புதிய சிறுகதை. ஏப்ரல் 30 2026
“நாளைக்கு வான்மதியை நிச்சயம் பண்ண வர்றாங்க. நீங்க வந்து இருந்து நடத்தித் தரணும்மா“ என்று சொன்னாள் வடிவு
வெள்ளித் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து எள்ளுப்பொடி தொட்டுச்சாப்பிட்டபடியே டாக்டர் அனுசுயா கேட்டாள்.
“மாப்பிள்ளை எந்த ஊர்“
ஐம்பத்தைந்து வயதைக் கடந்த அனுசுயா செம்மஞ்சள் வண்ணப் புடவை கட்டியிருந்தாள். காதில் வைரக்கம்மல். பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி. இடது கையில் தங்க வளையல்கள்.

“திருச்சி.. அவ கூட இந்தூர்ல வேலை பாக்குறவர்.. வான்மதிக்குப் பிடிச்சிருக்கு.. நாங்களும் சரினு சொல்லிட்டோம்“
“உன் கல்யாணமே இப்போ தான் நடந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே உன் மக கல்யாணத்துக்கு வந்து நிக்குறா“ என அனுசுயா ஆச்சரியப்பட்டாள்.
“வருஷம் ஒடிப்போயிருச்சும்மா“ என்றபடியே இன்னொரு தோசையை அனுசுயாவின் தட்டில் வைத்தாள் வடிவு
டாக்டர் அனுசுயாவிற்க்கு ஒரு முழுவாழ்க்கை கண்முன்னே கடந்துபோய்விட்டது போலிருந்தது. அவளது வீட்டிற்குப் பதினெட்டு வயதில் வேலைக்கு வந்த வடிவு இன்றைக்கு மகளிற்குத் திருமணம்செய்து வைக்கும் வயதை எட்டியிருக்கிறாள். தனக்கும் தலை நரைத்துவிட்டது. உடம்பு பெருத்துவிட்டது. நடந்தால் மூச்சு வாங்குகிறது. மாடிப்படியேற முடியவில்லை. தனது தலையில் உள்ள ஒவ்வொரு நரையும் ஒரு கதையே. நினைவுகளால் நெய்யப்பட்ட அந்தக் கதையைக் கேட்க யார் இருக்கிறார்கள்.
“நீ நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்து எத்தனை வருசம் ஆகுது வடிவு“
“இருபத்தியெட்டு வருஷம்மா. டிசம்பர் 5 தேதி வந்தேன். அன்னைக்கு வெள்ளிகிழமை“ என்றாள் வடிவு
“நாள் கிழமை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கியா“
“எப்படிம்மா மறக்க முடியும். அன்னைக்கு நீங்க மெரூன் கலர் புடவை கட்டியிருந்தீங்க. காலைல எட்டு மணியிருக்கும் நாராயணன் என்னைக் கூட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வந்தாரு“
“நாராயணன் உங்க சொந்தமா“
“இல்லைம்மா. தெரிஞ்சவர். ஆனா அண்ணன் மாதிரி உதவி செய்தாரு. அஞ்சு வருஷம் முன்னாடி அவரு தவறிப்போகாம இருந்திருந்தா.. நாளைக்கு வான்மதிக்கு மாமாவா நின்னுருப்பார்“.
“வருஷம் போனதே தெரியலை. இப்போ தான் இந்த வீட்ல வச்சி உன்னோட கல்யாணம் நடந்த மாதிரி இருக்கு.. அப்புறம் வான்மதியை கைக்குழந்தையா தூக்கிட்டு வந்து நீ நின்னது கூட மனசில அப்படியே இருக்கு. நீ அப்படியே இருக்கே வடிவு“..
“நீங்களும் தான்மா.. உங்க மனசு யாருக்கு வரும். நீங்க இல்லாம போயிருந்தா.. நான் என்ன ஆகியிருப்பேனு தெரியலை. ஆண்டவனா பாத்து தான் இந்த வழியைக் காட்டிவிட்டிருக்கான். “
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீ பாத்த வேலைக்குச் சம்பளம் கொடுத்தேன்.அதுக்கு மேல என்ன செஞ்சிட்டேன் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கேன். பணத்தை அள்ளி அள்ளி கொடுத்திருக்கேன். ஆனா அவங்க யாரும் நன்றி விசுவாசத்தோட இல்லையே.. உனக்குச் சம்பளம் மட்டும் தானே குடுத்தேன். “
“நீங்க செய்தது எவ்வளவுனு உங்களுக்குத் தெரியாதும்மா. நான் எதையும் மறக்க மாட்டேன்“. எனத் தன்னை மீறி வெளிப்பட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டாள் வடிவு
“எப்போவாவது இந்த வேலையை விட்டு போயிரணும்னு நினைச்சிருக்கியா வடிவு“ எனக்கேட்டாள் டாக்டர்
“ஒரு நாளும் அப்படி நினைச்சதில்லைம்மா“..
