**
Vita and Virginia என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf,) குறித்த திரைப்படமது.
வர்ஜீனியா வுல்ஃப்பை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினா பிம்பம் வந்து போகிறது. வர்ஜீனியா வுல்ஃப்பின் தோற்றம் அன்னாவைப் போன்றது. நல்ல உயரம். சோகம் படிந்த முகம். ஆசைகளை மறைத்துக் கொண்ட கண்கள். வர்ஜீனியா வுல்ஃப்பின் வாழ்க்கையும் அன்னாவின் வாழ்க்கை போன்றதே. இவருக்கும் நல்ல கணவர்கள் கிடைத்தார்கள். ஆனால் இருவரது வாழ்வும் தற்கொலையில் தான் முடிந்தது. ஒருவகையில் வர்ஜீனியா வுல்ஃப் டால்ஸ்டாயின் கதாநாயகி தான் போலும்
வர்ஜீனியா வுல்ஃப் லண்டனின் சவுத் கென்சிங்டனில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார், அவரது தாய் ஜூலியா பிரின்செப் ஜாக்சன் , தனது முதல் திருமணத்தின் மூலமாக மூன்று குழந்தைகளைப் பெற்றார் பின்பு மணவிலக்கு பெற்று வுல்ஃபின் தந்தை லெஸ்லி ஸ்டீபனை திருமணம் செய்து கொண்டார். அவர் வழியாக ஐந்து குழந்தைகள்.
வுல்ஃப் 1897 முதல் 1901 வரை, லண்டனின் கிங்ஸ் பெண்கள் கல்லூரியில் செவ்வியல் இலக்கியம் மற்றும் வரலாறு படித்தார், பெண்ணுரிமை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தந்தையின் தூண்டுதல் காரணமாகவே அவர் எழுத துவங்கினார்.
1905 இல் அவரது தந்தையின் மரணம் வுல்ஃப்பிற்கு மனச்சிதைவை உருவாக்கியது. இதையடுத்து வுல்ஃப்பின் குடும்பம் ப்ளூம்ஸ்பரிக்குக் குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினார்கள். ஒத்த கருத்துடைய இலக்கியவாதிகள். நண்பர்களை ஒன்று சேர்த்து ப்ளூம்ஸ்பரி குழுவை உருவாக்கினர் வுல்ஃப்.
1912ல் லியோனார்ட் வுல்ஃப்பைத் திருமணம் செய்து கொண்டார். லியோனார்ட் இலங்கையின் ஆட்சிப்பணியில் இருந்தவர். பத்து ஆண்டுகள் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த அனுபவத்தை லியோனார்ட் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். அத்தோடு தனது வாழ்க்கை வரலாற்றை ஐந்து தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.
வர்ஜீனியா வுல்ஃப்பின் மனக்கொந்தளிப்பை புரிந்து கொண்டு அவருக்கு உற்ற துணையாக இருந்தார் லியோனார்ட். வர்ஜீனியா வுல்ஃப்பின் புத்தகங்களை வெளியிடுவதற்காகவே அவர் ஹோகார்த் பதிப்பகத்தை நிறுவினார். வர்ஜீனியா வுல்ஃப்பின் சகோதரி வனேசா புத்தகங்களின் அட்டை வடிவமைப்பினை செய்து வந்தார். அவர் ஒரு ஒவியர். மிக அழகாக புத்தக அட்டை வடிவமைப்பு செய்திருக்கிறார்.
வுல்ஃப்பின் மனநிலை திடீர் திடீரெனக் கொந்தளிக்ககூடியது. திடீரென முழு இரவு முழுவதும் படித்துக் கொண்டிருப்பார். சில நாட்கள் இரவெல்லாம் எழுதுவதும் உண்டு. எதையோ நினைத்து அழுவது, சோர்ந்து படுக்கையில் கிடப்பது, வீண்பயம். வீண் கவலை என மனச்சிதைவு நோய் அவரை வாட்டியது. இதனால் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி ஆறுதல் சொல்லி எழுத வைத்தவர் லியோனார்ட். 1941 ஆம் ஆண்டில், தனது 59 வயதில், வுல்ஃப் தனது கோட் பாக்கெட்டுகளில் கற்களை நிரப்பிக் கொண்டு நதியில் மூழ்கி இறந்து போனார்.
வுல்ஃப்பின் படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தப்படம் வுல்ஃப்பின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான வீடாவிற்கும் வர்ஜீனியாவிற்கும் ஏற்பட்ட நட்பையும் காதலையும் விவரிக்கிறது. இந்த உறவைப் பற்றி வர்ஜீனியா தனது ஒன்றான ஆர்லாண்டோ நாவலில் விவரித்திருக்கிறார்.
இரண்டு பெண்களுக்கும் ஏற்படும் நட்பும் காதலும் கொதிநிலையை அடைகின்றன. அவர்கள் உடலில் கிளைக்கும் மலர்களை நுகர்கிறார்கள். இரண்டு பறவைகளை போல ஒன்றாகப் பறக்கிறார்கள். ஒரு மலர் இன்னொரு மலரை தொடுவதைப் போல அணைத்துக் கொள்கிறார்கள். வுல்ஃப்பின் தனிமையை, வெறுமையை வீடா போக்குகிறார். வீடாவின் ஆழ்மனதில் இருந்த தவிப்பை வுல்ஃப் புரிந்து கொள்கிறார்.
