புதிய சிறுகதை மே 18 2026
“என்னோட நீம் டூத்பேஸ்டை எடுத்து வச்சிக்கிட்டேன். உன் பேஸ்டை வச்சிட்டயா“ என மனைவியிடம் கேட்டார் தீர்த்தகிரி.
“நான் ஹெர்பல் பொடில பல் தேய்க்கிறேன். அதை மாற்ற முடியாது. ஒரு டப்பா எடுத்து வச்சிருக்கேன். போதும்லே“ எனக்கேட்டாள் பவானி.

அவர்கள் மும்பையில் உள்ள மகனின் வீட்டிற்குச் செல்வதற்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் பிளைட் டிக்கெட் அனுப்பி வைத்தவுடன் பயணம் போக வேண்டியது தான்.
அறுபத்தியெட்டு வயதான தீர்த்தகிரி முந்திய நாளே தனது உடைகளை, மாத்திரைகளை, சவரம் செய்யும் பையை எடுத்துப் பெட்டியில் வைத்திருந்தார்.
பயணத்தில் எதையெல்லாம் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்பதற்கான நினைவுப்பட்டியல் ஒன்றை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்ததுண்டுப் பேப்பரை எங்கே வைத்தோம் என்பது மறந்து போயிருந்தது.
அவரது மனைவி பவானி எதையும் மறப்பதில்லை. இதுவரை பயணத்தில் ஒரு பொருளை கூட மறதியாக விட்டு வந்ததில்லை. வெளியூர் பயணம் குறித்த பயமே அவளுக்குக் கிடையாது. புதிதாக எந்த இடத்தில் தங்கினாலும் அதைத் தனது வீடு போல மாற்றிக் கொண்டுவிடுவாள். அவள் கூடவே அவள் கும்பிடும் தெய்வங்களும் ஒரு பெட்டியில் பயணம் செய்வார்கள
எங்கே சென்றாலும் புதிய சுவை கொண்ட உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவாள். புதிய மனிதர்களுடன் எளிதாகப் பழகிவிடுவாள் ஆனால் தீர்த்தகிரியால் அப்படியிருக்க முடியவில்லை.
ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் ஜன்னல் எங்கேயிருக்கிறது என்று தான் தேடுவார். திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட அறை அவருக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. வெளியூர் பயணத்தில் எதையும் சாப்பிடப் பயப்படுவார். எங்கே சாப்பிடச் சென்றாலும் வெந்நீர் கேட்டு வாங்கிக் குடித்துக் கொள்வார்.
பவானி அப்படியில்லை. அவள் மழையில் நனைந்துவிட்டு வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவாள். ஒன்றும் ஆகாது.

பயணம் கிளம்பும் முன்பும், பயணத்தின் போதும். பயணத்திலிருந்து திரும்பும் போதும் தீர்த்தகிரியிற்கு வெளியே சொல்ல முடியாத பயம் மனதிற்குள் கொப்பளிக்கும். அது சில நேரம் வளர்ந்து கைநடுக்கத்தை ஏற்படுத்திவிடும். இதற்காக அவர் யோக முத்திரை ஒன்றைக் கற்று வைத்திருந்தார். அடிக்கடி விரல்களை மடக்கி அந்த முத்திரையைச் செய்து கொள்வார்.
“உன் சூட்கேஸை பேக் பண்ணிட்டா.. ஹால்ல எடுத்து வச்சிருவேன்“ என்று மனைவியிடம் நினைவுபடுத்தினார் தீர்த்தகிரி
“சமையலை முடிச்சிட்டு பேக் பண்ணுறேன். எத்தனை மணிக்குப் பிளைட், மார்னிங் ஒன்பதா, பத்தா“ எனக்கேட்டாள்.
