அனுப்பபடாத கடிதம்.


The Cranes Are Flying மற்றும் I Am Cuba படங்களின் மூலம் சர்வதேசப்புகழ்பெற்ற இயக்குநராகக் கொண்டாடப்பட்ட மிகையில் கலடோசோவ் (Mikhail Kalatozov) சோவியத் சினிமாவின் தனிப்பெரும் இயக்குநராவார்.

கலடோஸோவ் பொருளாதாரம் படித்தவர், நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாகச் திரைத்துறையிற்குள் பிரவேசித்தார். நடிகராகச் சில படங்களில் பணியாற்றிய பிறகு ஒளிப்பதிவின் மீது தீவிர ஈடுபாடு உருவாகவே தன்னை ஒரு ஒளிப்பதிவாளராக உருவாக்கிக் கொண்டார். இவரது திரைப்படங்கள் யாவும் ஒளிப்பதிவின் உன்னதமாக இருப்பதே அதுவே முதற்காரணம். புதியதொரு திரைமொழியை உருவாக்கிய சாதனையாளராக உலக சினிமா இவரைக் கொண்டாடுகிறது.

இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு Dunkirk ,The Revenant போன்ற படங்களை மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இதை விடச்சிறப்பான ஒளிப்பதிவை கலடோசோவ் தனது படங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

சினிமா பயில விரும்புகிறவர்களுக்கு இவரது திரைப்படங்கள் பாடங்களே.

இந்தியாவில் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கி பெற்ற கவனத்தை இவர் பெறவில்லை. ஆனால் தார்க்கோவெஸ்கியின் முன்னோடி என்று இவரையே சொல்வேன்.

Letter Never Sent 1960ல் வெளியான திரைப்படம். வலேரி ஒசிபோவ் கதையை மையமாகக் கொண்டது

முதற்காட்சியில் ஹெலிகாப்டர் நான்கு பேரை மத்திய சைபீரியாவில் இறக்கிவிட்டுக் கிளம்பிப் போகிறது. அந்தக் காட்சியில் ஹெலிகாப்டர் ஏற்படுத்தும் அதிர்வு ஓடும் நீரில் பிரதிபலிக்கிறது. மெல்ல ஹெலிகாப்டர் உயர்ந்து உயர்ந்து கதாபாத்திரங்கள் சிறு புள்ளியாகும் வரை படமாக்கப்பட்டுள்ள விதம் வியக்கவைக்கிறது. முதற்காட்சியிலே தனது மேதைமையை அடையாளப்படுத்திவிடுகிறார் கலடோசோவ்.

ஒளிப்பதிவாளர் Sergey Urusevsky யின் ஒளிப்பதிவு படத்தினை உன்னத அனுபவமாக்குகிறது..

சைபீரியாவில் வைரம் கிடைக்கும் எனத்தேடி அலையும் நான்கு புவியியல் ஆய்வாளர்களின் கதையே இப்படம். அவர்கள் வைரத்தைத் தேடுவதன் வழியே வெளிப்படுத்தப்படாத உறவை, அன்பை, தனிமையை அழுத்தமாக உணருகிறார்கள். நான்கு பேரில் ஒரு இளம்பெண் இடம்பெறுகிறாள். அவர்கள் சைபீரியாவினுள் பயணிப்பதும், வைரம் தேடி ஆற்றுப்படுக்கையைப் பரிசோதனை செய்வதும். பாறைகளைத் தோண்டி ஆய்வு செய்வதும் மழையை, இரவைக் கொண்டாடுவதும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் தனிச்சிறப்பு long, complex, unbroken shots , கேமிராவை இப்படியெல்லாம் கையாள முடியுமா என்று வியப்பு ஏற்படுத்துகிறது.

வைரத்தை தான்யா கண்டறியும் காட்சியும் அதைத்தொடர்ந்து ஏற்படும் காட்டுத்தீயும் இதுவரை சினிமாவில் படமாக்கப்படாத காட்சிகள். இத்தனை அபூர்வமான காட்சிகளைத் திரையில் காணும் போது சிலிர்த்துவிடுகிறது. எப்படி இதைப்படமாக்கினார் என்ற வியப்பிலிருந்து மீள முடியவேயில்லை.

