குறுங்கதை 2 சிறு ஓசை

அமிர்தவர்ஷிணி தான் அதைக் கண்டுபிடித்தாள். சமைத்துக் கொண்டிருந்த போது கரண்டிகள் வைக்கும் ஸ்டேண்டில் இருந்து தவறி கீழே விழுந்த ஸ்பூன் சப்தம் எழுப்பவேயில்லை. இவ்வளவு பெரிய ஸ்பூன் தரையில் விழுந்து ஏன் சப்தம் வரவில்லை. ஒரு இறகு உதிர்வதைப் போல மௌனமாக எப்படிக் கீழே விழுந்தது என யோசித்தபடியே அவளாக ஒரு ஸ்பூனை எடுத்து வேண்டுமென்றே கீழே போட்டாள். அந்த ஸ்பூனும் சப்தமிடவில்லை. என்ன குழப்பமிது என்றபடியே டிபன் கேரியரில் சொருகும் கனமான ஸ்பூனை எடுத்து உயரமாகத் தூக்கிப் போட்டாள். அது கீழே விழும் போது தண்ணீர் துளி விழுவது போல மௌனமாக விழுந்து போனது.

விளையாட்டுச் சிறுமியைப் போல அவள் விதவிதமான ஸ்பூன்களைத் தூக்கிப்போட்டுச் சப்தம் வருகிறதா எனச் சோதித்துப் பார்த்தாள். பால்கனியில் நின்றபடியே வீதியை நோக்கி ஒரு ஸ்பூனை வீசி எறிந்து ஒசை கேட்கிறதா என்று கூடச் சோதனை செய்தாள். எங்கும் ஸ்பூன் கீழே விழும்போது சப்தம் எழுப்பவேயில்லை.

தயக்கத்துடன் குழப்பத்துடன் அவள் தனது தோழி வசந்தாவிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். அவள் ஆர்வமேயில்லாமல் அதனால் என்னவென்று கேட்டாள். உன் வீட்டில் ஸ்பூன் கீழே விழுந்தால் சப்தம் வருகிறதா என வர்ஷினி திரும்பத் திரும்பக் கேட்டதும் வசந்தா ஒரு ஸ்பூனை கீழே போட்டுவிட்டுச் சப்தம் வரவில்லை என்பதை உறுதி செய்தாள்.

அன்றைய மாலைக்குள் வர்ஷினி ஊரிலிருக்கும் தனது அம்மாவிடம் , தெரிந்த தோழிகளிடம் எனப் பலரிடமும் கேட்டுவிட்டாள். அவள் வீட்டில், அவள் வசித்த நகரில் மட்டுமில்லை. எல்லா ஊரிலும் எல்லா வீடுகளிலும்  ஸ்பூன் கீழே விழும் போது சப்தம் எழுப்பவேயில்லை. ஸ்பூன்களுக்கு என்ன ஆனது. குழந்தைகளுக்கு விஷக்காய்ச்சல் முற்றிப் போகையில் குரல் நின்று போய்விடுமே அப்படி ஏதாவது ஆகிவிட்டதா. இல்லை ஏதாவது சாபமா,

ஸ்பூன்கள் கீழே விழும்போது ஏற்படும் சப்தம் குழந்தையின் அழுகையைப் போலச் சட்டெனக் கவனம் கொள்ள வைக்கக்கூடியது. ஸ்பூன்கள் ஏன் சப்தம் இழந்து போயின, என்ன நடந்திருக்கும். அவளால் அதைச் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அலுவலகம் விட்டு வீடு திரும்பிய கணவனிடம் தன் பிள்ளைகளிடம் இதைப்பற்றி ஆதங்கமாகச் சொன்னாள் வர்ஷினி.

“ஸ்பூன் தானேம்மா. சப்தம் வரலைன்னா என்ன“ என அனைவரும் ஒரே குரலில் கேட்டார்கள்

உண்மை தான். ஸ்பூன் தான். ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு கவலைப்படுகிறோம். சப்தமில்லாத ஸ்பூன் என்பது வரையப்பட்ட சித்திரம் போன்றது எனத் தனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா.

வேறு கரண்டிகளை விடவும் ஸ்பூன்களுடன் உள்ள நெருக்கம் அலாதியானது. அதிலும்  ஸ்பூனில் தேனை எடுத்துச் சாப்பிடும் போது வெறும் கரண்டியை நக்கிக் கொண்டேயிருக்க அவளுக்குப் பிடிக்கும். அப்போது ஸ்பூனை கடித்து தின்றுவிட முடியாதா என ஏங்கியிருக்கிறாள். ஒருமுறை பாண்டிச்சேரியிலிருந்து அவளது கணவன் ஸ்பூன் வடிவில் சாக்லேட்டுகள் வாங்கிவந்தான். அதைப் பாலில் கரைத்தவுடன் ஸ்பூன் கரைந்து சாக்லேட் மில்காக மாறியது. ஹை, ஸ்பூனைக் குடிக்கிறோம் என்று சப்தமிட்டபடியே பிள்ளைகள் அதை ஆசையாகக் குடித்தார்கள். அந்த மகிழ்ச்சி மறக்கமுடியாதது.

எந்த ஸ்பூனைப் பார்த்தாலும் கையேந்தி நிற்கும் பசித்த சிறுமி போலவே அவளுக்குத் தோன்றும். உப்பு ஜாடிக்குள்ளே கிடந்தாலும் தேக்கரண்டிக்கு உப்பின் ருசி தெரியாது தானே. சாதக்கரண்டிகள் குழம்பு கரண்டிகள், தோசை கரண்டிகள் என வால்நீண்ட கரண்டிகளின் உலகில் ஸ்பூன்கள் அறியாச்சிறுமிகள் போலவேயிருக்கின்றன.

அன்றிரவு ஸ்பூன்களுக்காக அவள் வருந்தினாள். பின்னிரவில் எழுந்து மறுபடியும் ஒரு ஸ்பூனை கீழே போட்டுச் சோதனை செய்து கூடப் பார்த்தாள். சப்தம் வரவேயில்லை.

உலகில் சிறு பொருட்கள் தன் இயல்பை இழக்கத் துவங்கியிருக்கின்றன என்பதை அவளைத் தான் முதலில் அறிந்து கொள்ளத் துவங்கியிருந்தாள்.

மனிதர்களின் குரல்வளை ஒடுக்கப்படுவதையே கண்டுகொள்ளாத உலகிற்கு ஸ்பூன்கள் சப்தம் இழந்து போனதைப் பற்றி என்ன அக்கறையிருக்க முடியும்.

பாவம் வர்ஷினி, அவளால் என்ன செய்துவிட முடியும்

ஸ்பூன்களாக நாளை கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்வததைத் தவிர.

••

0Shares
0