டேவிட் லீனின் காந்தி

ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பாகக் காந்தி திரைப்படத்தை இயக்க விரும்பினார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் லீன்.

இதற்காக இந்தியாவிற்கு வருகை தந்து நேருவைச் சந்தித்து உரையாடி காந்தி குறித்து விரிவான ஆய்வுகளையும் செய்தார். ஆனால் அவர் விரும்பியது போலக் காந்தி திரைப்படத்தை உருவாக்க இயலவில்லை. ஆகவே காந்தியைக் கைவிட்டு தயாரிப்பாளர் விரும்பிய லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தை இயக்கினார். அப்படம் திரை வரலாற்றில் பெரும் காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

ஒரு வேளை டேவிட் லீன் காந்தி படத்தை இயக்கியிருந்தால் அது நிச்சயம் அட்டன்பரோவின் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலைப்படைப்பாக வெளியாகியிருக்கும் என்கிறார்கள் திரைவிமர்சகர்கள்.

டேவிட் லீனிற்குக் காந்தியைப் படமாக்கும் எண்ணம் உருவானதன் பின்புலம் சுவாரஸ்யமானது. அது ஒரு காதல்கதையின் பகுதி என்றும் சொல்லலாம்.

த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படத்திற்கான திரைக்கதையை டேவிட் லீன் இரண்டு ஆண்டுகள் எழுதினார். படத்தின் மையப்புள்ளியாகப் பாலம் இருப்பதால் அதை நிஜமாக உருவாக்க வேண்டும் என்று விரும்பி இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் டேவிட் லீன்.

படப்பிடிப்பிற்கான தயாரிப்பு பணிகளின் போது இலங்கையில் தங்கியிருந்த டேவிட் லீன் தற்செயலாக லீலா மேட்கர் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்தியரான லீலா டேவிட் லீன் தங்கியிருந்த ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த லீலா திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் இருந்தன. கணவரோடு ஏற்பட்ட பிணக்கின் காரணமாகப் பிரிந்து இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

லீலாவோடு நெருக்கமாகப் பழகத்துவங்கிய லீன் அவரைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தார். திரைக்கதை எழுதும் பணியை ஒத்தி வைத்துவிட்டு லீலாவோடு காதல் புரியத்துவங்கினார் டேவிட் லீன், அப்போது டேவிட் லீனின் வயது 52.

தன் வாழ்நாளில் ஆறுமுறை திருமணம் செய்திருக்கிறார் டேவிட் லீன். லீலா அவரது நான்காவது மனைவி. இவர்களின் திருமண உறவு பதினெட்டு ஆண்டுகள் நீடித்தது. தனது 82வயது வயதில் சாண்ட்ரா என்ற இளம்பெண்ணை டேவிட் லீன் திருமணம் செய்து கொண்டார். அது தான் அவரது கடைசித் திருமணம். அதன் பிறகு நான்குமாதங்களில் டேவிட் லீன் இறந்து போனார். இந்த ஆறு மனைவிகளில் லீலாவோடு இருந்த காதலும் நெருக்கமும் தன் வாழ்வில் கிடைத்த பெரிய பரிசு என்று டேவிட் லீன் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படத்திற்கான வேலைகளை விடுத்து லீலாவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதால் படத்தின் தயாரிப்பாளர் சாம் ஸ்பீகல் டேவிட் லீனை விட்டு லீலாவை பிரிக்கும் முயற்சிகளில் இறங்கினார். லீலா அமெரிக்கா சென்றிருந்த போது அவரைத் திரும்ப இலங்கைக்கு வர வேண்டாம் என்று தந்தி அனுப்பினார். இதை அறிந்த டேவிட் லீன் மிகுந்த கோபம் கொண்டு தனது சொந்த வாழ்க்கையில் சாம் தலையிடுவது மோசமான விஷயம். தான் படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் எழுதினார். சாமின் தந்தியால் லீலாவை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் இலங்கைக்கு வந்து டேவிட் லீனோடு பழகியதுடன் இந்தியாவிற்கு வந்து அவர் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மனதில் விதைத்தார்.

