புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடியதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், அன்பைப் பெற்றதும் மறக்க முடியாதது. இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் என்ன நன்றி சொல்லிவிட முடியும்.
என் கைகளைப் பற்றிக் கொண்டு வாசகர்கள் பேசிய சொற்கள் தான் என் எழுத்திற்கான உண்மையான அங்கீகாரம். விருது. இந்த அன்பின் துணை தான் ஒரு எழுத்தாளனாக என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
இந்த ஆண்டு நிறைய இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் உற்சாகமாக இலக்கியம் பேசினார்கள். சினிமா பற்றி விவாதம் செய்தார்கள். சொந்த வாழ்வின் துயரம் பற்றிக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள். மரத்தின் நிழல் மௌனமாக எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருவது போன்றதே எனது பணி.
தனது இரண்டு குழந்தைகளுடன் கண்காட்சிக்கு வந்த ஒரு பெண் என்னை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருவதாகச் சொல்லும் போது அவரது கைகள் தன்னை அறியாமல் நடுங்கியதையும், குரல் உடைந்து விம்மியதையும் கண்ட போது ஒரு சகோதரனைப் போல அவரைத் தேற்றினேன். அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. மௌனமாக என் கையைப் பிடித்தபடியே நின்றிருந்தார். அந்தப் பற்றுதலின் வழியே ஆயிரமாயிரம் சொல்லப்படாத விஷயங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது.
இவரைப் போல எனக்கு ஓராயிரம் சகோதரிகள். ஆசி தரும் அன்னைகள். ப்ரியம் காட்டும் மகளிருக்கிறார்கள். அவர்கள் தான் என் எழுத்தின் ஆதாரம்.
எளிய மக்களில் ஒருவனாக நான் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தேன். அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தேன். எளிய மக்களைப் பற்றித் தான் அதிகமும் எழுதினேன். அவர்களில் ஒருவனாகவே என்றுமிருப்பேன்.
புத்தகத் திருவிழாவில் எனது உரைகளைப் பதிவு செய்து வெளியிட்ட ஸ்ருதி டிவிக்கும், எனது நேர்காணலை, செய்திகளை வெளியிட்ட சன் டிவி, நியூஸ்7, நியூஸ்18, கலைஞர் டிவி, புதிய தலைமுறை, ஜெயா டிவி, பொதிகை, ராஜ் டிவி, பாலிமர், தந்தி டிவி, மக்கள் டிவி, கேப்டன், பெப்பர்ஸ், தினமணி, விகடன், தி இந்து தமிழ் நாளிதழ், குங்குமம், அந்திமழை, தினகரன், தினத்தந்தி, தினமலர், தீக்கதிர், டைம்ஸ் ஆப் இந்தியா, பிபிசி, பண்பலை ரேடியோ, மற்றும் யூடியூப் சேனல்கள். இணைய இதழ்களுக்கும் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இலங்கையிலிருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்கள். வாசகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வருகை தந்த அன்பிற்குரிய வாசகர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள். பத்திரிக்கையாளர்கள், ஓவியர்கள். மருத்துவர்கள், அரசு உயரதிகாரிகள், வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் நன்றி.
தேசாந்திரி பதிப்பக அரங்கினைத் திறம்பட நடத்திய அன்புகரன். ஒவியா இருவருக்கும் அன்பும் நன்றியும்
புத்தக வடிவமைப்பில் துவங்கி இறுதி நாள் அரங்கினைக் காலி செய்து வருவது வரையான அத்தனை பணிகளையும் சிறப்பாக ஏற்று நடத்திய அன்பு ஹரிபிரசாத், கபிலா காமராஜ் , உஷா, குரு, விக்கி, ரமணி பிரிண்ட்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
பதிப்பகப் பணிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் நண்பர் சண்முகம், ஆடிட்டர் சந்திரசேகர் , பாரதி ஆகியோருக்கும் மிகுந்த நன்றிகள்.
புத்தகத் திருவிழாவைச் சிறப்பாக ஒருங்கிணைந்த பபாசிக்கு மனம் நிரம்பிய நன்றிகள்.
நன்றி நண்பர்களே. இந்தப் புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி என்ற எனது புதிய பதிப்பகத்தை ஆதரித்து சீரான வளர்ச்சியடைய உதவியிருக்கிறீர்கள்.
நான் தொடர்ந்து எழுத உற்சாகம் கொடுத்திருக்கிறீர்கள்.
நாம் இணைந்து பயணிப்போம். இணைந்து செயல்படுவோம்.