தீர்த்தகிரி அதற்குப் பதில் அளிக்கவில்லை. ஹாலில் இருந்த டிவியின் முன்பாகப் போய் உட்கார்ந்து கொண்டார். அடுப்பில் அவரைக்காயை வதக்கிக் கொண்டிருந்த பவானி தான் குடிப்பதற்காக வைத்திருந்த மோரில் ஒரு துண்டு ஐஸ் கட்டியைப் போட்டாள். அப்படியே சப்தமாக அவரிடம் கேட்டாள்
“உங்களுக்கு மோர் வேணுமா“
“இல்லை. காபி“ என்றார் தீர்த்தகிரி
“இப்பவே மணி பனிரெண்டாகுது. காபி வேணாம். மோரே குடிங்க“
“அப்போ குடு“ என்றார் தீர்த்தகிரி.
இப்படி அவர் காபி கேட்பதும் பவானி மோர் கொடுப்பதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி தான். ஆனால் அப்படி நடப்பது போலக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.
பவானி ஒரு கண்ணாடி டம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள். ஹாலின் ஓரமாக அவரது சூட்கேஸ் வைக்கபட்டிருந்தது. அதன் மீது தனது பெயரை எழுதி ஒட்டியிருந்தார். கன்வேயர் பெல்டில் சூட்கேஸைக் கண்டுபிடிக்க உதவும்படி அதன் கைப்பிடியில் மஞ்சள் கயிறு ஒன்றைக் கட்டி வைத்திருந்தார்.
பவானி கொடுத்த மோரை கையில் வைத்தபடியே சொன்னார்
“ராஜேஷ் வீட்ல நாலு நாள் இருந்துட்டு அப்படியே சீரடி போயிட்டு வந்துருவோம். அங்கே ரெண்டு நாள் இருக்கலாம். அப்படியே நம்ம வலசன் நாசிக்ல இருக்கான். அவன் கூட ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வருவோம். “
“என்னாலே எங்கேயும் அலைய முடியாது. சீரடிக்கு வேணும்னா வர்றேன். நீங்க போயி உங்க பிரண்ட் வலசனை பாத்துட்டு வாங்க. நாசிக்ல இருக்கிறது வலசன் மகளா. மகனா. அவருக்கு மூணு பிள்ளைகள் தானே“
“நாசிக்ல இருக்கிறது பெரிய பொண்ணு. சின்னவ காரைக்கால்ல இருக்கா. பையன் கொரியாவில இருக்கான். வலசனும் அவன் பொண்டாட்டியும் ஊர் ஊரா போயிட்டு இருக்காங்க. “
“அப்போ ஊர்ல இருக்கிற வீட்டை யார் பாத்துகிடுறது“
“அது வலசன் தம்பி பொறுப்புல இருக்கு. “
“நமக்கு அப்படி ஊர்ல வீடு இருந்தா.. கிராமத்துக்கே போயிருக்கலாம்“ என ஆதங்கமாகச் சொன்னாள் பவானி
“ஊர்ல இருக்கிறவங்களே அங்கே நல்ல டாக்டர் இல்லை. வசதிகள் இல்லைனு சிட்டிக்கு வந்துட்டு இருக்காங்க. இதுல நாம கிராமத்துக்குப் போயி என்ன செய்றது சொல்லு“
“சொந்த ஊருனு சொல்லிகிடுறதுக்கு ஒரு வீடு வேணும்லே“
“நாம எங்கே குடியிருக்கமோ அதான் நமக்குச் சொந்த ஊரு. “. என்று உறுதியான குரலில் சொன்னார் தீர்த்தகிரி
பவானி ஏதோ பதில் சொல்ல வந்தாள். ஆனால் சொல்லவில்லை. பேச்சை விழுங்கிக் கொண்டுவிட்டாள்.

அன்றைய பின்மதியத்தில் பீரோவை திறந்து எந்தப் புடவைகளை எடுத்துப் போகலாம் என்று பார்த்தாள். எந்த நாளுக்கு எந்தப் புடவையைக் கட்டுவது என முடிவு செய்து அவற்றை வெளியே எடுத்து வைத்தாள். எப்போதும் பயணத்தில் கொண்டு செல்லும் சூட்கேஸை கட்டிலின் கீழே இருந்து எடுத்து அதில் சீராக அடுக்கி வைத்தாள். பவுடர். சீப்பு. தைல எண்ணெய். தலைவலி தைலம். காதுகுடையும் பட்ஸ். முத்துமாலை, எனத் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அதற்கென உள்ள சிறிய பைகளில் போட்டுப் பெட்டியில் வைத்தாள். யோசித்து நிதானமாக ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துப் பெட்டியில் வைத்தாள். பின்பு தனது பயணப்பெட்டியைப் பூட்டி அவளே ஹாலில் கொண்டு போய் வைத்தாள்.