“இத்தனை வருஷத்துல உனக்கு என்ன வேணும்னு ஒண்ணுமே கேட்டதில்லையே வடிவு.. நானும் பெரிசா ஒண்ணும் குடுக்கலையே“
“ஏன்மா.. என் கல்யாணமே நீங்க செஞ்சு வச்சது தானே. என் மகளை நீங்க தானே படிக்க வச்சீங்க. “
“அதெல்லாம் சின்னவிஷயம். நான் செய்ய வேண்டியது பாக்கி இருக்கு. சாரும் சொல்லிக்கிட்டே இருக்கார். என்ன செய்றதுனு தான் தெரியலை. எது கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லிடுறயே. “
“எப்பவும் போல இந்த வீட்ல நானும் ஒருத்தியா இருந்தா அது போதும்மா. “
“ஏன் வடிவு உனக்கு அதுவேணும் இது வேணும்னு ஆசையே கிடையாதா.. இல்லை கேட்க கூச்சப்படுறயா“
“கிடைச்சதே போதும்மா. எனக்கு எது மேலயும் ஆசையில்லை“
“உன்னை இத்தனை வருஷமா பாத்துகிட்டு இருக்கேன். ஒரு முழம் பூ வச்சிகிட கூட ஆசைப்பட மாட்ட. ஆனா எனக்காகப் பிச்சிப்பூ வாங்கிட்டு வந்து பொறுமையா கட்டிக் குடுப்பே.. “
“நீங்க வச்சா தான்மா அழகு.. உங்களுக்குச் சிவப்பு கலர் புடவை ரொம்ப அழகா இருக்கும்மா.. அதுவும் படியில நீங்க இறங்கி வர்றதை பாக்க நல்ல சொரூபமா இருக்கும்“
“கவனிச்சிருக்கேன். உன் கண்ணுல தெரியும். உண்மைய சொல்லணும்னா.. உன்னோட தலைமுடி அளவுக்கு என் முடி அடர்த்தியில்லை. உன்னைப் பாத்து நான் பொறாமைபட்டிருக்கேன்“
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. எங்க அம்மாவுக்கு இதை விட முடி நீளம். நான் ஒழுங்கா தேங்காய் எண்ணெய் கூடத் தலைக்கு வச்சிகிட மாட்டேன்“.
“அதான் ஆச்சரியமா இருக்கு. நான் ரெண்டு கேர் ஆயில் வச்சிருக்கேன். கேர் கிரிம் வச்சிருக்கேன். அதுக்குள்ளே முடி கொட்டியும் போச்சு. நரைச்சும் போச்சு. “
“இதுவும் அழகா தான்மா இருக்கு.. பெரிய டாக்டரும் நீங்களும் ஒரே மாதிரி சிரிக்குறீங்க. “
“அப்படியா சொல்றே. அதை நான் கவனிச்சதில்லை. “
“நான் உங்க ரெண்டு பேரையும் பாத்துகிட்டே தானே இருக்கேன். சில நாள் பெரிய டாக்டர் தோசைய பிய்ச்சி உங்க தட்டுல இருந்த பூண்டு சட்டினியில் தொட்டு சாப்பிடுறதை கூடக் கவனிச்சிருக்கேன்“
“உனக்கு எத்தனை கண்ணு வடிவு“ எனச் சிரித்தபடியே கேட்டாள்
“பெரிய டாக்டர் முன்னாடி மாதிரி இப்போ சாப்பிடுறது இல்லம்மா. “.
“அவருக்கு ஏதோ கவலை என்கிட்ட கூடச் சொல்லமாட்டேங்குறார்“
“உங்களுக்கு என்னம்மா கவலை“
“ஏன் பணம் காசு இருந்தா கவலை வராதா.. எங்களுக்கும் நிறையக் கவலையிருக்கு. ஆனா யார் கிட்ட சொல்றதுனு தான் தெரியலை“
“ஷைலு உங்க கூட இங்கேயே இருந்தா நல்லா இருந்திருக்கும்“
“உனக்கு தோணுது. ஆனா அவளுக்குத் தோணலையே.. லண்டன்ல போய் உட்கார்ந்துகிட்டா.. எப்போ கேட்டாலும் படிக்கிறேன். படிக்கிறேனு சொல்றா.. மெடிகல் படிச்சிருந்தா நம்ம கிளினிக்லயே கூட இருந்துகிடலாம். ஆனா.. அவளுக்கு மெடிகல் படிக்க இஷ்டமில்லை“
“ஷைலு இப்போ என்னம்மா படிக்கிறாங்க. “
“பொலிடிகல் சயின்ஸ்ல பிஹெச்டி பண்ணுறா“..
“அப்படின்னா“
“அரசியலை ஆராய்ச்சி பண்ணுறா“
“அதுக்கு என்னம்மா வேலை கிடைக்கும்“
“வேலை எல்லாம் கிடைச்சிரும் ஆனா. எந்த நாட்டுல வேலைக்குப் போறானு தெரியலை. நிச்சயமா நம்ம ஊருக்கு வர மாட்டா. உன் மகளைப் பாரு.. நல்லா படிச்சமா. எக்ஸாம் எழுதி வேலைக்குப் போனமா. கல்யாணம் பண்ணிகிட்டமானு இருக்கா.. நாங்க செல்லம் கொடுத்து ஷைலுவை கெடுத்து வச்சிருக்கோம்“
“ஷைலு ரொம்ப நல்ல பொண்ணும்மா.. நல்லா வரும். பெரிய இடத்துல கல்யாணம் நடக்கும் பாருங்களேன். “
அதைக்கேட்டபோது டாக்டர் அனுசுயாயின் கண்கள் கலங்கின.
“நாளைக்கு எத்தனை மணிக்கு பங்ஷன்“
“சாயங்காலம் ஐந்து மணிக்கும்மா“.
“அப்போ நாலு மணிக்கு நானும் டாக்டரும் உங்க வீட்டுக்கு வந்துருறோம்“..
“வேண்டாம்மா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தபிறகு நீங்க வந்தா போதும். சேகரு வந்து உங்களைக் கூட்டிட்டு வருவார். “
“ஏன் நாங்களா வர மாட்டமா“
“என்ன இருந்தாலும் மக கல்யாணம். அவர் வந்து கூட்டிட்டு வந்தா தான் கௌரவம்“.
“சேகருக்கு பேக் பெயின் இப்போ எப்படி இருக்கு.. “
“குறைஞ்சிருக்கும்மா.. ஆனா திடீர்னு நைட்ல வலி ஜாஸ்தி ஆகிருது.. அழுதுருறார்“
“வான்மதி கல்யாணத்துக்கு நான் என்ன செய்யணும் வடிவு.. “
“நீங்களும் பெரிய டாக்டரும் வந்து ஆசிர்வாதம் பண்ணினா போதும்மா.. நீங்க தாலி எடுத்து குடுக்கணும்.. “
“எதுவுமே வேணாம்னு சொன்னா.. உன் மக கல்யாணத்துக்கே வர மாட்டேன் பாத்துக்கோ“
“அப்படி சொல்லாதீங்கம்மா.. “
“ஷைலு மாதிரி வான்மதியும் என் மக தான். அவளுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். “ என்றபடி டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்று அனுசுயா கையைக் கழுவினாள்.
