எழுத்தாளனின் விசித்திரவுலகம்.

ஜேவியர் மரியாஸ் (Javier Marías) ஒரு ஸ்பானிஷ் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர். அவரது படைப்புகள் 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அவரது Written Lives என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன். இது தாமஸ் மான், ரில்கே, ஆர்தர் கானன் டாயல், இவான் துர்கனேவ், ஜுனா பார்ன்ஸ், எமிலி ப்ராண்டே, மால்கம் லோரி மற்றும் கிப்ளிங் உள்ளிட்ட இருபத்தைந்து எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும்

எழுத்தாளர்களின் அறியப்படாத சொந்த வாழ்க்கை குறித்தும் அவரது ஆளுமையின் தனித்துவத்தையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் Clavesde razón práctica என்ற ஸ்பானிஷ் இதழில் பத்தியாக வெளியாகியிருக்கிறது.

வில்லியம் பாக்னர் பற்றிய கட்டுரையில் பாக்னரின் இளமைக்காலம் குறித்தும் அவருக்குக் குதிரைகள் மீது இருந்த தீவிர ஆர்வத்தையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். பாக்னர் தனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிக்கவே மாட்டார்.  காசோலை இணைத்துள்ள பதிப்பாளரின் கடிதத்தை மட்டுமே பிரிப்பார். அதுவும் செக்கை மட்டும் எடுத்துக் கொண்டு இணைக்கப்பட்ட கடிதத்தைத் தூக்கி எறிந்துவிடுவார். இப்படி வாசிக்கப்படாத பாராட்டுக் கடிதங்கள் அவரிடம் ஆயிரக்கணக்கிலிருந்தன. As I Lay Dying நாவலை பாக்னர் electrical power plant.ல் பணியாற்றிய காலத்தில் இரவுப்பணியின் போது ஆறு வாரத்தில் எழுதி முடித்தார். இது போலச் சில காலம் தபால் நிலையத்தின் குமாஸ்தாவாகப் பாக்னர் வேலை செய்தார். அப்போது புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்தியதால் எவராவது ஸ்டாம்பு வாங்க வந்தால் இல்லை என்று துரத்திவிடுவார். இதனால் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்கிறார் மரியாஸ்

அவருக்கும் வில்லா கேதர் என்ற பெண் எழுத்தாளருக்குமான சண்டை மிகவும் பிரபலமானது. இருவரும் ஒருவரையொருவர் திட்டி கடிதம் எழுதிக் கொண்டார்கள். Don Quixote நாவலை அடிக்கடி பாக்னர் படிப்பது வழக்கம் என்கிறார் மரியாஸ் அந்தக் கட்டுரையில் பிறந்து ஐந்து நாளில் இறந்து போன மகளின் சவப்பெட்டியை ஒற்றை ஆளாகப் பாக்னர் கொண்டு செல்லும் காட்சியை விவரிக்கிறார். அது மறக்கமுடியாத நிகழ்வு.

எழுத்தாளர் ஜோசப் கான்ராட் அறையில் அமர்ந்து எழுதமாட்டார். தோட்டத்தில் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தான் எழுதுவார். எப்போதும் மங்கலான கோடிட்ட குளியலறை உடையைத் தான் அணிந்திருப்பார்.இதைப் பற்றி வீட்டில் உள்ளவர்கள் திட்டினாலும்  கவலைப்பட மாட்டார்.

கான்ராட் மிகுந்த ஞாபகமறதி கொண்டவர். எப்போதும் ஒரு சிகரெட் அவரது விரல்களுக்கு இடையில் எரிந்து கொண்டேயிருக்கும். பலநேரங்களில் சிகரெட்டினை அணைக்க மறந்து அப்படியே போட்டுவிடுவார் இதனால் துணிகள் காகிதங்கள் எரிந்து போவது வழக்கம்.

கான்ராட் எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தனது பேனாவை நழுவவிட்டுவிடுவார். கீழே விழுந்த பேனாவைக் குனிந்து எடுக்கமாட்டார். வெறும் கையால் எழுதிக் கொண்டேயிருப்பார். சில நிமிடங்களுக்குப் பிறகு பதற்றமும் கோபமும் ஒன்றுசேர அவர் வெறுங்கையால் மேஜையைத் தட்டிக் கொண்டேயிருப்பது வழக்கம் என்கிறார் மரியாஸ்

எழுத்தாளர் ஐசக் டெனிசன் மர்லின் மன்றோவை சந்திக்க விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, நாவலாசிரியர் கார்சன் மெக்கல்லர்ஸ் இதற்கான ஏற்பாட்டினை செய்து கொடுத்தார். மர்லின் மன்றோ தனது கணவர் ஆர்தர் மில்லருடன் மதிய உணவிற்கு டெனிசனை அழைத்தார். பிரபலமான உணவகம் ஒன்றில் இந்தச் சந்திப்பு நடந்தது. அந்த மதிய உணவின் போது கடற்சிப்பிகளையும் இறால்களையும் ஷாம்பெயினுடன் ஆசையாகச் சாப்பிடும் டெனிசனைக் கண்டு வியந்த மில்லர் சிப்பிகளை யாரும் இவ்வளவு ஆசையாகச் சாப்பிடுவதில்லை. இதில் ஏன் இவ்வளவு விருப்பம் என்று கேட்டார். சிப்பிகள் என் உடம்பிற்கு நல்லது செய்கின்றன. அதற்கு மேல் ஒருகாரணமும் இல்லை என்றார் டெனிசன். சிபிலிஸ் எனப்படும் பால்வினைநோய் தாக்கி தொடர்சிகிட்சைகள் பெற்றவர் ஐசக் டெனிசன். இதனால் அவரது வாழ்க்கையில் பாலுறவு என்பது குறுகிய காலத்துடன் முடிந்து போனது.

