இரண்டு குறும்படங்கள்.

அமெரிக்க இயக்குனரான ராமின் பஹ்ரானியின் (Ramin Bahrani)பிளாஸ்டிக் பேக் என்ற குறும்படம் பதினெட்டு நிமிசங்கள் ஒடக்ககூடியது. இந்தப் படத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்.

ஒரு பெண் கடையில் பொருள்கள் வாங்குகிறாள். அதை ஒரு பிளாஸ்டிக் கேரிபேக்கில் போட்டுத் தருகிறார்கள். அங்கிருந்து அந்த பிளாஸ்டிக் பேக் எங்கு செல்கிறது. எதை எல்லாம் சந்திக்கிறது என்று  அதன் முடிவில்லாத பயணமே இந்தக் குறும்படம்.

பல நேரங்களில் பிளாஸ்டிக் என்பது இன்றைய வணிகச் சந்தையின் குறியீடு போல அடையாளப்படுத்தபடுகிறது. சில தருணங்களில் அது அழிவின்மையின் அடையாளமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இசையும் காட்சிப்படுத்திய விதமும் அபாரமானது. ஒரு குறும்படத்தின் பின்னணி வர்ணணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். கவித்துவமாகவும் ஆழ்ந்த உண்மையோடும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவருக்கு உதவி செய்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன் என்ற குரலுடன் பிளாஸ்டிக் பை கண்விழிக்கிறது . அது அந்த பெண்ணோடு அவள் வீட்டிற்கு வருகிறது. அங்கே அந்த பை பெண்ணின் மேஜையில் கிடக்கிறது. உடல்நலமற்ற பெண்ணிற்கு ஒத்தடம் கொடுக்க பயன்படுகிறது. நாய்குட்டிக்கு தேவையான சாப்பாட்டினை போட்டு எடுத்து  வர உதவுகிறது. பின்பு நாய்குட்டியின் கழிவை துடைத்து போடவும் பயன்படுகிறது.

வீட்டிலிருந்து குப்பை தொட்டிக்கு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பை குப்பைகளின் உலகிற்குள் காணமல் போகிறது. அங்கிருந்து அதன் பயணம் ஆகாசத்தை நோக்கி திரும்புகிறது. அது இடைவிடாமல் பறந்தபடியே இருக்கிறது. தொடர்ந்து  பிளாஸ்டிக் பை இயற்கையை, மனிதர்களின் விசித்திரத் தேவைகளை, தாண்டி முடிவில் கடலின் உள்ளே சென்று சேர்கிறது.

மனிதர்களே இல்லாத இடங்களில் கூட பிளாஸ்டிக் பை பறந்து செல்லும் காட்சிகளை காணும்போது நமது உபயோக கலாச்சாரம் எந்த அளவு உலகின் தூய்மையை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. படம் முழுவதும் சிறுசிறு காட்சிகள் வலிமையான காட்சிபடிமங்கள் போல தோன்றி மறைகின்றன

ஒரு சாதாரண பிளாஸ்டிக் பையை வைத்துக் கொண்டு இந்த அளவு உணர்ச்சிபூர்வமான படம் ஒன்றினை உருவாக்க முடிந்திருப்பது இயக்குனரின் பெரிய வெற்றி.  சூழலியல் பிரச்சனையை சுட்டிக்காட்டுவதோடு மனிதர்கள் தாங்கள் உருவாக்கிய ஒன்றை தாங்களே அழிக்க முடியாமல் போராடுவது வரையான மனநிலையை குறும்படம் சிறப்பாக அடையாளம் காட்டுகிறது

மாபெரும் திரைச்சாதனைகளைப் புரிந்துள்ள வெர்னர் ஹெர்சாக் இது போல இளம் இயக்குனர் ஒருவரின் குறும்படத்திற்கு பின்னணிக் குரல் தந்துள்ளதோடு குறும்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் கூடவே இருந்து வலிமை சேர்ந்திருப்பது சினிமாவின் மீதான அவரது ஈடுபாட்டின் சாட்சியாகும்.

Plastic Bag

http://www.youtube.com/watch?v=YDBtCb61Sd4

**

The Windmill Farmer

Joaquin Baldwin, இயக்கியுள்ள இந்த நான்கு நிமிச குறும்படம் ஒரு விவசாயியைப் பற்றியது. சற்றே கனவுத்தன்மையான படமது.  ஒரு விவசாயி தனது பண்ணையில் ஆங்காங்கே விதைகளை தூவுகிறான். அதிலிருந்து காற்றாலைகள் முளைக்கத் துவங்குகின்றன. அதைக்கண்டு அவன் மிகுந்த சந்தோஷம் அடைகிறான். காற்றாலைகள் சுற்றுவது அவனை உற்சாகப்படுத்துகிறது.

பின்பு ஒரு நாள் காற்றாலைகள் பலத்த மழையில் சூறையாடப்பட்டு வீசி எறியப்படுகின்றன. அவன் மிகவும் வருத்தமடைகிறான். ஆனால் விசிறியடிக்கபட்ட காற்றலைகளின் விதைகள் ஆங்காங்கே ஈரத்தில் புதையுண்டு மறுபடியும் முளைக்கத் துவங்குகின்றன. இப்போது எங்கு பார்த்தாலும் காற்றாலைகளாக உள்ளன. விவசாயி மறுபடி சந்தோஷம் கொள்கிறான்.

காற்றாலையை ஒரு தாவரம் போல உருவகபடுத்தியுள்ளது. விதையிலிருந்து காற்றாலைகள் முளைத்து வருவதும் மின்னலும் மழையும் சேர்ந்து சூறையாடுவதும் வெகு சிறப்பாக சித்தரிக்கபட்டிருக்கிறது. இந்த குறும்படத்திலும் இசை சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.

The Windmill Farmer

http://www.youtube.com/watch?v=0nd9OuX7Bd4

**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: