அனுபவ் சின்ஹா இயக்கி ஆயுஷ்மான் குரானா நடித்த Article 15 படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவின் சாதனைப்படங்களில் ஒன்று.
சாதிய அரசியலை நேரடியாகப் பேசும் படம். சாதியத்தின் வேர்கள் எங்கெல்லாம் புதைந்திருக்கின்றன என்பதைப் படம் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.
காவல்துறையின் சாகசங்களை மட்டுமே திரையில் பார்த்துப் பழகிய பொதுமக்களுக்கு இந்தப்படம் காட்டும் உண்மை முகத்தில் அறைவது போலிருக்கிறது.
படத்தின் ஒரு காட்சியில் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா )நேரடியாகத் தன்னோடு பணியாற்றுகிறவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று விசாரிக்கிறார். ஒவ்வொரு சாதியும் மற்றொரு சாதியை ஒடுக்கவும் தன்னை விடக் கீழானது என்று அவமதிக்கவும் செய்வதை இத்தனை அழகாக இதுவரை யாரும் திரையில் காட்டியதில்லை. அரங்கம் கைதட்டலால் அதிருகிறது.
தூக்கிலிட்டுத் தொங்கும் இரண்டு சிறுமிகளின் உடலைக் காட்டும் காட்சியும் அந்தச் சிறுமிகளின் தந்தையின் அடக்கப்பட்ட துக்கமும், காவல்துறையினர் அந்த வழக்கை கையாளும் விதமும் மிக உண்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறைக்குள்ளாகச் சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதைப் பல காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. முடிவில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படும் போது கூட இன்ஸ்பெக்டர் மனோஜ் பஹ்வா சாதியை காரணம் காட்டியே அடிக்க முற்படுகிறார். அவருக்குப் பதிலடி கிடைக்கும் போது அரங்கமே அதிருகிறது.
பிரம்தத் கதாபாத்திரமாகப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் மனோஜ் பஹ்வா. குறிப்பாக மேலதிகாரியை அவர் கையாளும் விதமும், தான் அகப்பட்டுக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பதும், கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ய முற்படும் போது அவரிடம் வெளிப்படும் ஆத்திரமும் என அற்புதமாக நடித்துள்ளார் மனோஜ்.
ஒரு பிரிட்டீஷ் அதிகாரி இந்தியக் கிராமத்திற்கு வருவது போலவே ஆரம்பக் காட்சிகளில் அயன் தோன்றுகிறார். மெல்லக் கள யதார்த்தம் அவருக்குப் புரிய ஆரம்பிக்கிறது. இந்தியக் கிராமம் சாதியால் தான் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை நேரடியாக உணருகிறார். ஆட்சியும் அதிகாரமும் கூடச் சாதியைப் பாதுகாக்கவே முயலுகிறது. காவல்துறை உயரதிகாரி என்ற போதும் அயன் அதிரடி சண்டைகள் எதுவும் புரிவதில்லை. அவரது உரையாடல்கள் மிகக் கவனமாக, ஆழமாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவருக்கும் மனைவிக்குமான தொலைபேசி உரையாடல்கள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாகச் சிறிய கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தின் தனிச்சிறப்பு.
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அற்புதம்.
இந்திய சினிமா இப்போது தான் இந்திய வாழ்க்கையை அசலாகத் தொட்டுப் பேச ஆரம்பித்துள்ளது.
2014 Badaun gang rape யை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Article 15 படம் ஒடும் திரையரங்கம் முழுவதும் இளைஞர்கள் கூட்டம். படம் முடிந்து வெளியே வரும்போது காரசாரமாக விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். அதைக் காணுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
**Article 15