ஆரணி டைம்ஸ் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாட்டில் அசோகமித்ரன் நினைவஞ்சலி கூட்டம் ஆரணியில் 08.04.2017 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரணியில் ஒரு இலக்கிய நிகழ்வில் அரங்கு நிறைய ஆட்கள் கலந்து கொண்டது பெரிய சாதனை.
நானும் பவா. செல்லதுரையும் அசோகமித்ரன் குறித்து உரையாற்றினோம். ஜி.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அன்று பகலில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமி வீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். வெகு ருசியான உணவை அளித்த நர்மதா குப்புசாமிக்கு அன்பும் நன்றியும்.
மாலை வரை அவரது வீட்டிலே இலக்கியம் சினிமா குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன்.
வேலூரிலிருந்து லிங்கன் வந்திருந்தார். அவர் ஒரு தீவிர இலக்கிய வாசகர். அவரைப் போலப் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பவர்களைக் காண்பது அரிது.
லிங்கன் வேலூரிலுள்ள தனது வீட்டில் தஸ்தாயெவ்ஸ்கியின் படத்தை வைத்து தினமும் அதற்கு ரோஜாப்பூக்களைப் போட்டு வணங்குகிறார். அவரளவு தஸ்தாயெவ்ஸ்கியை உயிராக நேசிக்கும் ஒரு மனிதரைக் காண்பது அபூர்வம்.
நிறைய இளைஞர்கள் நிகழ்வில் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி. புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கபட்டிருந்தன. பலரும் புத்தகங்களை வாங்கி வந்து கையெழுத்து வாங்கினார்கள்.
இளந்தோழர்கள் பாலா மற்றும் ஹர்ஷியோடு காரில் திரும்பினேன்.
வழி முழுவதும் இளையராஜாவின் பாடல்களை கேட்டபடியே வந்தது பெருமகிழ்ச்சியை உருவாக்கியது.
•••