த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் திரைப்படம் பியர் போல் என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் நாவலை மையமாகக் கொண்டது. அவர் போர்க் கைதியாகப் பர்மாவில் பிடிபட்ட வாழ்க்கை அனுபவத்தை முதன்மையாகக் கொண்டு நாவலை எழுதியிருந்தார். இந்நாவலை சாம் ஸ்பீகல் வாசித்துப் பிடித்துப்போகவே அதைப் படமாக்குவதற்கான உரிமையைப் பெற்றுக் கொண்டார்.

படத்தின் திரைக்கதையை எழுதுவதற்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கார்ல் ஃபோர்மேன் அழைக்கபட்டார். அவர் எழுதிக்கொடுத்தவற்றைக் குப்பை என்று தூக்கி எறிந்த டேவிட் லீன், திரைக்கதையைப் பற்றிக் கார்ல் ஃபோர்மேன் மிக அழகாகப் பேசுகிறார். ஆனால் அவரால் நான் நினைத்தது போலப் படத்தின் திரைக்கதையை எழுத முடியவில்லை என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து மைக்கேல் வில்சன் என்ற திரைக்கதை ஆசிரியர் டேவிட் லீனுடன் இணைந்து திரைக்கதையை உருவாக்க நியமிக்கப்பட்டார். மைக்கேலின் எழுத்து டேவிட் லீனிற்குப் பிடித்திருந்தது. ஆனாலும் தான் விரும்பிய காட்சிகளை அவராலும் எழுத முடியவில்லை என்று தானே திரைக்கதையை உருவாக்கும் பணியில் லீன் ஈடுபட்டார்.

படத்தின் இறுதிக்காட்சியில் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என்று சாம் ஸ்பீகல் விரும்பினார். அது டேவிட் லீனிற்கும் பிடித்திருந்தது. வரலாற்றுப்பூர்வமாக அந்தப் பாலம் தகர்க்கப்படவில்லை. ஆகவே படத்தில் அதை எப்படி உருவாக்குவது என்ற பிரச்சனை திரைக்கதையில் உருவானது. இதற்காகப் பலமுறை திரைக்கதையை மாற்றி மாற்றி எழுதினார்கள்.

பாங்காக்கிலிருந்து 125 கி.மீ தூரத்தில் இருக்கும் காஞ்சனபுரியில் க்வாய் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே இன்றும் பழமையான இரும்பு பாலமிருக்கிறது. அதைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியந்து வருகிறார்கள். அந்தப் பாலம் தான் ‘த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்’ படத்தின் நிஜ உருவம். இந்தப் பாலத்தைக் கட்டும் பணியில் நிறையத் தமிழர்கள் ரத்தம் சொட்ட வேலை செய்தார்கள். சயாம் மரண ரயில் என்ற நாவல் அந்த வரலாற்றைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. டேவிட் லீன் படத்தில் தமிழர்களின் பங்கு சித்தரிக்கப்படவில்லை.

பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் திரைக்கு வந்த போது திரைக்கதை யார் பெயரில் வெளியாவது என்ற பிரச்சனை ஏற்பட்டது. டேவிட் லீன் தனது பெயர் வரவேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார். ஆனால் மைக்கேல் வில்சனும் கார்ல் போர்மேனும் தங்களது பெயர்கள் வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தயாரிப்பாளர் திரைக்கதையை எழுதாத பியர் போல் பெயரை போட்டுவிட முடிவு செய்தார். அது டேவிட் லீனுக்கு மனவருத்தம் ஏற்படுத்தியது. முடிவில் வில்சன், கார்ல் போர்மேன் பெயருடன் பியர் போல் பெயரும் படத்தில் இடம்பெற்றது.

படத்தின் திரைக்கதையில் ஒரு வரி கூட எழுதாத பியர் போல் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றார் என்பது வேடிக்கை.. ஆனால் விருதைப் பெற அவர் நேரில் செல்லவில்லை. மனசாட்சி உறுத்தியிருக்குமோ என்னவோ.

பின்னாளில் கார்ல் ஃபோர்மேன் தானே படத்தின் உண்மையான திரைக்கதை ஆசிரியர் எனப் பலரிடமும் பேட்டி கொடுத்து வந்தார். இதைக் கண்டு வெகுண்ட டேவிட் லீன் இந்தப் பொய்யை அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அவர் எழுதிக் கொடுத்த திரைக்கதை பிரதியைத் தான் பகிரங்கமாக வெளியிடுவேன் என்று சொன்னார். அதன்பிறகு கார்ல் ஃபோர்மேன் வாயைத் திறக்கவில்லை.

