“Every silence contains music in a state of gestation.” – Mia Couto
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் வெளியான போது அதன் விசித்திர கதைசொல்லும் முறைக்காக மிகவும் கொண்டாடப்பட்டது. மேஜிகல் ரியலிசம் என்ற புதிய எழுத்துமுறையின் உன்னதமாக அந்நாவல் கருதப்பட்டது.
தற்போது அப்படி நாவல் உலகில் தனது மாய எழுத்துமுறையால் தனிப்பெரும் ஆளுமையாகக் கொண்டாடப்படுகிறவர் மொசாம்பிக்கைச் சேர்ந்த மியா கௌட்டோ ( Mia Couto)
இவர் ஒரு கவிஞர், சிறுகதையாசிரியர். சமூகப்போராளி. இவரது மூன்று நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வாசித்திருக்கிறேன். மூன்றும் நிகரற்ற புனைவுகள். மார்க்வெஸைப் படித்துத் தோய்ந்தது போல மியா கௌட்டோவின் நாவல்களை வாசித்து ஆழ்ந்து போயிருக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் நான் வாசித்த சிறந்த நாவல் என்று இவரது The Tuner of Silences நாவலைச் சொல்வேன்.
இரண்டு முறை வாசித்தபோதும் மயக்கம் தீரவேயில்லை.
மார்க்வெஸ் போலவே மேஜிகல் ரியலிச எழுத்துமுறையில் தான் இவரும் நாவல்களை எழுதுகிறார். ஆனால் அதில் கூடுதலாக ஆப்பிரிக்காவின் தொன்மங்கள். நம்பிக்கைகள். வாழ்க்கை முறை, உள்நாட்டு போர் ஆகியவை இணைந்துள்ளன.
The Tuner of Silences நாவலை வாசித்து முடித்தவுடன் யுவான் ரூல்போவின் பெட்ரோ பராமோ (Pedro Paramo) நாவலைப் போலவே எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.
பெட்ரோ பரோமா லத்தீன் அமெரிக்க நாவல்களில் ஒரு கிளாசிக். யுவான் ரூல்போ ஒரு கவிஞர் என்பதால் நாவலின் ஊடாகக் கவித்துவமான வரிகள் ஒளிர்கின்றன. எது நிஜம். எது கனவு. எது கற்பனை என்று பிரித்தறிய முடியாதபடி பெட்ரோ பரோமா நாவல் எழுதப்பட்டிருக்கும்.
பெட்ரோ பரோமா நாவலில் யுவான் பிரசியாடோ என்பவன் தனது தந்தையை தேடி கொமாலா எனும் அழிந்த ஊருக்குப் போகிறான் பேய்கள் மட்டும் வசிக்கும் இடமது தன் அப்பாவான பெட்ரோ பராமோவைத் தேடி போன பிரசியாடோ. அங்கே கடந்த காலத்தின் நினைவு அழியாமல் அப்படியே இருப்பதை அறிகிறான்.
கொமாலோவில் இறந்தவர்களின் குரல்கள் கேட்கத்துவங்குகின்றன. கடந்தகால நிகழ்வுகள் மீண்டும் நடப்பது போன்ற மயக்கம் உருவாகிறது. எது கடந்தகாலம். எது நிகழ்காலம் என்ற மனக்குழப்பம் ஏற்படுகிறது. நினைவில் வாழுகிறவர்கள் உண்மையில் வாழுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. நினைவின் வழியாகக் கதைகள் விரிகின்றன. கடந்தகாலத்தில் என்ன தான் நடந்தது என்பதை விரிவாக எடுத்துச் சொல்லாமலே இறந்தவர்களின் துயரக்கதையை, நினைவுகளை ரூல்போ விளக்கியிருப்பார்.
மியா கௌட்டோவின் நாவலிலும் உலகம் அழிந்து போய்விட்டது. நாம் மட்டுமே மிஞ்சியிருக்கிறோம் என தந்தை கூறுகிறார். கைவிடப்பட்ட ஒரு இடத்தில் ஐந்தே பேர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அந்த இடம் ஜெசூசலம் என்று அழைக்கப்படுகிறது. அவர்களுடன் ஒரு கழுதை வசிக்கிறது. தலைப்பில் வருவது போலவே மௌனம் தான் கதையின் மையம்.