இரண்டு பெட்டிகளையும் தீர்த்தகிரி. தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஒருவேளை பயணத்தில் தொலைந்துவிட்டால் தேட வேண்டுமே என்பதற்கான முன்ஜாக்கிரதையது.
பின்பு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் பழைய சினிமா ஒன்றை பார்க்க ஆரம்பித்தார்கள். அது முடிவதற்கு இரவு ஒன்பது மணியானது. இரவு உணவிற்காகச் சப்பாத்தி செய்தாள் பவானி. ஆளுக்கு இரண்டு சப்பாதிகள். சாப்பிட்டு முடித்தவுடன் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து நாளை காலை விமான நேரத்தில் ஏதாவது மாறுதல் இருக்கிறதா எனச் சரிபார்த்தார் தீர்த்தகிரி.
பவானி காலை நியூஸ்பேப்பரினை இப்போது தான் வாசித்துக் கொண்டிருந்தாள்
“பத்து மணிக்குப் பிளைட். நாம ஏழு மணிக்கு ரெடியாகணும்“ என்றார் தீர்த்தகிரி
“ஏர்போர்ட் போற வழியில டிபன் சாப்பிட்டுகிடுவோம்“ என்றாள் பவானி
“ஆமா. ஸ்ரீனிவாசா கபேல பொங்கல் நல்லா இருக்கும்“ என்றார் தீர்த்தகிரி
உறங்கப் போவதற்கு முன்பு மந்திரம் போல எதையோ மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பவானி. அது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஒன்றிரண்டு முறை கேட்டபோது பதில் சொல்லாமல் பவானி சிரித்திருக்கிறாள்.
விடிகாலை அவர்கள் எழுந்து குளித்துப் பயணத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிந்து கொண்டு ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.
தீர்த்தகிரி சிரித்தபடியே சொன்னார்
“மணி ஆறு தான் ஆகுது. நேரமிருக்கு. “
பவானியும் சிரித்துக் கொண்டாள். தீர்த்தகிரி தனது செல்போனில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
அரைமணி நேரத்தின் பின்பு அவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த ஸ்ரீனிவாசா கபே பொங்கல் வந்தது. அதை ஆசையாகச் சாப்பிட்டார்கள். எட்டு மணியானவுடன் வீட்டின் ஹாலில் இருந்தபடியே தீர்த்தகிரி சொன்னார்
“ஏர்போர்ட்ல கூட்டமேயில்லை பாத்தியா“
பவானி பதில் சொல்லாமல் தலையாட்டிக் கொண்டாள்
பத்து மணிக்கு அவர்கள் தங்கள் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்கள். தீர்த்தகிரி சொன்னார்
“பிளைட் டேக் ஆப் ஆகப்போகுது. தலை சுத்தும். காதுல பஞ்சு வச்சிகிடுறயா“
அவள் வேண்டாம் எனத் தலையாட்டினாள். பனிரெண்டு மணிக்கு தீர்த்தகிரி தனது நண்பர் செபாஸ்டியனுக்குப் போன் பண்ணினார்
“இப்போ தான் ரெண்டு பேரும் மும்பைல வந்து இறங்கியிருக்கோம். பையன் வீடு குர்லால இருக்கு. டாக்சியில போகணும். ஈவினிங் உன்னைக் கூப்பிடுறேன். “
பவானி தனது பெட்டியை ஹாலில் இருந்து அறைக்குள் கொண்டு சென்று திறந்து அதில் இருந்த உடைகளை, அலங்காரப் பொருட்களை ஹோட்டல் ரூமில் வைப்பது போலத் தனது மேஜையில் கொண்டு போய் வைத்தாள். ஹோட்டல் ரூமின் அறையிலிருந்து வெளியே பார்ப்பது போல ஜன்னலை திறந்து வெளியே தெரியும் கட்டிடங்களைப் பார்த்தாள். வேறு என எண்ணிக் கொண்டுவிட்டால் போதும் வேறாக மாறிவிடுகிறது உலகம் என அவளுக்குத் தோன்றியது.
