நேற்று விகடன் நம்பிக்கை விருது விழாவில் அலெக்ஸ் பால் மேனன் IAS அவர்களைச் சந்தித்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சில தினங்களுக்கு முன்பாக அவர் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கிற்கே வந்திருந்தார் என்றார்கள். அன்று சந்திக்க முடியவில்லை.
ஆனால் நேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு தேடித்தேடி படித்திருக்கிறார். இலக்கியத்தின் மீது எவ்வளவு பற்றுதல் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பழங்குடி மக்கள் நிரம்பிய பகுதியில் பணியாற்றியவர் என்பதால் அவரது பேச்சில் பழங்குடி பண்பாடு குறித்த ஆழ்ந்த புரிதலும் அனுபவங்களும் வெளிப்பட்டது.
மகாபாரதம் ஏன் கிரேக்க இதிகாசங்கள் அளவிற்கு உலகின் கவனத்தினைப் பெறவில்லை என்பது குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். கிரேக்க இதிகாசங்கள் மதத்தோடு பிணைக்கப்படவில்லை. அவை தனித்த இலக்கியபிரதிகளாக அடையாளப்படுத்தபடுகின்றன. அதுவும் யுத்தவாழ்க்கையின் நினைவுகளை முன்வைக்கின்றன என்பதால் அது உலகெங்கும் எளிதாக அறியப்படுகின்றன. மகாபாரதம் இந்தியப் பண்பாட்டின் அடையாளம். ஒருவகையில் இந்தியாவின் ஞாபக களஞ்சியம். ஆகவே இந்தப் பண்பாடும் அடையாளங்களும் நம்பிக்கைகளும் அறியாத ஒருவனுக்கு இதன் மேன்மையை அறிந்து கொள்ள முடியாது என்றேன்.
அவருடன் உரையாடிக் கொண்டிருந்தது நீண்ட காலம் சந்திக்காமல் போன ஒரு நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தது போலவே இருந்தது. இப்படி ஒரு சிலருடன் தான் மனநெருக்கம் அமைவதுண்டு..
தனது அலுவல் காரணமாக நாளை சத்தீஸ்கர் கிளம்புவதாகச் சொன்னார். இன்னொரு முறை சற்றே ஒய்வாக வாருங்கள் சந்திப்போம் என விடை கொடுத்தேன். அவருடன் பேசுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் நிறையவே இருக்கிறது. அறிவார்ந்த தோழமை தான் மகிழ்ச்சியின் பிறப்பிடம். அலெக்ஸ் பால் மேனன் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.