குபாஸின் வாக்குமூலம்

பிரேசிலிய எழுத்தாளர் மச்சடோ டி ஆசிஸ் எழுதிய  Epitaph of a Small Winner  நாவல் மாறுபட்ட கதை சொல்லும் முறையைக் கொண்டுள்ளது. 1881-ல் வெளியான இந்நாவல் The Posthumous Memoirs of Brás Cubas என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பிராஸ் குபாஸ் என்பவரின் மரணத்திற்குப் பிந்தைய நினைவுகளைக் கூறும் இந்த நாவல் வாசகர்களுடன் புதிர் விளையாட்டினை நிகழ்த்துகிறது. 

இதில் வரும் குபாஸ் தான் “இறந்து போன எழுத்தாளரில்லை. இறந்த பின்பு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன்“ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

துயரில் மிதக்கும் அனுபவங்களே நாவலில் சின்னஞ்சிறு நினைவுகளாக விவரிக்கபடுகின்றன. ஒரு பத்தி அல்லது ஒரு பக்கம் ஒரு அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த நாவலை லெர்மன்தேவின் பிச்சோரின் மற்றும் டான்குவிகாத்தேயுடன் ஒப்பிட்டுப் படிக்கலாம். பிச்சோரினிடம் வெளிப்படும் காதல் போன்றதும் டான்குவிகாதேயிடம் வெளிப்படும் சாகசமும் இணைந்து குபாஸிடம் வெளிப்படுகிறது.ஆனால் குபாஸ் நவீன மனிதன். அவன் தோல்விகளை ஏற்றுக் கொள்கிறவன். ஆராய்கிறவன். ஆனால் பழைய சாகச பயணிகளின் வரிசையில் வருபவன். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பிய நாவல்களில் வெளிப்படும் இருண்மையை அதற்கு முன்பாக மச்சடோ எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

குபாஸின் கடந்தகாலம் முழுமையாக விவரிக்கபடுவதில்லை. மாறாக அவன் தனது வாழ்வின் சில நிகழ்வுகளை, நினைவுகளை மட்டுமே முதன்மைப்படுத்துகிறான்.

நாவலின் முன்னுரையில் குபாஸ் தன்னிலை விளக்கம் ஒன்றை அளிக்கிறான்.

“ஸ்டெந்தால் (Stendhal) தனது நாவல்களில் ஒன்றை வெறும் நூறு வாசகர்களுக்காக மட்டுமே எழுதினார் என்கிறார்கள் .ஸ்டெந்தாலின் நூலுக்குக் கிடைத்தது போல, இந்நாவலுக்கு நூறு வாசகர்களோ, ஐம்பதோ, இருபதோ, ஏன் பத்தோ ஐந்தோ கூட கிடைக்கவில்லை என்றாலும், உலகம் அதனைக் கண்டு வியக்கவோ—அல்லது கவலைப்படவோ போவதில்லை.

நான் இந் நாவலை  ‘மகிழ்ச்சி’ எனும் எழுதுகோலால், ‘துயரம்’ எனும் மையினைக் கொண்டு எழுதினேன்; இத்தகைய இருமைகளின் சங்கமத்திலிருந்து என்ன விளையும் என்பதை எவரும் எளிதாக ஊகிக்க முடியும்.  தீவிரமான மனப்பான்மை கொண்டவர்கள் இந்நூலில் அதீத கற்பனாவாதத்தைக் காண்பார்கள்; அதேவேளையில், மேலோட்டமான மனப்பான்மை கொண்ட வாசகர்களோ, தாங்கள் பழகிப்போன வகையிலான சுவாரஸ்யத்தை இதில் காணமாட்டார்கள். ஆகவே இருவருக்கும் இந்நாவல் பிடிக்காமல் போகக் கூடும்

சிறந்த வாசகரே, இந்நாவல் உங்களுக்குப் பிடித்திருந்தால்—எனது உழைப்பிற்குப் பரிசளித்ததாக நான் எண்ணிக்கொள்வேன்; ஒருவேளை இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களை விட்டு நான் விடுபட்டது எனக்குப் பெரும் நிம்மதி என்றே கருதுவேன்“ என்கிறான் குபாஸ்