ஆனால் படத்தின் திரைக்கதையை எழுதிய டேவிட் லீன் ஒருபோதும் அதற்கான உரிமையைக் கோரவில்லை. தனது இறுதிக்காலத்தில் இது குறித்து அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. சிறந்த இயக்கத்திற்காக ஆஸ்கார் விருதும் கிடைத்துவிட்டது. இனிமேல் எதற்காகத் திரைக்கதைக்குச் சண்டை போட வேண்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் எழுதிய திரைக்கதை பிரதி என்னிடம் பத்திரமாகவுள்ளது. அதுவே சாட்சி என்றார்.

த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படம் இன்று காவியமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதன் உருவாக்கத்தின் போது போதுமான பணமில்லை. நடிகர்கள் முறையாக ஒத்துழைப்பு தரவில்லை. முக்கியக் கதாபாத்திரமாக நடித்த அலெக் கின்னஸ், படப்பிடிப்பில் லீனோடு கருத்து வேறுபாடு கொண்டார். படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமே அவர்கள் பேசிக் கொண்டார்கள். உள்ளூர் ஆட்களில் வெள்ளை நிறமாக இருந்தவர்களைத் தேர்வு செய்து பிரிட்டிஷ் ராணுவத்தினர் போலக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் பாலம் கட்டும் பணி நடக்கும் போது பெருமழை வந்து ஆற்றில் நீர் போக்குவரத்து அதிகமாகி பாலம் சேதம் அடைந்தது. இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், நெருக்கடிகள். அத்தனையும் தாண்டி டேவிட் லீன் படத்தை எடுத்து முடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றதோடு ஆஸ்கார் விருதுகளை அள்ளிக்குவித்தது.

ஒரு படத்தின் தோல்வி மட்டும் இயக்குநருக்கு அச்சுறுத்தல் தருவதில்லை. வெற்றியும் இயக்குநரைப் பயம் கொள்ளவே செய்கிறது என்கிறார் டேவிட் லீன். அந்தப் பயம் இதை விடச் சிறந்த படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதே.

ஆகவே பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படத்திற்குப் பிறகு என்ன கதையைப் படமாக்கலாம் என்று பல்வேறு நாவல்களை வாசித்துக் கொண்டிருந்த போது காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கலாம் என்ற எண்ணம் டேவிட் லீனிற்கு வந்தது. இதற்கு மறைமுகக் காரணம் லீலாவே.

இந்தியாவிற்கு வருகை தந்த லீன் காந்தியோடு தொடர்புடைய இடங்களைப் பார்வையிட்டார். லீலாவோடு ஒன்றாகச் சுற்றி காதல் செய்ய முடிகிறது என்பதே மறைமுகமான காரணம். இதனால் டேவிட் லீன் எங்கே தங்கியிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கபட்டது

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் தனது காதல் உறவை பற்றிக் கேட்பார்களே என்று பத்திரிக்கையாளர்களைத் தவிர்த்து வந்தார்.

காந்தி திரைக்கதையை எழுதுவதற்காக லூயி பிஷரின் காந்தி நூலை வாசித்தார். அதில் லூயி பிஷர் துவக்க அத்தியாயமாகக் காந்தியின் இறுதி ஊர்வலத்தை மிகத் துல்லியமாக, விரிவாக எழுதியிருப்பார். ஒரு திரைப்படத்திற்கான சரியான ஆரம்பக் காட்சியது. டேவிட் லீன் அக்காட்சியை அப்படியே படமாக்க வேண்டும் என்று விரும்பினார். பின்னாளில் அதே காட்சி அப்படியே அட்டன்பரோவால் படமாக்கப்பட்டது.

டேவிட் லீனின் காந்தி படத்திற்கு எமரிக் பிரெஸ்பர்கர் திரைக்கதையை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டார். இந்தியாவிற்கு வந்த எமரிக் டேவிட் லீனுடன் பயணம் செய்து காந்தி குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

காந்தி திரைப்பட உருவாக்கத்திற்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக டேவிட் லீன் நேருவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் நேருவோடு இந்திராவும் உடன் இருந்தார். நேருவின் தோற்றமும் அவரது பேச்சிலிருந்த கவித்துவமும் டேவிட் லீனை மயக்கியது.

