ராம் முரளி திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் இளைஞர். உலகச் சினிமாவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். சமகால உலகச் சினிமாவின் முதன்மை இயக்குநர்கள் பலரது நேர்காணல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவரது காலத்தைச் செதுக்குபவர்கள் என்ற முதல்நூல் கவனத்திற்குரியது. தற்போது அதன் இரண்டாவது தொகுதியாகக் காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0 என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். ஜீவகரிகாலனின் யாவரும் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
ராம் முரளியின் ரசனை மிகவும் நுட்பமானது. புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியமான கட்டுரைகளை நேர்காணல்களைத் தேடி வாசித்து அதே செறிவோடு மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
ராம் முரளியின் தேர்வு என்னை வியக்கவைக்கிறது. சரியான திரைப்படங்களைத் தேர்வு செய்து பார்த்திருக்கிறார். இணையத்தின் வழியாகவும் புத்தகம் வழியாகவும் சினிமா குறித்து நிறைய வாசிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களைக் காணுவதுடன் அது குறித்து வாசிப்பது மிகவும் முக்கியமானது. இரண்டும் ஒன்று சேர்ந்து அவருக்கு நுட்பமான புரிதலை உருவாக்கியுள்ளது. இவரைப் போன்றவர்களே புதிய தமிழ் சினிமாவை உருவாக்க கூடியவர்கள்.
ஹொடரோவ்ஸ்கியின் திரைப்படங்கள் குறித்துத் தமிழில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. கவித்துவமும் மாயமும் கலந்த அந்தப் படங்கள் தனிவகையைச் சேர்ந்தவை. அவரது நேர்காணலில் ஹொடரோவ்ஸ்கி தனது யூதப்பின்புலத்தையும் படைப்பாற்றலின் பின்னுள்ள கலைநோக்கினையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார். அடிப்படையில் தனது சுயத்தைக் கண்டடைய மனிதன் மேற்கொள்கின்ற பிரயத்தனங்களே கலையாகிறது என்ற அவரது வாசகம் எனக்குப் பிடித்திருந்தது. the dance of reality . Endless poetry போன்ற அவரது படங்களைப் பார்த்தவர்களுக்கு ஹொடரோவ்ஸ்கியின் இந்த நேர்காணல் அவரைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி செய்யும்.
தியோ ஆஞ்சலோ பொலஸ் கவித்துவச் சினிமாவை உருவாக்குபவர். இவர் எவ்வாறு திரைக்கதையை எழுதுகிறார் என்பதைப் பற்றிய நேர்காணல் சுவாரஸ்யமானது. டோனி குரோவுடன் இணைந்து அவர் பணியாற்றுகிற விதம் புதுமையானது. காதலர்கள் போலவே அவர்கள் இணைந்து ஒரு திரைக்கதையை எழுதுகிறார்கள். இந்நேர்காணலில் தியோ ஒரு முக்கிய விஷயத்தைப் பதிவு செய்கிறார். இரண்டாம் தரமாகக் கருதப்படும் புத்தகங்களே திரைப்படமாக்கச் சிறந்தவை. கிளாசிக்கல் ரகப் புத்தகங்களைப் படமாக்கும் போது அது ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது.
மஜித் மஜிதியின் நேர்காணலில் தன்னால் பதேர்பாஞ்சாலி போல ஒரு படத்தை உருவாக்க முடியாது என்று கூறுகிறார் அத்தோடு கலாச்சாரச் சீர்கேடு உருவானால் அதைச் சரிசெய்யவேண்டியது அரசின் பணியாகும் என்கிறார்.
ஸ்டான்லி குப்ரிக்கின் எழுத்தும் இயக்கமும் மிக முக்கியமான கட்டுரை. எது போன்ற நாவலைப் படமாக்க முடியும் என்பதைக் குப்ரிக் விரிவாக விளக்குகிறார்
வெஸ் ஆண்டர்சன் எனக்கு விருப்பமான இயக்குநர். அவரது நேர்காணல் the grand Budapest Hotel பற்றிப் பேசுகிறது. ஸ்டீபன் ஸ்விக்கின் நாவலை எவ்வாறு அவர்கள் படமாக்க தேர்வு செய்தார்கள். எப்படித் திரைக்கதையை உருவாக்கினார்கள் என்பதை வெஸ் ஆண்டர்சன் விரிவாக எடுத்துச் சொல்கிறார்.
கோர்ட் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் நம்பிக்கை இயக்குநரான அறிமுகமான சைதன்ய தம்ஹானே நேர்காணல் எப்படி உண்மை சம்பவத்திலிருந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பதை விவரிக்கிறது
காலத்தைச் செதுக்குபவர்கள் இரண்டாம் தொகுப்பின் பெரும்பான்மைக் கட்டுரைகள் திரைக்கதை உருவாக்கம் குறித்தவையே. அதன் தேவையே இன்று அதிகமாகயுள்ளது.
சமகால உலகத்திரைப்படங்களை அறிந்து கொள்வதற்கான சாளரமாக உள்ளது காலத்தைச் செதுக்குபவர்கள்.2.0. ராம் முரளிக்கு என் வாழ்த்துகள்
••