மேலும் தனது காதல் வாழ்க்கை அதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான, மற்றும் துயரமான நினைவுகளை விவரிக்கும் போது குபாஸ் மிக வெளிப்படையாக எழுதுகிறான்

“ என் சொந்தத் திறமையின்மையை நான் இவ்வளவு வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் ஒப்புக்கொள்வதைக் கண்டு வாசகர் ஒருவேளை வியப்படையக்கூடும்; ஆனால் அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நான் இறந்து போனவன். மரணமடைந்த ஒருவருக்கு மிகவும் பொருத்தமான நற்பண்பு எதுவென்றால், இது போன்ற வெளிப்படைத்தன்மை தான். உயிருடன் இருக்கும் காலத்தில், பலரது அபிப்ராயம் மற்றும் விமர்சனங்களுக்குப் பயந்து தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.   , தன் சொந்த மனசாட்சியிடம் மட்டுமே ஒப்புக்கொள்ளும் உண்மைகளை  கூட உலகத்திடமிருந்து மறைத்துக்கொள்ளக் கூடும்.  ஆனால் இறந்தபின்பு அது போன்ற எந்தக் கட்டாயமில்லை.  இறந்து போனவருக்கு உலகில் வாழ்பவர்கள் பற்றிய கவலை எதுவும் கிடையாது.  ஆகவே எதையும் வெளிப்படையாக எழுதலாம்.

உயிரோடு வாழ்பவர்களே, என்னை நம்புங்கள், இந்த உலகில் நமது அலட்சியத்தைப் போல பிரம்மாண்டமான செயல் வேறில்லை. வாழ்வில் நான் ஒருவிதமான இறுமாப்புடன் நடந்துகொண்டேன்; நான் ஆண்களுக்கே உரிய பாவனைகளைக் கொண்ட ஒரு சிறுவனா, அல்லது சிறுபிள்ளைத்தனமான குணங்களைக் கொண்ட ஒரு ஆணா என்பதைப் பிரித்தறிவது  கடினமானது. நான் ஒரு அழகான இளைஞனாகத் திகழ்ந்தேன்—அழகும் துணிச்சலும் நிறைந்தவனாக. பழைய காவியப் பாடல்களில் வரும் இளைஞனைப் போல  குதிரையின் மீது சவாரி செய்தபடி வாழ்க்கைக்குள் பாய்ந்து நுழைந்தேன்“ என்கிறான் குபாஸ்.  

இந்த நாவல் முழுவதும் பிராஸ் குபாஸ், தனது விரக்தியை, தனிமையை, கற்பனையான எண்ணங்களை, ஆசைகளை,  விசித்திர அனுபவங்களை எழுதுகிறான்.  அதில் பிராஸின் தேடல்கள் பாலுறவு, அரசியல், தத்துவம்,  நன்மை தீமை பற்றிய எண்ணங்கள் யாவும்  அடங்குகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் என்று நம்ப முடியாதபடி புதியதாக, கவித்துமான மொழியில் நாவல் எழுதப்பட்டுள்ளது.

இந்த நாவலில் கறுப்பு பட்டாம்பூச்சி என்ற பகுதி மறக்கமுடியாதது.

“குபாஸ் நகரத்திற்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு பட்டாம்பூச்சி அவரது அறைக்குள் பறந்து வருகிறது.. நீண்ட நேரம் அவரைச் சுற்றிப் பறந்த பிறகு, அந்த பட்டாம்பூச்சி அவரது நெற்றியில் அமர்கிறது. குபாஸ்  அதனை தனது விரலால் தட்டிவிடுகிறார்

கறுப்பு பட்டாம்பூச்சி உடனே  ஜன்னல் கண்ணாடியை நோக்கிச் செல்கிறது.  அதை வெளியேற்ற துரத்திய போது  சுவரில் இருந்த அவரது தந்தையின் புகைப்படத்தின் மீது அமர்ந்து தனது இறக்கைகளை மெதுவாக அசைக்கத் தொடங்குகிறது

அந்தச்  செயல் குபாஸை  ஏளனம் செய்வது போல தோன்றுகிறது, அவர் கோபத்துடன்  அறையை விட்டு வெளியேறிப் போகிறார். சில நிமிஷங்களுக்குப் பின்பு திரும்பி வந்தால் அதே புகைப்படத்தில் பட்டாம்பூச்சி அமர்ந்திருக்கிறது.