நிசப்தம் பல்வேறு வகையானது. நிசப்தங்கள் என்றே அதைச் சொல்லவேண்டும். ஒன்றை அறிந்து கொண்டு நிசப்தமாக இருப்பதும் அறியாமல் நிசப்தமாக இருப்பதும் ஒன்றா என்ன. அதிலும் ஒடுக்குமுறையால் மௌனமாக இருப்பதும். அதிகார திமிரில் மௌனமாக இருப்பது எப்படி ஒன்றாக முடியும். ஆணின் மௌனமும் பெண்ணின் மௌனமும் வேறு வேறில்லையா. இப்படி மௌனத்தின் பல்வேறு நிலைகளை அழகாக எடுத்துக்காட்டுகிறார் மியா கௌட்டோ.
மௌனம் என்பது ஒரு குறியீடு. இயற்கையின் மௌனமும் மனிதர்களின் மௌனமும் ஒன்றல்ல.
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மொஸாம்பிக்கின் பெய்ரியில் பிறந்த மியா கௌட்டோ இளவயதிலே கவிதைகள் எழுதத் துவங்கினார். இவரது முதற்கவிதை தொகுப்பு 1983ல் வெளியானது. மொசாம்பிக்கின் கொடுங்கோன்மை அரசை எதிர்ந்து நடந்த அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டு தீவிரமாகச் செயல்பட்டவர் மிய கௌட்டோ. இவரது முதல் நாவலான Sleepwalking Land ஆப்பிரிக்க இலக்கியத்தின் சாதனைப்படைப்பாகக் கொண்டாடப்பட்டு திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது
மியா கௌட்டோவின் சிறப்பு மாயமும் யதார்த்தமும் கலந்த கதை சொல்லும் முறை. கவித்துவ தெறிப்புகள் நிறைந்த வரிகள். The Tuner of Silences நாவலின் ஒரு இடத்தில் I had various belly buttons, I had been born countless times, all of them in Jezoosalem என்று ஒருவன் சொல்கிறான். இப்படிப் பலமுறை ஒரு மனிதன் பிறப்பதும் அதன் அடையாளமாக நிறையத் தொப்புள் இருப்பதும் கதையை விநோதமாக்குகிறது. நாவல் முழுவதும் மாயமும் நிஜமும் பிரிக்கமுடியாதபடி ஒன்று கலந்திருக்கிறது
மௌனத்தின் நாயகனாகக் கடவுள் அடையாளப்படுத்தப்படுகிறார். கடவுளுக்குக் காதுகள் கிடையாது. அவர் நம் குரலை ஒரு போதும் கேட்பதில்லை என்று நாவலில் ஒருவன் கூறுகிறான். இன்னொருவன் இப்படியொரு பதிலைத் தருகிறான்
One day, God will come and apologize to us
மனிதர்களை தான் நடத்திய வித்திற்காகக் கடவுள் ஒருநாள் நிச்சயம் பூமியில் வந்து மன்னிப்பு கேட்பார் என்று நாவலில் கூறுகிறார்கள்.
நாவலின் வேறு ஒரு இடத்தில் நட்சத்திரங்களுக்குப் பெயர்கள் வைக்கப்படுவதற்குக் காரணம் வானம் மனிதர்களுக்கானதில்லை என்ற பயமே. பெயர் வைத்துவிடுவதன் வழியே வானத்தை, நட்சத்திரங்களைத் தனதாக்கிக் கொள்ள மனிதர்கள் முற்படுகிறார்கள். பயம் தான் பெயராக மாறுகிறது என்று கூறப்படுகிறது.
ஜெசூசலம் என்ற இடத்தில் ஒரேயொரு குடும்பம் வசிக்கிறது. நகரை விட்டு வெகுதூரம் விலகிய காட்டுப்பகுதியது. மவானிடோ (Mwanito) என்ற பதினோறு வயது சிறுவன் தான் கதையின் முக்கியப் பாத்திரம். அவன் வழியாகவே நாவல் விரிவு கொள்கிறது. அவனது தந்தை சில்வெஸ்ரி விதாலிசியோ நிறைய விஷயங்களை அவனிடம் மறைக்கிறார். தனது தாய் எப்படி இறந்து போனாள். தந்தைக்கும் அவளுக்குமான உறவு எப்படியிருந்தது. தாய் ஏன் வாழ்நாள் முழுவதும் மௌனமாகவே இருந்தாள் என்பது போன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்ப மவானிடோ கேட்டுக் கொண்டிருக்கிறான்.