“நீயும் எத்தனை வருஷத்துக்கு எங்க வீட்ல இப்படி வேலை செய்துகிட்டே இருப்பே.. மகளோட போயி ரெஸ்ட் எடு“
“உங்களை விட்டு போக மனசு வராதும்மா. நீங்களா துரத்திவிட்டா கூடப் போக மாட்டேன் “என்றாள் வடிவு
“அப்போ எப்போ தான் ரெஸ்ட் எடுப்பே. உனக்கும் வயசு ஆகுதுல்ல“
“கைகால் திடமா இருக்கிற வரைக்கும் உங்களுக்கு வேலை செய்துகிட்டு தான் இருப்பேன். அப்புறம் ஆண்டவன் விட்ட வழி“
காபி குடித்த தம்ளரை மேஜையில் வைப்பதற்குள் வடிவு வாங்கிக் கொண்டாள். எப்படி ஒரு பெண்ணால் இப்படி இருக்க முடிகிறது. சிறிய சந்தோஷங்களே போதும் என்று நினைக்கும் இந்த மனது தனக்கு ஏன் வர மறுக்கிறது. இவ்வளவு பணம் வசதிகள் சம்பாதித்த பின்பும் ஏன் கிளினீக் கிளீனிக் என ஒடிக்கொண்டேயிருக்கிறோம்.எதற்காக இந்தச் சம்பாத்தியம்.
யோசித்தால் வருத்தமாகிறது. எதற்கு இந்த யோசனை என நினைத்தபடியே டாக்டர் அனுசுயா மருத்துவமனைக்குப் போவதற்காகக் காரில் ஏறிக் கொண்டாள். சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அவளோ கடந்தகாலத்தின் படிக்கட்டில் பின்னால் சென்று கொண்டேயிருந்தாள்.
••

மதுரையில் நாலு ஆண்டுகள் கேஎம் மருத்துவமனையில் வேலை செய்துவிட்டு தனது ஊரிலே டாக்டர் அனுசுயாவும் அவளது கணவர் டாக்டர் அருணும் புதுக் கிளினிக் துவங்கிய வருடமது. ஷைலுவிற்கு ஒன்றரை வயது. அவளை வைத்துக் கொண்டு கிளீனிக்கையும் வீட்டையும் பார்க்க முடியவில்லை. பொறுப்பாகக் குழந்தையையும் வீட்டையும் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவை என்று சொன்ன போது நாராயணன் வடிவுவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். பதினெட்டு வயது என்று சொன்ன போதும் பதினைந்து வயது பெண்ணைப் போலவே மெலிந்தவளாக இருந்தாள். ஆறாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள் என்றான் நாராயணன்
“இவளாலே எப்படிக் குழந்தையைப் பாத்துகிட முடியும். சின்னப் பொண்ணா இருக்காளே“ என்றாள் அனுசுயா
“அதெல்லாம் பார்த்துகிடும்மா.. இதுக்கு முன்னே வேலை பாத்த பேங்க் மேனேஜர் வீட்ல கைக்குழந்தை இருந்துச்சி. இது தான் பாத்துகிடும். அந்த மேனேஜர் சேலத்துக்கு டிரான்ஸ்பர் ஆகி போயிட்டார். கூடவே வந்துருனு இவளை கூப்பிட்டாரு. ஆனா போகலை“..
“குழந்தையைப் பாத்துகிடுறதோட. சமையல் வேலை, வீடு துடைக்கிறது.. துணி துவைக்கிறது எல்லாம் செய்யணும், உன்னாலே முடியுமா“ எனக்கேட்டாள் அனுசுயா
“செய்றேன்மா“ என்று ஒரு வார்த்தை பதில் சொன்னாள் வடிவு
“என்ன சம்பளம் எதிர்பாக்குறே“ எனக்கேட்டாள் டாக்டர்
வடிவு வாயைத் திறக்கவில்லை. நாராயணன் கேட்ட பணத்தை அனுசுயா தருவதாக ஒத்துக் கொண்டாள்.
“ஒரு வாரம் வேலை பாக்கட்டும். வேலை பிடிக்காட்டி அனுப்பிருவேன்“ என்று நாராயணனிடம் சொன்னாள் டாக்டர்
“அப்பா அம்மா இல்லாத பொண்ணு.. சித்தப்பா வீட்ல வளர்ந்துச்சி.., நீங்க தான் பாத்துகிடணும்“ என்றான் நாராயணன்.
அனுசுயா தலையாட்டினாள்.
சமையலறையை ஒட்டிய ஸ்டோர் ரூமிலே வடிவு தங்கிக் கொண்டாள். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிடுவாள். அனுசுயா எழுந்து கொள்வதற்கு முன்பாக அவளுக்கான காபியை தயாரித்துப் பிளாஸ்கில் ஊற்றி வைத்திருப்பாள். அருணை பெரிய டாக்டர் என்றே வடிவு அழைத்தாள். பெரிய டாக்டர் காபி குடிக்க மாட்டார். அவருக்கு டீ பிடிக்கும். அதுவும் ஸ்ட்ராங்கான டீ. அதைத் தனியே சின்னப் பிளாஸ்கில் போட்டு ஊற்றி அவர்கள் அறை வாசலில் ஒரு டிரேயில் வைத்திருப்பாள்.
சில நாட்கள் காலைக் காப்பிக்குக் கடித்துக் கொள்ளப் பருப்பு வடை அல்லது பிரெட் டோஸ்ட் செய்து வைத்திருப்பாள். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் ஷைலுவை எப்போதும் தன் மடியிலே வைத்து கவனித்துக கொண்டாள்.