கோபத்தில் ஒரு  துண்டை எடுத்து, அந்த பட்டாம்பூச்சியை ஒங்கி அடிக்கிறார். பட்டாம்பூச்சி கிழே விழுந்து துடிக்கிறது. ஆனால் இறக்கவில்லை. அதைப் பார்க்க அவருக்கு பரிதாபமாக இருக்கிறது. ஆகவே பட்டாம்பூச்சியை தனது கையில் எடுத்து ஜன்னல் விளம்பில் வைத்து வெளியே பறந்து போகட்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்குள் பட்டாம்பூச்சி  இறந்துவிடுகிறது. இந்த நிகழ்வு அவரை கலக்கமடையச் செய்கிறது..

குபாஸ் தனது அலட்சியமான செயலை விவரிப்பதோடு, வண்ணத்துப்பூச்சி ஏன் தன்னை தேடி வந்தது என்பதற்கு வியப்பான காரணம் ஒன்றையும் கூறுகிறார்.

அந்தப் பட்டாம்பூச்சி அநேக காடுகளிலிருந்து, வயிறார தேனை உண்டு மகிழ்ச்சியாக, ஒரு அழகான காலைப்பொழுதின் சூரிய ஒளியில் பறந்து வந்திருக்க வேண்டும். நீல வானம் எனும் பரந்த குவிமாடத்தின் கீழ் தனது தனித்துவமான அழகை வெளிப்படுத்துவதில் திருப்தியடைந்த பட்டாம்பூச்சி திறந்த ஜன்னல் வழியாகப் பறந்து வந்து அவரது அறைக்குள் நுழைகிறது.

அங்கே குபாஸைக் காண்கிறது. அதற்கு  மனிதன் என்றால் என்னவென்று தெரியாது. ஆகவே குபாஸின் உடலைச் சுற்றி எண்ணற்ற வட்டங்களை வரைந்து, அவர் அசைவதையும், அவருக்கு கண்கள், கைகள், கால்கள், மற்றும் அழகான தோற்றம் இருப்பதையும் காண்கிறது . பிறகு அது தனக்குத்தானே, “இவர்தான் பட்டாம்பூச்சிகளை உருவாக்கிய கடவுளாக இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொள்கிறது. அந்த எண்ணம் அதனை ஆட்கொண்டவுடன் அது பீதியடையச் செய்திருக்க கூடும். தன்னை படைத்தவரின் முன்னால் எப்படி நடந்து கொள்வது என அதற்குத் தெரியவில்லை.

ஆகவே தனது கடவுளை மகிழ்விக்க சிறந்த வழி அவரது நெற்றியில் முத்தமிடுவதுதான் என்று உணர்ந்து குபாஸின் நெற்றியில் பட்டாம்பூச்சி முத்தமிடுகிறது. 

ஆனால் தனது கடவுள் முத்தத்தை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்டதும் அங்கேயிருந்த கடவுளின் தந்தை புகைப்படத்தைக் காணுகிறது., அவரிடம் கருணை வேண்டிப் பறந்து சென்று முறையிடுகிறது.

அப்போது கடவுளின் கோபம் காரணமாக தன்மீது விழுந்த அடியால் பட்டாம்பூச்சி துடித்து இறந்து போகிறது “

பட்டாம்பூச்சியின் மகிழ்ச்சி மற்றும் துயரத்தை மச்சடோ வெகு சிறப்பாக எழுதியிருக்கிறார். அது மனிதனை தன்னைப் படைத்த கடவுளாகக் கருதியது என்ற வரி அபாரமானது.

நாவலின் இன்னொரு குறிப்பில் தனது கால்களை பற்றி வியந்து எழுதியிருக்கிறார்.

“என் கால்கள் எனக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இன்று  ‘ஃபாரூக்ஸ்’ (Pharoux) உணவு விடுதியின் வாசலுக்கு என்னை அழைத்துச் சென்றன.  அந்த விடுதியில் உணவருந்துவது எனது வழக்கம்; ஆயினும், இம்முறை நான் அங்கே செல்ல வேண்டுமென்று திட்டமிடவில்லை, என்னை அங்கே கொண்டு வந்த சேர்ந்த  பெருமை என் கால்களையே சாரும்.