வர்ஜீனியாவை விட அதிகம் புகழ்பெற்றிருந்த வீடா ஒரு நாள் வர்ஜீனியா நடத்தும் விருந்தில் கலந்து கொள்வதற்காக அவள் வீட்டிற்குச் செல்கிறாள். விருந்தில் வர்ஜீனியாவைச் சந்திக்கிறாள். வுல்ஃப்பின் அறிவுத்திறன் மற்றும் கூர்மையான பார்வையை அறிந்து வியக்கிறாள். அவளுடன் நட்பு கொள்ள விரும்புகிறாள். ஆனால் வுல்ஃப்போ எப்போதும் போலத் தயக்கம் பயம் காரணமாக அதைத் தவிர்க்கிறாள்.
வீடா இந்த நட்பை வலிந்து உருவாக்கிக் கொள்வதுடன் தனது புதிய படைப்பை அவளுக்கு அனுப்பி வாசிக்க வைக்கிறாள். அவளது பதிப்பகத்தின் வழியாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறாள். அதன் வழியே இவருக்கும் நட்பு உருவாகிறது
இந்த நட்பு வளர்ந்து தீவிரமாகி காதலாகிறது. வீடா & வர்ஜீனியா இருவரும் கடிதம் எழுதிக் கொள்கிறார்கள். ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். இந்த உறவு லியோனார்ட் மற்றும் வீடாவின் கணவன் நிக்கல்சன் இருவருக்கும் பிடிக்கவில்லை, வீடாவின் அம்மா இதை முற்றிலும் வெறுக்கிறாள். தனது மகளின் நற்பெயரைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்.
படம் முழுவதும் வர்ஜீனியாவின் எழுத்து போலவே கனவும் நிஜமும் ஒன்று கலந்திருக்கின்றன. குறிப்பாக இலைகளும் கொடிகளும் பரவிச் செல்லும் காட்சி அபாரம். நனவோடை எழுத்து முறையைக் கையாளும் வர்ஜீனியா காலத்தின் முன்பின்னாகச் சென்று நிகழ்வுகளை விவரிக்கக்கூடியவர். அந்த உத்தி இப்படத்திலும் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது .
வீடா & வர்ஜீனியா இருவரின் அசாதாரணப் பிணைப்பு 1922 டிசம்பரில் தொடங்கியது, வர்ஜீனியாவின் வசீகரம் மற்றும் ஆளுமை வீடாவை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களின் காதலும் நெருக்கமும் குடும்பத்தால் புரிந்து கொள்ளப்படாமல் போகவே புதிய பிரச்சனைகள் உருவாகின. நாற்பது வயதான . வுல்ஃப்பின் குழப்பமான மனநிலையும் தெறிக்கும் கவித்துவமான வாசகங்களும் சிந்தனையும் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் படம் . வுல்ஃப்பின் வாழ்க்கை சரியாகச் சித்தரிக்கவில்லை. வீடாவோடு ஏற்பட்ட உறவை முதன்மைப்படுத்திய காரணத்தால் . வுல்ஃப்பின் ஆளுமையின் ஒரு பகுதியே வெளிப்பட்டுள்ளது.
ஆங்கில இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தப் படம் பிடிக்ககூடும். ஆனால் பொது பார்வையாளர்களுக்கு இப்படம் அழுத்தமான அனுபவத்தை தராது. ஒருவேளை . வுல்ஃப்பின் படைப்புகளை வாசித்தவராக இருந்தால் படத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. நான் அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். புரிந்து கொண்டேன்
The Hours என்றொரு படம் வுல்ஃப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 2002ல் உருவாக்கப்பட்டது. அதையும் பார்த்திருக்கிறேன். அதிலும் வுல்ஃப்பின் ஆளுமை முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை.
வீடா & வர்ஜீனியா படத்தில் வுல்ஃப்பின் கணவர் மிகச் சரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவர் வர்ஜீனியாவின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். படத்தின் ஒரு காட்சியில் வர்ஜீனியா எழுதிக் கொண்டிருக்கும் அறை முன்பு அவர் காத்துக் கொண்டிருக்கிறார். கணவராகவே இருந்தாலும் வுல்ஃப் எழுதிக் கொண்டிருக்கும் போது கதவைத் தட்டக்கூடாது என்கிறார். அந்த அளவு சுதந்திரமும் அன்பும் கொண்டவராகவே லியோனார்ட் இருந்திருக்கிறார்.
வுல்ஃப்பின் நாவல்களும் கட்டுரைகளும் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. வுல்ஃப்பின் காதலும் நட்பும் வெளிப்படையானது. இது குறித்த கடிதங்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு எழுத்தாளர்களின் மறுபக்கத்தைக் காட்டுகின்றன என்ற அளவில் வீடா & வர்ஜீனியா பார்க்க வேண்டிய திரைப்படமே.
••
21/12/2019