வடிவு வந்தபின்பு அனுசுயா வீட்டுக்கவலையின்றிக் கிளினிக்கை பார்க்க துவங்கினாள். கிளினிக் முடித்துவிட்டு பத்து மணிக்கு வீடு திரும்பி வரும் போது ஷைலு உறங்கியிருப்பாள். அந்த நேரத்திலும் வடிவு அனுசுயாவிற்காகச் சூடாகக் கல்லைப் போட்டுத் தோசை சப்பாத்தி என இரண்டும் செய்து தருவாள். அதற்குச் சட்னி. சாம்பார், சிக்கன் கிரேவி என மூன்றும் செய்திருப்பாள்.
அனுசுயா மதுரையில் இருந்த போது மூன்று நான்கு வேலைக்காரிகள் வந்து போனார்கள். ஒருவருடனும் அவளுக்குச் செட் ஆகவில்லை. ஆனால் வடிவை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது .
பெரிய டாக்டர் அருண் சில நாட்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பார். அந்த நாட்களில் வடிவு சிக்கன் பிரியாணி, மீன். இறால், நண்டு, முட்டைதொக்கு என ஐந்தாறு வகைகள் செய்து வைப்பாள். விருந்தினர்கள் அவளது சாப்பாட்டைப் பாராட்டும் போது வடிவு சிரித்துக் கொள்வாள்.
ஒரு மழைக்காலத்தில் ஷைலுவிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது வடிவு மருத்துவமனையில் கூடவே இருந்தாள். ஷைலு குணமாக வேண்டும் என்று மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் போட்டாள். ஷைலுவிற்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என வீட்டின் வாசலில் ஒரு கறுப்புக் கயிற்றில் சங்கு ஒன்றை மாட்டிவைத்தாள் வடிவு.
அதன்பிறகான நாட்களில் வடிவுவை நம்பி மொத்தவீட்டையும் விட்டுவிட்டாள் அனுசுயா .. வடிவு வேலை வேலை வேலை என வடிவு இரவுபகலாக எதையாவது செய்து கொண்டேயிருந்தாள். இப்படி ஒரு வேலைக்காரி தங்களுக்குக் கிடைக்க மாட்டாளா என அனுசுயாவின் தோழிகள் பொறாமை பட்டார்கள்.
. ஒரு முறை அவர்கள் கொடைக்கானலுக்கு விடுமுறைக்குப் போன போது வடிவுவையும் அழைத்துப் போனார்கள். அங்கேயும் ஷைலுவை கவனிப்பது. கசாயம் போட்டு தருவது. தைலம் தயாரிக்க வேர் வாங்கி வருவது என ஏதாது வேலை செய்து கொண்டேயிருந்தாள். மலர் கண்காட்சியைக் கூடப் பார்க்கவில்லை.
வடிவு வேலைக்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சேகர் அவர்களிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தான். அவனை அனுப்பி வைத்தவர் டாக்டர் இன்பராஜ். சேகர் வேலைக்குச் சேர்ந்த போதும் வடிவிடம் பேசியது போலவே “சம்பளம் எவ்வளவு வேணும்“ என்று சியாமளா கேட்டாள்.
அவன் இன்பராஜ் கொடுத்த சம்பள்ததை விடவும் நான்காயிரம் அதிகம் வேணும் என்றான். அத்தோடு வெளியூர் போனால் அதற்குத் தனியே பணம் தர வேண்டும். என்று கேட்டான்.
அப்படிக் கறாராகக் கேட்டது அனுசுயாக்குப் பிடிக்கவில்லை.
“ஒரு வாரம் காரை எடுங்க. அப்புறம் சம்பளம் முடிவு பண்ணிக்கிடலாம். “என்றாள்
அடுத்த நாள் காலை ஆறரை மணிக்கு சேகர் அனுசுயாயின் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடித்தான். வடிவு தான் கதவை திறந்துவிட்டாள். அவனை நம்பி கார் சாவியைத் தர விரும்பாதவளாக “டாக்டரம்மா வரச்சொன்னாங்களா“ என இரண்டு மூன்று முறை கேட்டாள்
“புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என் பேரு சேகர் “என்றான்
“வண்டி கழுவுறதுக்குப் பின்னாடி ஹோஸ் பைப் இருக்கு. ஊதா துணி அங்கே இருக்கு.. டாக்டரம்மா ஏழு மணிக்கு கிளம்பிருவாங்க. “
“நேத்து ஹாஸ்பிடல்ல சொன்னாங்க. அதான் வேகமா வந்தேன்“
“இதான் வேகமாக்கும். நாளைக்கெல்லாம் ஆறுமணிக்கு வந்துருங்க“ என்றாள் வடிவு
சேகர் தலையாட்டிக் கொண்டான்.
பீடி சிகரெட் பழக்கமில்லாத, எவரோடும் வெட்டிப்பேச்சு பேசாத, திறமையாகக் கார் ஒட்டுகிற சேகரை டாக்டருக்கு இரண்டாம் நாளிலே பிடித்துப் போனது. அவன் கேட்ட சம்பளத்தைத் தருவதாக ஒத்துக் கொண்டாள்.
சேகர் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் அவன் கார் ஒட்டியபடியே டாக்டரிடம் சொன்னான்
“உங்க வீட்ல வேலை செய்ற பொண்ணு தினம் காலையில் எனக்குக் காபி டிபன் குடுக்குது டாக்டர். அதனாலே என் சம்பளத்துல நூறு ரூபா குறைச்சிக்கோங்க“.
அப்படி ஒரு டிரைவர் சொல்லி அவள் இதன்முன்பு கேட்டதேயில்லை. வியப்புடன் கேட்டாள்
“தினமும் எங்க வீட்ல தான் சாப்பிடுறயா“
“ஆமாம் டாக்டர். நானா கேட்கலை. அந்தப் பொண்ணா குடுக்குது. அதான் உங்க கிட்ட சொல்லிரணும்னு தோணுச்சி“
“டிபன் நல்லா இருக்கில்லையா“ எனக்கேட்டாள் அனுசுயா
“காசு கொடுத்தாலும் இப்படி டிபன் கிடைக்காது. இட்லி சாம்பார் ரொம்ப அருமை. நேத்து எட்டு இட்லி சாப்பிட்டேன். அவ்வளவு தான் சட்டியில இருந்துச்சி.. “
“அப்போ நாளைல இருந்து கூட ரெண்டு இட்லி குடுக்கச் சொல்றேன்“. என்று சிரித்தாள் அனுசுயா.