மகத்துவமான கால்களே!  சில மனிதர்கள் உங்களை எவ்வளவு அலட்சியத்துடன் நடத்துகிறார்கள்! நானும் கூட உங்களைப் பற்றித் தாழ்வான அபிப்பிராயத்தையே கொண்டிருந்தேன்; நீங்கள் நடந்து களைத்துப்போகும்போதும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் நகர இயலாமல் நின்றுவிடும்போதும் நானும் உங்கள் மீது கோபம் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் நீங்கள் அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு   உதவி செய்திருக்கிறீர்கள்.

இவன் மனதில் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது; இதுவும் இரவு உணவருந்த வேண்டிய நேரத்தில்! ஆகவே , இவனை நாம் ‘ஃபாரூக்ஸ்’ விடுதிக்கு அழைத்துச் செல்வோம் என கால்களே முடிவு செய்திருக்கின்றன

என் அன்பிற்குரிய கால்களே! நீங்கள் வகுத்த அந்தத் திட்டத்தை, ஒரு பிசகுமின்றி சிறப்பாக நிறைவேற்றினீர்கள். உங்களின் இந்தப் பேருதவிக்குப் நன்றிக்கடனாகவே உங்களை அழியாப் புகழ்பெற்றவைகளாக எனது எழுத்தில்  ஆக்கியிருக்கிறேன்“ என்கிறான் குபாஸ்

இன்னொரு குறிப்பில் மூக்கின் முக்கியத்துவத்தைக் கேலியோடு எழுதியிருக்கிறார்.

“அன்பான வாசகரே, மூக்கின் செயல்பாடு என்ன? மூக்கின் பணி கண்ணாடிகளைத் தாங்குவதே என நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அது உண்மையும் தான். ஆனால்,  சூபி ஞானிகளான ஃபக்கீர்களின் வழக்கத்தை யோசிக்கும் போது உங்களுக்கு மூக்கின் மகத்துவம் புரியக் கூடும். அவர்கள்   தனது மூக்கின் நுனியை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு வகை தியானம்.  அதன் வழியே புறப் பொருட்களின் உணர்வை இழந்து, தன் மனதில் தன்னைப் பற்றிய ஒரு அழகான பிம்பத்தை உருவாக்கி, புலப்படாததைப் பற்றிக்கொண்டு, தனது உலகின்ப தளைகளை உதறித் தள்ளி, தன்னைக் கரைத்துக்கொண்டு, நுண்மையாகி விடுகிறார்கள் என்று கேள்விபட்டதில்லையா

. மூக்கின் நுனி வழியாக ஒருவரின் இருப்பு உன்னதப்பட முடியும் என்றால் மூக்கின் பெருமை எவ்வளவு பெரியது என நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என பிராஸ் குபாஸ் குறிப்பிடுகிறான் .

இந்த நாவலில்  எல்லா லட்சியங்களும் தோல்வியடைகின்றன..  காதலை தவிர வேறு எதிலும் குபாஸ் வெற்றியடையவில்லை. அவனது துயரங்கள் யாவும் அவன் விரும்பி உருவாக்கி கொண்டதே.

இந்நாவல் பற்றிய விமர்சனத்தில் மச்சடோவை முழுமையாக நிராகரிப்பது அல்லது மச்சடோவுடன் சேர்ந்து உலகத்தை நிராகரிப்பது என இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்றொரு குறிப்பை வாசித்தேன். அது நிஜமே.

நாவல் முழுவதும் வாசகர் என்ன நினைக்கிறார் என்று குபாஸ் முன்னதாகவே சொல்லி விடுகிறார். அதனை ஆமோதித்தும் மறுத்தும் உரையாடுகிறார். அந்த வகையில் நாவலின் முக்கிய கதாபாத்திரம் வாசகரே.

 “இந்தப் புத்தகத்தின் முக்கியப் பிரச்சனை நீங்கள்தான், வாசகரே” என அவர் குறிப்பிடுவது வெறும் வேடிக்கையில்லை

•••

0Shares
0