2019ன் சிறந்த புத்தகங்கள்- 2

வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன்.
ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை.
கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன.
சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே தோன்றுகிறது.
தனது அன்றாட உலகிற்குள் கரைந்துவிட மறுக்கும் ஒருவனின் போராட்டங்கள் அவன் நினைவுகளின் வழியே மீள் உருவாக்கம் கொள்கின்றன. எதிலும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத தனிமையும் தவிப்பும் கொண்டவனின் குரலில் தான் இக்கவிதைகள் வெளிப்படுகின்றன.
குரூரம் அவரது கவிதைகளில் புதிய வெளிப்பாடு கொள்கிறது. காமத்தின் அலைக்கழிப்பு  கவிதைகளில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவர் உடலினை புனிதப்படுத்தவில்லை., மாறாக உடலென்பது காமத்தின் வானகம் என்றே அடையாளப்படுத்துகிறார்.
இந்த ஆண்டிற்கான ஆத்மாநாம் விருது பெற்ற வெய்யிலுக்கு என் வாழ்த்துகள்.
வெய்யிலின் அக்காளின் எலும்புகள் வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய கவிதைகளைக் கொண்டிருக்கின்றன.
0Shares
0