எழுத்தாளர் போகன் சங்கருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டுள்ளது . சிறிய எண்கள் உறங்கும் அறை என்ற கவிதைத் தொகுப்பு இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே தொகுப்பு 2018ம் ஆண்டிற்கான கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போகன் சங்கருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன.
போகனின் கவிதைகள் தனித்துவமான கவிமொழியைக் கொண்டவை. அவரது சில கவிதைகளை வாசிக்கையில் எமிலி டிக்கின்சன் என் நினைவில் வந்து போகிறார். உள்ளார்ந்த வகையில் எமிலி டிக்கின்சனிடம் காணப்படும் தத்தளிப்பு மற்றும் தனிமை சார்ந்த உலகம் போகனிடமும் காணப்படுகிறது.
போகனின் கவிதைகள் அன்றாட உலகோடு இணைந்து வாழ முடியாத, ஆனால் வாழ விரும்புகிற, சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடையில் ஊசலாடுகிற ஒரு மனிதனின் குரலை வெளிப்படுத்துகின்றன.
உடல் தான் கவிதைகளின் மையம். உடலைக் கைக்கொள்வது, சமநிலை கொள்ளவைப்பது, காமத்தாலும் வலியாலும் நிராசைகளாலும் நினைவுகளாலும் உடலும் மனமும் கொள்ளும் கொந்தளிப்புகளைத் தனது கவிதைகளின் வழியே தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.
நகுலன் தனது படைப்புகளில் தன்னை விட்டு விலகி நின்று தன்னைப் பார்க்கக்கூடியவர். இருப்பு இன்மை இரண்டுக்கும் நடுவில் சஞ்சாரம் செய்பவர். நகுலனிடம் மீட்சியற்ற கையறுநிலையும் வெறுமையும் வெளிப்படும் ஆனால் அதே சஞ்சாரத்தை மேற்கொள்ளும் போகன் வெறுமைக்கு மாற்றாக இருப்பின் அவசியத்தை, சகல துயரங்களுடன் வாழ்வே முதன்மையானது என்கிறார்.
பிரார்த்தனை என்பது சமயம் சாராத விஷயம் என்பதாக இவரது கவிதைகளை வாசிக்கையில் உணர்ந்தேன்.
இவரது போகப் புத்தகம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கிறேன். போகப்புத்தகம் சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பு. அதில் சில கதைகளே எனக்குப் பிடித்திருந்தன. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.
கதைசொல்லும் முறையில் தான் அதிகம் போகன் அதிகக் கவனம் கொள்கிறார். மரபான சட்டகத்திற்குள் கதை அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். காரணம் அவர் ஒரு கவிஞர்.
கவிஞர்களுக்கு ஒவ்வொரு சொல்லும் முக்கியம். கவிதையின் வடிவம் முக்கியம். கதை எழுதுகிறவனுக்கோ வாக்கியங்கள் தான் முக்கியமானவை. சிறியதும் பெரியதுமான வாக்கியங்கள் தறிநெசவு செய்கிறவனின் நூலைப் போல அறுபடாமல் வந்து கொண்டேயிருக்க வேண்டும். உணர்ச்சிகளை ஊடுபாவு போல நெய்து வர வேண்டும்.
தனது சிறுகதைகளில் போகன் கவிதையைப் போலவே மையப்படிமம் ஒன்றை உருவாக்கிவிடுகிறார். சுய எள்ளலும், கட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும், சமகாலச் சூழலின் நெருக்கடிகள், அபத்தங்களை எதிர்கொள்ளும் விதமும் அவரது புனைவின் சிறப்புகள். திருநெல்வேலியும் தாமிரபரணியும் நினைவின் அழியாச்சித்திரங்களாக தொடர்ந்து வருகின்றன. கூடவே கேரள வாழ்க்கை. தமிழும் மலையாளமும் கலந்த ஒரு புனைவுலகை உருவாக்குகிறார் என்பதே இவரது சிறப்பு.
காமம் குறித்த புனிதமும் அல்லது ரகசியமும் பொதுவெளியில் பண்பாடென முன்வைக்கப்படும் போது காமத்தை கேலிக்குரிய விஷயமாக, விளையாட்டாக, புதிராகப் போகன் வெளிப்படுத்துகிறார்.
அமானுஷ்யத்தின் மீது போகனுக்குத் தீராத ஈர்ப்புள்ளது. அது பயமில்லை. விளையாட்டுப்பொருளை போல அமானுஷ்யத்தையும் கைக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை. புதுமைப்பித்தனிடமும் இப்படியான ஒரு பய விளையாட்டு இருந்தது. இதனால் தான் துறவிகள். ஹடயோகி, போன்றவற்றை புதுமைபித்தன் எழுதினார்.
“கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவியின் துன்பம், பிரபஞ்சத்தைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.” என்றொரு வரி போகனின் சிறுகதையில் இடம்பெறுகிறது. கவிதையின் கரம் கொண்டே அவர் சிறுகதைகளையும் எழுதுகிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இவரது கதைகளில் துயர் மிகுந்த பெண்களின் வாழ்க்கை சித்தரிப்புகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சதா அலைந்து கொண்டிருக்கும் ஆண்கள் வருகிறார்கள். அந்த ஆண் சினிமா, இசை, ஒவியம், இலக்கியம் என எதையெதையோ தேடி அறிந்து, எதிலும் நிம்மதி கொள்ளாமல் பெண்ணிடம் அடைக்கலம் தேடுகிறான். தற்காலிக சந்தோஷம் கிடைக்கிறது. மீண்டும் ஆணும் பெண்ணும் அவரவர் துயர உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
நோயுற்ற மனிதனின் அவஸ்தைகள். மனச்சிக்கல்கள். அதீத பயங்கள். குழப்பங்கள், கனவுகள் இவரது எழுத்தில் தொடர்ந்து வருகின்றன. அவற்றைச் சில தருணங்களில் தீவிரமாகவும் சில நேரங்களில் சுய எள்ளல் மூலம் நகைச்சுவைக்குரிய விஷயமாகவும் கையாளுகிறார்.
ஒவிய உலகமும் ஒவியர்களின் வாழ்க்கையும் போகனுக்குப் பிடித்தமான விஷயங்கள் என்பது அவரது எழுத்தை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒவியங்களின் மீதான போகனின் ஈர்ப்பிற்கு உலகைப் பெயர்கள், அடையாளங்களின் வழியின்றி நிறங்களின் வழியாகவும் நிசப்தமான காட்சி ரூபங்களாகவும் ஒவியர்களால் கையாள முடிகிறது என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.
பிகாசோ ஒரு குறிப்பிட்ட காலம் முழுவதும் நீலவண்ண ஓவியங்களாகவே தீட்டிக் கொண்டிருந்தார். Picasso’s Blue Period என அதை அழைக்கிறார்கள். அந்த ஒவியங்களில் துயரமே முதன்மையான கருப்பொருள். தலைகவிழ்ந்து நிற்கும் ஆண்கள் பெண்களைத் தான் வரைந்திருப்பார். போகனின் கதைகள். கவிதைகள் இந்த Picasso’s Blue Period போலவே உள்ளன.
பிகாசோ நீலத்திலிருந்து விடுபட்டு கோமாளிகளை, சர்க்கஸ் கலைஞர்களைச் சித்தரிக்கும் ரோஸ் வண்ண ஓவியங்களை பின்பு உருவாக்கினார். அதை Picasso’s Rose Period என்கிறார்.
போகனும் தனது Rose Period நோக்கிச் செல்வார் என்று நம்புகிறேன்
•••