“ராஜேஷ் ஆபீஸ்ல இருந்து எத்தனை மணிக்கு வருவான்“ என யாரிடமோ கேட்பது போலச் சப்தமாகக் கேட்டாள்.
அவளாகப் பதில் சொல்லிக் கொண்டாள்
“எட்டு ஆகிடுமா.. நான் வேணும்னா.. சமையல் பண்ணட்டும்மா. அவனுக்கு அவியல் ரொம்பப் பிடிக்கும். அவியல் பண்ணட்டும்மா“
யாரும் பதில் சொல்லவில்லை. அவளாக அவியல் செய்ய ஆரம்பித்தாள்.
மும்பையில் மகன் வீட்டில் இருப்பது போலவே நினைத்துக் கொண்டு டிவியில் இந்தி சேனல்களைப் பார்க்க துவங்கினார் தீர்த்தகிரி. அவர்கள் அது தங்களின் வீடு என்பதை மறந்திருந்தார்கள்.
தாங்கள் விமானத்தில் பயணம் செய்து மகன் வீட்டில் போய்த் தங்கியிருப்பதாக நம்பினார்கள். மருமகள் பேரனுக்கு ஆசையாக வாங்கி வந்த பரிசுப் பொருட்களைக் கொடுப்பது போல நடித்தார்கள். ராஜேஷ் உடன் பேசி மகிழ்ந்து சிரிப்பது போல நடந்து கொண்டார்கள். தங்கள் படுக்கை அறையை ராஜேஷ் வீட்டின் அறையாக நினைத்துக் கொண்டு உறங்கினார்கள். மும்பையில் வேறு உறக்கம் சென்னையில் வேறு உறக்கம் என இருக்கிறதா என்ன.
இந்த நாடகத்தை இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தொடர்வது வழக்கம். பின்பு அவசரமாக ஊர் திரும்பியது போல நாடகத்தை முடித்துக் கொள்வார்கள். அதுவரை ராஜேஷ் வீடாக இருந்த அறைகள் மீண்டும் அவர்கள் வீட்டின் அறைகளாக மாறிவிடும்.
இப்படி ஆண்டிற்குச் சில முறை அவர்கள் கற்பனையான பயணத்தை மேற்கொண்டார்கள். அதற்கான தயாரிப்பினை ஆசையுடன் செய்தார்கள். உண்மையாகவே பயணம் செய்துவிட்டதாக நம்பினார்கள். அந்த நாடகம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது.
இப்போது ராஜேஷ் எந்த ஊரில் வசிக்கிறான் என்றே அவர்களுக்குத் தெரியாது.
•••
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் மும்பையில் இருந்த போது அவனைக் கேட்காமல் ஒரு நாள் அவர்கள் மும்பை சென்றிருந்தார்கள். ரயில் நிலையத்திலிருந்து அவர்களாக டாக்சி பிடித்து ராஜேஷ் குடியிருந்த அடுக்குமாடி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த போது உள் அறையில் வெளியாட்களின் குரல் கேட்டது. அவர்கள் நர்மதாவின் உறவினர்கள். பெங்களூரில் இருந்து வந்திருந்தார்கள்.
