தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு மாமா என்று தான் அழைப்பார்கள். பதிலுக்கு அவர்களும் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். தோப்பில் முகமது மீரான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் மாமா என்றே அழைப்பேன். அதைக் கேட்கும் போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். அந்த மாமா இன்றில்லை என்பது தாள முடியாத துயரமே.
கேரளாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்தவர்களாக வைக்கம் முகமது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுகிறார்கள். இருவரது படைப்புகளும் தமிழில் வாசிக்கக் கிடைக்கின்றன. இவர்களின் கதையுலகம் தனித்துவமானது. இஸ்லாமியர்களின் வாழ்க்கையை முறையை, மரபை, அன்பை, ஞானத்தை, சமூக மாற்றங்களுக்கு அவர்கள் செய்த பங்களிப்பைப் பதிவு செய்த இவர்களின் எழுத்து இலக்கியச் சாட்சியங்களாக் கொண்டாடப்படுகிறது
இந்த வரிசையில் தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாகத் தென்குமரி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக, வரலாற்றுப்பூர்வமாக, நேர்மையாக எழுத்தில் பதிவு செய்தவர் தோப்பில் முகமது மீரான்.
சாய்வு நாற்காலி என்ற தனது நாவலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய்ப்பட்டிணத்தில் 1944 ஆம் ஆண்டுப் பிறந்தவர்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நாவலின் வழியே இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி தனது புகழ்பெற்ற நாவல்களான துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம் ஆகியவற்றின் மூலமும், அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் போன்ற சிறுகதை தொகுப்புகள் மூலமாகவும் தனித்துவமிக்கப் படைப்பாளியாக அறியப்பட்டார்.
மத அடிப்படைவாதம் பெருகிவரும் இன்றைய சூழலில் மீரானின் எழுத்து சமய சார்புகளைக் கடந்து மனிதர்கள் எவ்வாறு ஒற்றுமையுணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சகமனிதர்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது..
குமரி மாவட்ட கடற்புற கிராமத்தின் வாழ்க்கையைத் தோப்பில் போல அதன் முன்பாக ஒருவரும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. நெய்தல் மரபின் நவீன தொடர்ச்சியாகவே அவரது எழுத்துகள் இருந்தன. அவரது எழுத்துமுறை மண் வாசனையுடன் அரபியும் மலையாளமும் கலந்து உருவானது. பேச்சு மொழியை இத்தனை அழகாக யாரும் படைப்பில் பயன்படுத்தியதில்லை.
பஷீர் தனது படைப்புகளில் மறக்கமுடியாத கதாபாத்திரங்களை உருவாக்கிக் காட்டினார். அக் கதாபாத்திரங்கள் இன்றும் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகின்றன. தமிழ் படைப்புலகில் முஸ்தபா கண்ணு, மரியம் தாத்தா, இஸ்ராயில், வடக்கு வீட்டு அஹ்மதுகண்ணு, முதலாளி .முஸ்தபாகண்ணு.. என மறக்கமுடியாத கதாபாத்திரங்களை உருவாக்கியவர் தோப்பில் முகமது மீரான்.
அவரது பெயரிலுள்ள தோப்பில் என்பதன் பின்னால் கூட ஒரு கதையிருக்கிறது. சொந்த ஊரான தேங்காய்ப்பட்டிணத்தில் அவரது வீட்டு மதிலுக்குப் பின்பக்கம் ஒரு சுடுகாடு இருந்தது. ஒதுக்கப்பட்ட அந்த இடத்தைத் தோப்பு என அழைத்தார்கள். இறந்து போனவர்களின் நினைவுகளை, அவர்கள் வாழ்க்கையில் பெற்ற சுகதுக்கங்களை, நீதி அநீதிகளை எழுத முற்படுகிறவர் என்பதால் தன் பெயரைத் தோப்பில் முகமது மீரான் என்று வைத்துக் கொண்டதாக ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
தோப்பில் கல்லூரியில் பி.ஏ. மலையாள இலக்கியம் படித்தவர். அதனால் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறார். குறிப்பாகப் பஷீரின் கதைகளை வாசித்து மயங்கி தானும் அது போல எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்குள் உருவானது.
தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். ஒரு காலத்தில் கேரள மன்னர் ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை அந்தத் தெருவில் குடிவைக்கிறார்கள் அவர்களால் உருவானது தான் அஞ்சுவண்ணம் தெரு. நாவல் அந்தத் தெருவின் கதையை விரிவாக எடுத்துச் சொல்கிறது.
ஒரு தெருவில் வாழும் மாறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை அதன் வரலாற்றுடன். தொன்மத்துடன் அழியா நினைவுகளுடன் மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் தோப்பில் முகமது மீரான்.
கரிசல் இலக்கியத்தின் பிதாமகராகக் கொண்டாடப்படும் கி.ராஜநாராயணன் கரிசல் நிலத்தை எப்படித் தன் படைப்புகளுக்கு ஆதாரமாகக் கொண்டாரோ அது போலவே தோப்பில் முகமது மீரான் கடற்கரை வாழ்க்கையைத் தனது படைப்புகளின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்.
மீரானின் கதைகள் நேரடியாக வாழ்க்கையை விவரிப்பவை. கதையின் வடிவம் பற்றியோ, கவித்துவ உரையாடல்கள் பற்றியோ அவர் கவலைப்படுகிறவரில்லை. அவரது நாவலில் வரும் பெரும்பான்மையான நிகழ்வுகள் உண்மையானவை. மறைக்கபட்ட, விலக்கபட்ட சரித்திரத்தை அவர் மீள் உருவாக்கம் செய்கிறார். அதன் வழியை உண்மையைக் கண்டறியவும் வெளிப்படுத்தவும் முயற்சிக்கிறார். தோப்பில் தன்னைக் காலத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்டு எழுதுகிறவர். ஆகவே அவரிடம் பக்க சார்புகள் எதுவும் கிடையாது.
வாழ்ந்து கெட்டவர்களையும், வறுமையோடு போராடுகிறவர்களையும், மூடநம்பிக்கைகள் பீடித்தவர்களையும், வீட்டிற்குள்ளாக ஒடுக்கி வைக்கபட்ட பெண்களின் துயரையும், வேதனையையும் மிக அழுத்தமாகத் தோப்பில் பதிவு செய்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் இன்று மதம் அரசியலாக்கப்படுவதையும் தூய்மை வாதம் பேசிக் கொண்டு மதவெறியை உருவாக்குகிறவர்களையும், மரபான எளிய வாழ்க்கையை, ஞானத்தைத் தொடர விரும்பும் இஸ்லாமியர்களையும் ஒரு சேர நம்முன்னே அறிமுகப்படுத்துகிறார். அத்தோடு இப்படித்தானிருக்கிறது இன்றைய இஸ்லாமிய வாழ்க்கை என்று ஒதுங்கிக் கொள்கிறார் தோப்பில். அவ்வகையில் அவர் நம் காலத்தின் கண்ணாடி.
வாழ்க்கையை அதன் இயல்போடு, அழகோடு ஆவணப்படுத்தியவர், தன் ஊரின் அழியா நினைவுகளைக் கலையாக்கியவர் என்ற முறையில் தோப்பில் முகமது மீரானின் எழுத்துகள் என்றும் அதற்கான தனியிடத்தைக் கொண்டிருக்கும்.
••