காந்தியைப் பற்றிய படம் எடுப்பது மகிழ்ச்சியான விஷயம். காந்தி மிக எளிமையாக இருந்தார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்தார். அந்த எளிமையை உருவாக்க நிறையச் செலவு செய்ய வேண்டியிருந்தது என்று நேரு வேடிக்கையாகச் சொன்னார்.

நேருவின் இந்த வெளிப்படையான பேச்சு டேவிட் லீனிற்குப் பிடித்திருந்தது. டேவிட் லீனுக்கு நேரு விருந்து கொடுத்தார். அத்துடன் இந்திய அரசு உதவத் தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார். இந்த நம்பிக்கை டேவிட் லீனை உத்வேகப்படுத்தியது.

தனது நேர்காணலில் நேரு, இந்திரா இருவரைப் பற்றியும் டேவிட் லீன் மிக உயர்வாகப் பேசுகிறார். குறிப்பாக நேரு தனக்காக எப்படி மாம்பழத்தை துண்டாக்குவது என்று கத்தியால் ஒரு சர்ஜன் போல மிகக் கச்சிதமாக வெட்டிக்காட்டியதை மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார்.

டேவிட் லீன் படத்தில் காந்தியாக நடிக்க இருந்தவர் அலெக் கின்னஸ், அவரிடம் இந்த யோசனையை லீன் தெரிவித்தபோது தான் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவரில்லை. யாராவது இந்திய நடிகரை தேர்வு செய்யுங்கள் என்று பரிந்துரை செய்தார் கின்னஸ்.

ஆனால் டேவிட் லீன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஆகவே காந்தி படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் ஒத்துக் கொள்ளாமல் ஒன்றரை வருஷம் அலெக் கின்னஸ் காத்துக் கொண்டிருந்தார்.

டேவிட் லீன் இந்தியாவில் காந்தி படத்தின் பணிக்காக இருந்த நாட்களில் இந்தியாவின் புகழ்பெற்ற இடங்களை, வனங்களை, நகரங்களைப் பார்வையிட்டார். பல்வேறு கலைஞர்களைச் சந்தித்தார். இதுவே பின்னாளில் ‘ஏ பாசேஸ் டு இந்தியா’ படம் எடுக்கும் போது மிகவும் உதவிக்கரமாக இருந்தது. டேவிட் லீன் காட்டிய இந்திய நிலப்பரப்பு முற்றிலும் புதியது. குறிப்பாகச் சந்திரபூருக்கு ரோனி ரயிலில் வரும் காட்சி மறக்க முடியாதது.

பாசேஸ் டு இந்தியாவின் முக்கியக் காட்சிகளைப் பெங்களூர் அரண்மனையில் எடுக்க விரும்பிய டேவிட் லீன் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் தங்கிக் கொண்டார்.

இந்திய சினிமாவில் படப்பிடிப்பு கதாநாயகனின் தேதிகளுக்கு ஏற்றவாறே திட்டமிடப்படும். ஆனால் ஹாலிவுட் சினிமாவில் படப்பிடிப்பிற்கான இடம் அல்லது தளம் கிடைப்பதைக் கொண்டே படப்பிடிப்புத் திட்டமிடப்படும். குறித்த நாளில் நடிகர்கள் வந்தாக வேண்டும் என்பதே நிபந்தனை. ஆகவே படப்பிடிப்புக் களங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப படப்பிடிப்பு தேதிகளை லீன் முடிவு செய்தார்.

டேவிட் லீன் படத்தில் உதவி இயக்குநர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர வேறு எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது. குறிப்பாகப் படத்தின் கதை, திரைக்கதை குறித்த விஷயங்களை இயக்குநருடன் விவாதிப்பதை லீன் விரும்பமாட்டார். ஆகவே கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்வது போலவே உதவி இயக்குநர்கள் தங்களுக்கான வேலையை மட்டும் செய்தார்கள்.

படத்திலுள்ள தேவாலயக்காட்சியில் டேவிட் லீன் ஊட்டியிலுள்ள தேவாலயத்தில் தான் படமாக்கினார்,  ஊட்டி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

காந்தி படத்திற்கான முதலீடு மற்றும் படப்பிடிப்பிற்கான காலம், நடிகர்கள் என அனைத்தையும் திட்டமிட்ட சாம் அது நீண்டகாலத் தயாரிப்பாகிவிடும் எனப் பயந்து படத்தைக் கைவிட்டார். டேவிட் லீனிற்கும் அந்த அச்சம் இருந்தது. ஆகவே அவர்கள் உடனடியாக லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தைக் கையில் எடுத்தார்கள்.