சபினின் நெருப்பிலிருந்து தப்பிப் பனிக்காற்றில் மாட்டிக் கொள்கிறான். பனிப்பாளம் ஒன்றில் மிதந்து வரும் காட்சியும் அவன் மீட்கப்படும் விதமும் திரைமொழியின் உச்சங்கள்.

தான்யா மற்றும் ஆண்ட்ரேயின் காதல் அழகாகப் படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. தான்யா மீது செர்ஜி கொள்ளும் ரகசிய காதலும் குழிவெட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் அவன் தன்னை மீறி அவளை நெருங்கிப் போவதும் அவள் அடையும் திகைப்பும் குழப்பமும் அவனது பின்வாங்குதலும் அபாரம். இந்த அதிர்ச்சியினை அடுத்தே அவள் வைரமிருப்பதைக் கண்டுபிடிக்கிறாள். வெளிப்படுத்தப்படாத அன்பு தான் வைரம் போலும்.

இன்னொரு காட்சியில் ஆண்ட்ரேயை கோபத்தில் தாக்குகிறான் செர்ஜி. அப்போது அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலும் ஆண்ட்ரே நடந்து கொள்ளும் விதமும் சிறப்பானது.

படத்தின் ஆய்வுக்குழுவின் தலைவரான சபினின் தனது மனைவிக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருக்கிறார். எந்தக் கடிதத்தையும் அவர் அனுப்பி வைக்கவில்லை. ஒருவகையில் அந்தக் கடிதங்கள் அவரது மனநிலையின் சாட்சியங்கள். தன்னை வருத்திக் கொண்டு அவர் வைரம் தேடுவது பணமும் புகழும் தேடியில்லை. தனது தேசத்தின் எதிர்காலமே அவரது தேடுதலுக்கான முக்கியக் காரணமாகிறது.

கனவு போலவே அவரது மனைவியின் காட்சி சித்தரிக்கப்படுகிறது. சைபீரியாவின் தனிமையில் அவளது நினைவே அவரை இயங்க வைக்கிறது

எந்த நிலக்காட்சி படத்தின் துவக்கத்தில் நம்மை ரசிக்கவைக்கிறதோ அதுவே நெருப்பு பற்றிக் கொள்ளும் போது அச்சமூட்டுகிறது. முடிவில் மழை பெய்து நெருப்பை அணைக்கிறது. அதன் பிந்திய காட்சியில் அவர்கள் கொள்ளும் ஆசுவாசமும் எப்படியாவது உயிர்தப்பிப் போய்விட வேண்டும் என்ற வேட்கையும் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது.

உலகிற்கும் அவர்களுக்குமான தொடர்பு வயர்லெஸ் ரேடியோ மட்டுமே. சோவியத் அரசின் அடையாளம் போலவே அந்த வயர்லெஸ் சித்தரிக்கப்படுகிறது. முடிவில் அவர்கள் வைரமிருப்பதைக் கண்டறிந்துவிட்ட தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பிப்பது எளிதாகயில்லை.

இயற்கை தனது ரகசியங்களை எளிதாக வெளிப்படுத்துவதில்லை. அதைத் தேடியலையும் மனிதர்கள் வாழ்க்கையும் அது போன்றதே. படத்தின் முதற்காட்சி போலவே கடைசிக்காட்சியும் அமைந்திருக்கிறது. பாதித் திறந்த கண்ணின் வழியே உலகைக் காணுகிறான் சபினின்.

மிகைல் கலடோசோவ் இப்படத்தை 1960 ஆண்டுக் கான்ஸ் திரைப்படவிழாவிற்கு அனுப்பியிருந்தார். ஆனால் திரையிடலுக்கு முதல்நாள் படம் முழுமையானதாகயில்லை என்று ரஷ்ய அரசு தரப்புப் படத்தை விலக்கிக் கொண்டது.

உலகெங்கும் திரைக்கலை பயிலும் மாணவர்களும், சமகாலத் திரைப்பட இயக்குநர்கள் பலரும் இப்படத்தைத் தங்களின் விருப்பத்திற்குரிய படமாகக் கொண்டாடுகிறார்கள். சோவியத் சினிமா தனது சாதனைகளில் ஒன்றாக இன்றும் இப்படத்தைப் பெருமையோடு உயர்த்திப்பிடிக்கிறது. கலடோசோவ்வின் சினிமா, காட்சி மொழியின் உன்னதம்.

**

0Shares
0