ராஜேஷ் தனது பெற்றோரின் வருகையை எதிர்பார்க்கவில்லை. சற்றே கோபத்துடன் கேட்டான்
“ஏன்பா இப்படித் திடீர்னு வந்துநிக்குறே. சொல்லிட்டு வரலாம்லே“
“சீரடிக்கு போகலாம்னு உங்க அம்மா சொல்லிட்டே இருந்தா. அதான் திடீர்னு கிளம்பிட்டேன். “
“இங்கே தங்க முடியாதுப்பா.. நர்மதாவோட சித்தி பேமிலி வந்துருக்காங்க. “
“நாங்க ஒரு மூலைல இருந்துகிடுறோம். “
“அது சரிப்படாதுப்பா.. “
“அப்போ நாங்க ஹோட்டல்ல தங்கிகிடுறோம். “
“அதுக்கு எதுக்கு என் வீட்டுக்கு வந்தே. நேரே ஹோட்டலுக்குப் போக வேண்டியது தானே“
“இப்போ என்ன செய்யச் சொல்றே“
“உடனே நீ ஊருக்குக் கிளம்பு நான் அடுத்த பிளைட்ல டிக்கெட் போட்டுத் தர்றேன்“
“அது வேணாம்.. நான் காலைல எழுந்து சீரடி போயிட்டு ஊருக்கு போய்கிடுறேன்“ என்றார் தீர்த்தகிரி
“உனக்கு வயசாகுதே தவிர அறிவேயில்லைப்பா.. வயசான காலத்துல ஒரு இடத்துல இருந்தா என்ன. ஏன் இப்படி ஊர்சுத்திகிட்டு இருக்கீங்க. வழியில செத்துத் தொலைஞ்சா நான் தானே அவதிப்படணும். “ என்றான் ராஜேஷ்
அப்படிப் பேசியதற்காக ராஜேஷைக் கோவித்துக் கொண்டாள் பவானி.
“நான் பேசினதுல ஒரு தப்பும் இல்லைம்மா. “ என்றான் ராஜேஷ்
“வழியில செத்து தொலைஞ்சா அநாதை பொணாமா போயிட்டு போறோம்“ என்றாள் பவானி.
“அப்பவும் எங்க பேரு தானே கெடும். அது தானே உங்க ஆசை“ எனக்கேட்டாள் நர்மதா
“உங்க சொந்தக்காரங்கனு எவன்எவனோ இங்க வந்து தங்கலாம். அவனைப் பெத்த நான் வரக்கூடாதா“ என ஆற்றாமையுடன் கேட்டாள் பவானி.
“பாத்தீங்களா.. உங்கம்மா பேசுறத. நம்ம கல்யாணம் நடந்த நாள்ல இருந்து பாக்குறேன். உங்க அம்மாவுக்கு நான் ஒழிஞ்சி போயிடணும். என் வீட்டு ஆட்கள் எல்லாம் சத்ருக்கள். “
“அப்படி நினைக்க வச்சது நீ தானே“ என்றாள் பவானி
“கோவிலுக்குப் போகணும்னா.நேரே போக வேண்டியது தானே. இங்கே ஏன் வர்றீங்க. என் புருஷன் சம்பாதிக்கிறதை பிடுங்கி திங்கத்தானே… இப்படிக் குடுத்துகிட்டே இருந்தா.. நானும் என் பிள்ளைகளும் தெருவில தான் நிக்கணும்“ என ஆவேசமாகச் சொன்னாள் நர்மதா
“அதான் இங்க ஒண்ணு… உன் ஊர்ல ஒரு வீடுனு என் மகன் வாங்கி வச்சிருக்கான். கார் இருக்கு. வேலைக்கு ஆள் இருக்கு. இதுக்கு மேல உனக்கு என்ன குறை வச்சிட்டான். “ என நர்மதாவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள் பவானி
“எங்க ஊர்ல புது வீடு வாங்குனது இவங்க கண்ணை உறுத்திகிட்டே இருக்கு. சொல்லிக்காட்டுறாங்க. உங்க அப்பா அம்மா வேணும்னா. அவங்களை வச்சித் தாங்குங்க.. நாங்க உடனே கிளம்புறோம்“ என்றாள் நர்மதா
“நீ ஏன் போகணும். அவங்களைக் கிளம்பச் சொல்றேன்“ என்றான் ராஜேஷ்
தீர்த்தகிரியும் பவானியும் அடுத்த நிமிஷம் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள். திடீரென அந்த நகரம் வாய் திறந்த திமிங்கலம் ஒன்றைப் போலப் பயமுறுத்தியது. அன்றிரவே ரயில் பிடித்துச் சென்னை திரும்பினார்கள். ரயிலில் அவர்கள் எதையும் சாப்பிடவில்லை. டீ குடிக்கக் கூட மறுத்துவிட்டார் தீர்த்தகிரி. மனதில் வலி குறையவில்லை. பழைய ஆடைகளை வீசி எறிவது போல ராஜேஷ் எவ்வளவு எளிதாக நடந்து கொண்டுவிட்டான். பவானி ரயில் ஜன்னல் வழியாகப் பின்னோக்கி ஒடும் மரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். அப்போதும் அவள் மந்திரம் போல எதையோ முணுமுணுப்பது தெரிந்தது.