ஒன்றரை வருஷம் காத்துக்கிடந்த அலெக் கின்னஸிற்குக் காந்தி படம் கைவிடப்பட்டதே தெரியாது. பத்திரிக்கைகளில் செய்தி வெளியான பிறகே அறிந்து கொண்டார். அந்தச் செய்தி தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது

டேவிட் லீன் தன்னை அவமதித்துவிட்டார் என்று கோபத்தில் பொங்கினார். அவரை டேவிட் லீனால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே தனது அடுத்தபடமான லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தில் லாரன்ஸ் ஆலிவர் நடிக்க வேண்டிய இளவரசன் பைசல் கதாபாத்திரத்தை அலெக் கின்னஸை நடிக்க வைத்தார். பைசலாகக் கின்னஸ் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

பீட்டர் ஒ டுல் நடித்த லாரன்ஸ் கதாபாத்திரத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மார்லன் பிராண்டோ. ஆனால் அவரது தேதிகள் கிடைக்கவில்லை என்பதால் பீட்டர் ஒ டுல் தேர்வு செய்யப்பட்டார்.

லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தில் நடிகர்கள் பலரும் சாமின் அடுத்த 8 படங்களில் அவர் சொல்லும் சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே நடித்தார்கள். ஆகவே லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தின் மூலமாக மட்டுமின்றி நடிகர்களின் ஒப்பந்தம் வழியாகவும் சாம் நிறையச் சம்பாதித்தார்.

காந்தி படத்திற்கு டேவிட் லீன் செய்த ஆய்வுப்பணிகளும் படப்பிடிப்பிற்கான கண்டறிந்த இடங்களும் நபர்களும் பின்னாளில் அட்டன்பரோவிற்கு உதவியாக இருந்தன.

அத்துடன் இந்திரா காந்தி டேவிட் லீனுற்கு உதவிகள் செய்தார் என்பதால் அவர் வழியாகக் காந்தி படத்தைத் தயாரிக்க முடியும் என்ற யோசனையும் அட்டன்பரோவிற்கு வந்தது. படத்தின் திரைக்கதையை இந்திய அரசிடம் சமர்பித்து அனுமதியும் பொருளாதார உதவியும் கேட்டார் அட்டன்பரோ. இரண்டும் அவருக்குக் கிடைத்தன. அதன்பின்பு காந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது.

1959 -இல் வில்லியம் வைலர் இயக்கிய பென் ஹர் படத்தில் இடம்பெற்ற சாரட் ரேஸ் காட்சிகளை டேவிட் லீன் படமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று விரும்பி அவரை அழைத்தார். அவருக்குப் பெரிய தொகையும் தனியான டைட்டில் கார்டும் அளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் டேவிட் லீன் அக்காட்சிகளை வில்லியம் வைலரே படமாக்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்று அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

“டேவிட் லீனின் லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தைப் பலநூறு முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு புதிய படம் துவங்கும் முன்பும் அப்படத்தைப் பார்ப்பேன். அது ஒரு இதிகாசம். திரையில் இத்தனை மாயங்களை எப்படி டேவிட் லீன் உருவாக்கினார் என்று பிரமித்துப் போகிறேன். டேவிட் லீனைப் போல ஒரு காட்சியை உருவாக்க முடிந்தால் எனது சினிமா வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்“ என்கிறார் ஸ்பீல்பெர்க்.

The Bridge on the River Kwai , Lawrence of Arabia, Doctor Zhivago Oliver Twist, A Passage to India Ryan’s Daughter என டேவிட் லீன் உருவாக்கிய படங்கள் அத்தனையும் காலத்தை வென்ற திரைச்சாதனைகளாகவே இருக்கின்றன.

இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி எதுவும் இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களை ஒரு பாலைவனத்திற்குள் அழைத்துக் கொண்டு போய் கொதிக்கும் வெயிலில் இப்படியொரு பிரம்மாண்டமான படத்தை டேவிட் லீன் எடுத்திருக்கிறார் என்றால் அது அவரது பெருங்கனவின் வெளிப்பாடே.

••

0Shares
0