அன்றிரவு வீடு திரும்பிய பிறகு வடிவுவிடம் கேட்டாள் அனுசுயா
“டிரைவருக்கு டிபன் காபி குடுக்கச் சொல்லி நான் சொன்னனா.. யாரைக் கேட்டு குடுக்குறே“
“பசியோட வண்டியோட்ட முடியாதுல்லம்மா. அதான். “
“அரிசி, பருப்பு என்ன விலை விக்குது தெரியுமில்லே“
“அந்த சாப்பாட்டுக்கு என் சம்பளத்துல பிடிச்சிக்கோங்கம்மா.. அந்த மனுசன் ஒரு புள்ளைபூச்சி அவரா வாயை திறந்து எதுவும் கேட்க மாட்டேங்குறார்“ என்றாள் வடிவு
“அதான் நீ உபசரிக்கிறயாக்கும்“ என்று சொல்லி சிரித்தாள் அனுசுயா. அந்தச் சிரிப்பு வடிவுவின் கலக்கத்தைப் போக்கியது
“விளையாட்டுக்குக் கேட்டேன். உன் இட்லி சாம்பார் ரொம்ப நல்லா இருக்குனு சேகர் சொல்றான். “
அதைக்கேட்டு வடிவு வெட்கப்பட்டாள்.
டாக்டரின் வீட்டை மட்டுமின்றிச் சேகரையும் வடிவு மாற்றினாள். காலை ஆறுமணிக்கு வந்துவிடும் சேகர் நேரடியாக வீட்டின் பின்வாசலுக்குப் போய் நிற்பான். அவனைப் பார்த்தவுடன் மெல்லிய புன்சிரிப்புடன் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த வடிவு “அந்த வெங்காயத்தை உரிச்சிகுடு“ என்று சொல்லுவாள். சில நாட்கள் தேங்காய் துருவி தரச் சொல்வாள். சமையலறையில் ஒரு ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சாமி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பான். கட்டம் போட்ட சட்டை போட்டால் அழகாக இருப்பான் என்று சொன்னதும் வடிவும் தான். அதன்பிறகே சேகர் கட்டம் போட்ட சட்டை அணியத் துவங்கினான்.
அன்றாடம் சூடாக அவள் தரும் காபியைக் குடித்தபிறகே காரைத் துடைக்கச் செல்லுவான். அனுசுயா எட்டரை மணிக்கு வீடு திரும்பும் போது அவசரமாக அவனுக்கு டிபன் கொடுப்பாள் வடிவு அவசர அவசரமாகச் சாப்பிட்டு பெரிய டாக்டரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் விட்டு வருவான்.
மருத்துவமனையில் வேலை செய்தவர்களுக்கு அங்கேயே மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேயே சேகர் சாப்பிட்டுக் கொள்வான். இரவு டாக்டர் கிளினிக் முடிக்கப் பத்து பத்தரையாகிவிடும். அந்த நேரத்திலும் வடிவு சேகருக்கான உணவை தனியே எடுத்து வைத்திருப்பாள். சமையலறையில் தனது கையாலே அதைப் பரிமாறவும் செய்வாள்.
வடிவு தனது மாதசம்பளத்தை டாக்டரிடம் வாங்கிப் பக்கத்தில் இருந்த தபால் அலுவலகத்தில் போட்டு வைத்திருந்தாள். எப்போதாவது அதிலிருந்து கொஞ்சம் சேகர் கடன் வாங்கிக் கொள்வான். அது டாக்டருக்குத் தெரியாது. தைப்பொங்கலுக்கு அனுசுயா இருவருக்கும் புத்தாடைகள் எடுத்து கொடுத்தாள். நோய் நொடி என ஒரு நாள் கூட வடிவு சுருண்டு படுக்கவில்லை. யாரையும் பார்க்கப் போவதாக வெளியூர் போகவில்லை
ஒரு வருஷம் வடிவுவிற்கு ஒரு தங்க கம்மல் வாங்கிக் கொடுத்தாள். அதைக் கையில் வாங்கிய போது வடிவுவின் கண்கள் கலங்கின.
“எதுக்கும்மா.. இதெல்லாம். தங்க கம்மல் போட்டுட்டு நான் எங்க போகப்போறேன் “
“அதுக்காக எதுக்குக் கவரிங் கம்மல் போட்டுட்டுஇருக்கணும்.. இதைப் போடு“
எனத் தன் முன்னாலே அவள் காதில் அணிய வைத்தாள்.
“கண்ணாடி பாரு“ என்றாள் அனுசுயா
“வேணாம்மா. கூச்சமா இருக்கு“ என்றபடியே மகிழ்ச்சியாகச் சமையலறைக்குள் சென்றாள் வடிவு
இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் அந்தக் கம்மலைத் தான் வடிவு தனது காதில் அணிந்திருக்கிறாள்
•••
ஒரு நாள் காரில் மதுரைக்குப் போய்க் கொண்டிருந்த போது அனுசுயா சேகரிடம் சொன்னாள்
“வடிவுவக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சிகிட்டு இருக்கேன். யாராவது நல்ல பையனா இருந்தா சொல்லு“
சேகரின் முகம் மாறியது. அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னான்
“நல்ல பொண்ணும்மா.. யாருக்கு குடுத்து வச்சிருக்கோ“ என்றான்
“ஏன் வடிவுவை நீயே கட்டிக்கிட வேண்டியது தானே“
சட்டென அவனது முகம் மலர்ந்தது…
“நாங்களே உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சோம்மா“ என்று தயக்கத்துடன் சொன்னான் சேகர்
“அப்படி போகுதா கதை. இது எத்தனை நாளா நடக்குது“
சேகர் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.