அதன்பிறகு ராஜேஷிடமிருந்து தொடர்பேயில்லை. தீர்த்தகிரி ஒரு தீபாவளியின் போது ராஜேஷ் போன் நம்பரைத் தொடர்பு கொள்ள முயன்றார். அந்த நம்பர் மாற்றப்பட்டிருந்தது.
ராஜேஷ் தனது அலுவலக வேலையாக அமெரிக்கா போய்விட்டான் என ஒரு நண்பர் மூலம் கேள்விபட்டார். ஒருவேளை அவனுடன் நர்மதாவும் பேரனும் கூட அமெரிக்கா போயிருக்கலாம். ஆனால் இந்த ஏழு வருஷங்களில் அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எந்த நகரில் வசிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது.
எப்போதாவது ராஜேஷைப் பற்றிய நினைவுகள் மேலிடும் போது அவர்கள் இந்த நாடகத்திற்குத் தயார் ஆவார்கள். பெரும்பாலும் தீர்த்தகிரி தான் நாடகத்தைத் துவங்கி வைப்பார்
“ராஜேஷ் வீட்ல போயி ஒரு வாரம் இருந்துட்டு வருவமா. அவனை டிக்கெட் போட சொல்றேன்“
பவானி அதை ஏற்றுக் கொண்டது போலத் தலையாட்டுவாள். அந்த நாடகத்தில் அவளது பங்கை சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காக உடைகளைப் பெட்டியில் வைத்துப் பயணத்திற்குத் தயாராவாள். இரண்டு பெட்டிகளும் ஹாலில் வைக்கப்படும். ராஜேஷ் டிக்கெட் அனுப்பியிருப்பது போலத் தீர்த்தகிரி பாவனைச் செய்து ஒரு பிரிண்ட் அவுட் எடுப்பார். விமான நேரத்தை சரிபார்ப்பார். விமான நிலையம் செல்வது போல இருவரும் பாவனைச் செய்வார்கள்.
மும்பையில் ராஜேஷ் வீட்டில் இருப்பது போல நடந்து கொள்வார்கள்.. அது கற்பனை என்றே அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் இந்த நாடகத்தை உலகம் அறியாது. அறிய முடியாது என்பது போல அவர்கள் தொலைபேசி உரையாடலில் மும்பையில் இருப்பதாகவே சொல்வார்கள்.
இந்த நாட்களில் தீர்த்தகிரி பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு போக மாட்டார் சீரடிக்கு சென்று வணங்குவது போலவே வீட்டிலிருந்த சாய்பாபாவை வணங்குவாள் பவானி.
சில நாட்கள் தொலைக்காட்சியில் இந்தி செய்திகள். இந்தி சினிமா பாடல்கள் கேட்பார்கள். சில நேரம் ஸ்விக்கி மூலம் வடாபாவ் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இந்த நாடகம் தானே முடிவுறும் போது வீடு திரும்பிவிட்டவர்கள் போலப் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். பார்வையாளர்களே இல்லாத அந்த நாடகத்தில் நடித்த இரண்டு சூட்கேஸ்களும் தனது வழக்கமான இடத்திற்குத் திரும்பி போயிருக்கும்.
மீண்டும் நடைப்பயிற்சிக்கு பூங்காவிற்குச் செல்லும் தீர்த்தகிரி தனது மும்பை பயணத்தில் கண்ட நிகழ்ச்சிகளாகச் சிலவற்றைக் கற்பனை செய்து கொண்டு சுவாரஸ்யமான கதை போலச் சொல்வார். அதுவும ஒருவகை நாடகமே.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதும் வாழ்வில் தேவையானதாகவே இருக்கிறது என்று தீர்த்தகிரி நன்றாக உணர்ந்திருந்தார்.
••