கடந்தகாலம் என்பதே நாம் நினைவுபடுத்துவதன் வழியாகவே அடுத்த முறைக்குத் தொடருகிறது. அதைத் துண்டித்துவிட வேண்டும். கடந்தகாலம் பெரும் சுமையானது, அதைத் தூக்கி அலைய வேண்டாம் என நினைக்கிறான் சில்வெஸ்ரி. தன்னை ஒரு மரமாக கருதிக் கொள்ளும் அவன் கழுதையோடு மட்டுமே நெருக்கமாக இருக்கிறான். கழுதைக்கு மலர்களைப் பரிசாக அளிக்கிறான். அந்தக் கழுதை ஒரு நாள் கர்ப்பமாகிறது. அதற்கு யார் காரணம் எனக் குடும்பத்தில் சச்சரவு ஏற்படுகிறது.
தனிமையின் நூற்றாண்டுகள் நாவலின் துவக்கத்தில் ஐஸ்கட்டியை முதன்முறையாகக் காணுகிறார்கள். அது போலவே இந்நாவலில் மவானிடோ தனது 11வது வயதில் தான் முதன்முறையாக ஒரு பெண்ணைக் காணுகிறான். அது வரை ஆண்கள் மட்டுமே அவனுலகில் இருந்தார்கள். பெண்ணைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் தன்னை மீறி கண்ணீர் விடுகிறான். பெண்கள் நினைவுகளைத் தூண்டுகிறார்கள். நிசப்தம் அவர்களின் ஆயுதம் என்று நாவலில் சொல்லப்படுகிறது
தனது சகோதரனைப் போலின்றி மிகவும் மௌனமாக இருக்கிறான் மவானிடோ, அதனாலே தந்தைக்கு அவனை மிகவும் பிடித்துப் போகிறது. மௌனம் தான் நினைவுகளைத் தூண்டக்கூடியது. பேச்சல்ல என்று ஒரு இடத்தில் தந்தை சொல்கிறார்.
டூன்ஜி என்ற மவானிடோவின் சகோதரன் எப்படியாவது அந்த இடத்திலிருந்து தப்பியோடி விட வேண்டும் என்று நினைக்கிறான். அவனுக்குக் கடந்தகாலத்தில் நடந்த விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. ஆனால் சொல்ல மறுக்கிறான்
மார்த்தாவின் வருகையும் பெண்களை அறியாத மவானிடோ அவளிடம் கேட்கும் கேள்விகளும் அவளுடன் டூன்ஜிக்கு ஏற்படும் உறவும் மிக அழகாக நாவலில் விவரிக்கபட்டுள்ளது.
மறைக்கபட்ட குடும்ப நிகழ்வுகளை, கடந்தகால வரலாற்றை மௌனமாகக் காத்துவருகிறான் தந்தை. ஆனால் மார்த்தாவின் வருகை அந்த மௌனத்தைக் கலைத்துவிடுகிறது.
மொசாம்பிக்கின் வரலாற்றையும் சமகால நிகழ்வுகளையும் உள்நாட்டு போரின் விளைவால் ஏற்பட்ட துயரத்தையும் ஒன்று கலந்தே மியா இந்நாவலை எழுதியிருக்கிறார்
இன்னொரு தளத்தில் இந்நாவல் வில்லியம் பாக்னரின் The Sound and the Fury நாவலை நினைவுபடுத்தியது. அந்நாவலில் வரும் பெஞ்சி கதாபாத்திரம் போலவே மவானிடோ செயல்படுகிறான். பெஞ்சி மனவளர்ச்சியற்றவன். ஆனால் மவானிடோ உலகம் அறியாமல் வளர்க்கபட்டவன். இருவரும் கனவில் சஞ்சரிப்பவர்களே.
இது மியா கௌட்டோவின் எட்டாவது நாவல். Confession of the Lioness, Woman of the Ashes, The Last Flight of The Flamingo, A River Called Time போன்றவை இவரது முக்கிய நாவல்கள். இலக்கியத்திற்கான பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவரது படைப்புகள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன.
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய முக்கிய நாவலிது.