மரங்கள்

நேற்று மரங்கள் என்ற 16 பக்கமுள்ள சிறுவெளியீடு ஒன்றினை ஒசூர் நண்பர் பாலசுந்தரம் அனுப்பியிருந்தார். இரவில் வாசித்தேன்.  மரங்களை முதன்மை படுத்திய அழகான சிறுதொகுப்பு . மிக  நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது. இது போன்ற வெளியீடுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டாமல் போயிருந்தால் தவறவிட்டிருப்பேன்.

நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் மரங்கள் பற்றிய உரைநடைக் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருப்பவர் கதிரவன். இத்தொகுப்பு மரங்களைப் பற்றி கல்யாண்ஜி. தேவதச்சன் இருவரது ஒரு கவிதையும் உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது.

1917ம் ஆண்டு ஹெஸ்ஸே ஜெர்மனியில் Wandering என்ற இயற்கை குறித்த அனுபவத் தொகுப்பை வெளியிட்டார். அது கவிதைகளும் உரைநடைக்கவிதைகளும் இணைந்த ஒன்று. இயற்கையின் மீதான அவரது  ஆழ்ந்த ஈடுபாட்டின் வெளிப்பாடே இக்கவிதைகள்.  வாசிக்கையில் அதன் உயர்ந்த கவித்துவமும் உணர்வெழுச்சியும் உணர முடிகிறது.

மரங்கள் குறித்த தியானமே இக்கவிதைகள் என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள். ஹெஸ்ஸே மரங்களைக்  கொண்டாடுகிறார். ஒவ்வொரு மரமும் ஒரு ஆளுமை. அது பீதோவன் போலவும் நீட்சே போலவும் தனித்துவமிக்க ஆசான் என்கிறார்.

வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது. மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை வேண்டும் எனும்  நீளும் அவரது கவித்துவ வரிகளை வாசிக்கையில் மனம் கொள்ளும் லயப்பும் நெருக்கமும் நெகிழ்வான அனுபவமாகயிருக்கிறது.

ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் 100 வருசங்களுக்கு முன்பாக ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்து கேரளாவில் மதபிரச்சாரம் செய்தவர். அவருக்கு இன்றும் அங்கே ஒரு சிலையிருக்கிறது. அவரே மலையாளத்தின் முதல் அகராதியை உருவாக்கியவர் என்கிறார்கள். இந்தியத் தத்துவங்களின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டவர் ஹெஸ்ஸே

இவரது சித்தார்த்தா நாவல் உலகப்புகழ்பெற்றது. அதை விடவும் எனக்கு Narcissus and Goldmund ,  Demian இரண்டும் பிடித்தமான நாவல்கள்.

இந்தச் சிறுநூல் குக்கூ குழந்தைகள் வெளியின் வெளியீட்டின் நான்காவது பிரசுரம் என்பதை அறிந்தேன். முந்தைய மூன்று என்னவென்று தேடி வாசிக்கும் ஆர்வம் உண்டானது.

இந்த வெளியீடு கிடைக்குமிடம் குக்கூ குழந்தைகள் வெளி, 25 ப.உ.ச. நகர். மாந்தோப்பு போளுர்சாலை, திருவண்ணாமலை. 1. தொலை. 9944850887. விலை. ரூ 5

0Shares
0