத்தில் வெளியான மிக முக்கிய நாவலது,  ஜான் சல்லிவன் பற்றி சுகுமாரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.  குறிப்பாக சல்லிவன் மனநிலையை விவரிப்பது போல எழுதப்பட்ட இந்த வரிகள் மறக்கமுடியாதவை.

மனிதர்களை ஜெயிப்பது போல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக் கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தியாகிறதா? இந்த மலையும் வனங்களும் அப்படியான மர்மங்களை ஒளித்து வைத்திருக்கின்றனவா? அந்த அகங்காரம்தான் மலை மடிப்புகளுக்குள் நுழைந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துகிறதா?

12-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் நீலகிரி மலையை ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டது,  மைசூர் யுத்தத்தில் திப்பு தோற்றுப்போனதை அடுத்து நீலகரி ஆங்கிலேயர் வசமானது. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து நீலகிரியை ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரியத் துவங்கினார்கள்,

1819ம் ஆண்டுப் பெப்ரவரி மாதம் 22ம் நாள்,கோவை மாவட்ட ஆட்சியரான சல்லிவன் பிரான்சு நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான ழான் பாபிஸ்ட் லூயிசுடனும் இணைந்து , படகா இன வழிகாட்டியின் உதவியோடு உதகமண்டலத்தை அடைந்தார். அதன் குளிரும், அழகிய நிலப்பரப்பும் அவரை வியப்பிற்குள்ளாகியது, மூன்று வார காலம் அப்பகுதியை சுற்றிப்பார்த்த சல்லிவன் ஒரு கல்வீடு ஒன்றையும் கட்டிக் கொண்டார்.

அவரது முயற்சியால் தான் உதகமண்டலத்தில் மாற்றங்கள் உருவாகத் துவங்கின. அதன்பிறகே வெள்ளைக்காரக் குடியேற்றங்கள் துவங்கின, புதிய தரைவழிப்பாதை உருவாக்கபட்டது. பல்வேறு வகையான வண்ண மலர்கள், பழமரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு ஊட்டியில் வளர்க்கபட்டன, ஊட்டி ஏரி உருவாக்கபட்டது, தேயிலைத்தோட்டங்கள் அறிமுகமாகின.

சல்லிவன் ம்யூசியம் அவசியம் காண வேண்டிய ஒன்று, அதிலுள்ள கடிதங்களையும், ஊட்டியை பார்வையிட்ட முக்கியப் பிரமுகர்கள், கவர்னர்ஜெனரல்களின் புகைப்படங்களும், குறிப்புகளும் எழுதப்படாத கதைகளைச் சொல்கின்றன.

ஊட்டியை விடவும் கோத்தகிரியே அமைதியாகவும் நல்ல சீதோஷ்ணநிலையும் கொண்டிருக்கிறது. விட்டுவிட்டுப் பெய்யும் மழையும், உஷ்ணமில்லாத வெயிலும், இதமான காற்றும் பறவைகளின் ஒலியை தவிர வேறு ஒசையற்ற பேரமைதியும் கொண்ட கோத்தகிரி பகுதிக்குள் சுற்றிக் கொண்டிருந்தேன்

கோத்தகிரியின் சாலையோரக் கடையில் நின்றபடியே தேநீர் குடித்துக் கொண்டு மூடுபனியின் குளிரை அனுபவித்தது இதமாக இருந்தது. குளிரும் விட்டுவிட்டு பெய்யும் மழையுமாக நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை.

சென்னை திரும்புவதற்காக காரில் வந்த போது வண்டலூர் அருகே ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, ஒவ்வொரு முறையும் அந்த இடத்தில் வாகனங்கள் ஒரு மணிநேரமாவது நின்று அவதிப்பட்டே கடக்க வேண்டியுள்ளது. பல மாதங்களாக இதை நான் அனுபவித்து வருகிறேன்.

டிராபிக் போலீஸ் ஒருவர் கூட அங்கே கிடையாது.வாகன ஒட்டிகளுக்குள் ஒரு கட்டுபாடும் ஒழுங்குமுறையும் இல்லை, இடித்துத் தள்ளிக் கொண்டு நுழைகிறார்கள். இடையில் ஒரு ஆம்புலன்ஸ் கடப்பதற்கு வழிதேவைப்பட்டது. எவ்வளவு ஹார்ன் அடித்தாலும் வாகனங்கள் ஒதுங்கவேயில்லை, போராடி ஆம்புலன்ஸ் கடந்து போனது.

அந்த இடைவெளியில் ஒரு ஆம்னிபஸ் நுழைந்துவிடவே மீண்டும் பிரச்சனை. வண்டலூரிலிருந்து தாம்பரம் வருவதற்கு இரண்டு மணிநேரமானது.

வீடு வந்து சேர்ந்த போது சலிப்பும் எரிச்சலும் ஒன்றுசேர்ந்து கொள்ள நான்குநாட்களின் இனிமையும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

நாளை மற்றுமொரு நாளே என்பதை சென்னைவாசிகள் தான் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

•••

0Shares
0