“ அப்போ உடனே கல்யாணத்தை முடிச்சிர வேண்டியது தான்“
“உங்க இஷ்டம்மா“ என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டினான் சேகர்
அன்றிரவு வடிவுவிடம் அவளது கல்யாணத்தைப் பற்றிச் சொன்னபோது அவள் தலைகவிழ்ந்தவளாகச் சொன்னாள்
“சேகருக்கும் சொந்தபந்தம் யாருமில்லம்மா.. ஊர்ல ஒரு கிழவி இருக்கு.. “
“அப்போ சுப்ரமணிய சாமி கோவில்ல வச்சி கல்யாணத்தை முடிச்சிருவோம்“
“கோவில்ல எல்லாம் வேணாம்மா. நம்ம வீட்லயே வச்சி கல்யாணம் பண்ணிகிடுறோம்“
“இங்கேயே “
“ஆமாம்மா.. உங்க முன்னாடி எங்க கல்யாணம் நடந்தா போதும். நீங்களும் பெரிய டாக்டரும் தான் எங்களும் சாமி“ என்றாள்
அதைக்கேட்ட போது அனுசுயாக்கு சிலிர்த்துப் போனது.
சேகருக்கும் வடிவுவிற்கும் டாக்டர் வீட்டில் வைத்து எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. பட்டாடையும் மணமகனுக்காகப் புதுஉடையும் அனுசுயா வாங்கிக் கொடுத்தாள். தாலி வாங்குவதற்கான செலவு தன்னுடையதாக இருக்க வேண்டும் எனப் பிடிவாதம் செய்து சேகர் தாலி வாங்கி வந்தான். ஹாலில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். சேகர் வடிவு கழுத்தில் தாலி கட்டினான். அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்டார்கள். அனுசுயாயும் அவளது கணவரும் ஆசி கொடுத்தார்கள். டாக்டர் ஒரு கவரில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் பணத்தைப் போட்டு அதை அவர்கள் கையில் கொடுத்து சொன்னார்
“இது நீங்க வீடு பிடிச்சி..குடித்தனம் ஆரம்பிக்கிறதுக்கு.. “
அவர்கள் இரண்டாம் முறையாகவும் காலில் விழுந்தார்கள். சேகர் ரயில்வே பீடர் ரோட்டில் வீடு ஒன்றை பார்த்து முடிவு செய்தான். ஆனால் வடிவு அனுசுயாவின் வீடு இருந்த தெருவிலே ஒரு சிறிய வீட்டினைப் பேசி முடிவு செய்துவிட்டாள்
“நாம பக்கத்துல குடியிருந்தா தான் டாக்டரம்மாவுக்கு உதவியா இருக்கு“ என்றாள்.
திருமணத்திற்குப் பிறகு அதே காலை ஐந்தரை மணிக்கு வடிவு டாக்டர் வீட்டிற்கு வேலைக்கு வந்துவிடுவாள். சேகர் ஆறுமணிக்கு வருவான். எப்போதும் போல வடிவுவிற்குச் சமையல் வேலையில் உதவி செய்வான்.
வடிவு கர்ப்பம் தரித்த அதே மாதம் டாக்டர்அனுசுயாவும் கர்ப்பம் தரித்தாள் கர்ப்பிணியாக இருந்த போதும் எல்லா வேலைகளையும் அதே வேகத்துடன் வடிவு செய்தாள். ஆனால் கிளினீக் இருந்த இடத்தினை அவசரமாகக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் என அனுசுயா புதிய இடம் வாங்கி அதில் கிளீனிக் கட்ட துவங்கினாள். அந்த நெருக்கடி, பதற்றம் காரணமாக அனுசுயாவின் கர்ப்பம் கலைந்து போனது. இரண்டு மாத காலம் வீட்டில் ஒய்விலே இருந்தாள். அந்த நாட்களில் கர்ப்பிணியாக இருந்த வடிவு செய்து கொடுத்த உணவும் ஆறுதலான பேச்சும் அவளை நலமாக்கியது.
அனுசுயாவின் புதிய கிளினீக்கில் தான் வடிவுவிற்கு மகள் பிறந்தாள். அந்தப் பிரவசத்தை அனுசுயா தான் நடத்தினாள். பிறந்த குழந்தையை அணைத்தபடியே அனுசுயாவிடம் வடிவு சொன்னாள்
“நீங்களே குழந்தைக்குப் பேர் வச்சிருங்கம்மா“
“அதெல்லாம் சேகரக் கேட்டு முடிவு பண்ணு“ என்றாள் அனுசுயா
“இல்லம்மா. நீங்க தான் பேரு வைக்கணும்“
தன்னோடு மெடிகல் காலேஜில் படித்து மூன்றாம்ஆண்டில் இறந்து போன வான்மதியின் நினைவாக அந்தப் பெயரை வடிவுவின் மகளுக்கு வைத்தாள் அனுசுயா. அந்தக் கடந்தகால நினைவு பற்றி வடிவிற்குத் தெரியாது.
தனக்கு மகள் பிறந்த போதும் வான்மதியை விடவும் ஷைலுவை வளர்ப்பதிலே தான் வடிவு அதிகம் கவனம் செலுத்தினாள்.

எல்கேஜியில் ஷைலுவை சேர்த்துவிட்ட போது பள்ளிக்குப் போகமாட்டேன் என்று ஷைலு அழுதாள். வடிவு அவளைச் சமாதானப்படுத்தித் தானே பள்ளியில் ஷைலுவை கொண்டு போய்விட்டுவிட்டு மதியம் வரை பள்ளி மைதானத்திலே காத்துக் கொண்டிருந்தாள். மதியம் ஷைலு ஓடிவந்து வடிவுவை கட்டிக் கொண்ட போது அவளுக்கும் அழுகை வந்தது.