ஜேம்ஸ் ஜாய்ஸ் தனது வாழ்க்கையில் பல்வேறு துரதிர்ஷ்டங்களைச் சந்தித்தவர், ஆனால், பொதுவாகத் தனது பேச்சிலும் எழுத்திலும் இந்தத் துயர உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்.. அவரது ஒன்பது சகோதர சகோதரிகளில் ஐந்து பேர் குழந்தைகளாக இருந்த போதே இறந்து போனார்கள். அவரது மகள் லூசியா மனநலமற்றுப் போனார். இதனால் அவரைப் பல்வேறு மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டியிருந்தது. ஜாய்ஸ் தன் மகளைக் குணப்படுத்த பெரும் போராட்டம் நடத்தினார். மகள் நலமடைந்துவிடுவாள் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை.

ஜேம்ஸ் ஜாய்ஸின் அம்மா இறந்தபோது, அவர் ஒரு மூட்டை நிறையக் கடிதங்களை அம்மா ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்தார். அது திருமணத்திற்கு முன்பு அவரது தந்தை அம்மாவிற்கு எழுதிய கடிதங்கள். ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு பெருமூச்சு விடும் பழக்கம் இருந்தது. அவரது மனைவி நோரா  அவர் இப்படி செய்வதன் வழியே இதய நோயை உருவாக்கிக் கொள்கிறார் என்று கண்டித்தபடியே இருந்தார். ஜேம்ஸ் ஜாய்ஸ் தனது 59 வயதில் அல்சர் பாதிப்பில் இறந்து போனார்.

கவிஞர் ரெய்னர் மரியா ரில்கே ரஷ்யா சென்றபோது, அவர் டால்ஸ்டாயைப் பார்க்கச் சென்றார், இருவரும் ஒன்றாக மாலை நடை சென்றார்கள். அப்போது வயதான டால்ஸ்டாய் ரில்கேவிடம் கேட்டார்: “இப்போது எதற்கு அதிக நேரம் செலவிடுகிறீர்கள். இதற்கு ரில்கே “பாடலுக்கு.” எனப் பதில் சொன்னார். இது வீண் வேலை. பாடல்கள் வழக்கொழிந்து போய்விட்டன எனக் கடுமையாகப் பதில் சொன்ன டால்ஸ்டாய்,  பாடல்கள் ஏன் தேவையற்றவை என்று நீண்ட அறிவுரை சொன்னார். ரில்கே இதனால் அவமதிப்புக் கொண்டார். அந்த காயம் அவரது வாழ்நாள் முழுவதும் ஆறவேயில்லை.

ருட்யார்ட் கிப்ளிங்கிற்கு அவரது சொந்தவாழ்க்கை பற்றி எவரேனும் பேசினாலோ அவரைப் புகைப்படம் எடுக்க நினைத்தாலோ பிடிக்காது. அது போலவே அவரது சக எழுத்தாளர்கள் பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கமாட்டார். தன்னை வயதானவராகக் காட்டிக் கொள்வதே அவரது வழக்கம். இருபது வயதில் எடுத்த அவரது புகைப்படத்தில் நாற்பது வயதுள்ள ஆள் போலத் தோற்றம் தந்திருப்பார் கிப்ளிங். அதுவே அவரது இயல்பு.

இப்படி யுகியோ மிஷிமா, மால்கம் லோரி, உள்ளிட்ட பலரது ஆளுமையின் நுண் சித்திரங்களை எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மரியாஸ்.

மரியாஸ் 1951 இல் மாட்ரிட்டில் பிறந்தார், அவரது தந்தை ஜூலியன் மரியாஸ், ஒரு முன்னணி தத்துவ அறிஞர் ஆகவே வீடு முழுவதும் புத்தகங்கள் நிரம்பியிருந்தன. மரியாஸின் தந்தை அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். ஆகவே அவர்கள் குடும்பம் அடிக்கடி அமெரிக்கா போவதும் வருவதுமாக இருந்தது.

ஜேவியர்  மரியாஸ் ஒரு மொழிபெயர்ப்பாளராகத் தனது இலக்கிய வாழ்க்கையைத் துவங்கினார். தாமஸ் ஹார்டி, ஸ்டீவன்சன், கான்ராட், பாக்னர், நபோகோவ் மற்றும் லாரன்ஸ் ஸ்டெர்ன் ஆகியோரின் படைப்புகளின் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்

அதன் பிறகே நாவல்கள் எழுதத் துவங்கினார். டப்ளின் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள ஜேவியர் மரியாஸ் சமகாலத்தின் முக்கிய நாவலாசிரியராகக் கொண்டாடப்படுகிறார்

Written Lives கட்டுரை தொகுப்பில் ஜேவியர் மரியாஸின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட படைப்போடு இணைக்கப்பட்ட எழுத்தாளரின் அடையாளத்தைத் தாண்டி ஒவ்வொரு எழுத்தாளரையும் வெவ்வேறு கோணத்தில் அறியச் செய்வதாகும். அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிறார் என்று சொல்வேன்.

••

0Shares
0