ஷைலு படித்த அதே பள்ளியில் வான்மதியை சேர்ப்பது என்ற முடிவை அனுசுயா தான் எடுத்தாள்
“அங்கே ரொம்பப் பீஸ் இருக்கும்மா. எங்களாலே கட்ட முடியாது“ என்றாள் வடிவு
“உன்னை யாரு பீஸ் கட்டச் சொன்னது. அதெல்லாம் நான் கட்டிக்கிடுவேன்“
“பெரிய இடத்து பிள்ளைக படிக்கிற ஸ்கூல் “என்று சேகரும் தயங்கினான்
“ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிக்கணும்“ என அனுசுயா உறுதியாக இருந்தாள். பள்ளி நாட்களில் ஷைலுவை விடவும் வான்மதி தான் நிறையப் பாராட்டு பெற்றாள். துறுதுறுவெனப் படிப்பிலும் விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். ஷைலு கோபத்தில் ஏதாவது திட்டினால் கூட வான்மதி அதைத் தனது அம்மாவிடம் சொல்ல மாட்டாள், ஷைலுவிற்கு வான்மதியை பிடிக்கவேயில்லை. இருவரும் எப்படிச் சமமாக இருப்பது எனக் கோபம் கொண்டாள். காரணம் இல்லாமல் வான்மதியை திட்டினாள். மோசமாக நடத்தினாள். ஆனால் இதைப் பற்றி வடிவு எதையும் அறிந்திருக்கவில்லை. டாக்டர் அறிந்த போதும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
பத்தாம் வகுப்புப் பரிட்சை துவங்கிய நாளில் ஷைலு சொன்னாள்
“உன்னை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது இன்னைக்கு இருந்து நான்கூடப் பேசவே மாட்டேன் நீயும் பேசக்கூடாது தெரியுதா“
“சரி ஷைலு“
“ஷைலு என்ன ஷைலு.. மேடம்னு சொல்லு “
“சரிங்க மேடம் “ என்றாள் வான்மதி
“நமக்குள்ளே நடக்கிற சண்டைய எங்க அம்மாகிட்டயோ. உங்க அம்மாகிட்டயோ சொல்லக் கூடாது. சொன்னே.. பல்லை பேத்துருவேன்.. பாத்துக்கோ“
சொல்ல மாட்டேன் என வான்மதி தலையாட்டினாள்.
வான்மதி அந்த ஆண்டு எஸ்எஸ்எல்சியில் பள்ளியின் முதல்மாணவியாக வந்த போது ஷைலு பதினாலாவது மாணவியாக வந்திருந்தாள். அனுசுயா வான்மதியை பாராட்டும் போது ஷைலுவிற்கு எரிச்சலாக இருந்தது. வான்மதி படிக்கும் பள்ளியில் தானும் படிக்கக் கூடாது என்றே மதுரையில் பிளஸ் டூ படிக்கச் சென்றாள் ஷைலு.
இந்தச் சண்டையோ, வெறுப்போ எதுவும் வடிவுவிற்கும் தெரியாது. அவள் எப்போதும் போலத் தனக்கு இரண்டு மகள் இருப்பதாகவே நினைத்துக் கொண்டாள்.
••
வான்மதி பிளஸ்டூவிலும் மாநில அளவில் இரண்டாவது இடம் வந்திருந்தாள். சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியில் அவளை இன்ஜினியரிங் சேர்த்துவிட்டார்கள். இதனால் ஆத்திரமான ஷைலு வேண்டுமென்றே படிப்பதற்காக மும்பை சென்றாள். அதன்பிறகு வருஷத்துக்குச் சில நாட்கள் மட்டுமே ஷைலு வீடு திரும்பினாள். டாக்டர் அனுசுயாயின் மருத்துவமனை மிகப்பெரியதாகியது. அனுசுயாயும் அவளது கணவரும் வீட்டை மறந்து கிளீனிக்கிலே வாழ்ந்தார்கள்
ஒரு முறை கருத்தரங்கம் ஒன்றை முடித்துவிட்டுக் கொடைக்கானலில் இருந்து இரவு பதினோறு மணிக்குக் காரில் டாக்டர் கிளம்பிய போது சேகர் காலையில் போகலாம் என்றான்
இல்லை. நைட்டே போயிருவோம்.. என்றாள் அனுசுயா
அவர்கள் காரில் மதுரையை நோக்கி வரும்போது வழியில் லாரியோடு மோதி விபத்திற்குள்ளானது. சேகருக்கு பலமான அடி. அனுசுயா, அருண் இருவருக்கும் காயம். அவர்கள் உடனடியாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்கள். அதில் காரை ஒட்டிய சேகர் தலையில் பலமான காயத்துடன் உயிருக்குப் போராடினான். வடிவு கண்ணீர் விட்டு அழுதாள்.
சேகரை காப்பாற்றிக் கொண்டுவருவதற்கு அனுசுயா எல்லாவகையிலும் உதவி செய்தாள். மூன்று மாதகாலத்தின்பின்பு சேகர் நலமடைந்தான். ஆனால் இனி கார் ஒட்டக்கூடாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அவனை வேலையை விட்டு நிறுத்தினாள் அனுசுயா.
“எப்பவும்போல உன் சம்பளத்தை நீ வாங்கிக்கிடலாம் சேகர்.. ஆனா வண்டி எடுக்க வேண்டாம்“
சேகர் அதன்பிறகு கார் ஒட்டவில்லை. வடிவு எப்போதும் போல அனுசுயா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். சேகர் டாக்டர் வீட்டிலே சிறிய எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்தான். அதுவும் இரண்டு ஆண்டுகளாக வரவேண்டாம் என அனுசுயா தடுத்துவிட்டாள்
வான்மதிக்கு என்ஜினியரிங் படித்துமுடித்தவுடன் பெங்களூரில் வேலை கிடைத்தது. அவள் வாங்கிய முதல் சம்பளத்தை அனுசுயாயிடம் கொடுத்து ஆசி வாங்கினாள் வடிவு.
“உன் மக திறமைசாலி.. இன்னும் பெரிய இடத்துக்கு வருவா.. “
“ஷைலு மாதிரி வர முடியாதும்மா“.. என்றாள் வடிவு
“நீ தான் மெச்சிகிடணும்.. அவ போக்கே சரியில்லை“ என்று சலித்துக் கொண்டாள் அனுசுயா.
வான்மதியின் சம்பாத்தியம் அவர்களைப் புதுவீடு கட்டும் அளவிற்குக் கொண்டு போனது. வங்கி கடன் வாங்க வான்மதியே ஏற்பாடு செய்தாள்.
புதுவீடு கட்டினாலும் அனுசுயாவின் வீட்டின் வேலையாளாகவே வடிவு இருந்தாள். இரவில் தூங்குவதற்கு மட்டுமே புது வீட்டிற்குப் போனாள். அந்த மகிழ்ச்சியைத் தொடர்வது போல யுபிஎஸ்சி பரிட்சை எழுதி ஐஆர்எஸ் வேலைக்குத் தேர்வாகினாள் வான்மதி. இந்தூரில் வேலை. இரண்டு ஆண்டுகளில் உடன் வேலை செய்கிறவரை காதலித்து இப்போது திருமணத்திற்கும் தயராகி விட்டாள்.
இத்தனை வசதிகள் இருந்தும். பணமிருந்தும் ஷைலு ஏன் இப்படியாகவில்லை என அனுசுயாவிற்க்கு வேதனையாக இருந்தது. சிறிய வாழ்க்கையே போதும் என நினைத்த வடிவுவை போலத் தான் இல்லை என்பது தான் காரணமா. இல்லாதவர்கள் காட்டும் அன்பை போலத் தன்னால் காட்ட முடியவில்லையா. ஷைலு ஏன் தங்களை வெறுக்கிறாள். இலக்கேயில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறாள். ஷைலு படிப்பதிலே இத்தனை ஆண்டுகளைக் கடத்திவிட்டாள் . யாரைக் கல்யாணம் செய்து கொள்வாள். அந்த மணவாழ்க்கை எப்படியிருக்கும். யோசிக்க யோசிக்க அனுசுயாவிற்க்கு வருத்தமாக இருந்தது. அதே நேரம் வடிவுவின் மீது பொறாமையாகவும் வந்தது.
••
வான்மதியின் நிச்சயதார்த்தம் நடந்த மாலையில் டாக்டரை அழைத்துப் போகச் சேகர் வந்திருந்தான். அவர்கள் வடிவு வீட்டிற்குச் சென்றார்கள். சேகர் தான் கார் ஒட்டினான். மாப்பிள்ளை சர்வானந்தின் வீட்டார் மிக வசதியானவர்களாக இருந்தார்கள். மாப்பிள்ளை நல்ல உயரம். பிரேம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான். வான்மதி கிரீம் கலர் பெங்கால் காட்டன் புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரேயொரு நெக்லஸ். இரண்டே வளையல். ஆனால் அதில் வெளிப்பட்ட கச்சிதம். அழகு, அனுசுயாவை ஆச்சரியப்படுத்தியது. திருமண நிச்சயத்தை அனுசுயாயும் டாக்டர் அருணும் முன்நின்று நடத்தினார்கள். வான்மதியும் சர்வானந்தும் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். அப்போது வடிவுவும் சேகரும் கூட ஆசி பெற்றார்கள்.
“எங்க வீட்ல வந்து இன்னைக்குத் தான்மா நீங்க சாப்பிடுறீங்க“ என்றாள் வடிவு
“இத்தனை நாளா நீ சமைச்சதை தானே சாப்பிட்டு இருந்தேன்“.
“அப்படியில்லைம்மா. இது எங்க வீட்ல வந்து சாப்பிடுறது.. “
“எல்லாம் ஒரே சாப்பாடு தான்“ என்று அனுசுயா சிரித்தாள். சாப்பிட்டுவிட்டுப் புறப்படும் போது வெற்றிலை பழம் வைத்து ஒரு தட்டியில் ஒரு சிறிய நகைப்பெட்டியை வைத்து நீட்டியபடியே வடிவு சொன்னாள்
“இது ரொம்ப நாள் ஆசைம்மா, உங்களுக்காக என் மக வாங்கியிருக்கா“
“என்னது“ எனக்கேட்டாள் அனுசுயா
“திறந்துபாருங்கம்மா“ என்றாள் வடிவு
அதில் “ஏ“ என்று அவளது பெயரின் முதல் எழுத்து பொறித்த மோதிரம்
“இத்தனை வருஷமா நீங்க எவ்வளவோ குடுத்துருக்கீங்க. இப்போ நாங்க குடுக்கிற இடத்துக்கு வந்துருக்கோம்மா…. வாங்கிக்கோங்க. “ என்றான் சேகர். அனுசுயாவிற்க்கு அந்தப் பேச்சு நெருடுவதாக இருந்தது.
“கையில போட்டு பாருங்கம்மா“ என்றாள் வடிவு
சரியாக அளவெடுத்து செய்த மோதிரம் போலிருந்தது.
அனுசுயா புறப்படும் போது வான்மதியிடம் கேட்டாள்
“ஷைலு பேசினாளா“
“அவ என்கிட்ட பேசுறதை நிறுத்தி பத்து வருஷத்துக்கு மேலாச்சி ஆன்டி.. இப்போ எப்படியிருக்கா ஷைலு… ஒகே தானே. எதும் பிராப்ளம் இல்லையே “ எனக் கேட்டாள் வான்மதி
அப்படிக் கேட்டது யாரோ மூன்றாம் மனுஷி கேட்பது போலிருந்தது. அதை அனுசுயாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அனுசுயா பதில் சொல்லாமல் காரை நோக்கி நடந்தாள். சேகர் காரை எடுக்க வரவில்லை. டாக்டர் அருணே காரை ஒட்ட முயன்றார்
காரில் ஏறிக் கொண்ட போது அந்த மோதிரம் அன்பின் அடையாளமாகத் தரப்பட்டதா அல்லது இத்தனை ஆண்டுகளாகச் சொல்லப்படாத அவர்களின் வலியின் வெளிப்பாடாக இருந்ததா என அனுசுயாவிற்குத் தெரியவில்லை. அவளது முகம் வருத்தமாகயிருந்தது
•••